Thursday, September 10, 2015

லட்சுமி என்னும் பயணி: வாசிக்கவேண்டிய ஒரு நூல் - ரவிக்குமார்
லட்சுமி அம்மா எழுதிய ' லட்சுமி என்னும் பயணி' என்ற தன்வரலாற்று நூல் மைத்ரி புக்ஸ் என்ற புதிய பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. 

தமிழ்த் தேசப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனின் துணைவியாரான லட்சுமி அம்மாள் தான் பிறந்து வளர்ந்து படித்து ஒரு கம்பெனியில் வேலைக்குப் போனது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களோடு பழக்கம் ஏற்பட்டு அவசரநிலைக் காலத்தில் தோழர் பெ.மணியரசனைத் திருமணம் செய்துகொண்டது; அதன் பின்னர் தோழர் மணியரசன் சிபிஐ எம் கட்சியிலிருந்து வெளியேறி வேறொரு கட்சியில் சேர்ந்து அதுவும் நிலைக்காமல் தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி துவக்கியது - இப்படிப் பல்வேறு செய்திகளை இதில் எழுதியுள்ளார். 

1975 - 2000 காலப் பகுதியில் தஞ்சையிலும் அதைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலும் நிலவிய சூழல் ஆங்காங்கே பதிவாகியிருக்கிறது. இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பலரை எனக்குத் தெரியும் சிலரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். 

தன்னிடம் அன்புகாட்டாத பெற்றோர், சொந்த வீட்டில் தான் பட்ட கஷ்டங்கள், வறுமை- என தனது இளம் பருவக் காலத்தை அவர் விவரித்திருப்பது நெகிழச் செய்கிறது. இளம் பெண்ணாக, தாயாக, குடும்பத் தலைவியாக அவர் எதிர்கொண்ட சவால்கள் பல நாவல்களை எழுதும் அளவுக்கு இருக்கின்றன. 

அவ்வப்போது காலத்தை எதிர்த்துப் போராடியவராகவும் பெரும்பாலும் காலத்தால் இழுத்துச் செல்லப்படுபவராகவும் லட்சுமி அம்மாள் தெரிகிறார். சமூகத்தின் மைய நீரோட்டத்தில் கலக்காமல் செயல்படும்  இடதுசாரி செயல்பாட்டாளர்களிடம்கூட பொதுப்புத்தி எவ்வாறு இயங்குகிறது என்பதை இந்த நூல் தொட்டுக்காட்டுகிறது. 

இந்த நூலில் பேசப்படும் தலைமறைவு வாழ்க்கை, அரசியல் செயல்பாடுகளால் ஏவப்படும் வன்முறை முதலான விஷயங்கள் வேறு தன்வரலாற்று நூல்களில் காணக்கிடைக்காதவை. 

" பெ.ம விகடன் இதழ் வாங்கி வருவார் அதில் திருமாவேலன், கவின்மலர் கட்டுரைகளைப் படிப்பேன். தமிழர் இனம் வென்றுவிடும் என்று தோன்றும்" என்ற லட்சுமி அம்மாவின் நம்பிக்கையைப் படித்தபோது வியப்பாகவும் பயமாகவும் இருந்தது. 

லட்சுமி அம்மாவின் அனுபவங்களை எங்கெங்கு விரிவாகப் பதிவுசெய்ய வைக்கலாம் என்பதைக் கண்டறிந்து அந்த இடங்களில் இன்னும் விரிவாகப் பதிவுசெய்யச் சொல்லியிருந்தால் இந்த நூல் இன்னும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்திருக்கும். அவரைக் கள்ளம் கபடமில்லாத வெள்ளந்தியான மனுஷியாகக் காட்டுவதைத்தான் பதிப்பாளர்கள் விரும்பினார்களோ என்னவோ. அதனால் சில இடங்களைத்தவிர பெரும்பாலான இடங்களில் செய்திகளின் கோர்வையாக இந்த நூல் அமைந்திருக்கிறது. 

" உழைப்பு , பராமரிப்பு, உறவுப் பிணைப்பு - இவற்றை ஆதாரமாகக்கொண்டு விரியும் வாழ்க்கை அனுபவங்களைப் பேசும் அபூர்வமான பதிவாகும்" என இந்த நூலின் முன்னுரையில் வ.கீதா குறிப்பிட்டிருக்கிறார். அதை வழிமொழிகிறோமோ இல்லையோ இது வாசிக்கப்படவேண்டிய ஒரு நூல்தான் என்று உறுதியாகக் கூறலாம்.

கூனல் பிறை நூலுக்கு விருது

Saturday, April 11, 2015

திருச்சியில் மணற்கேணி விற்பனையகம்

திருச்சியில் மணற்கேணி விற்பனையகம் 
===================
மணற்கேணி நூல் விற்பனையகம் இன்று திருச்சி கே கே நகர் இந்தியன் வங்கிக் காலனியில் திறந்துவைக்கப்பட்டது. அ.க.தமிழாதன் முன்னிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை தலைவர் டாக்டர் மணிமேகலை அவர்கள் விற்பனையகத்தைத் திறந்துவைத்தார். தேன்மொழி, பூங்கொடி, பூங்கோதை ஆகியோர் குத்துவிளக்கேற்றி சிறப்பித்தனர். மாணவர் அம்பேத்கர் நூல்களைப் பெற்றுக்கொள்ள பெரம்பலூர் கிட்டு விற்பனையைத் துவக்கிவைத்தார். 

பஞ்சு, கோபாலகிருஷ்ணன், பிரபாகரன், அரசு, கனியமுதன், நிலவன், இளம்பரிதி முதலானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

மணற்கேணி பதிப்பக நூல்களை இங்கே வாங்கலாம். தமிழ்நாட்டின் முன்னணி பதிப்பகங்களின் நூல்களும் விரும்புவோருக்கு வாங்கித் தரப்படும்.

( தற்போது இந்த விற்பனையகம் மூடப்பட்டுவிட்டது )  

புதிய முகவரி : 

மணற்கேணி பதிப்பகம்
79, மருத்துவக்கல்லூரி சாலை
தஞ்சாவூர் 613004 


Sunday, April 5, 2015

மணற்கேணி தொகுப்பு


பனுவல் புத்தகக் கடையில் கிடைக்கும்

மணற்கேணி ஆய்விதழ் இதுவரை 28 இதழ்கள் வெளிவந்துள்ளன. அதன் ஒட்டுமொத்தத் தொகுப்பு பனுவல் புத்தகக் கடையில் கிடைக்கும். ஆய்வு மாணவர்களுக்கு சிறப்புக் கழிவு உண்டு. 

தொகுப்பு வேண்டுவோர் தொடர்புகொள்க: 

பனுவல் 
112, முதல் தளம் திருவள்ளுவர் சாலை
திருவான்மியூர் சென்னை 600 041
ஃபோன்: +91 8939-967179


தமிழ்நாட்டை குக்கிராமம் ஆக்கியது யார்? - ரவிக்குமார்


மலையாளக் கவிஞர்கள் தங்களது கவிதைகளை வாசிக்கும் விதமே தனி அழகுதான். அதைக் கேட்கும்போது நாமும் மலையாள மொழியின் காதலர்களாகிவிடுவோம். 

ஆசான் மெமோரியல் அசோசியேஷனின் பொன்விழாவின் அங்கமாக தென் இந்திய கவிஞர்கள் பங்கேற்கும் 'கவிசம்மேளனம்' ஒன்றை சென்னையில் இன்று (05.04.2015 ஞாயிறு) ஒருங்கிணைத்திருந்தது. ஐந்து மொழிகளைச் சேர்ந்த கவிஞர்கள் அழைக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள். அதில் கவிஞர் கே.சச்சிதானந்தன் தனது கவிதைகளை வழங்கினார். 

முதலில் பிணக்கு என்ற தலைப்பிலான கவிதையை மலையாளத்தில் வாசித்தார்.  அண்மையில் காலமான அய்யப்பன் என்ற கவிஞரின் நினைவாகத் தான் எழுதிய  நீண்ட கவிதையையும், அரபு வசந்தத்தின் தாக்கத்தில் எழுதிய நிற்கும் மனிதன், முத்தம் ஆகிய கவிதைகளையும் அடுத்து வாசித்தார். ( இவற்றை நான் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறேன்) கடைசியாக மந்திரவாதி என்ற கவிதையை வாசித்தார். பிணக்கு தவிர மற்ற கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வாசித்தது மலையாளம் தெரியாதவர்களுக்கு உதவியாக இருந்தது. 

சச்சிதானந்தனின் கவிதைகள் கேரள மண்ணில் வேரூன்றி உலகமெங்கும் கிளை பரப்பி நிற்கின்றன. அரபு வசந்தத்தின் போராட்ட வடிவங்களைக் கேரள நகரங்களிலும் பார்க்க முடிகிறது என்பதால் சச்சிதானந்தனின் கவிதைகள் வெறும் கற்பனை சார்ந்தவையாக இல்லை. 

கேரளத்தோடு ஒப்பிடும்போது தமிழ்நாடு ஒரு குக்கிராமம் போல் தெரிகிறது. உலக அளவில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வும் தமிழ்நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பாமர அறிவை( common sense) வியப்பதே அறிவுச் செயல்பாடு எனக் கருதுவோர்தான் இங்கே அறிவு ஜீவிகள். அதனால்தான் புராண மறு உற்பத்தி இங்கே இலக்கிய அந்தஸ்தைப் பெற முடிகிறது. இந்த கருத்தியல் சூழலை உருவாக்கியதில் தமிழ்த் தேசியத்துக்கு முக்கிய பங்கிருக்கிறது. வலதுசாரி மனோபாவத்தை அதுதான் இங்கே உறுதிப்படுத்தியது. தமிழ்த் தேசியம் செப்பனிட்டு வைத்த பாதையில்தான் இந்துத்துவம் பவனி வருகிறது. 

தமிழ்நாட்டில் இந்துத்துவத்தை எதிர்ப்பதோடு இடதுசாரிகளின் பணி நின்றுவிடக்கூடாது. தமிழ்த் தேசியத்தின் வலதுசாரி சாய்வை விமர்சிப்பதிலும் அக்கறைகாட்டவேண்டும். சச்சிதானந்தனின் கவிதைகளைக் கேட்டபோது இந்த எண்ணம் மேலும் வலுவடைந்தது.