Wednesday, June 29, 2011

ஒரு பேப்பர் ஒரு உரையாடல் ..இரவிக்குமார்ஒரு இலக்கியவாதியாக அறியப்பட்ட நீங்கள் எப்போது அரசியலில் ஈடுபட ஆரம்பித்தீர்கள்?
கட்சி அரசியலில் ஈடுபட்டது இப்பொழுது சில மாதங்களுக்கு முன்னர்தான். அதாவது கடந்த சட்டசபைதேர்தலுக்கு முன்னர். அதற்கு முன்னால் அரசியல் தொடர்பு என்பது எனது மாணவப்பருவம் தொட்டு இருந்து வருகிறது. முதலில் கல்லூரிக் காலத்தில் திராவிடர் கழகத்தின் மாணவர் பிரிவில் பணியாற்றியிருக்கிறேன். ஆதற்கு பின்னர் மார்க்சிய லெனினிய அதாவது நக்சல்பாரி அரசியலால் ஈர்க்கப்பட்டு அதனுடைய மாணவர் அமைப்பிலும் அதனை தொடர்ந்து பண்பாட்டு அமைப்பிலும் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் செயல்பட்டுள்ளேன். பின்னர் மனிதவுரிமைகள், குறிப்பாக தலித் இயக்கப் பிரச்சனைகள் என எனது செயற்பாடுகள் அரசியல் சார்ந்தவையாக இருந்தாலும் கட்சி அரசியலில் ஈடுபட்டது இப்போதுதான்.

அரசியலை ஒரு சாக்கடை என்றும் அதனால் நல்லவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற ஒரு கருத்து உண்டு. இல்லை நல்லவர்கள் அரசியலில் ஈடுபட்டால்தான் அதனை நேர்மையானதாக மாற்ற முடியும் என்ற கருத்தும் உண்டு. இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?
அரசியலை அப்படி எதிராகப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் இன்றைக்கு இந்த தேர்தல் அரசியல் மூலமாக ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு சில நன்மைகளை செய்யமுடியம் என்பதை நான் நம்புகிறேன். அந்த அடிப்படையிலதான் தொடர்ந்து தேர்தல்களை புறக்கணித்துக் கொண்டிருந்த விடுதலைச்சிறுததைகள் இயக்கம் கூட தேர்தலில் பங்கெடுகக்கலாமா என யோசித்துக் கொண்டிருந்தபோது .. பங்கெடுக்கலாம் என வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். ஆகவே அரசியலைப்பற்றி எதிரான அபிப்பிராயம் எனக்கு கிடையாது. என்னைப் பொறுத்தவரையில் அடிப்படையில் ஒரு எழுத்தாளன என்ற வகையில் எழுத்தாளருக்கு தேவையான கற்பனையும் ஒரு படைப்பு ஊக்கமும், imagination and creativity என்று சொல்வார்கள். இது வந்து எழுத்தாளனுக்கு அடிப்படையான விசயம் அது இன்றைக்கு அரசியலில் சுத்தமாக இல்லாத நிலையைப் பார்க்கிறோம். அதனால் புதிய திட்டங்களை புதிய அணுகுமுறையை அவர்களால் கொடுக்கமுடியவில்லை. அந்தவிதத்தில் எழுத்தாளனுக்கு உரித்தான இந்த அடிப்படைத்தகுதிகளை அரசியல் தளத்தின் ஊடாக கோண்டுபோய் சேர்க்கும்போது சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என நான் நினைத்தேன். அதன் மூலமாக மற்றவர்கள் செய்யாத சில விடயங்களை செய்யமுடியும் என நான் நினைத்தேன். அந்தவிதத்தில் அரசியலுக்கு வருவதை நான் சாதகமாகத்தான் பார்த்தேன். இன்றைக்கு எனது குறுகிய கால அனுபவத்தில் என்னால் சிலவற்றை செய்யவும் முடிந்திருக்கிறது.

சட்டசபை, தேர்தல் என கட்சி அரசியலில் ஈடுபடாமல் இல்லாமல் ஒரு இயக்கமாக இருந்திருந்தால் .. நீங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கூடுதலான சேவையாற்ற முடியும் என்ற கருத்திருக்கிறது அது பற்றி ..
அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஏனெனில் விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரை பத்தாண்டுகளுக்கு மேலாக அது தேர்தலைத் தவிர்த்த இயக்கமாகவே இருந்து வந்தது. 99ல்தான அது தேர்தலில் ஈடுபட்டது. அதுவரை அது ஒரு வலிமையான இயக்கமாக எல்லாரினதும் கவனத்தை பெற்றது என்பது உண்மைதான். ஆனால் தேர்தலுக்கு வந்த பின்னர்தான் தாழத்தப்பட்ட மக்களை இன்றைக்கு ஒன்று திரட்டி அவர்களை ஒரு அரசியல் கட்சியாக மாற்ற முடிந்தது. அதற்கு முன்னர் இயக்கம் வலுவாக இருந்தது. இன்றைக்கு மக்கள் ஒரு வலுவான சக்தியாக மாறியிருக்கிறார்கள். அதற்கு இந்தியாவைப் பொறுத்தவரையில் பாராளுமன்ற அரசியல் என்பது ஒரு வழிமுறையாக இருக்கிறது என்பதை நாம் மறுத்துவிட முடியாது.

திராவிட கழகத்தின் மாணவர் இயக்கத்தில் சேர்ந்து இயங்கியதாக குறிப்பிட்டீர்கள். ஆனால் திராவிட இயக்கத்தைப்பற்றியும் பெரியார் பற்றியும் நீங்கள் தீவிரமான விமர்சனம் கொண்டவர் என அறிகிறேன் ..
நான் தொடர்ந்து திராவிட இயக்கத்துடன் நெருக்கமாக நம்பிக்கையோடு செயற்பட்டு வந்த காரணத்தால் அதனுடைய செயற்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அதன் தத்துவார்த்த தளத்தில் குறிப்பாக பொருளாதார அடிப்படையில் இருந்த போதாமை கருதியே என்னுடைய மாணவபருவத்தில் மார்க்சிய அரசியலை நோக்கி ஈர்க்கப்பட்டேன் அதற்கு பின்னாலும்கூட தமிழ்நாட்டை பொறுத்தவரையில் திராவிட இயக்கம் திராவிட அரசியல் என்பது வலுவான சக்தியாக இருக்கின்ற காரணத்தினால் தொடர்ந்தும் அதை நான் கவனித்து வந்தேன். குறிப்பாக 1998ல் பாரதிய ஜனதா கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு வழங்கியபோது என்னை போன்றவர்களுக்கு, குறிப்பாக அதை தொடரந்தும் ஆதரவோடும் ஒரு நம்பிக்கையோடும் பாரத்துக் கொண்டிருந்தவர்கள் என்ற வகையில் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால்தான் பெரியாருடைய கருத்துக்களை தமிழில் மீண்டும் எழுச்சி பெற வைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு நான் ஆசிரியராக இருந்து நடாத்தி வந்த நிறப்பிரிகை பத்திரிகையில் பெரியாரியம் என்ற கூட்டு விவவாதம் ஒன்று நடாத்தினோம் அதில் எனது பங்கு முக்கியமானது. அதனைத் தொடர்ந்து பெரியாரைப்பற்றிய ஒரு விவாதம் மீண்டும் வந்து ஒரு தமிழ்ச் சூழலில் ஒரு கவனிப்பும் வருவதற்கு எனது பங்கும் முக்கியமானது. குறிப்பாக தினமணி போன்ற பத்திரிகைகளில் அதைப்பற்றிய விவாதம் தொடர்ந்து வருவதற்கு எனது கட்டுரை காரணமாக இருந்தது. அந்த நிலையில் தி;;.மு.கவின் பாஜக ஆதரவான நிலைப்பாடு என்பது அதிர்ச்சியாக இருந்தது. அதற்கான காரணத்தை தி;மு.க. அரசியல் சந்தர்ப்பவாதமாக இருந்தது என்றோ அல்லது அதனுடைய தலைவர் தவறாக நடந்து கொண்டார் என்றோ.. நான் எளிமைப்படுத்தி புரிந்து கொள்ள விரும்பவில்லை அதற்கான காரணங்களை ஆய்வு செய்ய விரும்பினேன். ஏற்கனவே கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ரஷ்யாவிலும் சோசலிசம்; வீழ்ச்சி அடைந்தபோது அதற்கான காரணங்களை ஸ்ராலினுடைய அதிகார விடயமாக எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தபோது …அதைத் தாண்டி லெனின் தேசிய இனப்பிரச்சனையை கையாண்டதில் பிரச்சனையிருக்கிறதா? மார்க்ஸ் ஏங்கல்ஸ் போன்றவர்களின் அணுகுமுறையிலேயே ஏதாவது கோளாறு இருக்கிறதா? என்கின்ற ஆய்வுகளை நாங்கள் மேற்கொண்டிருந்தோம்.. அப்படி பார்க்கும்போது தேசிய இனப்பிரச்சனைகளைப்பற்றி மார்க்ஸ் உட்பட அதற்கு பின்னால் வந்த சிந்தனையாளர்கள் எல்லாம் எப்படியெல்லாம் பார்த்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து அதற்கான காரணங்களை அறிந்தோம். அதைப்போலவே திராவிட இயக்கத்திலுள்ள இந்த நிலைப்பாட்டுக்கு அதனுடைய மூலகர்த்தாக்களாகிய பெரியார் போன்றவர்களிடம் ஏதாவது காரணங்கள் இருக்கிறாதா என மீண்டும் மறுவாசிப்புக்கு உட்படுத்தி பார்க்கிற போது சிறுபான்மையர்களை அணுகுகின்ற விதத்தில் சில பிரச்சனைகள் தென்பட்டது. அந்த பின்னணியில் தி.மு.க வின் நிலைப்பாட்டை விளங்கிக் கொண்டேன். அதற்கு காரணம் இதுதான் என்பதை 98ல் எழுதினேன். அது திராவிட இயக்கத்தின் மீதான, அதனுடைய தொடக்கநிலை கருத்தியலாளரான பெரியாரைப்பற்றிய விமர்சனமாக நீண்டது. மற்றபடி அவர்களைப்பற்றி அவதூறாகவோ கொச்சைபடுத்தியோ எதுவும் சொல்லவில்லை. இந்த விமர்சனங்கள் என்னிடம் இருக்கிறது என்பது உண்மைதான்.

ஈழத்தமிழ் மக்கள் விடயத்தில் .. அண்மையில் தமிழ்நாட்டிலிலுள்ள அகதி முகாம்களுக்கு சென்று அங்கு அவர்கள்படும் அவலங்களை ஒரு அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தி ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தீர்கள். தமிழ்நாடு அரசும் சில அனுகூலமான முடிவுகளை எடுத்திருக்கிறது. இந்த விடயத்தில் உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
ஈழத்தமிழ் அகதிகள் அல்லது புலம்பெயர்ந்த மக்கள்பற்றிய எனது கவனம் என்பது, உலகத்தமிழ் மாநாடு நடந்தபோது அதற்கு இணையாக புலம்பெயரந்த மக்களின் நலன்களைப்பற்றி கவனத்தை ஈர்க்கவேண்டும் என்பதற்காக, குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் அங்கேயிருந்த சிந்தனையாளர்கள் ரஷ்ய அதிபர் பிரான்சுக்கு வருகை தந்தபோது, அரசாங்கம் அவரை வரவேற்க முற்பட்டபோது, ரஷ்யாவிலிருந்து புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்தவர்களின் கவனத்தை ஈரப்;பதற்காக பிரான்சிலிருந்த சிந்தனையாளர்கள் இணைந்து ஒரு மாநாட்டை ஒழுங்கு செய்தார்கள் என்பதை ஹியுகோவின் வாழ்க்கை வரலாற்றில் படித்திருக்கிறேன். அதுதான் ஒரு உந்துதலாக இருந்தது. உலகத்தமிழர் மாநாட்டு சமயத்தில் ஏன் நாங்கள் இப்படி முயற்சி மேற்கொள்ள முடியாது என நண்பர்களுடன் இணைந்து புலம்பெயரந்த ஈழத்தமிழர் மாநாடு என ஓன்றை நடாத்தினோம். தொடர்ந்து அகதிகள் பிரச்சனை என்பது என்னுடைய கவனத்தில் இருந்து வந்தது. அதையொட்டித்தான நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனதும் முதல் உரையிலேயே இந்த விடயததை கவனப்படுத்தினேன். இன்றைக்கு அவர்களுக்கு வழங்கப்படும் பணக்கொடை இரண்டு திகரிக்கப்பட்டுள்ளது. அகதி முகாம்களுடைய நிலை இன்றைக்கு சீரமைக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கென வீடுகள் கட்டுவதற்கான ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் இரண்டு விடயங்களை தெரிவிக்கலாம் என நினைக்கிறேன் குறிப்பாக அகதிகளுடைய பிள்ளைகளுடைய படிப்பு. இதற்கு முன்னால் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அவர்களுக்கு படிப்புக்கென்று இட ஒதுக்கீடு இருந்து வந்தது. அதற்கு பின்னால் வந்த அதிமுக ஆட்சியில் அது ரத்து செய்யப்பட்டது. அதை மீண்டும் கொண்டுவருவதற்கு நான் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். இது மிக முக்கியம் என்று பார்க்கிறேன. ஏனென்றால் இந்த மக்கள் என்றைக்காவது திரும்பிப் போனார்கள் என்றால் சொந்த நாட்டுக்கு போகும்போது இங்கிருந்து பண்ட பாத்திரங்களையோ வேறு சொத்துக்களையோ எடுத்திட்டு போகமுடியாது. அவர்கள் தங்களோடு கொண்டுபோகக்கூடிய ஒன்றாக கல்வி மட்டும்தான் உள்ளது. ஆகவே அவர்களை கல்வி ரீதியாக வளமுள்ளவர்களாக மாற்ற வேண்டும் மீண்டும் அவர்கள் நாடு திரும்பும்போது அவர்களால் நாட்டை கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும்.
இரண்டாது இந்திய அளவில் அகதிகளுக்கான ஐ.நா. சபையின் தீர்மானங்கள். அதில் இந்தியா கையெழுத்திடாமல் இருக்கிறது. அதன் காரணமாக அகதிகளுக்கு சட்ட ரீதியாக கிடைக்கக்கூடிய உரிமைகள் கிடைக்காமல் இருக்கிறது. அதுமட்டுமல்ல இந்திய அளவில் அகதிகளின் பிரச்சனைகளை அணுகுவதற்கு தேசிய அளவில். ஒரு சட்டமும் இல்லாத நிலை இருக்கிறது. அதற்காக உருவாக்கப்பட்ட மாதிரிச் சட்டம் கூட இன்னமும் நடைமுறைக்கு வராமல் இருக்கிறது. ஐ.நா.சபையின் தீர்மானங்களில் இந்தியாவை கையெழுத்திட வைப்பது இந்திய அளவில் அகதிகளின் நலனுக்காக தேசியச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது ஆகிய இரண்டும்; தேசிய அளவிலான எனது கவனமாக இருக்கிறது. இதனை தேசிய அளவிலான மனிதவுரிமை இயக்கங்களுடன் தொடர்புகொண்டு அதனை ஒரு பிரச்சாரமாக கொண்டு செல்வதை எனது அடுத்த முயற்சியாக கொண்டுள்ளேன்.

ஈழத்தில் வன்முறைகள் அதிகரித்து செல்கின்றது .. இந்நிலையில் தமிழ்நாட்டுமக்களின ஆதரவை ஈழத்தமிழர்கள் வேண்டி நிற்கிறார்கள். அந்தவகையில் அண்மையில் ஈழத்தமிழரின் பிரதிநிதிகளாக தமிழ் தேசியக்கூட்டணி பாராளுமன்ற உறப்பினர்கள் இந்தியாவுக்கு வந்திருந்தார்கள். அவர்களை சந்திக்க கலைஞர் கருணாநிதியும் திரு.மன்மோகன் சிங்கும் மறுத்து விட்டார்கள். திரு. மன்மோகன் சிங்கை சந்திக்காததைக் காட்டிலும் திரு. கருணாநிதி அவர்கள் சந்திக்க மறுத்தமை ஈழத்தமிழர்களுக்கு வேதனையைக் கொடுத்துள்ளது. இப்போது கலைஞர் தலைமையிலான கூட்டணியில் இருக்கும் நீங்கள் இதுபற்றி என்ன கருத்துக் கொண்டுள்ளீர்கள்?
நாங்கள் ஆரம்பத்திலிருந்தே ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பாக சட்டமன்றத்தினை நல்ல முறையில் பயன்படுத்தி வருகிறோம். இந்தவிடயத்தை சட்டசபையில் கிளப்பியதே விடுதலைச்சிறுத்தைகள் அமைப்புத்தான். சிங்கள பொலிசாருக்கு தமிழ்நாட்டில் பயிற்சியளிக்கப்பட்டபோது அதனை ஒரு பிரச்சனையாக எடுத்து அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு நாங்கள்தான காரணமாக இருந்தோம். அடுத்ததாக செஞ்சோலை சிறார்கள் மீது நடந்த விமானத்தாக்குதலை ஒட்டி, அந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் நாங்கள் முயற்சி எடுத்தோம். அங்கு ஒரு தீர்தமானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவை நடந்து கொண்டிருந்தபோது இரண்டு முறை ஈழத்தமிழர் பிரச்சனையை முன்வைத்து வெளிநடப்புச் செய்தோம். அதுமட்டுமல்லாமல் சட்டப்பேரவையில் ஈழத்தமிழருக்கு ஆதரவான இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இரண்டையும் நாங்கள்தான கொண்டுவந்தோம். அந்த தீரமானங்களை முதலமைச்சர் மிகவும் அக்கறையாகப் படித்தார். அவர் உள்ளாரந்து ஈழத்தமிழர்களின் நலனில் மிகவும் அக்கறை கொண்டவர். ஏற்கனவே இந்தப்பிரச்சனையால் ஓருமுறை அவர் ஆட்சி இழந்துள்ளார். அப்போது பெரும்பான்மை அரசாக இருந்தபோதே ஈழத்தமிழர் பிரச்சனையால் ஆட்சியை இழந்துள்ளார் இன்றைக்கு காங்கிரஸ் ஆதரவை வேண்டி நிற்கும் நிலையில் அந்த ஆட்சியை காப்பாற்ற வேண்டியதும் இன்றைக்கு ஈழத்தமிழரின் நலனுக்கு அவசியமாக இருக்கிறது. அந்தவிதத்தில் அவர் சாதுரியமாக இந்த பிரச்சனையை கையாளுகிறார் என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்று சொன்னால் அவர் சட்டப்பேரவையில் on record ஆக பேசியவிடயங்கள். அவ்வளவு அழுத்தம் திருத்தமாக வேறு யாரும் பேசியிருக்க முடியாது. குறிப்பாக அகதிகள் என்ற வார்த்தையை சொல்ல அவர் வாய் கூசினார் அதாவது தமிழர்களை அகதி என்று சொல்கிற நிலமை இன்றைக்கு இருக்கிறதே என்று வருத்தப்பட்டார். இது சட்டப்பேரவையின் ஆவணங்களில் பதிவாகியுள்ளது. அந்த அளவுக்கு அவருக்கு ஈழத்தமிழர் பிரச்சனையில் அவருக்கு அக்கறையுண்டு. இவர்களை பார்க்க மறுத்ததை ஒரு வயஉவiஉயட விடயமாகவே பார்;க்கிறேனே தவிர அவர் மனப்பூர்வமாக மறுத்துவிட்டார் என்று சொல்லமுடியாது.
இன்றைக்கு இந்திய அரசாங்கத்தின் அணுகுமுறை தீரமானிப்பது அரசியல் என்பதை விடவும் சில அதிகாரிகளாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் ஈழப்பிரச்சனைக்கு எதிரான மனச்சாய்வு பட்டவர்களாக இருக்கிறார்கள் இது எளிதில் மாறக்கூடியதாக இல்லை. ராஜிவ் கொலை விடயமும் இருக்கிறது. ஆகவே இந்த விடயத்தை மௌ;ள மௌ;ளத்தான அணுக முடியும். ஆனால் ஈழத்தமிழருக்கு ஒரு இன்னல் என்றால் நிட்சயமாக நாங்கள் எல்லாம் எங்களால் இயன்றதை செய்து அந்த இன்னலை களைவதற்கு நாங்கள் பாடுபடுவோம் பாடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.


சாதிகளை குறிப்பிட்டு விமர்சிப்பது சரியா? சாதிப்பிரிவினைகளை இல்லாமல் செய்யவேண்டும் என்று முயற்சிக்கிறீர்களா? அல்லது சாதிகளை வைத்துக்கொண்டே அவற்றுக்கிடையில சமத்துவம் இருந்தால் போதுமானது என்று நினைக்கிறீர்களா?
நிட்சயமாக எந்தவொரு தலித் சமூகத்தை சேர்ந்தரும் சாதி அமைப்பு இருக்கவேண்டும் என விரும்பமாட்டார்கள். சாதிகளை வைத்துக்கொண்டே ஏற்படுத்தும் சமத்துவத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. நாங்கள் ஏற்றுக்கொண்ட அம்பேத்கரின் பார்வை அடிப்படையாக எதை சொல்கிறதென்றால் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதுதான். அதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். எப்படியெல்லாம் சாதிமனோபாவம் வெளிப்படுகிறது என்ற கோணத்தில் விமர்சிக்கிறோமே தவிர சாதி ஒழிப்பு என்பதுதான் எங்களது அடிப்படையான நோக்கம். அதுதான் எங்களது அணுகுமுறை.

காலச்சுவடு சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிற்கு நீங்கள் ஒரு ஆலோசகராக இருக்கிறீர்கள். ஆனால் காலச்சுவடு பார்ப்பனிய நலன்களை (பின்தளத்திலாவது) பேணுகின்ற பத்திரிகை எனச் சொல்லப்படுகிறதே?
நான் காலச்சுவடு பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் இருந்திருக்கிறேன். சட்டமன்ற உறுப்பினரான பின்னர் அதிலிருந்து விலகி ஆலோசகராக இருக்கிறேன். என்னுடைய அனுபவத்தை பொறுத்தவரை அவர்கள் பார்ப்பன நலனைப் பேணுபவர்களாக நான் உணரவில்லை. குறிப்பாக தொடர்ந்து காலச்சுவடு பத்திரிகையில் பெரும்பாலான தலையங்கங்கள் என்னால் எழுதப்பட்டுள்ளது. அந்த தலையங்கங்கள் பலமுறை பார்ப்பனிய நலன்களுக்கு எதிரான பொருளை கொண்டிருக்கிறது. அடிப்படையில் இந்த மாதிரியான விரிவான கட்டுரைகளை நான் அதில் எழுதியிருக்கிறேன். என்னால் மட்டுமல்ல பலராலும் எழுதப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கிற பத்திரிகையினை பார்ப்பன நலன் பேணும் பத்திரிகையாக நான் பார்க்கவில்லை. அவர்கள் பிறப்பால் பார்ப்பனர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். இன்றைக்கு இருக்கிற ஆசிரியரோ அல்லது இதற்கு முன்னால் ஆசிரியராயிருந்த சுந்தர ராமசாமி அவர்களோ பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் ஆனால் சுந்தர ராமசாமி பார்ப்பனியத்தை ஆதரித்து எழுதியவரில்லை அதற்கு எதிரான வாழ்க்கையைத்தான் கடைப்பிடித்தார். அவரது இறப்பு கூட, இறந்ததற்கு பின்னால்கூட எந்தவித சடங்குகளுக்கு இடமுமில்லாமல் அவருடைய உடல் எரியுட்டப்பட்டது. எரியூட்டப்பட்ட இடம்கூட, வேறொரு பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு சொந்தமான சுடுகாட்டில்தான் எரியூட்டப்பட்டது. அங்கு அவரது சாதிக்காரர்கள், உறவினர்கள் பத்து இருபது பேர்கூட வரவில்லை. அதைவிட தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள். அவரது எழுத்தை விமர்சிப்பவர்கள்கூட நூற்றுக்கணக்கில் அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்கள். எனது அனுபவத்தில் நான் எல்லாவிதத்திலும் நுணுக்கமாக சாதியம் வெளிப்படுவதை அவதானிக்கிற ஆள் என்றவிதத்தில் அப்படி வெளிப்படடிருந்தால் நிச்சயமாக அதனைச் சகித்துக்கொண்டு இருந்திருக்க மாட்டேன். என்னுடைய அனுபவத்தில் அந்த பத்திரிகையை ஒரு பார்ப்பனிய நலன் பேணும் பத்திரிகை என்று சொல்ல மாட்டேன். குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்சனையிலும்கூட சுந்தர ராமசாமி காலத்திலும் சரி இப்போதும் சரி ஈழத்தமிழர் பிரச்சனைபற்றி எழுத்தில் ஆழமாக அணுகுகின்ற பத்திரிகையாகாத்தான் வெளிப்படுகிறது.

உங்களது அரசியல் வேலைகளால் இலக்கிய முயற்சிகள் தடைப்பட்டிருக்கும். புதிதாக ஏதாவது முயற்சிகளில் ஈடுபட்டுள்ளீர்களா?
எழுத்து முயற்சிகள் குறிப்பாக ஆக்க எழுத்து முயற்சிகள் பாதிக்கப்பட்டுத்தான் உள்ளது. நான் “தலித்”; என்ற இலக்கிய பத்திரிகையை நடாத்திக் கொண்டிருக்கிறேன். இந்த இதழை ஈழத்து தமிழ்க் கவிதைகளின் சிறப்பிழாக வெளியிடவிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் அது வெளிவரவிருக்கிறது. அதில் தமிழ்நாட்டில் இதுவரைக்கும் அறியப்படாத பல ஈழத்துக்கவிஞர்களை நான் அதில் அறிமுகப்படுத்துகிறேன். குறிப்பாக பெண் கவிஞர்களின் கவிதைகளை இதில் கொண்டு வருகிறேன். அனார், விநோதினி என்கிற கவிஞரகள். இவர்கள் தமிழ்நாட்டில் இதுவரைக்கும் அறியப்படாத கவிஞர்கள். அந்த கவிதைகள் குறிப்பாக ஈழத்து கவிதைப்போக்கை மட்டுமல்ல தமிழ்நாட்டு கவிதைப் போக்கிலிருந்து முற்றிலும் வேறுபட்டு அற்புதமான விதத்தில் வெளிப்படுகின்றன. அவை தமிழ் இலக்கிய உலகத்துக்கு புதிய வழியை திறந்துவிடும் என்று நம்புகிறேன். கிட்டத்தட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட கவிதைகள் ஈழத்து தமிழ் கவிதை சிறப்பிதழில் சேர்க்கப்பட்டுள்ளன.
2006 டிசம்பர் மாதத்தில் லண்டனிலிருந்து வெளிவரும் ஒருபேப்பர் என்ற பத்திரிகையில் வெளியான  நேர்காணல்)  பேட்டி கண்டவர் : கோபிரத்னம்

எழுத்தாளனின் கற்பனையும் படைப்பூக்கமும் அரசியலில் சாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்”நேர்காணல்: ரவிக்குமார் சந்திப்பு: தளவாய் சுந்தரம்
தீராநதி: தேர்தல் அரசியலில் ஈடுபடமாட்டோம், அதனைப் புறக்கணிக்கிறோம் என்று அறிவித்து, அந்த அறிவிப்பில் நீண்டகாலமாக உறுதியுடனும் இருந்த வி டுதலைச் சிறுத்தைகள், முதல்முறையாக தங்கள் பாதையை மாற்றி 1999 பாராளுமன்றத் தேர்தலில் பங்கெடுத்துக் கொண்டனர். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அந்த முடிவை எடுக்க நீங்களும் ஒரு காரணமாக இருந்தீர்கள் என்று சொல்லப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அரசியலில் ஈடுபடலாம் என்ற உங்கள் ஆலோசனைக்கு என்ன காரணம்?
ரவிக்குமார்: 1999 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கடுமையான ஒடுக்குமுறைகளை எங்கள் கட்சி சந்தித்தது. கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் குண்டர் தடுப்பு சட்டத்தி லும் கைது செய்யப்பட்டார்கள். அன்றிருந்த தி.மு.க., பா.ம.க. கூட்டணியால் வடமாவட்டங்களில் சாதி ஒடுக்குமுறையும் அரசு வன்முறையுமாக இரண்டு வி தமான நெருக்கடிகளை நாங்கள் எதிர்கொண்டோம். மேலும் வன்முறையாளர்கள் என்று எங்களைப் பற்றி அவப்பெயரை ஏற்படுத்தவும் சதி கள் நடைபெற்றன. எனவே அதனை எதிர்கொள்ள தேர்தலையும் ஒரு போராட்டக் களமாக மாற்றுவோம் என்று முடிவெடுத்தோம். தேர்தல் அரசி யலில் ஈடுபடுவது என்ற முடிவுக்கான முக்கிய காரணம் அதுதான். கருணாநிதி யும் ராமதாஸும்தான் நாங்கள் அந்த முடிவை எடுக்க காரணமாக இருந்தர்கள்.
தேர்தல் புறக்கணிப்பு என்பது ஒருவிதமான அரசியல் யுக்தி. மார்க்சிய லெனி னிய இயக்கத்தில் இருந்து வந்தவன் என்னும் முறையில், தேர்தல் புறக்கணி ப்பைத்தான் நான் தொடர்ந்து பேசியும் பின்பற்றியும் வந்திருக்கிறேன். ஆனால், அதன்பிறகு மார்க்சிய லெனினிய அரசியலையும் இந்தியா பற்றி அது கொண்டிருக்கும் மதிப்பீடுகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்திய போது, இந் திய பொருளாதாரத்தை மட்டுமல்லாமல் இந்திய அரசியல் அமைப்பையும்கூட இங்குள்ள மார்க்சிய லெனினியவாதிகள் புரிந்துகொள்ளவில்லை என்ற முடிவுக்குதான் வந்தேன். அந்த புரிதலின்மையுடன்தான் பல்வேறு நடைமுறைகளை அவர்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களை, குறி ப்பாக தலித் மக்களை ஒன்று திரட்டுவதற்கு பாராளுமன்றப் பாதையை புறக்கணிப்பதைவிட அந்தப் பாதையை பயன்படுத்துவது அதிக வலி மையானதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. அந்தவிதத்தில் வி டுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தேர்தலில் நிற்கும் முடிவை எடுத்தபோது எனது ஆலோசனைகளைச் சொன்னேன். அது அவருக்கு ஒரு ஊக்கமாக இருந்திருக்க வேண்டும். என்னைப் போன்று பலரும் அவர் இந்த முடிவை நோக்கி நகர்வதற்கான ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம், தேர்தல் புறக்கணிப்பிலேயே தொடர்ந்து இருக்கும் போது, அதில் ஒரு தொய்வு ஏற்பட்டுவிடுகிறது. அதனாலும் தேர்தல் பாதையைத்� தேர்ந்தெடுத்தொம். 1999 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இரண்டு இடங்களில் நாங்கள் போட்டியி ட்டோம். சிதம்பரத்தில் இரண்டேகால் லட்சம் ஓட்டுகள் திருமாவளவன் பெற்றார். அது தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியிலேயே தனியாக ஒரு வேட்பாளர் பெற்ற அதிக ஓட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. அது ஒரு மி கப்பெரிய திரட்சிதான். அந்தத் திரட்சி படிப்படியாக அதிகரித்து இன்று வடமாவட்டங்கள் முழுக்க பரவியிருக்கிறது. இந்தத் தேர்தலில் வடமாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணி பெற்றிருக்கும் வெற்றிக்கு காரணம் அதுதான்.
வாக்களிப்பது என்கிற செயல்பாட்டை அவ்வளவு சுலபமாக நாம் நிராகரி த்துவிட முடியாது. மக்கள் தங்கள் அதிகாரத்தைப் பிரயோகிக்கிற ஒரு வி ஷயமாகத்தான் அதனை நினைக்கிறார்கள். அந்தவகையில் வாக்குச்சீட்டுக்கு ஒரு சக்தி இருக்கிறது. அந்தச் சக்தியை மக்களின் நன்மைக்கு தக்கவாறு தி ருப்பும்போது ஒரு திரட்சி நடக்கிறது. அரசியல் என்றாலே அதை வெறுப்போடு பார்க்கிற போக்கு அதிகரித்து வரும் காலம் இது. ஆரோக்கி யமான பார்வையல்ல இது. இதனை மேதகு ஆளுநர் அவர்களும் தன் உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீராநதி: உங்கள் கட்சியின் நீண்டகால போராட்டமும் லட்சியமுமான தலி த்துகள் விடுதலையை தேர்தல் அரசியல் மூலம் பெறமுடியும் என்று நம்புகி றீர்களா?
ரவிக்குமார்: இந்தியாவில் சாதிய சமூகத்தில் தலித்துகள் மட்டுமல்லாமல் அனைத்து சாதியினரும்கூட ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள் எல்லோருமே சாதிய சமூகத்துக்குள் பிணைக்கப்பட்டு, அவர்களது சுதந்திரமும் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் இருக் கிறார்கள். சாதிய சமூகத்தின் பலனை அனுபவிப்பவர்களும் இதில் மாட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே தலித்துகளுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்குமே விடுதலை தேவையாக இருக்கிறது. அந்த வி டுதலை சாதி ஒழிப்பில்தான் இருக்கிறது. ஒரு வர்க்கம் அழியும்போது, அது தொழிலாளிக்கு மட்டுமல்லாமல் எப்படி முதலாளிக்கும் விடுதலையைக் கொடுக்குமோ அப்படி, சாதி அழியும்போது அது எல்லோருக்கும் வி டுதலையைக் கொடுக்கும். அந்த விடுதலையை தேர்தல் பாதையில் எட்டிவிட முடியும் என்று நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது. அது மிகப்பெரிய ஒரு போராட்டத்தால்தான் சாத்தியமாகும். இந்திய சமூகத்தில் சாதி ஒழிப்பு போராட்டம் என்பது ஆக வன்மையான ஒரு போராட்டமாக இருக்கும். அதற்கான பாதையை வகுப்பதில் தேர்தல் அரசியலையும் ஒரு யுக்தியாக பயன்படுத்தமுடியும். அது சிறிய அளவில் உதவவும் செய்யலாம், அவ்வளவுதான். எனவே, பாராளுமன்றப் பாதையை பயன்படுத்தும் போதே மற்ற போராட்ட வடிவங்களையும் கைவிடாமல் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
தீராநதி: நீங்கள் தேர்தலில் வேட்பாளராக நிற்கும் முடிவை எப்போது எடுத்தீர்கள்?
� ரவிக்குமார்: தனிப்பட்ட முறையில் தேர்தலில் நிற்பதை நான் விரும்பவில்லை. அதனைவிட கருத்துருவாக்கப் பணி எனக்கு முக்கியமானதாகப் படுகிறது. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வற்புறுத்தி என்னை நிற்கவைத்தார். இன்னொரு பக்கம், இந்த அமைப்பைப் பயன்படுத்தி நி றைய செய்யமுடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது. எனவே ஒப்புக்கொண்டேன். ஜனநாயகம் என்பதன் ஆற்றலை உணர்ந்ததாலும் நான் தேர்தலில் போட்டியிட்டேன். நான் வகித்துவந்த பாதுகாப்பான வங்கிப் பணி யை ராஜினாமா செய்யும்போது தேர்தலில் வெற்றிப் பெறுவதைப் பற்றிய அதி கமான நம்பிக்கை எதுவும் எனக்கு இல்லை. வெற்றி வாய்ப்பை இழந்தால் செய்யவேண்டிய பணிகள் குறித்துதான் அப்போது நான் திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். நான் உருவாக்கி வந்த கருத்துருவாக்கப் பணிக்கு இந்தப் பதவி ஒரு விதத்தில் இடையூறுதான் என்றாலும் இதன் வாயிலாகவும் செய்யக்கூடிய காரியங்கள் பல இருக்கின்றன என்று அப்போது எனக்குத் தோன்றியது.
தீராநதி: வெற்றிப்பெற்று சட்டசபைக்கு சென்றுபிறகு அக்கருத்தில் இன்னும் உறுதியாக இருக்கிறீர்களா?
ரவிக்குமார்: நிச்சயமாக. பல போராட்டங்கள் நடத்தி அதற்குப் பிறகு சாத்தி யமாகும் விஷயங்களை இப்போது எளிதில் நிறைவேற்ற முடிகிறது. நான் சட்டப்பேரவையில் முதல்முறையாகப் பேசிய போது, ஈழப்பிரச்னை முதல் நூலகங்களுக்கு வாங்கும் புத்தகங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதுவரை பல்வேறு பிரச்னைகளின் பால் அவையின் கவனத்தை ஈர்க்க முடிந்தது. அவற்றில் ஒன்றிரண்டில் வெற்றி பெறுவதும் சாத்தியமாயி ற்று. நூலகங்களுக்கு 600 புத்தகங்கள் வாங்குவது நான் பேசிய பிறகு 1000 புத்தகமாக மாறியிருக்கிறது. பத்து வருடம் போராடினாலும் இது நடக்குமா என்பது சந்தேகம்தான். சட்டப்பேரவையில் பேசினால் எல்லாவற்றையும் சாதி த்துவிடலாம் என்று நான் சொல்லவில்லை. சிலவற்றையாவது வெல்லலாம் என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தீராநதி: மற்ற அரசியல்வாதிகள் மாதிரியல்லாமல் ஒரு எழுத்தாளர் என்ற அடையாளத்துடன் வேட்பாளராக மக்கள் முன்னால் சென்றவர் நீங்கள். எழுத்தாளர் என்ற அடையாளத்தை மக்கள் எப்படி எதிர்கொண்டார்கள்?
ரவிக்குமார்: இந்தத் தேர்தலில் என்னைத் தவிர வேறு சில எழுத்தாளர்களும் போட்டியிட்டார்கள்; என்றாலும் எழுத்தாளர் என்ற அடைமொழியோடு வாக்காளர்களிடம் சென்றது அனேகமாக நான் மட்டுமாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன். பெரும்பகுதி கிராமங்களைக் கொண்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் எழுத்தாளன் என்ற இந்த பிம்பம் ஒரு அன்னியத்தன்மையை ஏற்படுத்திவிடுமோ என்ற தயக்கம் தொடக்கத்தில் எனக்கு இருந்தது. ஆனால், மிக விரைவில் அந்த அன்னியத்தன்மை சாதகமான விளைவையும் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தேன். “வழக்கமான அரசி யல்வாதிகளில் ஒருவரல்ல இவர்” என்ற எண்ணத்தை எழுத்தாளன் என்ற பிம்பம் எனக்கு வாக்காளர்கள் மத்தியில் உருவாக்கியது. அது என் மீது ஒரு பரி வுணர்வையும் உண்டாக்கியது. எனது எழுத்துலகப் பின்னணியை எடுத்துக்கூறும் விதத்தில், தேர்தலையொட்டி ‘தினமணி' மற்றும் ‘டெக்கான் க்ரானிக்கள்' நாளேடுகளில் கட்டுரைகள் வெளியாகின. அக்கட்டுரைகள் சிற்றி தழ் வட்டாரத்தில் மட்டும் அறியப்பட்டிருந்த என்னை ஒரு பரந்த தளத்தில் அறிமுகம் செய்துவைத்தன. நகர்புறத்தவர்கள் மத்தியில் எங்கள் கட்சி மீதி ருந்த ஒவ்வாமை உணர்வை மாற்றவும் அந்தக் கட்டுரைகளை நான் பயன்படுத்திக் கொண்டேன்.
ஒரு எழுத்தாளனின் கற்பனையும் படைப்பூக்கமும் அரசியல் தளத்தில் சாதகமான விளைவுகளேயே ஏற்படுத்தும் என்று நான் எண்ணுகிறேன். பிற அரசியல்வாதிகளிடம் இருந்து என்னை வேறுபடுத்தக்கூடிய அம்சம் அதுதான். தானும் ஒரு எழுத்தாளராக இருக்கிற முதலமைச்சரும் இதேவிதப் பண்புகளைக் கொண்டிருப்பார் என்பது என் நம்பிக்கை.
தீராநதி: தலித் வாக்காளர்களைப் பொறுத்தவரைக்கும் இந்தத் தேர்தல் எந்த அளவுக்கு முக்கியமானது என்று நினைக்கிறீர்கள்?
ரவிக்குமார்: தலித் வாக்காளர்களைப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டு அரசி யலிலேயே இந்தத் தேர்தல் மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். ஒரு புறக்கணிக்கமுடியாத சக்தியாக தலித் வாக்குவங்கி உருவாகியிருக்கிறது. இனி மேல் தமிழக அரசியல் சூழல் வேகமாக மாற்றத்துக்கு உள்ளாகும் என்று தோன்றுகிறது.
தீராநதி: இந்திய அரசியலமைப்பை முதலாளித்துவ பூர்ஷ்வா அரசியலமைப்பு என்கிற விதமாக பேசியும் எழுதியும் வந்துள்ள நீங்கள், இப்போது அந்த அமைப்பில் பங்கெடுத்துக் கொள்வது ஒரு முரண் இல்லையா?
ரவிக்குமார்: எனது எழுத்துகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய தவறான புரிதல் இது. மார்க்சிய லெனினிய இயக்கத்தில் இருந்தபோதும்கூட இந்திய அரசி யலமைப்பை பூர்ஷ்வா அமைப்பு என்று நான் கருதியதில்லை. அரைக் காலனிய, அரை நிலப்பிரபுத்துவ அமைப்பு என்றுதான் மார்க்சிய- லெனினியவாதிகள் வரையறுத்தார்கள். அந்த வரையறையும் சரியானதில்லை என்பதுதான் என் நிலைப்பாடு. இந்திய சமூகத்தை மதிப்பிட இன்னும் ஆழமான ஆய்வுகள் தேவை. அப்படியான ஆய்வுகள் இங்கு எந்த மார்க்கசியர்களாலும் மேற்கொள்ளப் படவில்லை. மாறாக, மார்க்சிய சித்தாந்திகள் என்று சொல்லப்பட்டவர்கள், ஏற்கெனவே இங்கு நிலவிய இந்துத்துவ கருத்தியலோடு சமரசம் செய்து கொண்டவர்களாகத்தான் இருந்தார்கள். மிகச்சிறந்த உதாரணம் நம்பூதிரி பாடு.
இந்தியாவை ஒரு பூர்ஷ்வா சமூகம் என்று நிராகரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. உண்மையில் இந்திய சமூக அரசியல் ஒரு பூர்ஷ்வா அமைப்பு கிடையாது. முதலாளித்துவ அரசியல் அமைப்பில் தனிமனிதன் என்கிற ஒரு அங்கீகாரம் இருக்கும். இங்கு தனிமனிதனை அங்கீகரிப்பதே இல்லை. இந்திய அரசி யல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது இதுபற்றி ஒரு விவாதமே உருவானது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை அலகாக எதனை எடுத்துக் கொள்வது என்ற கேள்வி எழுந்தபோது, காந்தியவாதிகள் ஒரு கிராமத்தைத்தான் அடிப்படை அலகாக கொள்ளவேண்டும் என்று வலி யுறுத்தினார்கள். அப்போது, அம்பேத்கர் ஒருவர் மட்டும்தான் தனிமனிதனை அடிப்படை அலகாக எடுத்துக் கொள்ளவேண்டும், கிராமத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி அதனைக் கொண்டுவந்தார். அதன் அடிப்படையில்தான் நமது உரிமைகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு முதலாளித்துவ அரசியல் அனுகுமுறைதான். ஆனால், மனிதர்களை மனி தர்களாகவே அங்கீகரிக்காத சாதிய சமூகத்தில், ஒரு தனிமனிதனாக சுரண்டுவதற்குக்கூட தலித்துகளை எடுத்துக்கொள்ளத் தாயாராக இல்லாத சமூகத்தில், இது ஒரு முற்போக்கான நடைமுறை.
தீராநதி: அதிகார மையங்களுக்குள் சென்று அதனைப் பயன்படுத்தி ஒன்றுமே செய்ய முடியாது, அதிகார மையங்களை அழிப்பது அல்லது தகர்ப்பதுதான் முக்கியமானது என்று அதிகார மறுப்பு மற்றும் பின் நவீனத்துவக் கோட்பாடுகளை பேசி வந்த உங்கள் பார்வையில் இப்போது மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதா?
ரவிக்குமார்: பின்நவீனத்துவாதிகள் என்று சொல்லப்படும் பலர் அதிகாரம் என்பதை அணுகியிருந்தாலும் முற்றிலும் வேறுபட்டு அதனை அணுகியவர் மி ேஷல் ஃபூக்கோதான். கார்ல் மார்க்ஸ் தொடங்கி மார்க்சியவாதிகள் அனைவரும் அதிகாரத்தின் ஒரு முகத்தை மட்டும்தான், குறிப்பாக அதன் ஒடுக்கும் பண்பை மட்டும்தான் பார்த்தார்கள். எனவே அதனை எதிர்க்கவேண்டும், நிராகரி க்கவேண்டும் என்னும் நிலைப்பாட்டை எடுத்தார்கள். அதனை வலியுறுத்திப் பேசி னார்கள். மாறாக மிஷல் ஃபூக்கோ அதிகாரத்தின் ஆக்கும் பண்பைப் பார்த்தார். அழிப்பதை மட்டுமல்லாமல் உற்பத்தியையும் அதிகாரம் செய்யும் என்பதை அவர் அடையாளம் காட்டினார். அதிகாரம் இரட்டைத்தன்மை கொண்டதாக - இருக்கும் போது, அதுகுறித்த உங்கள் அணுகுமுறை ஒரேவிதமானதாக இருக்க முடியாது. “துப்பாக்கிக் குழலிலிருந்துதான் அதிகாரம் பிறக்கிறது. அதி காரத்தை அழிப்போம்” என்று மாவோ சொன்னது இன்று பொய்யாகிவிட்டது. புரட்சியிலிருந்தும் அதிகாரம் பிறந்திருக்கிறது என்பதை நாம் பார்த்தோம். அது துப்பாக்கியிலிருந்து பிறந்த அதிகாரத்தைவிடக் கொடுமையானதாகி, சர்வாதிகாரத்தைக் கொண்டு வந்தது. விடுதலையின் பெயராலேயே ஒருவனை அடிமையாக்க முடியும் என்பதைத்தான் கம்யூனிச சமூகங்கள் நி ரூபித்திருக்கின்றன. இந்நிலையில் அதிகாரத்தைத் தகர்ப்பதல்ல, அதிகார சமன்பாடுகளை மாற்றியமைப்பதுதான் நாம் செய்யக்கூடியது என்கிறார் ஃபூக்கோ. அதாவது, நமக்குச் சாதகமாக மாற்றியமைப்பது.
அதேநேரத்தில் அதிகாரத்தை கைக்கொள்வதும் துறப்பதும் ஒரே நேரத்தில் நடக்கவேண்டும். அதாவது அதிகாரத்துக்காகப் போராடுகிற அதே நேரத்தில் அதனை துறப்பதற்கான மனநிலையும் உங்களிடம் இருக்கவேண்டும். இந்திய சமூகம் துறவையே அதிகாரத்துக்குப் பயன்படுத்திய சமூகம். அப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் அதிகாரத்தைக் கைக்கொள்வதற்கான வேட்கையையும் அதனைத் துறப்பதற்கான மனநிலையையும் ஒரே நேரத்தில் வைத்துக்கொள்வது என்பது மிகவும் சிக்கலான விஷயம். ஆனால், அதனை அம்பேத்கரிடம் நான்பார்க்கிறேன். ஃபூக்கோவின் நிலைப்பாட்டுக்கும் அம்பேத்கரின் நி லைப்பாட்டுக்கும் உள்ளார்ந்த ஒரு தொடர்பு இருக்கிறது. அதிகாரத்தைப் பற்றிய என்னுடைய புரிதல் இப்படித்தான் இருக்கிறது. நான் தேர்தலில் பங்கெடுப்பது என்பது அதிகார சமன்பாட்டை மாற்றியமைப்பதற்கான ஒரு சிறிய முயற்சி. ஆனால், அதிகார போதைக்குள் நாம் ஆட்பட்டுவிடக்கூடாது; அதனை துறப்பதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்று எனக்கு நானே அடிக்கடி சொல்லிக்கொள்கிறேன். எனவேதான் தேர்தல் முடிந்ததும் நடைபெற்ற எங்கள் கட்சியின் முதல் கூட்டத்தில் இனிமேல் தேர்தலில் நிற்கமாட்டேன் என்று அறிவித்தேன். அதற்கான தூண்டுதல் அம்பேத்கரிடம் இருந்தும் ஃபூக்கோவி டம் இருந்தும்தான் எனக்கு வருகிறது.
இலக்கியம் என்பது தத்துவத்தை அணுகுவதற்கு இன்னொரு வழி என்று மிஷல் ஃபூக்கோ குறிப்பிடுகிறார். அந்த வழியின் மூலமாக அரசியலுக்குள்ளும் நுழைய முடியும். இலக்கியத்துக்கும் அரசியலுக்குமான உறவை எப்போதுமே நான் வலி யுறுத்தித்தான் வந்திருக்கிறேன். இவ்வளவு காலமும் இலக்கியத்தின் அரசியலை கண்டு சொல்கிற விமர்சகனாக இருந்த நான், இப்போது அரசியலுக்குள் இலக்கி யத்தின் பண்புகளை ஏற்றுகிற படைப்பாளியாக மாறுகிறேன்.
தீராநதி: சட்டமன்ற உறுப்பினராக நீங்கள் செய்யத் திட்டமிட்டிருக்கும் வி ஷயங்கள் என்ன?
ரவிக்குமார்: வெகுஜன அரசியல் கவனத்தில் கொள்ளாத அனைத்தையும் அதன் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். சட்டசபையில் நான் பேசியமுதல் கன்னிப் பேச்சே அதனை உங்களுக்குச் சொல்லும். இருபத்தைந்தாயிரம் தொகுக்கப்பட்ட கல்வெட்டுகள் இன்னும் ஆவணப்படுத்தப்படாமல் இருக்கின்றன. தமிழின் தொன்மையையும் வரலாற்றையும் தெரிந்துகொள்ள இந்த கல்வெட்டுகள்தான் ஆதாரம். தமிழைச் செம்மொழியாக அறிவிக்கச் சொல்லும் நமது வேண்டுகோளுக்கு இந்த கல்வெட்டு ஆதாரங்கள் மிக முக்கி யமானவை. எனவே இந்த கல்வெட்டுகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்தேன். மேலும், தமிழக அரசு ஆவணங்கள் பெருமளவில் லண்டன் ஆவணக் காப்பகத்தில் இருக்கின்றன. அவற்றின் நகலை இங்கே கொண்டுவர முயற்சி எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினேன். இவைகள் வேறு எந்த சட்டமன்ற உறுப்பினராலும் எழுப்ப சாத்தியமில்லாத பிரச்னைகள். ஆனால், தமிழக அரசியலைப் பொறுத்தவரைக்கும் மிக ஆதாரமான வி ஷயங்கள். இந்த விஷயங்கள் எழுப்பப்பட்டால் அதனை மதித்து செய்ய விரும்பும் அரசாங்கம் இன்று இருக்கிறது என்பதும் சந்தோஷமான ஒரு விஷயம். எதிர்கட்சி அணியில் இருக்கும்போதும் இந்த பாராட்டைச் சொல்லவேண்டும்.
தீராநதி: பெரியார், திராவிட இயக்கம் மற்றும் திராவிடக் கட்சிகளை தொடர்ந்து விமர்சித்து வந்த நீங்கள் இப்போது ஒரு திராவிட இயக்கக் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இதனை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
ரவிக்குமார்: நான் சொல்வது உங்களுக்கு அதிரடியானதாகக்கூட இருக் கலாம். ஆனால், ஆனைமுத்து அவர்களுக்கு அடுத்தபடியாக பெரியாரை மீண்டும் மீண்டும் படித்தவன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன் என்று உறுதியாக நம்புகிறேன். பெரியாரைப் படித்து, அதனை வெவ்வேறு சூழலுடன் பொருத்திப்� பின்நவீனத்துவ பின்புலத்துடன் அவருடைய போராட்டங்களைப் பார்த்து, மறுவாசிப்பு செய்த ஆரம்பகால எழுத்தாளர்களில் நானும் ஒருவன். பெரியார் குறித்த விவாதங்களைக் கிளப்பி, அவருடைய எழுத்துக்கள் மீண்டும் பெரிய அளவில் வாசிக்கப்படவும் நாங்கள் காரணமாக ருந்தோம். அந்த விவாதங்களி ல் நான் முன்வைத்த, மையமாக எழுப்பிய பிரச்னையை யாருமே கண்டுகொள்ளவில்லை அல்லது அதிலிருந்து நழுவிப்போக விரும்புகிறார்கள்.
1998ல் திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு ஆதரவு தருகிறது. எனக்கு அது ஒரு அதிர்ச்சியைத் தந்தது. ஆனால், அதனை மற்றவர்களைப் போல் தி.முக. தலைவரின் அல்லது கட்சியின் சந்தர்ப்பவாதம், நிலைப்பாடு என்று குறுக்கி என்னால் பார்க்க முடியவில்லை. அத ற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன என்று எனக்குத் தோன்றியது. அதன் சி ந்தனையிலேயே அதற்கான காரணங்கள் இருக்கிறதா என்று தேடத் தொடங்கி னேன். அப்போது பெரியாரிடம் அதற்கான வேரைப் பார்த்தேன். குறிப்பாக, சி றுபான்மையினர் குறித்த அவருடைய அணுகுமுறையில் பெரும்பான்மையினரி ன் குரலைத்தான் நான் பார்க்கிறேன். சிறுபான்மையினர் பிரச்னை தொடர்பான ஒரு கட்டுரையில் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் மிகக் கடுமையாக அவர் தாக்குகிறார். எதனைச் சொல்லியும் அவர் பேச்சுகளை இப் போது நியாயப்படுத்த முடியாது. “பாப்பானுக்குப் பயந்துகொண்டு நாம்முஸ்லிம்களுக்கு இடம் கொடுத்துவிட்டோம். இது சாணியை மிதிக்க விரும்பாமல் மலத்தில் கால் வைத்தது போல் இருக்கிறது” என்று அவர் சொல்கிறார். மேலும், “சிறுபான்மையினர் கையில் அதிகாரம் வருவது நாட்டுக்குக் கேடு” என்றும் சொல்கிறார். இதனால், மத அடிப்படைவாதம் உச்சத்தில் இருந்த சூழலில், அதனை எதிர்கொள்ளப் பெரியாரியம் பயன்படாது என்று எனக்குத் தோன்றி யது.
அரசியலமைமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கு முன்னால் அம்பேத்கர் சி றுபான்மையினர் பிரச்னையை எப்படி அணுகவேண்டும் என்பது குறித்துப் பேசி யதை, பெரியாரின் இந்த நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். “சி றுபான்மையினர் கையில்தான் அதிகாரம் இருக்க வேண்டும் பெரும்பான்மை கையில் போகக்கூடாது” என்கிறார் அம்பேத்கர். “இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை என்பது மதப் பெரும்பான்மை. இது மாறாதது. பொதுவாக பெரும்பான்மை ஆட்சி செய்வது என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால், அந்தக் கோட்பாட்டை அப்படியே இந்தியாவில் பொருத்தினீர்கள் என்றால் அது இங்குள்ள மதப் பெரும்பான்மையினர் கையில் அதிகாரத்தைக் கொண்டுோய்க் கொடுத்துவிடும். அது கூடாது. மதப் பெரும்பான்மையை நாம் கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும்” என்கிறார். முடிவாக, ”சிறுபான்மையினர் அனைவரும் சேர்ந்து ஆட்சியமைக்க வாய்ப்பு இருக்க வேண்டும். அதே நேரத்தி ல் சிறுபான்மை உதவி ல்லாமல் பெரும்பான்மை மட்டும் ஆட்சியமைக்க வழி இருக் கக்கூடாது” என்றும் சொல்கிறார். அம்பேத்கருடைய நிலைப்பாடும் பெரி யாருடைய நிலைப்பாடும் எதிர் எதிரானவை. இந்நிலையில், அம்பேத்கரை வடநாட்டுப் பெரியார் என்று சொல்வதும், பெரியாரை தென்நாட்டு அம்பேத்கர் என்று சொல்வதும் முட்டாள்தனமானது. இரண்டு பேரும் பார்ப்பனி யத்தை எதிர்த்தார்கள் என்பதிலும் இருவரும் அடித்தட்டு மக்களின் வி டுதலைக்காக குரல் கொடுத்துள்ளார்கள் என்பதிலும் ஒற்றுமை இருக்கலாம். ஆனால். அணுகுமுறையில், சிந்தனை முறையில் இருவருக்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது.
பெரியாரை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப மறுவாசிப்புச் செய்யவேண்டும், இன் றைய காலகட்டத்துக்குப் பொருத்தமுள்ளதாக அவரது சிந்தனைகளை மாற்றவேண்டும் என்பதுதான் என் நோக்கம். இதனை தாழ்த்தப்பட்டவர்களுக்கு பெரியார் எதுவும் செய்யவில்லை என்று நான் சொல்வதாகத் திருப்பிவி ட்டார்கள். பெரியாரை சிந்தனை தளத்தில் அங்கீகரித்து, அவருடைய சி ந்தனைகள் நமக்கு எப்படிப் பயன்படும் என்று நான் பார்த்திருக்கிறேன். உண்மையில் பெரியாரியவாதிகள் இதன் முக்கியத்துவத்தை உணர்வார்களானால் என்னை அவர்கள் சாதகமாகத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். மாறாக, அவர்கள் எனக்கு அவதூறு கடிதங்களையும் மிரட்டல் கடிதங்களையும் எழுதினார்கள். தொலைப்பேசியி ல் மிரட்டும் விதமாக பேசினார்கள். அந்தளவுக்குத்தான் பெரியாரை அவர்கள் உள்வாங்கி இருக்கிறார்கள்.
பெரியார், தொடர்ந்து மாறிக்கொண்டும் தன்னையே மறுத்தும் பல்வேறு நி லைப்பாடுகளை எடுத்திருக்கிறார். அவரது வாரிசுகளான திராவிட இயக் கத்துக்காரர்க ோ தி.மு.க. கட்சிக்காரர்களோ அந்தவகையில் அவரைப் பின்பற்றுவது சாத்தியமே இல்லாதது. பொதுவாழ்க்கையில் மானம் பார்க்கக்கூடாது என்று சொன்னார் பெரியார். மேடையில் செருப்பை வீசி னால் இன்னொரு செருப்பையும் தேடி எடுத்துக்கொண்டு வா என்று சொன்னார். அதாவது பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு இந்தமாதிரி பி ரச்னைகளை தனிப்பட்ட பிரச்னையாக பார்க்ககூடாது என்று சொல்லி, அதுபோல் வாழ்ந்தும் காட்டியிருக்கிரறார். ஆனால், அவரது வாரிசுகள், மானம் பார்க்கிறவர்கள் பொதுவாழ்க்கைக்கு வரக்கூடாது என்பதுபோல் அதனை மாற்றிவிட்டார்கள். அவர்களால் அவரது உண்மையான வாரிசாக இருக் கமுடியாது. அது சாத்தியமுமில்லை. நாம் அதனை அவர்களிடம் எதி ர்பார்க்கவும் கூடாது.
திராவிடக் கட்சிகளின் கடந்த நாற்பதாண்டு ஆட்சியில் ஒடுக்கப்பட்ட மக்களி ன் நிலை மிகவும் மோசமாகியிருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்கள் நி லமற்றவர்களாக மாற்றப்பட்டதும் அவர்களது கல்வி நிலை மோசமானதும் தி ராவிட கட்சிகளின் ஆட்சியில்தான். மொத்தத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சி என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகத்தான் இருந்திருக்கிறது என்பதனை உணர்ந்து அதன் அடிப்படையில்தான் அதனை விமர்சிக்கிறோம். அதேநேரத்தில் அவர்கள் செய்த நல்ல விஷயங்களை ஆதரிக்கவும் செய்தி ருக்கிறோம்.
தேர்தல் கூட்டணி என்பது அரசியல் அதிகாரப் பகிர்வுக்காக, இரண்டு வெவ்வேறு கொள்கையுள்ள கட்சிகள் ஏற்படுத்திக் கொள்கிற ஒரு தற்காலிக ஏற்பாடு. கொள்கை சார்ந்து எந்தக் கூட்டணியும் அமைய முடியாது. கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு அந்தக் கட்சியிலேயே சேர்ந்து விடலாமே. திராவி டக் கட்சிகளுடன் விமர்சனங்கள் வைத்திருந்தாலும் இந்தக் கூட்டணி தேவையாக இருக்கிறது.
தீராநதி: இது ஒரு சமரசம் இல்லையா?
ரவிக்குமார்: சமரசம்தான். நடைமுறையில் சமரசம் இல்லாமல் எதுவும் சாத்தி யமும் கிடையாது. ஆனால், கருத்தியல் தளத்தில் சமரசம் கிடையாது.
தீராநதி: உங்கள் தொகுதிக்கு நீங்கள் செய்ய திட்டமிட்டிருக்கும் வி ஷயங்கள் என்ன?
ரவிக்குமார்: எனது தொகுதியை ஒரு மாதிரி தொகுதியாக மாற்றிக்காட்ட வேண்டும் என்பதுதான் இப்போது எனக்கு இருக்கும் திட்டம். அதன் மூலம் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்த விரும்புகி றேன். அது இந்த சட்டமன்ற ஜனநாயகத்துக்கு ஒரு புத்துயிர்ப்பைக் கொடுக்கும். பெண்களை அதிகாரம் உள்ளவர்களாக மாற்றுவது, மாணவர்களுக்கான கல்வித் திட்டத்தில் கவனம் செலுத்தி சில முக்கியமான காரியங்களைச் செய்வது, பின்தங்கியிருக்கும் கிராமப்புறப் பகுதியைச் சேர்ந்தவர்களைச் சுயசார்பு கொண்டவர்களாக மாற்றுவது, இந்திய அளவில் முக்கியமான பல்வேறு சிந்தனையாளர்கள் எழுத்தாளர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து அவர்களை தொகுதிக்கு அழைத்துத் தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒட்டுமொத்தமான ஒரு திட்டத்தை உருவாக்குவது என்று பலவற்றைத் திட்டமிட்டிருக்கிறேன். குழுவில் இருக்கும் அனைவரும் சேர்ந்து அந்த திட்டத்தை செயல்படுத்துவோம். நான் அதில் ஒரு அங்கமாக - இருப்பேன், அவ்வளவுதான்.
தீராநதி: இனிமேல் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கி றீர்கள். அப்போது என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?
ரவிக்குமார்: நான் முக்கியமாக நினைக்கிற கருத்துருவாக்கப் பணிகளில் என்னுடைய கவனம் இருக்கும்.
தீராநதி: இன்றைய தமிழக அரசியல் சூழ்நிலை குறித்த உங்கள் விமர்சனங்கள் என்ன?
ரவிக்குமார்: பல குறிப்பிடத்தக்க தலைவர்கள் தமிழக அரசியலில் இருக்கி றார்கள். கலைஞர் மிக முக்கியமான ஒரு ஆளுமை. அவரளவுக்குத் தன்மைகள் கொண்ட இன்னொரு ஆளுமையை இனிமேல் பார்க்க முடியாது. எழுதுகிற, பேசுகிற, படிக்கிற ஆற்றல் கொண்ட தலைமுறை கிட்டத்தட்ட அவருடன் முடிகிறது. இதனால் மிகவும் தனித்தன்மை வாய்ந்த ஒரு ஆளுமையாக அவர் இன்று இருக்கிறார். ஜெயலலிதா துணிவு, தன்னம்பிக்கை, தைரியம் இவற்றுக்கு எடுத்துக்காட்டாகச் சொல்கிற அளவுக்கு ஒரு ஆளுமையாக இருக்கிறார். பெரிய தியாகங்களைச் செய்துவிட்டு அதுபற்றிய எந்தவொரு எண்ணமும் ல்லாமல் இருக்கும் நல்லக்கண்ணுவும் அவருடைய எளி மையும் மிகவும் போற்றக்கூடியவை. இளையதலைமுறை தலைவர்களிள் வேறு � யாரைவிடவும் பல்வேறு பரிமாணங்கள் கொண்ட ஒரு ஆளுமையாக தி ருமாவளவன் இருக்கிறார். இவ்வளவு சக்திவாய்ந்த, வித்தியாசமான பல்வேறு ஆளுமைகளை வேறு எதாவது இந்திய மாநிலங்களில் பார்க்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இவர்களிடம் இருந்து அடுத்தத் தலைமுறையினர் சாதகமான பண்புகளை உள்வாங்கவேண்டும். நிச்சயமாக இந்தத் தலைவர்கள் அனைவரிடம் இருந்தும் ஆரோக்கியமான பண்புகள் நமக்கு வரவேண்டும் என்று நினைக்கக் கூடியவனாகத்தான் நான் இருக்கிறேன்.
தீராநதி: தலித் இயக்கங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது ஏன் சாத்தியமி ல்லாமல் இருக்கிறது?
ரவிக்குமார்: பிற்பபடுத்தப்பட்டோர் என்று பொதுவாக பேசினாலும் அதற்குள் இருக்கும் சாதிகள் எப்படி தனித்தனியாக இருக்கிறதோ, அதுபோல் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வரையறைக்குள் இருக்கும் சாதிகளும் தனித்தனி யாகத்தான் இருக்கின்றன. இது முக்கிய காரணம். ஆனால், தாழ்த்தப்பட்ட சாதி யினருக்கு இடையிலான உறவு, இந்து மதத்துக்குள் இருக்கும் சாதியினருக்கு இடையில் இருப்பதுபோல் பகைமைத்தன்மை கொண்டதாக இல்லாமல் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக இருக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு இடையே வேறுபாடுகள் இருந்தாலும் அவர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறையின் அடிப்படையி ல் அவர்களுக்கு இடையே ஒரு ஒருமித்தப் பண்புகள் இருக்கின்றன. அந்தப் பண்புகளை அடையாளப்படுத்தி எல்லோருக்குமான கோரிக்கைகளை வலி யுறுத்தி முன்னே செல்லும்போது பரந்த தளத்தில் அவர்கள் அனைவரையும் தி ரட்டமுடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. உட்சாதிப் பிரிவுகளை கடந்துபோகவேண்டும் என்ற பார்வையும் கருத்துப் பின்புலமும் எங்களுக்கு இருக் கிறது. அதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து இடைவிடாமல் செய்துகொண்டுதான் இருக்கிறோம். சில தலைவர்களிடம் இருக்கும் தனிப்பட்ட ஈகோ காரணமாக அது சாத்தியப்படுவது தள்ளிக்கொண்டே போகிறது. இன் னொரு பக்கம் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இடையே மட்டுமல்லாமல் மற்ற எல்லா சாதியினருக்கும் இடையேயும் ஒரு உறவை ஏற்படுத்தவேண்டும் என்பது எங்கள் குறிக்கோள்களில் ஒன்று.
(தீராநதி ஜூலை 2006 இதழில் வெளியான நேர்காணல்)

Sunday, June 26, 2011

மறுபாதி :ஈழத்திலிருந்து கவிதைக்கென ஒரு சிற்றிதழ்
இனப்படுகொலைகளின் ரணம் ஆறாத நிலையில் இன்னும் வாழ்வுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஈழத்திலிருந்து கவிதைக்கென ஒரு காலாண்டிதழ் வெளியிடப்படுகிறது. கவிஞர் சித்தாந்தனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் அந்தச் சிற்றிதழ் ஈழத் தமிழர்கள் எல்லா தளங்களிலும் தமது ஆற்றலை மீட்டெடுப்பார்கள் என்ற நம்பிக்கையை நமக்குத் தருகிறது.

கவிஞர் சித்தாந்தன் அந்தப் பத்திரிகையின் ஐந்தாவது இதழை எனக்கு அனுப்பிவைத்திருந்தார். மொழியாக்கக் கவிதைகளின் சிறப்பிதழாக வெளிவந்திருக்கும் அந்த இதழில் நான் மொழிபெயர்த்த இரண்டு கவிதைகளும் வெளியாகியிருக்கின்றன. கவிஞர் சி சிவசேகரத்தின் நேர்காணலும் இடம்பெற்றிருக்கிறது. மாஒ சேதுங் கவிதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டது தொடர்பாக அதில் குறிப்பிட்டிருக்கும் சிவசேகரம் “ எஸ்.வி.ராஜதுரை 1980 அளவில் வெளியிட்ட நூலில் பல பயனுள்ள குறிப்புகள் இருந்தாலும் கவிதைகளாக அவரது தமிழாக்கம் குறைபாடானது என்பதே என் எண்ணம்” என்கிறார். ‘ ஈழத்துக் கவிதைத் தமிழாக்கங்கள் ஒருசிலர் போகக் கவிஞர்களாலேயே மேற்கொள்ளப்பட்டமை அவை தமிழகத்தின் தமிழாக்கங்களைவிடக் கவித்துவமாக அமைய உதவியதாகத் தோன்றுகிறது” எனவும் சிவசேகரம் கூறியிருக்கிறார்.இந்தக் கூற்றுகள் விவாதிக்கப்படவேண்டும்.

பாலஸ்தீனக் கவிதைகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்த கவிஞர் எம்.ஏ.நுஃமான் இந்த இதழில் ஹாரிஸ் காலிக் என்ற பாகிஸ்தானியக் கவிஞரின் நான்கு கவிதைகளை மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். அவற்றிலிருந்து ஒன்றை இங்கே தருகிறேன்:

தெரு நாய்கள்

ஒருவார கால தெருநாய் ஒழிப்பு
நடவடிக்கைகளின் கீழ்
கராச்சி மாவட்ட மத்திய நகராட்சிச் சபை
444 நாய்களைக் கொன்றது

அதே மாவட்டத்தில்
நாம் , ஜனநாயகவாதிகள்
888 தெரு மனிதர்களைக் கொல்ல நேர்ந்தது
அவர்களின் வேட்டைப் பற்களுக்கு
நாம் எல்லோரும் பயந்ததே காரணம்.

- ரவிக்குமார் தொடர்பு முகவரி :

மறுபாதி
அரசரடி வீதி
கோண்டாவில் வடக்கு
யாழ்ப்பாணம்


விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள்- ஜெயபால்       19 ஆம் நூற்றாண்டில் உருப்பெற்ற  'Folklore'  என்ற சொல் தமிழ்ச்
சூழலில் மக்கள் வரலாறு  , நாட்டுப்புற வரலாறு என்றெல்லாம் அழைக்கப் பட்டு,
தற்போது நாட்டார் வழக்காறு என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், வாய்மொழிக்
கலை, வாய்மொழி இலக்கியம் என்ற  சொற்களே பொருத்தமானவையாக இருக்கும் என்று பாமன்
அவர்கள் கூறுகிறார். தொடக்கத்தில் மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், பாடல்கள்,
பழமொழி, நிகழ்த்துக் கலைகள் ஆகியவற்றை ஆவணப் படுத்துதல், ஆய்வுக்கு
உட்படுத்துதல் என்று செயல்பட்ட நாட்டார் வழக்காற்றியல்  துறை, இன்று   மிகப்
பெரிய அறிவியல் துறையாக, சமூகவியல், மானுடவியல், இனவரைவியல் போன்ற உலகியல்
சார்ந்த தத்துவங்களோடும், கோட்பாடுகளோடும்  இணைந்து தனது எல்லையை விரித்துக்
கொண்டிருக்கிறது. இந்த அறிவியற் கூறுகளின் விழுமியமாக இந்த  நூலை பார்க்க
முடியும். ப்ருன்வாந்து, ஹீர்ச்கொவிட்ஸ், பெட்டெர்மன், அகர், டென்சின்,
ஹவிலாந்து, ஆபிரகாம் போன்ற இனவரைவியல்(Ethnography) ஆய்வாளர்களோடு இந்நூல்
நகர்ந்து செல்கிறது.கவிஞர் பழமலையின் 'சனங்களின் கதை' சமூக யதார்த்தங்களைப்
பற்றி எவ்விதமான  ஆரவாரமோ, அலங்காரமோ இல்லாமல், இனவரைவியலின் பலத்தோடு
திகழ்கிறது என்றும், தலித்திய எழுத்தார் பாமாவின் கருக்கு, சாதியமைப்பு, தலித்
உட்சாதிமோதல், கிறித்துவத்தில்  தீண்டாமை  குறித்து தீவிரமாக பேசுவதால்,
கருக்கு தலித்துகளின் சுய இனவரைவியல்  என்பதையும்  நுட்பமாக எடுத்து
சொல்கிறார்.

        'கட்டுமரங்கள்' (கவிதை தொகுப்பு), 'தஞ்சாவூர் மாவட்டக் கடலோர மீனவர்
பாடல்கள்' (முனைவர் பட்ட ஆய்வு), 'குலக் குறியியலும் மீனவர் வழக்காறுகளும்'
(ஆய்வு நூல்) என்று கடல், மீன், காற்றோடு உறவாடும் ஆ. தனஞ்செயன், இந்நூலில்
மீனவரின் சுறாமுள் வழிபாடு, ஏழு கன்னிமார் வழிபாடு, அம்பாப் பாட்டு  குறித்த
விரிவான தரவுகளோடு, மீனவ சமுதாய வாழ்வினை வகைப்படுத்தி இருப்பது அவரின்
நுண்மான் நுழை புலத்திற்கு சான்றாக திகழ்கிறது எனலாம்.சமூக விளிம்பில்
நாடோடியாக தள்ளப்பட்ட பூவிடையார் (சாதியாக பழமரபு கூறுகிறது), எப்படி
பூமாட்டுக்காரர், பூம்பூம் மாட்டுக்காரர், பெருமாள் மாட்டுக்காரர் ஆனார்கள்
என்பதை, மரபுவழிப்பட்ட கதைகளின் வழி ஆராயும் ஆசிரியர், கடந்தகால யதார்த்தம்,
நிகழ் கால யதார்த்தம் என்ற இரு வேறு தன்மைகளில் அவர்களின் வாழ்க்கை அமைப்பினை
வகைமைப் படுத்துகிறார்.

       'நிஜ நாடக இயக்கம்' மு. இராமசாமி, 'துளிர்'  ராஜி, 'கூத்துப் பட்டறை'
ந.முத்துசாமி, பேராசிரியர்.செ.இராமானுஜம், கே. ஏ. குணசேகரன், முருகேசன்,
பிரளயன், மங்கை போன்ற நவீன நாடகக் காரர்களின் மத்தியில், வாய் மொழிக் கூறுகள்,
மொழிசாராத கருத்துப் புலப்படுத்தக்  கூறுகளின்  மரபார்ந்த நிகழ்த்துக்
கலைவடிவங்கள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தினை, அவர்களின் நாடகப் பிரதியைக்
கொண்டே விவரித்துக் கூறுகிறார். இந்நூல்   மக்களின் வாழ்க்கை முறை சார்ந்த,
அன்றாட நிகழ்வுகளை, அதனைப் பேசும் இலக்கியங்களை மேலை நாட்டு தத்துவங்களோடும்,
கோட்பாடுகளோடும்  பேசுகிறது. இது நாட்டார் வழக்காற்றியலை, அறிவியல்
அணுகுமுறையில் ஆய்வுக்கு உட்படுத்தியதில் கிடைத்த வெற்றி என்ற போதிலும்,
மறுபுறம் இவ்வணுகுமுறை(சமூகவியல், மானுடவியல், இனவரைவியல்,..),  நாட்டார்
மரபுகளையும், அடையாளங்களையும், நாம் நம்மை அறியாமலேயே இழக்க நேரிடுமோ என்ற
அச்சமும், இறுதில் கோட்பாடுகள் மட்டுமே எஞ்சி நிற்க  வழி வகுக்குமோ என்ற
எண்ணமும் ஏற்படுகிறது.

      ஏனெனில், இன்றைய சூழலில் நாட்டார் தெய்வங்கள் குறித்த ஆய்வுகள் கூட,
பொதுவாக அந்த வழிபாட்டு முறை, நம்பிக்கைகள் முதலியவற்றிலிருந்து விலகிய
நிலையில் நின்று, அதனை விளங்கி கொள்ள முயல்பவையாகவே இருக்கின்றன. அறிவுத்
தளத்தில் நின்று  பற்பல கேள்விகளை எழுப்பி அணுகுவோர்கும், அந்த வழிபாட்டில்
பங்கேற்பாளராக இருப்போர்க்கும் மிகப் பெரிய வித்தியாசத்தை, நாம்  காண முடியும்.
இதனை நாட்டார் தெய்வங்கள், 'வைதிக இந்து மதத்திற்குள்' உள்ளிழுக்கப்படுதலில்
காணலாம். இந்தப் புரிதலில் இந்நூலை அணுகுதல் என்பது, எட்வர்த் செய்த்  கூறியது
போல, ஆய்வாளரின் கருத்தாக்கம் வேற்றார் பண்பாட்டின் மீது திணிக்க முயல்கிறதோ
என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம்.

விளிம்புநிலை  மக்கள் வழக்காறுகள் (இனவரைவியல் ஆய்வு) 
ஆ. தனஞ்செயன்
வல்லினம் பதிப்பகம், ஜூலை 2006


( ஜெயபால் 
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், 
புதுதில்லி )

நல்லாப்பிள்ளை பாரதப் பதிப்பு: சில இழப்புகள்மீது உருவான பெரும் இருப்பு -மு. ஏழுமலை

ஒரு மொழியில் உருவான இலக்கியம், அம்மொழி, அம்மொழி சார்ந்த இனம் ஆசியவற்றைக் கடந்து, பரவலாகப் பல மொழிகளுக்கான இலக்கியமாக உருவாதல் என்பது சிறப்பு. இச்சிறப்பை முழுமையாகப் பெற்றவை, வடமொழியில் உருவான இராமாயணம், பாரதம் என்னும் இரு இதிகாசங்களாகும். இவ்விரு இதிகாசங்களும் மற்ற மொழிகளில் இயற்றப்படும் போது அந்த மொழி வழங்கும் நிலத்தின் பண்பாட்டை உள்வாங்கி அம்மொழியில் உருவான இலக்கியங்களாகவே தோன்றின. அப்படி உருவாவதற்கான நெகிழ்வுத் தன்மையை இவை பெற்றுள்ளன. இத்தன்மைதான் இந்தியா முழுவதிலும் பல்வேறு மொழிகளில் அந்தந்த மொழி, இனம், வட்டாரம் சார்ந்த அடையாளப் பதிவுகளுடன் கூடிய பாரதம் உருவாகும் சூழ்நிலையைச் சாத்தியப்படுத்தியுள்ளது. வடமொழியிலேயே பல்வேறு இராமயண, பாரத நூல்கள் தோன்றி, மூல நூலைக் கண்டறிவதில் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளன.
வடமொழியில் உருவான இவ்விரு இதிகாசங்களில் இந்தியா முழுமைக்கான இதிகாசமாக பரவலாக்கம் பெற்றதில் இராமாயணத்தைவிட பாரதத்திற்கு முதன்மையான இடமுண்டு. பாரதக் கதையை ஒரு சமூகம் சார்ந்த நிகழ்வாக, வாழ்வியலாக காணும் சாத்தியக் கூறுகள் பெரும்பான்மையாக உள்ளன. இக்கதைக்கரு உடைபடாமல் ஒவ்வொரு மொழியும் தம் இனம், வட்டாரம், சார்ந்த பண்பாட்டுக் கூறுகளுக்கும் அடையாளங்களுக்கும் ஏற்ப மாற்றித் தமக்காக மகாபாரதத்தை வடிவமைத்துக் கொண்டன. இவ்வாறு பாரதத்தைப் பயன்படுத்திக் கொண்ட, பயன்பெற்ற மொழிகளுள் முதன்மையானது தமிழ்மொழி.
கி.பி. 4ஆம் நூற்றாண்டில் வடமொழியில் உருவான வியாச பாரதத்தைத் தொடர்ந்து, தமிழில் பல பாரத நூல்கள் உருவாகத் தொடங்கின. இவற்றுள், கி.பி. 9ஆம் நூற்றாண்டில் உருவான பெருந்தேவனார் பாரதம், கி.பி. 14ஆம் நூற்றாண்டில் உருவான வில்லிபாரதம், கி.பி. 18ஆம் நூற்றாண்டில் உருவான ‘நல்லாப்பிள்ளை பாரதம்’ முதலானவை குறிப்பிடத்தக்க பாரத நூல்களாகும். இவற்றில் பதினெட்டுப் பருவங்களையும் கொண்ட முழுமையான பாரதத்தைத் தமிழுக்குக் கொடுத்த பெருமை தொண்டை மண்டலத்தில் கீழ்முதலம்பேடு என்னும் கிராமத்தில் வாழ்ந்த ‘நல்லாப்பிள்ளை’ அவர்களுக்கே உரியது.
தமிழ்ப் பண்பாட்டு மரபுகளையும் சமகால நிகழ்ச்சிகளையும் உள்வாங்கி, பதினெட்டுப் பருவங்களில் ஒரு முழுமையான நூலாக நல்லாப்பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூல் சிறந்த முறையில் பதிப்பிக்கப்பட்டு மக்களிடம் பரவலாக்கம் செய்யப்பட்டதா என நோக்கும் பொழுது, ஏமாற்றமே கிடைக்கின்றது. இதன் மூலம் தமிழ்ச் சமூகம் ஒரு மிகப்பெரிய பணியின் மதிப்பை எவ்வாறு உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் உருவான நல்லாப்பிள்ளை பாரதத்திற்கு, 1888இல் சிதம்பரம் சாமிநாதய்யர் பாரிசோதித்த ஒரு பதிப்பும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், திரிசிபுரம் அ. சுந்தரநாதபிள்ளை அவர்களால் அச்சிடப்பட்ட ஒரு பதிப்பும் மட்டுமே வெளிவந்துள்ளன. இதனால் நல்லாப்பிள்ளை பாரதப் புத்தகம் குறிப்பிட்ட சிலரிடமே உள்ளதையும் மிகச் சிலரே வாசித்து அறிந்ததையும், மிகக் குறுகிய வட்டத்தில் பரவலாக்கம் பெற்றதையும் உணர்ந்துகொள்ள முடிகிறது.
இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 99 ஆண்டுகளுக்குப் பிறகு நல்லாப்பிள்ளை பாரதம் மூன்றாம் பதிப்பாக முனைவர் இரா.சீனிவாசன் அவர்களால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 13,949 செய்யுள்கள், 131 சருக்கங்கள் கொண்ட இந்நூல் 2248 பக்கங்களைக் கொண்டதாக மிகப் பெரிய நூல் வடிவில் இரண்டு பாகங்களாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் 2007ஆம் ஆண்டிலும், இரண்டாம் பாகம் 2009ஆம் ஆண்டிலும் ‘கலைக்கோட்டம்’ பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளன.
இப்பதிப்பில் 13,949 செய்யுள்களையும் சந்தி பிரித்து மிக எளிமையாக வாசித்துப் புரிந்து கொள்ளும் முறையில் உருவாக்கியிருப்பது மிகச் சிறப்பானதாகும். முடிந்த அளவிற்கு இலக்கணப் பிழைகளைத் தவிர்த்து உண்டாக்கியிருப்பது பதிப்பாசிரியாரின் இலக்கணப் புலமையை வெளிப்படுத்துவதாய் உள்ளது. இதோடு நல்லாப்பிள்ளை பாரதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வில்லிபாரதச் செய்யுள்களை * என்ற குறியிட்டு வேறுபடுத்திக் காட்டியிருப்பதும், ஒவ்வொரு சருக்கத்திலுமுள்ள செய்யுள்களின் கருத்துகளை முழுமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் செய்யுள்களின்மேல் ஒரு வரியிலான தலைப்பிட்டிருப்பது கதையோட்டதைப் புரிந்துகொண்டு நூலை வாசிப்பதை எளிமையாக்கியுள்ளது.
இதோடு, செய்யுள்களைப் பதிப்பிப்பதற்கு முன், இப்பதிப்புரைக்காக அவர் வகுத்துக் கொண்டுள்ள பதிப்பு முறைகளைக் கூற வேண்டும். 1888ஆம் ஆண்டில் வெளிவந்த முதல் பதிப்பின் முகப்புப் பக்கம், முதற்பதிப்பின் முகவுரை, அப்பதிப்பில் உள்ள நல்லாப்பிள்ளையின் வரலாறு, முதற்பதிப்பைச் குறித்த சிறப்புச் செய்திகள் என, முன் வெளிவந்த பதிப்பைப்பற்றி மிக விரிவாக வெளிப்படுத்தியிருப்பது பதிப்பின் நேர்மையைப் புரிந்துகொள்ள உதவுகின்றது. இவையல்லாமல் பாரத நாட்டில் உள்ள ஐம்பத்தாறு நாடுகள், சந்திரகுல மன்னர்களின் பெயர்கள், பதினெட்டு மொழிகள், கௌரவர்களின் பெயர்கள் முதலியவற்றைப் பட்டியலிட்டிருப்பதும் சிறப்பானது. தொடர்ச்சியாகப் பாரதப் போரில் ஒவ்வொரு நாளும் வகுத்த வியூகங்கள், அக்குரோணி என்று குறிப்பிடும் சொல்லிற்கான படை எண்ணிக்கை, இந்த பாரத நூலில் இடம் பெற்றுள்ள கிளைக்கதைகள் முதலானவற்றையும் பட்டியலிட்டிருக்கிறார். நல்லாப்பிள்ளை தம் பாரத நூலில் பயன்படுத்தியுள்ள வில்லிபாரச் செய்யுள்கள், நல்லாப்பிள்ளை பாரதத்தில் உள்ள இடைச்செருகல்கள், மிகைச்செய்யுள்கள் முதலிய ஆராய்ச்சிக் குறிப்புகளையும் வெளிப்படுத்தியுள்ளார். பொருளடைவு, சிறப்புப்பெயர் விளக்க அகர வாரிசை, ஒவ்வொரு பாரதப் பாத்திரத்திற்குமான விரிவான குறிப்பு ஆகியவற்றையும் 226 பக்கங்களில் விரிவான பதிப்பு முன் வரைவை உண்டாக்கியிருப்பது என்பது, பதிப்பிற்கான இலக்கணத்தை முழுமையாக உள்வாங்கிச் செயல்பட்டிருக்கும் தன்மையை உணர்த்துகின்றது.
இப்பதிப்பின் முதல் பாகத்தில் 54 பக்கங்களிலும் இரண்டாம் பாகத்தில் 27 பக்கங்களிலும் விரிவான பதிப்புரைகளை முன்வைத்திருக்கிறார். இப்பதிப்புரைகள், பதிப்பாசிரியாரின் பாரதம் தொடர்பான வாசிப்பையும், தமிழ்ச் சமூகத்தில் பாரதம் தொடர்பாக உண்டாகியுள்ள தாக்கங்களான வழிபாடு, நிகழ்த்து கலை போன்றவற்றை இவர் உள்வாங்கியிருக்கும் விதத்தையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளன. தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு பாரதம் செயல்படுகிறது என்பதையும் எவ்வாறு பாரதம் விழாவாகக் கொண்டாடப்படுகிறது என்பதையும், பாரதம் தொடர்பாகத் தமிழ்ச் சமூகத்தில் வெளிவந்த நூல்களான பெருந்தேவனார் பாரதம், வில்லிபாரதம், ஆதிபருவத்தாதி பருவம், அரங்கநாதக் கவிராயர் பாரதம், பாரத மாவிந்தம், மகாபாரதச் சுருக்கம், பாரதசார வெண்பா, உரைநடை பாரத நூல்கள் எனப் பல பாரத நூல்கள் குறித்த விரிவான அறிமுகத்தையும் பதிவு செய்திருப்பதன் வழியே பாரத நூல்கள் பற்றிய விரிவான வரலாற்றைப் புரிந்துகொள்ள முடிகிறது. வியாச பாரதம், வில்லிபாரதம், நல்லாப்பிள்ளை பாரத நூல்களை ஒப்பிட்டுப் பல குறிப்புகளையும் தந்துள்ளார். இவ்விரிவான பதிப்புரைகளின் மூலம் அவர் சீரிய வாசிப்பையும் தேடலையும் மேற்கொண்டிருப்பதையும், அவரின் சீரிய பணியையும் உணர்ந்துகொள்ள முடிகிறது.
நல்லாப்பிள்ளை அவர்கள் தம் நூலின் மூலம் தமிழ்ச் சமூகத்திற்கு உணர்த்த எண்ணியவை, முனைவர் இரா. சீனிவாசன் அவர்கள் தம் பதிப்பின் மூலம் முழுமையாக வெளிப்பட்டிருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. 1 பதிப்பாசிரியரும் நல்லாப்பிள்ளை அவர்கள் வாழ்ந்த அதே தொண்டை மண்டலப் பகுதியைச் சார்ந்தவர்; அப்பகுதி பண்பாட்டுக் கூறுகளை முழுமையாக உள்வாங்கியவர். 2 பாரதம் தொடர்பாகத் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டுள்ள திரௌபதியம்மன் வழிபாடு, பாரதப் பிரசங்கம், தெருக்கூத்து நிகழ்த்து கலை முதலானவற்றைக் கண்டு கேட்டு முழுமையாக அனுபவித்த சூழலும் பாரதத்தின்மீது அவருக்கிருந்த ஆர்வமும். இவை தான் இந்த மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தச் செய்திருக்கின்றன.
பதிப்பின் உள்ளிருந்து பேசும் நிலையிலிருந்து விலகி, இப்பதிப்பு வெளிவந்த பிறகு, வாசகர்களிடத்திலும், நல்லாப்பிள்ளை அவர்கள் வாழ்ந்த இருப்பிடத்திலும் இப்பதிப்பு ஏற்படுத்திய தாக்கத்தை உணர்ந்தவன் என்ற முறையில் அவற்றையும் பதிவு செய்ய வேண்டும். 96 ஆண்டுகளுக்கு பிறகு, மிகச் சிறப்பான பதிப்பாக வெளிவந்த நிலையில், இப்பதிப்பின் அணிந்துரையில் பேராசிரியர் வீ. அரசு ‘வாராது வந்த மாமணி’ என்று குறிப்பிட்டதைப் போல நீண்டநாள் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் போல் பாரதப் பிரசங்கிகளும், தமிழறிஞர்களும் கொண்டாடினார்கள். குறிப்பாக, பாரதப் பிரசங்கத்தில் ஈடுபட்டிருக்கும் இளம் பிரசங்கிகளுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.
பதிப்பாசிரியர் மேற்கொண்ட 1000 கிலோமீட்டர் களஆய்வுப் பயணத்தின் முடிவில் நல்லாப்பிள்ளை அவர்களின் இருப்பிடமான கீழ்முதலம்பேடு என்னும் கிராமத்தைக் கண்டுபிடித்து இப்பதிப்பில் குறிப்பிட்டிருக்கிறார். இவையல்லாமல், நல்லாப்பிள்ளை பாரதப் பதிப்பின் முதல் பாகத்தை ஆவ்வூரில், அம்மக்களின் வேண்டுகோளுங்கிணங்கி வெளியிட்டார். அப்பொழுது, அம்மக்கள் தங்கள் ஊருக்கான சிறப்பாகவும், தங்கள் ஒவ்வொருக்கான அடையாளமாகவும் இந்நூலைக் கொண்டாடிய விதம் மெய்சிலிர்க்கச் செய்தது. இதன் தொடர்ச்சியாக, 2010 செப்டம்பர் 19ஆம் நாள் இரண்டாம் பாகம் மீண்டும் அவ்வூரில் வெளியிடப்பட்டது. அப்பொழுது அவ்வூரின் ஊராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான நல்லாப்பிள்ளை வாழ்ந்த தெருவிற்கு ‘பாரதம் பாடிய நல்லாப்பிள்ளை தெரு’ என்று பெயர் சூட்டுதல், அந்தப் பெயர்ப் பலகையை இரண்டாம் பாகம் வெளியீட்டு விழாவின் போது திறத்தல் என்பதும், விழாவில் அப்பெயர் பலகை திறப்பின் பொழுது அம்மக்கள் ஏற்படுத்திய உணர்வும் பதிப்பாசிரியர் இரா. சீனிவாசன் அவர்களின் உழைப்பிற்குக் கிடைத்த வெகுமதியாகவே கொள்ளலாம்.
நல்லாப்பிள்ளை பாரதம் - இரண்டு பாகங்கள்

ஆசிரியர் : முனைவர் இரா. சீனிவாசன்
வெளியீடு : கலைக்கோட்டம், 12, புதுத்தெரு, விநாயகபுரம், அம்பத்தூர், சென்னை - 600 053.

ஆகஸ்டு 2007, (முதல் பாகம்), டிசம்பர் 2009 (இரண்டாம் பாகம்)
பக்கம் : 1608 (முதல் பாகம்) 640 (இரண்டாம் பாகம்)
விலை : 1500 (முதல் பாகம்) 650 (இரண்டாம் பாகம்)


கட்டுரையாளர் பற்றிய குறிப்பு:
மு. ஏழுமலை அவர்கள் சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறையில் வேலூர் மாவட்ட நாட்டார் பெண் தெய்வங்கள் குறித்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார். அலைபேசி எண்: 99620 82440.
- - - -

Friday, June 24, 2011

மென்மையின் பாடல் - கிருபானந்தம்ரவிக்குமாரை அரசியல் மற்றும் இலக்கிய விமர்சகராக, சிந்தனையாளராக, அரசியல்வாதியாக அறிவோம். திடீரென்று பார்த்தால் அவர் கவிஞராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். அதுவும் ஏழெட்டு மாத இடைவெளியில் இரண்டு கவிதைத் தொகுப்புகள். அதைவிட ஆச்சர்யமூட்டுவது என்னவென்றால் இந்த இரண்டு தொகுப்புகளிலிருந்தும் நமக்குக் காணக் கிடைக்கும் ரவிக்குமார்!

ரவிக்குமார் கவிதை எழுதுகிறார் என்று கேள்விப்பட்டவுடனே சரி எதிர்ப்புக் கவிதைகளாகவும் பிரச்சினைகளை  முன்னிறுத்தும் கவிதைகளாகவும்தான் இருக்கும் என்று முன்முடிவுடன் இருந்துவிட்டேன். ஆனால், எனது நண்பர்கள் ''ரவிக்குமார் மேல் படிந்திருக்கும் படிமத்துக்கும் இந்தத் தொகுப்புகளுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தம் இல்லை. பெரும்பாலும் காதல், காமம் சம்பந்தப்பட்ட கவிதைகள். படித்துப் பார்'' என்றார்கள். அப்போதும்கூட வேண்டா வெறுப்பாகத்தான்  படிக்க ஆரம்பித்தேன்.


 முதல் தொகுப்பு: 'அவிழும் சொற்கள்' (உயிர்மை வெளியீடு). படிக்கத் தொடங்கியதும் எனக்கு ஆச்சர்யமும் இனிமையும் கலந்த உணர்வு ஏற்பட்டது. மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்: "மன்னித்துவிடுங்கள் ரவிக்குமார், உங்களை முன்முடிவுடன் அணுகிவிட்டேன்."
     ஆனால், 'அவிழும் சொற்கள்' என்னை பெரிய அளவில் கவரவில்லை என்றே சொல்ல வேண்டும். அதேசமயம், ஒரு நல்ல தொடக்கத்தை ரவிக்குமாரிடம் இந்தத் தொகுப்பில் கவனிக்க முடிந்தது. மென்மையான, எளிமையான சொற்கள், இறுக்கமில்லாத நடை மற்றும் படிப்பதற்கு இலகுவான தன்மை போன்றவற்றை இந்தத் தொகுப்பில் கண்டுகொண்டேன். அதைவிட முக்கியமான ஒன்று தனது கவிதைகளைப் பின்நவீனத்துவக் கவிதைகளாக ஆக்கிவிடுவதற்கு எவ்வித முயற்சியையும் அவர் செய்யாதிருந்தது.
    அப்புறம், இரண்டாவது தொகுப்பான மழை மரம். முதல் தொகுப்பில் நான் அவரிடம் கண்ட நல்ல விஷயங்களை இந்தத் தொகுப்பில் அவர் மேலும் முன்னெடுத்துச் சென்றிருக்கிறார். நிச்சயமாக இது ஒரு குறிப்பிடத் தகுந்த தொகுப்பு. நிறைய நல்ல கவிதைகள்.
    முதலில், 'மழை மரம்' என்ற தலைப்பே அலாதியானது; உள்ளே இருக்கும் கவிதைகளின் மென்மையைச் சரியாக அடையாளம் காட்டுவது. பின் அட்டையில் சொல்லியிருப்பதுபோல இவருடைய 'பல கவிதைகளில் காதல், கலவி, துயரம், மழை என்ற பல்வேறு அனுபவங்களின் பின்னணியில் அவ்வப்போது ஓர் அணில் வந்து எட்டிப் பார்க்கிறது. கடுமையான, முரண்பாடான, கொடூரமான இந்த வாழ்க்கையின் மென்மையான தன்மையை அடையாளப்படுத்தும் அந்த அணில் அவ்வப்போது வந்து விளையாடிவிட்டு நம் இதயத்தையும் பழமாகக் கொறித்துத் தின்றுவிட்டு ஓடிவிடுகிறது.'
      தற்காலக் கவிதைகளில் பல கவிதைகள் மனரீதியான அனுபவங்களை அருவமான படிமங்களையும் வரிகளையும் கொண்டு எழுதப்படுபவை என்பதால் வாசகனால் சட்டென்று அவற்றுடன் ஒன்ற முடியாமல் போகிறது. அதிலும் பல கவிதைகள் பாசாங்காக எழுதப்படுபவை. ஆனால், ரவிக்குமாருடைய கவிதைகள் மனரீதியான அனுபவங்களை அன்றாட வாழ்க்கை சார்ந்த படிமங்கள், சொற்றொடர்கள் கொண்டு எழுதப்பட்டவை என்பதால் படிப்பதற்கு அவை சிரமம் ஏற்படுத்துவதில்லை. வாசக அனுபவத்தோடு எளிதில் ஒன்றிப்போய்விடுகின்றன. செறிவான தன்மையாலும் சொல் முறையாலும் பல கவிதைகளைச் சங்கக் கவிதைகளின் தொடர்ச்சி என்றுகூட சொல்லிவிடலாம்.

      ஒரு கவிதையில் 'வறுத்த அரிசியின் வாசனையாய்' (பக்கம். 35) என்ற வரியைப் படிக்கும்போதே சிறு வயதில் வீட்டில் அம்மா வறுத்துத் தந்த அரிசியின் மணம் மறுபடியும் மனதை நிறைக்கிறது. இன்னொரு கவிதையில்,  'தலைக்குள்/ நட்சத்திரங்கள் குலுங்குகின்றன' என்னும்போது கிறக்கம் ஏற்படுகிறது. சுமாரான சில கவிதைகளையும் இதுபோன்ற வரிகள் தூக்கிப் பிடிக்கின்றன. 'இன்று உன்னோடு கண் விழித்தேன்' என்று ஆரம்பிக்கும் கவிதையை

    சூரியனின் முதல் கிரணங்களில் ஒன்றையெடுத்து
    ஆராய்கிறேன் உன் முகத்தை
    அதை விழிகளில் வாங்கி ஆயிரம்
    நட்சத்திரங்களாய்
    இரைக்கிறாய் என் மீது


என்ற வரிகள் தூக்கிப் பிடிக்கின்றன. இந்த வரிகளின் மென்மை எனக்கு எடித் சோடர்கிரன் (Edith Sodergran, 1892-1923) என்ற ஸ்வீடிஷ் பெண் கவிஞரின் கீழ்க்காணும் வரியை நினைவுக்குக் கொண்டுவருகிறது:

Only sunbeams pay proper homage to a tender female body...    
       (Violet Twilights, Love & Solitude)


 ரவிக்குமாரின் கவிதைகள் காமத்தை நாசூக்காகவும் நுட்பமாகவும் சொல்கின்றன. 'தொலைபேசி வழியே' (பக்- 65), 'குதிருக்குள் கொட்டி வைத்த' (பக்- 67) போன்ற கவிதைகள் அப்படிப்பட்டவை. காதலைப் பற்றிய கவிதைகள் மென்மையான மொழியிலும் கூடல், பிரிவு, ஏக்கம் போன்றவற்றைப் பற்றிய கவிதைகள் வெக்கையான மொழியிலும் சொல்லப்பட்டிருப்பது இன்னும் சிறப்பு. 'வாசவதத்தை' என்று ஆரம்பிக்கும் நீள்கவிதை நல்ல முயற்சி.
 இறுதியாக, புத்தகத் தயாரிப்பு. குறைகளைத் தேடும் அளவுக்கு உழைத்திருக்கிறார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு விஷயம் ஒவ்வொரு பக்கத்திலும் கவிதைகளின் மேலும்கீழும் கோடுகளைப் பயன்படுத்தியிருக்கும் விதம். நல்ல வடிவமைப்பு.
    கவிதைகளையே வெறுக்கும் அளவுக்கு வெளிவந்துகொண்டிருக்கும் கவிதைகளுக்கு நடுவே இந்தப் புத்தகம் உண்மையாகவே நல்ல ஆறுதல். வாழ்த்துகள் ரவிக்குமார்!


(மழை மரம், பக்.72 விலை ரூ. 65, வெளியீடு: க்ரியா, பிளாட் எண்: 3, ஹெச் 18, தெற்கு அவென்யு, திருவான்மியூர், சென்னை - 600  041 . தொலைபேசி எண்: 044 -  2441 2993.)      

புத்தகத்திலிருந்து சில கவிதைககள்:


 காலை
 பனியாய் மீந்திருக்கும் மரத்தின்மேல்
 பாய்ந்து வந்து
 காலிரண்டை உயர்த்தி
 வால் நிமிர்த்திப் பார்க்கிறாய்
 அணில் குஞ்சே
 வா என் மனக் கிளைகளில் தாவு
 இதயத்தைப் பழமாகத்
 தருகிறேன்
 குடைந்து குடைந்து பசியாறு


 உன் குன்றிமணிக் கண்களில்
 மிதக்கும் கனவுக்குள்
 என்னை எழுதுகிறேன்
 இடம் கொடு என் அணில் குஞ்சே
    (பக்- 23)
 களைத்த இரவின் உறக்கமெனத்
 தழுவுகிறாய்
 காற்று கவனித்துக்கொண்டிருக்க
 அவித்த மரவள்ளிக் கிழங்குபோல்
 ஆவிபறக்கக் கிடக்கிறேன்


 அமிலம் பட்ட துணியாகப்
 பொடிகிறது உயிர்
 அதை ஊதித் தள்ளுகிறது உன் மூச்சு


 மெளனித்துவிட்டன சுவர்ப்பூச்சிகள்
 உறங்கப் போய்விட்டது ஆந்தை
 எங்கோ
 பதறித் துடித்தழும் குழந்தையைச்
 சொற்களற்ற மொழியால்
 ஓய்ச்சுகிறாள்
 தாலாட்டு தெரியாத தாயொருத்தி
    (பக்- 68)


 பூத்துக் கிடக்கும்
 முந்திரிக் காட்டில் நுழைந்ததுபோல்
 மூச்சுத்திணற வைக்கிறது
 உன் நினைவு


 வேறு எதையும் நினைக்காவண்ணம்
 நாசி நிறைக்கும் தாழம்பூ வாசனையாய்
 நொடிகளில் எல்லாம் படிந்திருப்பாய்


 மேய்த்துத் திரும்புகையில்
 ஆடொன்றைத் தவறவிட்ட
 சிறுவனாய்ப் பதறுகிறேன்

 வீதியில்
 கையிலிருந்த பலூனைக் காற்று பிடுங்கிச் செல்ல
 அலறுகிறாள் ஒரு சிறுமி


 இறவாணத்தில் கட்டிய ஏணையில்
 எலியொன்று இறங்குகிறது
 குழந்தை சிரிக்கிறது
   (பக்- 70)

Thursday, June 23, 2011

இதுவரை சந்திக்காத மனிதர்களைக் காண்பிக்கும் வீடியோமாரியம்மன். ---------------------------------------------------------------------------------------------------------இரத்தின.புகழேந்தி

 புதினங்களைப் போலவே சிறுகதைகளிலும் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார் இமையம். பனிரெண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'வீடியோ மாரியம்மன்'. வழக்கம்போல க்ரியா வெளியிட்டிருக்கிறது. வீடியோவுக்கும் மாரியம்மனுக்கும் என்ன தொடர்பு என்று தலைப்பைப் பார்த்த உடன் யோசிப்பவர்களுக்கு சிற்றூர் வாழ்வனுபவம் குறைவாக இருக்கலாம். கிராமக்களில் கோயில் திருவிழாக்களின்போது தமிழகத்தின் மரபுவழி நாட்டுப்புற நிகழ்த்துகலைகளைக் காணலாம். இன்று அந்தப் பண்பாடு மெல்ல நவீனமயமாகி வருவதைத்தான் கலைத்தன்மையோடு விமர்சிக்கிறது முகப்புச் சிறுகதை. வீடியோ கலாச்சாரம் தமிழகத்தில் காலூன்றத் தொடங்கி கால் நூற்றாண்டுக்கு மேலாகிறது.மரபு சார்ந்த ஒரு பண்பாட்டில் புதிய வழக்கம் நுழைக்கப்படும்போது எத்தகைய அதிர்வுகள் உண்டாகின்றன என்பதை யதார்த்த நிகழ்வுகளால் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். சிறுதெய்வ வழிபாட்டுமரபு என்பது தொன்மைத் தொடர்ச்சியுடையது.பகுத்தறிவுக் கண்கொண்டு பார்ப்வர்களுக்கு அது மூட நம்பிக்கையாகத் தோன்றலாம். அந்த மக்களைப் பொறுத்தவரை அவர்களின் உணர்வுகளோடு தொடர்புடைய நம்பிக்கை சார்ந்த ஒரு வழக்கம் அது. அந்த வழக்கத்தை மீறுகிற எந்த ஒன்றையும் புறமதள்ளிவிடுகிற மக்கள் கூத்துக்கு மாற்றாக வீடியோவை ஏற்றுக்கொள்கின்றனர். அதற்கு விலையாக அவர்கள் உயிரென மதிக்கும் கடவுளை நடு வீதியில் கிடத்திவிட்டு செல்பவர்களை எப்படி மன்னிக்க முடியும். கடலூர் மாவட்டத்தின் கடைக்கோடி சிற்றூர் ஒன்றில் நிகழும் திருவிழாக் காட்சிகளை படிப்போரின் கண்முன் நிறுத்துகிறார் இமையம். கிராமத்து காதல், குறும்புகள் எல்லாம் அளவாக கதைக்களத்தில் நடந்தேறுகின்ற காட்சி நம்மை அந்த கிராமத்திற்குக் கை பிடித்து அழைத்துச் செல்கின்றன. கதை நுட்பம் கைவரப் பெற்றவரல்லவா?..
 'உயிர் நாடி' கதை ஏழை உழவனின் மனப்போராட்டத்தை காட்சிப் படுத்துகிறது. நெடுஞ்சாலை என்றில்லை எந்தசாலை ஓரத்திலும் இனி விவசாயம் செய்வது சாத்தியமில்லை. தொழிற்சாலைகள், பொருளாதார மண்டலங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், வீட்டு மனைகள் என வரிசைகட்டி நம் விளை நிலங்களைக் கூறு போட காத்திருக்கிறது ஒரு கூட்டம். "விதை நெல்லெடுத்து விருந்து/விளை நிலங்களில் வீடுகள்/ நாம் எங்கே போகிறோம்" என்ற கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. ஊரே நிலங்களை விற்றுவிட இந்த ஏழை உழவன் மட்டும் என்ன செய்ய முடியும், 'கம்பனி ஆரம்பிக்கிறவனுவோ, ரோடு போடுறவனுவோ வேற எங்கியாச்சம் போயி செய்யக்கூடாதா? எம் பாவத்துல வந்துதான்காயறுக்கணுமா? பாதி போனாக்கூட பரவாயில்லெ. நறுவுசா போவப்போவுதே. போறதுக்கு, வர்றதுக்கு எடமில்லாம என்னெ ஊனம் பண்ணி மொடக்கிப் போடப் பாக்குறாங்களே. அதுக்கு எங் கண்ணெ ரெண்டயும் புடுங்கிப்புடலாமே' என்று வாய் விட்டு புலம்புவதைத் தவிர.
 மயிர் நீத்தால் உயிர் நீக்கும் கவரிமான் பரம்பரை என்று சொல்லக்கேட்டிருப்போம். ஆனால் அருணாச்சல உடையார் வாழ்த்து செத்திருக்கிறார் 'நல்ல சாவு' கதையில். மானம் உயிரினும் மேலானது என்பதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பிப்பதற்காக தன் உயிரைத் துறந்து நீதி இலக்கியங்களுக்கு உயிரூட்டிய அந்த மனிதர்தான் இத்தொகுப்பின் நாயகராக எனக்குத் தோன்றுகிறார்.
 பெற்று வளர்த்த தாய் தந்தையரை விட்டு, உறவுகளைப் பிரிந்து  குழந்தைகளின் படிப்பிற்காகவும் வேலை நிமித்தமாகவும் புதிய தலைமுறை ஒன்று கிராமங்களை விட்டு நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருவது அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது. வயது முதிர்ந்த காலத்தில் ஆதரவாக இருக்கும் என்று கருதிய பிள்ளைகள் அனாதையாக தவிக்கவிட்டுச் சென்றாலும் விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும்போது தாயின் உள்ளம் பிள்ளைகளைக் கண்டு நெகிழும். அந்த நெகிழ்ச்சியை 'அம்மா' கதை நமக்கு உணர்த்துகிறது. நாமே தாயாகி விடுகிறோம் அப்படி ஒரு உரையாடல், தாய் மொழி என்பதன் பொருள் இப்போது புரிகிறது.
 நட்பா, காதலா என இனம்புரியாத உறவுகள் சிலருக்கு ஏற்படுவதுண்டு. அப்படி ஒரு உறவை நமக்கு அறிமுகம் செய்கிறது ' நாளை ' என்ற கதை மனித மனத்தின் அத்தனைப் பரிமாணங்களையும் காண்பிக்கும் கதை இது. தள்ளாத காலத்தில் மனைவியை இழந்த ஒருவரும் கணவனை இழந்த ஒருவரும் எந்த எதிர்பார்ப்போ, தேவைகளோ இன்றி அன்பு ஒன்றுக்காக மட்டுமே பழகும் ஒரு தூய நட்பை அழகாக,  கொச்சைப்படுத்தாமல் எச்சரிக்கையாக கதையாக்கியிருக்கும் பாணி கதாசிரியரின் திறமைக்கு மெருகூட்டுகிறது.
 'நிஜமும் பொய்யும்' என்ற கதை படிக்காத ஒரு தாயின் மனதையும் படித்துவிட்டு சென்னைக்கு வேலைக்கு சென்ற மகனின் மனதையும் வடித்துக் காட்டுகிற ஒரு கதை. கடித வடிவில் கதை அமைந்திருப்பது படிப்பதற்கு அலுப்பின்றி நகர்கிறது. கடிதம் எழுதும் வழக்கம் குறைந்து வரும் இன்றைய சூழலில் இது போன்ற கதை வடிவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
வேளாண் தொழிலில் ஆண் துணையின்றி ஒரு பெண்படும் பாட்டை ஓவியமாக்கியிருக்கிறது 'பயணம்' கதை. அருகருகே உழைத்தாலும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இன்னும் சிற்றூர்களை விட்டு விலகவில்லை எனபதை ஆங்காங்கே காணமுடிகிறது. மேல்சாதிக் காரர்களாகக் கருதிக்கொண்டிருப்பவர்களிடம் எவ்வளவு கீழான குணங்கள் உள்ளன என்பதை பாதிக்கப்படும் தாழ்த்தப்பட்ட சாதியினர் கூறும்போது அதில் வெளிப்படும் நியாயங்களை யாராலும் மறுக்க இயலாது. அத்தகைய உரையாடல்கள் இக்கதைக்கு வலுச் சேர்க்கின்றன.
 அரசு அலுவலகங்களின் நுழைவாயில்களிலேயே தொடங்கிவிடும் ஊழலை ஏளனம் செய்யும் கதை 'எழுத்துக்காரன்'. கணவன் மனைவிக்கிடையே நடக்கும் குடும்பச் சண்டை பெரிதாகி உதைவாங்கமுடியாத மனைவி தற்கொலை செய்துகொள்ள முயல்வது கிராமங்களில் தான் பெரும்பாலும் அடிக்கடி நிகழும் சம்பவம். அப்படி ஒரு சம்பவத்தைக் கதையாகப் பின்னி தாய் குழந்தை பாசத்தை தற்கொலை செய்துகொள்ள முயலும் தாயைக் காப்பாற்றும் முருகன் கதாப்பாத்திரம் வெளிப்படுத்துகிறது.
 மர்மமான முறையில் மரணத்தைத் தழுவும் பெண்கள் சிறு தெய்வமாக வழிபடப்படுகின்றன்ர். இதற்கு தீப்பாய்ந்த நாச்சியம்மன் ஒரு உதாரணம். இக்கதையில் வன்னியர் சாதி ஆணின் கருவைச் சுமக்கும் தலித் பெண் மர்மமான முறையில் அவ்வூர் குளத்தில் பிணமாகக்கிடக்கிறாள். மக்கள் அவளைக் கடவுளாக்கி விடுகின்றனர். இச்சம்பவத்தை யதார்த்தமாகவும், வலிகளோடும், சாதியக்கொடுமைகளைத் தோலுரித்துக்காட்டுகிறார் 'சத்தியக்கட்டு' கதையில்.  
 நெருக்கடிகள் நிறைந்த இன்றைய வாழ்க்கை அழகுகளையும் அவலங்களையும் ஒரு சேர படம் பிடிக்கும் வீடியோ மாரியம்மன் தொகுப்பு இமையத்தின் படைப்புலக வரலாற்றில்  மேலும் ஒரு புதிய அத்தியாயமாய் அமைகிறது.
வீடியோ மாரியம்மன்( சிறுகதைகள்)
இமையம்

வெளியீடு:
க்ரியா
எச்-18, தெற்கு நிழற்சாலை,
திருவான்மியூர்,
சென்னை- 600 041.
www.crea.in
பக்: 227
விலை ரூ.150.

பெயர்த்து -உருவாக்கப்பட்ட பின்காலனிய நாடுகள்- - ஜமாலன்
ஆக்ஸ்போர்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ளமிகச்சுருக்கமானஅறிமுகம் என்கிற வரிசை நூல்களை, அடையாளம் பதிப்பகம் தொடர்ந்து மொழி பெயர்த்துவருகிறது. அடையாளத்தின் இப்பணி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. தமிழில் அவ்வரிசையில் வந்துள்ளஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆங்கிலம் மற்றும் கோட்பாட்டுப் பகுப்பாய்வுத்துறை பேராசிரியரும் காலனியம், பின்காலனியம் பற்றி எழுதிவருபவருமான ராபர்ட் ஜே.சி. யங்-கின் “பின்காலனியம் - மிகச்சுருக்கமானவரலாறு” என்கிற நூலை,சென்னை ஸ்டெல்லாமேரி கல்லூரியின் ஆங்கிலப்பேராசியர், பெண்ணியலாளர் அ. மங்கை மொழிபெயர்த்துள்ளார். பெரியாரியம், பெண்ணியம் பற்றி காத்திரமாக எழுதி வருபவரும், பெண்ணியச் செயல்பாட்டாளரும், ஆய்வாளருமான வ. கீதா பதிப்பாசிரியராக இருந்து இந்நூல் வெளிவந்துள்ளது. மொழிபெயர்ப்புஎன்கிறநெருடலைஏற்படுத்தாத சரளமான மொழியில் இதனை செய்துள்ளஅ. மங்கையின் பணி பாராட்டுக்குரியது. பின்காலனியம்பற்றியப் பரவலானஅறிமுகமில்லாத தமிழ்ச் சூழலில் இந்நூல் அதனை நடைமுறைசார்ந்த அரசியலில் அறிமுகம்செய்கிறது.

அல்ஜீரியவிடுதலைப்போராளியும்புரட்சிகரஅரசியல்கோட்பாட்டுச் செயல்பாட்டாளருமான பிரான்ஸ் ஃபனான், பின்காலனியச் சிந்தனைக்கான கோட்பாட்டு அடிப்படைகளைத் தனது “கீழ்த்திசைவாதம்” (ஓரியண்டலிஸம்) மூலம்உருவாக்கிய எட்வர்ட் செய்த், விளிம்புநிலை சிந்தனையை உருவாக்கிய ஆய்வாளர்களில் ஒருவரான காய்த்ரி சக்ரவர்த்தி ஸ்பிவக், பின்காலனியம் உருவாக்கிய கலப்பினம் பற்றிய கோட்பாட்டை  முன்மொழிந்த ஹோமிபாபா எனப் பல ஆய்வாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கோட்பாடே பின்காலனியம். காலனியம் எழுதிச்சென்ற, விட்டுச்சென்ற தன்னிலையிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொண்டு காலனியஎதிர்ப்பு மற்றும் உலகில் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட விளிம்புநிலைத் தன்னிலையாக ஒருங்கிணையும் ஒருபுரட்சிகர சுயதன்னிலை பற்றிய கோட்பாடே பின்காலனியக் கோட்பாடு. ஆனால், இத்தகையக் கோட்பாட்டு அறிமுகத்திலிருந்து விலகி இந்நூல் நடைமுறை சார்ந்த அரசியல் எழுச்சிகள், போராட்டங்கள்ஆகியவற்றிலிருந்து எழுதப்பட்டுள்ளது. “அறிவு”என்கிற மேலிருந்து திணிக்கப்படும் காலனியக்கோட்பாட்டை மறுப்பதால், கீழிருந்து உருவாகிவரும் பின்காலனிய அறிவுபற்றிய அறிமுகத்தைச் செய்கிறது.

இந்நூல் ஏழு இயல்களை, அதற்குள் பல துணைத்தலைப்புகளைக் கொண்டிருந்தாலும், ஒரு தொடர்ச்சியின்மையைக் கொண்டதாக எழுதப்பட்டுள்ளது. திரைப்படங்களில் பயன்படும் ‘மோண்டேஜ்‘ எனப்படும் எதிரெதிரான பொருட்களை,நிகழ்வுகளைஅருகருகே வைப்பதன்மூலம் ஒரு புதிய வாசிப்பை, அர்த்தத்தை உருவாக்கும் உத்தி முறையில் எழுதப்பட்டுள்ளது. முக்கியமான புகைப்படங்களை அருகருகே வைத்து அந்தப் படங்கள் பற்றிய வாசிப்பாகத் தொடரும் எழுத்தில்..பின்காலனியத்தின்அடிநாதமான ஒடுக்கப்பட்ட, புலம்பெயர்ந்த, விளிம்பிற்குத் தள்ளப்பட்ட மக்களின் சுய-அடையாளத்தையும், அவர்களது விடுதலைக்கானஅரசியலையும் பேசுகிறது.அமெரிக்க,- ஐரோப்பிய,- ஆஸ்திரேலிய- ரஷ்ய.. வெள்ளையினக் கண்டங்களால் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட ஆசிய-ஆப்ரிக்க, -லத்தீன்அமெரிக்க கறுப்பு மற்றும் பழுப்புநிற முக்கண்டங்களின் காலனியவிடுதலைக்குப் பின்னாலான வரலாற்றில் துவங்குகிறது. அவற்றில் தொடரும் ஏகாதிபத்திய- மேலைத்தேய மறைமுக நவ-காலனிய அடக்குமுறைக்கு எதிரான தொடர்போராட்டங்களின் வழியாக உருவாகிவரும் பின்காலனிய அரசியலைச் சுருக்கமாகவும், ஆழமாகவும் விவரிக்கிறது.

முதல் இயலில் விளிம்புநிலை அறிவு என்னவென்பதை இன்றைய உலகளாவிய பிரச்சனையாக உள்ள அகதிகளின் வாழ்விலிருந்து துவங்கி, ஆப்கானிஸ்தான், ஈராக் முதலிய நாடுகளில் நடைபெற்றுவரும் போர்களின் வழியாக முஸ்லிம்களை உலகெங்கும் தனிமைப்படுத்தும் விதமாகக் கட்டமைக்கப்படும் “அறிவு“ குறித்த விமர்சனத்தை முன்வைக்கிறது. முக்கண்டம் என்பதிலிருந்து இந்த அறிவு எப்படி சுயதேர்வாகக் காலனியத் தன்னிலையிலிருந்து விலகி ஆசிய-, ஆப்பிரிக்க, -லத்தீன்அமெரிக்கத் தன்னிலை அறிவாக உருவாகவேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது. இரண்டாவது இயலில் காலனிய நாடுகளாக இருந்து விடுதலைப் பெற்றபின் ஆப்பிரிக்க- மற்றும் கரீபிய நாடுகளில் உலகளாவிய இயக்கங்கள் உருவான பின்னணியையும்; அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய வல்லரசாக நீடிக்கவும், எண்ணைவளச் சுரண்டலுக்காகவும்,ஈராக் முதலான நாடுகளில் குண்டுவீசித் தொடர்ந்து ஒரு போர்ச்சூழலை உருவாக்கியதையும் விவரிக்கிறது. வரலாற்றில் அதிகாரம் ஏற்படுத்திய அழிவுபற்றிய ஒரு வரைபடம் இது. இஸ்லாமிய உலகம் என்கிற ஒரு கற்பிதப் புவியியல் கட்டமைக்கப்பட்ட வரலாறு.

“இடமும் மண்ணும்“ என்ற மூன்றாவது இயல், மண்ணைஅழித்து அப்புறப்படுத்தப்பட்ட அகதிகளாகப் புலம்பெயர்க்கப்பட்ட மக்களையும், காலனியம் மண்ணைத் தனக்கு ஏற்ப எல்லைகளால் வரையறுத்ததையும், உலகவரைபடங்களில் இந்த வரையறைகள் எப்படி தேசங்களாக மாறின என்பதையும் உள்ளோட்டமாகச் சொல்கிறது. பிரஞ்சு சிந்தனையாளர்களான டெல்யுஸ், -கத்தாரியின்‘  கருத்தாக்கங்களின் வழியாக  எப்படி ஒரு அரசு- எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு வாழ்நிலையாக உள்ளது என்பதை விரிவாக இல்லாவிட்டாலும் மேலோட்டமாகச் சொல்லிச்செல்கிறது. “ஆதிக்குடிகள்” உருவாக்கம் என்பது  எத்தனைதுயர்நிறைந்த வரலாறாகமாறியது என்பதை விளக்குகிறது.

நான்காவது இயல்,காலனிய  எஜமானர்கள்தமது ஆதிக்கப் பண்பாட்டால்,மண்சார்ந்த மக்களிடையே எப்படிகாலனியத் தன்னிலைகளை உருவாக்குகிறார்கள் என்பதும், இத்தன்னிலை சுயம், மரபுஎன்பவற்றுடன் ஒரு கலப்பினமாக உருவாவதையும் விவரிக்கிறது. குறிப்பாக அல்ஜீரியாவில் உருவான காலனிய எதிர்ப்பு ராய் இசை எப்படி மேலைத்தேய கலப்பிசையாக மாறியது என்பதன் வழியாக ஹோமிபாபாவால் முன்வைக்கப்படும் “கலப்பினம்“என்கிற கருத்தாக்க அடிப்படையில் இது விவரிக்கப்படுகிறது. இப்பகுதியில் இஸ்லாமிய பெண்களின் முகத்திரை அணிகிற வழக்கம்பற்றிய விரிவான உரையாடலைச் செய்கிறார் இவ்வாசிரியர். இதனை மொழிபெர்த்த மொழிபெயர்ப்பளார்அ. மங்கை, முகத்திரைப்பற்றிய மத- அடிப்படைவாத சக்திகளின்நிலைப்பாட்டை கவனத்தில் கொள்ளவில்லை இந்நூலசிரியர் என்றவிமர்சனத்தைத் தனது குறிப்புரையில் முன்வைத்துள்ளார். முகத்திரை அணியும் பழக்கம் பற்றிய மத அடிப்படைவாத சக்திகளின் ஒடுக்குமுறை நிலைப்பாடு கவனத்தில் கொள்ளவேண்டியதே, அதேநேரத்தில் “முகத்திரைஅணியும்பெண்அதற்குத் தரும் பொருள் என்ன என்ற அக்கறை”யும் (பக்.115) அவசியம் என்பதைச் சொல்லிச் செல்கிறார் யங். பெண் என்பவள் யங் சொல்வதைப்போல ஒரு தன்னிலையோ,மற்றமையோ அல்ல பயனிலையாகவே மதங்களால் கருதப்படுகிறாள் என்பதே முக்கியம். முகத்திரை அனிகிற பழக்கம் ஒரு குறியீட்டுச் செயலாக இருக்கிறது என்பதையும், அது பரந்துபட்ட இஸ்லாமிய உழைக்கும் பெண்களிடம் காணப்படுவதில்லை என்பதையும் இதனுடன் இணைத்து கவனிக்க வேண்டும். இஸ்லாமிய பெண்களை ஒருபடித்தானவர்களாக சித்தரிக்கும் ஒரு குறியீடே முகத்திரை என்பது. அனியா லூம்பா கூறுவதுபோல “ஒருபடித்தானவர்களாக சித்தரித்தல்“ ஒரு காலனீய யுத்ததந்திரம் என்பதை நினைவில் இருத்த வேண்டியதாக உள்ளது. (முகத்திரைபழக்கம்பற்றியஎனதுகருத்துக்கள்“இஸ்லாமியபெண்ணியம்“பற்றியபிறிதொருகட்டுரையில்விவாதிக்கப்பட்டுள்ளதால்அதனைதவிர்க்கிறேன்.)

இயல் 5-ல்பின்காலனியத்துவப்பெண்ணியம்பற்றியபகுதியில்இந்தியாபற்றியகாந்திமற்றும்காலனியப் போராட்டங்களில்பெண்கள்துவங்கிசிப்கொ-சூழலியல், சமீபத்திய நர்மதாஅணைதடுப்புஇயக்கம்வரை விவரிக்கப்படுகிறது. இப்போராட்டங்கள்எப்படிபினகாலனித்துவஅரசியலுடன்ஒன்றிணைந்துஉள்ளனஎன்பதுசொல்லப்படுகிறது. பூலான்தேவி பற்றிய விவரணை எப்படி ஒரு அதிகார எதிர்ப்பாக மாறி, சட்டத்திற்கு உட்பட்டு அது முடிந்தது என்பதை விளக்குகிறது. பின்காலனியத்தின்அதிகார எதிர்ப்பு அரசியலில் சட்டத்திற்கு உட்பட்டுப் போரிடுதல் மட்டுமே மையப்படுத்துவதான பொருளை இது தருவதாக உள்ளது. ஆனால், அது சட்டத்திற்குப் புறம்பான, சட்டத்தை நிராகரிக்கும் போராட்ட வழிமுறைகளையும் உள்ளடக்கியது என்பதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இதில் கவனப்படுத்தவேண்டிய ஒன்று பெண்கள் எப்படி பின்காலனிய அரசியலை உருவாக்குகிறார்கள் என்பதும், அவ்வரசியலே பெண்களின் அரசியல்தான் என்று விளக்கப்படும் பகுதி.  குறிப்பாக பின்காலனியம் உலகைக் கீழிருந்து நோக்கும்படிச் செய்கிறது. “எத்தியோப்பிய-பெண் விவசாயிதான்பின்காலனியத்துவத்தின்கண்கள், காதுகள்,வாய்கள்”  (பக்.143) என்பதுகுறிப்பிடப்படவேண்டியவாசகம்.

இயல்-6ல் உலகமயமாக்கலில் பின்காலனியஅரசியல் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்படுகிறது. உலகமயமாக்கலின் சின்னமாக உள்ள மெக்டொனால்ட், நெஸ்லே போன்ற வணிக நிறுவனங்கள் எப்படி மக்களின் நலவாழ்விற்கே எதிரானதாக உள்ளன என்பதை விளக்கும் பகுதி முக்கியமானது. அமர்த்தியா சென்னின் கருத்துக்கள் அடிப்படையில் உணவு விநியோக முறையின் குளறுபடிகள் எப்படி பஞ்சத்தை உருவாக்குகின்றன எனபது விவரிக்கப்படுகிறது. ”வறுமையும்,பட்டினியும்வளங்கள்இல்லாதசூழலைக்குறிக்கவில்லை.  இருக்கும்வளங்களைச்சமமாகப்பகிர்ந்தளிக்கும்முறையில்தோல்விஏற்பட்டதுஎன்பதையேகுறிக்கின்றன.”  (பக்.169). சமூக சமத்துவமின்மைதான் இத்தகைய வறுமை, பட்டினி, பஞ்சம் இவற்றிற்கு காரணம் என்பதை சொல்லிச் செல்வது கவனி்க்க வேண்டிய ஒன்று.

இயல் -7ல் மிகவும் புதிதான ஒரு கருத்தாக்கம் பின்காலனிய கோட்பாட்டு அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ளது.இங்கு பிரதிகள் மொழிபெயர்க்கப்படுவதால் எப்படி ஒரு பண்பாடு கட்டமைக்கப்படுகிறது. அக்கட்டமைப்பு எப்படி ஒரு மனிதனை காலனியத்திற்கு மொழிபெயர்க்கிறது என்பதை அது விவரிக்கிறது.மொழிபெயர்ப்பின் அரசியல் பின்காலனிய அறிவுருவாக்க  அரசியலின் ஒரு முக்கிய பகுதியாகும். உண்மையில் ஒரு உலகை அல்லது நாட்டைக் கண்டடைவது என்பது அந்த நாட்டைத் தனது நாட்டுக்கு ஏற்ப மொழிபெயர்ப்பதாகவே உள்ளது. காலனிய அறிவை இன்னும் குறிப்பாகச் சொன்னால் உலக அறிவை உருவாக்கியவை மொழிபெயர்ப்புகள்தான்.இன்றையஆப்பிரிக்க-,ஆசிய, -லத்தீன்அமெரிக்க குடிமகன் காலனியத்தால் மொழிபெயர்க்கப்பட்டஒருவனே. இந்திய காலனியமாக்கலில் துபாஷிகளின் பங்கும்,அவர்களில் பலர் உயர்சாதியினராக இருந்ததும், இந்திய தேசியம் கட்டமைக்கப்பட்டதன் பின்னுள்ளஅறிவுச்செயல்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.  இந்தியராகிய நாமும் உயர்சாதி துபாஷிகளால் மொழிபெயர்க்கப்பட்டவர்களே. மொழிபெயர்ப்புஅதிகாரப் படிநிலைகளைக் கொண்டது. பெயர்க்கப்பட்ட பிரதியைவிட மூலம் சிறப்பானது என்பதை உள்ளர்த்தமாகக் கொண்டது. காலனியம் மொழிபெர்த்த மனிதனைவிட, காலனியத்திற்கு முந்தைய “மூல“மனிதன் சிறப்பானவன் என்பதுபோன்ற கருத்தாக்கமாக பின்காலனியம் புரிந்துகொள்ளப்படுவது அபாயகரமானது. இந்த அபாயம் மத-அடிப்படைவாத சக்திகள் உருவாக்கும் “லட்சிய மனித உடல்“ என்பதில் வெளிப்படுவது. பின்காலனியசிந்தனையைபயன்படுத்துவதில்உள்ளஇந்த “மூலம்” ”சுயம்”“ஆதிக்குடி” ”மண்ணின்மைந்தன்” போன்றகருத்தாக்கங்கள் எல்லாமே காலனியத் தன்னிலைக்கான பிறராக்குதல் (ஷீtலீமீக்ஷீவீக்ஷ்ணீtவீஷீஸீ) அடிப்படையில்உருவானதே என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இவற்றைத் தூக்கிப்பிடிப்பது பின்காலனிய அரசியலாகாது என்ற எச்சரிக்கை உணர்வு அவசியம். காலனியத்திற்கு முந்தைய மக்களின் அறிவு கையகப்படுத்தப்பட்டு அது காலனியத்தால் மொழிபெயர்க்கப்பட்டதாக உள்ளது என்பதையே இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். உண்மையில் மொழிபெயர்ப்பாக  இது நிகழவில்லை, பெயர்த்து- உருவாக்குதலாகவே (tக்ஷீணீஸீs-நீக்ஷீமீணீtவீஷீஸீ) இது நடைபெற்றது.

மங்கை தனது குறிப்புரையில் அரசியலை ஆழப்படுத்தவதாக பேசப்படும் கோட்பாட்டுச் சிந்தனைகளை“முனைமழுங்கவைக்கும் கோட்பாட்டு நூற்கண்டுகள்“என்றுஎழுதியுள்ளார். இந்த நூல்அத்தகைய நூற்கண்டுகளால் நெய்யப்படவில்லை என்றாலும் கோட்பாடு என்பதுதான் தறியாக உள்ளது. நடைமுறையிலிருந்து கோட்பாடுகள் உருவாகின்றன என்பதால், இன்றைய கோட்பாடுகள் நேற்றைய நடைமுறைகள் . அந்தவகையில் கோட்பாடுகள்தான்நடைமுறைகளை நெறிப்படுத்துகின்றன. அவைபற்றிய ஆழமான புரிதல்களே நடைமுறையினை வழிநடத்துகின்றன. கோட்பாட்டுப் புரிதிலின்மை நடைமுறைகள்பற்றிய விவரணைகளை, வியாக்கியானங்களை சரிவர தருவதில்லை. அந்தவகையில், மங்கை நடைமுறை, முரண்கள், மாற்று என்கிற புரிதலில்கோட்பாட்டை“சிக்கலானபயனற்றநூற்கண்டாகக் “ கருதினாலும், இந்த நூல் பின்காலனியம் பற்றிய சரியானகோட்பாட்டுப் புரிதலிலிருந்தே உலகின் பல போராட்டங்களை, அரசு-அதிகார எதிர்ப்பு இயக்கங்களைப் பின்காலனியத்துவத்துடன்இணைத்து விவரிக்கிறது.

பின்காலனியக் கோட்பாடுகளைப் பற்றி பல நூல்கள் வந்துள்ளன. குறிப்பாக ஆனியா லூம்பாவின் பின்காலனியம் பற்றிய புத்தகங்கள் எளிமையான கோட்பாட்டு அறிமுகங்களைத் தரக்கூடியவை. என்றாலும், பின்காலனிய அரசியல் நடைமுறைகளின் வழியாக அதற்கான கோட்பாடுகளைக் காட்டிச் செல்லும் நூல் என்ற வகையில் இது கவனப்படுத்தப்பட வேண்டிய நூல்.

இந்நூலில் முன்வைக்கப்பட்டிருக்கும் யங்கின் இந்த எச்சரிக்கை முக்கியம்:“ஒருபுதுவகையான சுய-கட்டுடைப்பு அரசியல் நடமாடத் துவங்கியுள்ளது. புதியஉலகஅமைப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்குத் தனது எதிர்ப்பைத் தானே பலவடிவங்களில் நிகழ்த்திக்காட்டும் முறை காணப்படுகிறது.  இந்த வழி மிகவும் ஆபத்தானதாகப் பரவிவருகிறது.  முதலாளித்துவம், தனக்கெதிரான எதிர்ப்புகளையும் சந்தைப்பொருளாக்குவதில் வெற்றிபெற்றுவருகிறது. அத்தகு எ திர்ப்புகளை ஒருங்கிணைப்பதிலும், அதிகமாக உற்பத்தி செய்வதிலும் ஈடுபடும் அளவுக்கு முதலாளித்துவத்தின் தன்மை மாறியுள்ளது.” ஆம் இன்று முதலாளித்துவத்தின் எதிர்ப்பியக்கங்கள்கூட முதலாளித்துவ சக்திகளால் சந்தைப்படுத்தப்படுகின்றன. இதற்கான சில ஆதாரங்களை இந்நூல் சுட்டிக்காட்டுகிறது என்றவகையில் இது வாசிக்கப்பட வேண்டியது அவசியம்.

பின்காலனியம் -மிகச்சுருக்கமானஅறிமுகம் - - ராபர்ட்ஜே.சி. யங் -
தமிழில்அ.மங்கை

அடையாளம் பதிப்பகம் -
விலை: ரூ 90.00.உதிராத அரசு தோண்டப்படாத புதைகுழி - ரவிக்குமார்


    

       அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பொருளாதார மந்தநிலையின் தாக்கம் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. . இதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கவலையோடு கூறிக்கொண்டிருக்கிறார்கள்.அதன் பாதிப்பு இந்தியாவில் இல்லை என நமது ஆட்சியாளர்கள் பெருமைபட்டுக்கொண்டாலும் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை நாம் அனுபவிக்கவே செய்கிறோம். அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டிருக்கும் செய்தியை அண்மையில் இந்தியாவுக்கு வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவும் உறுதிப்படுத்தியிருந்தார். இந்தச் செய்தி உலகெங்குமுள்ள அமெரிக்க எதிர்ப்பாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நியூயார்க் நகரிலிருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டபோதும் இப்படித்தான் அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
அமெரிக்காவின் வீழ்ச்சி இப்படி ஒடுக்கப்பட்ட மக்களால் கொண்டாடப்படுவது ஏன்? என்ற கேள்வி நமக்கு எழும். 2001 செப்டம்பர் 20ஆம் தேதி தனது நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது ஜார்ஜ் புஷ் சீனியர் கூறினார்: ’ அமெரிக்க மக்கள் கேட்கிறார்கள், ஏன் அவர்கள் நம்மை வெறுக்கவேண்டும்? ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை அவர்கள் வெறுக்கிறார்கள். நமது சுதந்திரங்களை அவர்கள் வெறுக்கிறார்கள்& மத சுதந்திரம், பேசுவதற்கான சுதந்திரம், எவருக்கும் வாக்களிப்பதற்கான சுதந்திரம், ஓரிடத்தில் கூடி விவாதிக்கவும் கருத்து வேறுபடவுமான சுதந்திரம். இந்த சுதந்திரங்களைத்தான் அவர்கள் வெறுக்கிறார்கள்.’ ஆனால் உண்மை அதுவல்ல என்பது நமக்குத் தெரியும்.
      அமெரிக்கா என்பது இன்று ஒரு நாடு மட்டுமல்ல. அது ஒரு குறியீடு. ஒடுக்குமுறையின் குறியீடு. அதனால்தான் இப்படியான எதிர்வினை ஏற்படுகிறது. அமெரிக்காவை வெறுப்பவர்கள் அதன் சுதந்திரத்தைக் கண்டு பயப்படவில்லை. அதன் அதிகாரத்தைக் கண்டுதான் ஆத்திரப்படுகிறார்கள். இன்று சோவியத் யூனியனும், தகர்ந்துவிட்ட நிலையில் உலகெங்கும் அமெரிக்க ஆதிக்கமே கொடிக்கட்டிப் பறக்கிறது. ஆங்காங்கு உள்ள ஒடுக்குமுறை அரசுகளோடு அமெரிக்கா அமைத்துள்ள கூட்டணி அந்தந்த நாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்களின் கோபத்தைக் கிளறிவிட்டுள்ளது. இப்போது உலகின் எந்தவொரு மூலையிலும் உள்ள ஒரு சிறிய நாட்டை எடுத்துக்கொண்டாலும் அங்கே இருக்கின்ற மக்கள் தமது ஆட்சியாளர்களை மட்டும் எதிர்த்துப் போராடினால் போதாது. அந்த ஆட்சியாளர்களைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்தாக வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் அமெரிக்க எதிர்ப்பு என்பது வெறும் கொள்கை சார்ந்ததாக மட்டும் இல்லாமல் இப்போது ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர் வாழும் உரிமையோடு பின்னிப்பிணைந்ததாக மாறிவிட்டது.
அமெரிக்காவின் வரம்பற்ற அதிகாரத்துக்கு இந்திய & அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஒரு எடுத்துக்காட்டாகும். நாற்பத்தைந்து நாடுகள் இடம் பெற்றிருக்கும் ‘நியூக்ளியர் சப்ளையர்ஸ் குரூப்’ இந்த ஒப்பந்தத்துக்கு அளித்துள்ள ஒப்புதல் அமெரிக்கா விரும்பினால் எதையும் செய்துவிட முடியும் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.அமெரிக்கா சொன்னதும் சிறு சிறு முணுமுணுப்புகளை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நாடுகளும்கூட வாயை மூடிக்கொண்டன. ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் வலுவானவைதான் என்றபோதிலும் அமெரிக்காவை எதிர்க்கக்கூடிய அளவுக்கு அவை வலிமைப் பெற்றவையாக இல்லை. அதனால்தான் ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளை நிறுத்துவதாக இருந்தாலும், ஈராக் மீது போர் தொடுப்பதாக இருந்தாலும், ஈரானுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவதாக இருந்தாலும் அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஐ.நா., உலக வங்கி, ஐ.எம்.எஃப். முதலான சர்வதேச அமைப்புகளும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.
உலகிலேயே ராணுவத்துக்கு மிக அதிகமாக செலவிடும் நாடாக அமெரிக்கா விளங்குகிறது. இரண்டாவது உலகப்போருக்குப் பிறகு எந்தவொரு நாடும் அமெரிக்கா அளவிற்கு ராணுவத்திற்காக செலவிட்டதில்லை. 2007ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ செலவு ஐம்பது லட்சம் கோடி ரூபாயை தாண்டிவிட்டது எனத் தெரியவந்துள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள நாடுகள் யாவும் சேர்ந்து ராணுவத்துக்காக செலவழிக்கும் தொகையைவிட அதிகமாகும். இந்த செலவை நியாயப்படுத்துவதற்காக தனது நாட்டு மக்களை எப்போதும் பயத்திலேயே ஆழ்த்தி வைத்திருக்கிறது அமெரிக்க அரசு. அமெரிக்க ஆட்சியாளர்கள் முன்பெல்லாம் கம்யூனிசம் என்ற பூச்சாண்டியைக் காட்டி மக்களை மிரட்டி வந்தார்கள். அதன்பிறகு ஈராக்கையும், சதாம் உசேனையும் காட்டி மிரட்டி வந்தார்கள். இப்பொழுதோ பயங்கரவாதம் என்ற புதிய பூதம் அமெரிக்க அரசுக்குக் கிடைத்துவிட்டது. அல்கய்தா, பின்லேடன் என ஓயாமல் தனது மக்களை அச்சுறுத்தலிலேயே வைத்துக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. இப்படி மக்களை அச்சுறுத்துவதற்கு தொடர்பு சாதனங்களின் உதவியைத்தான் அமெரிக்கா நம்பியுள்ளது. நேரடியாக போரில் ஈடுபடுவதற்கு மட்டுமல்லாமல், இத்தகைய பீதியூட்டலுக்கும் சேர்த்து அமெரிக்கா ஏராளமாகச் செலவழிக்க வேண்டியிருக்கிறது.
ஏகாதிபத்தியம் குறித்த கோட்பாடுகள் ஏற்கனவே பல சிந்தனையாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. மார்க்சிய சிந்தனையாளர்கள் இதில் முக்கியமானவர்கள். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே ‘‘ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் உச்சகட்டம்’’ என லெனின் வரையறுத்துவிட்டார். ஒரு சிலரின் கைகளில் அபரிமிதமான மூலதனம் குவியும்போது ஏற்படும் விளைவுகளையும் அவர் அப்போதே சுட்டிக்காட்டியிருக்கிறார். ஏகாதிபத்தியக் கருத்தியல் அனைத்து வர்க்கத்தினரையும் ஊடுருவி அவர்களைத் தமது ஆதரவாளர்களாக மாற்றும் வல்லமை கொண்டது என்று குறிப்பிட்ட லெனின், சோஷலிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்பவர்களையும் ஏகாதிபத்திய கருத்தியல் பாதித்திருக்கிறது என்பதைக் குறிப்பிட்டு அத்தகைய நபர்களை ‘‘சமூக ஏகாதிபத்தியவாதிகள்’’ என வர்ணித்தார். அந்தளவில் அவர் சொன்னது சரிதான். ஆனால் ஏகாதிபத்தியத்தின் எதிர்காலத்தை கணித்ததில்தான் லெனினும், பிற மார்க்சியர்களும் தோல்வியடைந்துவிட்டனர். லெனின் அனுமானித்தது போல எப்படி சோஷலிஸ நாடுகளில் அரசு உலர்ந்து உதிரவில்லையோ அப்படியே முதலாளித்துவமும் தனது புதைகுழியைத் தானே தோண்டிக்கொள்ளவில்லை. சோஷலிஸ நாடுகள் என்று சொல்லப்பட்டவை தமக்குச் சிக்கல் நேர்ந்தபோது அதைச் சமாளித்து மேலே செல்வதற்குப் பெரிய அளவில் முயற்சிகளைச் செய்யவில்லை. பொருளாதாரத் தளத்தில் மட்டுமின்றி கருத்தியல் தளத்திலும் அவை தேங்கித்திணறிக் கொண்டிருக்கின்றன. பொருளாதாரத் தளத்தில் அவை முதலாளித்துவத்திடம் சரணடைந்தன. கருத்தியல் தளத்திலோ தேசியவாதம் முதலான பாசிசச் சிந்தனைகளின் செல்வாக்குக்கு ஆளாகியுள்ளன. ஆனால் தனக்கு நேரிடும் நெருக்கடிகளைச் சமாளித்து மேலே செல்வதற்கு முதலாளித்துவம் கற்றுக்கொண்டு விட்டது போல் தோன்றுகிறது. அதனால்தான் அது இவ்வளவுகாலம் தாக்குப்பிடிக்க முடிகிறது. இப்போது வந்துள்ள நெருக்கடியையும்கூட அது சமாளித்து விடக்கூடும். ஏனென்றால் இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கு இடதுசாரிகளிடம் எந்தவொரு திட்டமும் இதுவரை இல்லை என்பது வருந்தத்தக்க உண்மையாகும்.
‘‘போக்கிரி தேசம்’’ என்பது நோம் சோம்ஸ்கியால் அதிகம் பயன்படுத்தப்படுகிற ஒரு கருத்தாக்கமாகும். அமெரிக்காவை வர்ணிப்பதற்கு அதை அவர் உபயோகப்படுத்துகிறார். சர்வதேசச் சட்டங்கள், நெறிமுறைகள் முதலானவற்றை மதிக்காமலும், சர்வதேச நீதிமன்ற ஆணைகளை உதாசீனப்படுத்தும் விதத்திலும் நடந்துகொள்கிற ஒரு அரசாங்கத்தைப் போக்கிரி தேசம் எனக் கூறலாம் என்கிறார் சோம்ஸ்கி. தான் இந்த பதத்தை அதன் நேரடியான அர்த்தத்திலேயே கையாள்வதாக அவர் குறிப்பிடுகிறார். இதே சொல்லுக்கு ஒரு பிரச்சார அர்த்தமும் இருக்கிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் வராத நாடுகளைக் குறிப்பிடுவதற்கு இதே சொல்லை அமெரிக்க அரசு பயன்படுத்துகிறது. உதாரணமாகச் சொன்னால் கியூபாவை போக்கிரி தேசம் என அமெரிக்கா அழைக்கிறது. அது பிரச்சார நோக்கத்தில் அந்த சொல்லைப் பயன்படுத்துவதாகும் என்கிறார் சோம்ஸ்கி. இன்றையச் சூழலில் உலகில் சட்டத்தை மீறி செயல்படும் மிகவும் வன்முறையான நாடாக அமெரிக்காவே விளங்கிக்கொண்டிருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாமில் அப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசியது; லத்தீன அமெரிக்க நாடுகளில் தலையிட்டு அங்கே ஆட்சிக் கவிழ்ப்புகளை அரங்கேற்றியது. சூடான் மீது குண்டுவீசி அந்த நாட்டின் மருத்துவ வசதிகளை நிர்மூலம் செய்தது; லிபியா மீது தாக்குதல் நடத்தியது; நிகரகுவாவைத் தாக்கியது; ஈராக்கின் மீது போர் தொடுத்தது. ஆப்கானிஸ்தானை அழித்துக் கொண்டிருப்பது; இஸ்ரேலை ஊக்குவித்து பாலஸ்தீன மக்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பது & இப்படி அமெரிக்கா செய்துவரும் அத்துமீறல்களைப் பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும்.
       இந்த நூலில் மிகச் சுருக்கமாகவும் துல்லியமாகவும் அமெரிக்காவுக்கு எதிரான வாதங்களை ராஜு தொகுத்துவைத்திருக்கிறார்.நாற்பத்தொன்பது தலைப்புகளில் அவை முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஈராக்கில் அமெரிக்க ராணுவம் நிலைகொண்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள், ஆப்கானிஸ்தான் கொள்கையால் அதற்கு உருவாகியிருக்கும் நெருக்கடி, பொருளாதாரச் சரிவை அது சந்திப்பதற்கானக் காரணங்கள் என எல்லாஅம்சங்களையும் இந்த நூல் பேசுகிறது. அமெரிக்க வல்லரசு, இப்போது கேள்விகேட்க ஆளில்லாத ஆதிக்க சக்தியாக வளர்ந்து நிற்பதை விவரிக்கும் நூல், அந்த நிலையைக்கண்டு நாம் மனம் தளர்ந்துவிடக் கூடாது என்பதிலும் கவனம் செலுத்தியிருக்கிறது. வியட்நாம் மக்களின் வீரம் செறிந்த போராட்டங்களையும், லத்தீன் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் உருவாகியிருக்கும் அரசுகள் அமெரிக்க மேலாண்மைக்குச் சவாலாக இருப்பதையும், குறிப்பாக வெனிசூலாவில் ஹ்யூகோ சாவேஸ் தலைமையில் அமைந்திருக்கும் அரசுகுறித்த நம்பிக்கையையும் ராஜு இந்நூலில் தந்திருக்கிறார். அமெரிக்கா என்பது வீழ்த்தவே முடியாத ஒரு சக்தியல்ல என்ற கருத்தை இந்த நூல் முன்வைத்துள்ளது. இடதுசாரிச் சிந்தனைகளை ஏற்றுக்கொண்டு செயல்படும் அரசியல் செயல்பாட்டாளர்களுக்கு கையேடாக விளங்குகிறது இந்தப் புத்தகம்.இதை துவக்கப்புள்ளியாககொண்டு மார்க்சியத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப மறுவாசிப்புச் செய்வதற்கு அவர்கள் முற்படவேண்டும்.அதற்கானத் தூண்டுதலையும் இது வழங்குகிறது.
       எண்பது வயதை எட்டிவிட்டபோதிலும் தான் கொண்ட கொள்கைப் பிடிப்பால் ஒரு இளைஞனைப்போல் இயங்கிக்கொண்டிருப்பவர் ராஜு. சிற்றிதழ்களில் கட்டுரை எழுதவரும் இளைஞர்களிடையே அரசியல் பிரச்சனைகளை அலசக்கூடியவர்கள் அருகிப்போய்விட்ட காலம் இது. அவ்வாறு எழுதுகிற ஒருசிலரும்கூட ஆங்கிலத்தில் வாசிப்பதில்லை என்பதை வரையறைக்குட்பட்ட அவர்களது எழுத்துகள் காட்டுகின்றன. இத்தகையச் சூழலில் பரந்த வாசிப்பு மட்டுமின்றி அரசியல் அனுபவமும் கொண்ட ராஜு, நூல் எழுத முன்வந்திருப்பது வரவேற்கப்படவேண்டியதாகும். இத்தகைய நூல்களையும் வெளியிட்டிருக்கிறோம் என உயிர்மை பதிப்பகம் நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

போக்கிரி தேசம்
- மி.ராஜு
உயிர்மை பதிப்பகம்
விலை ரூ 85/-

வாரம் ஒரு மதிப்புரை
ஆழி செந்தில்நாதன் மீண்டும் இந்தியா டுடே பத்திரிகையில் சேர்ந்துவிட்டார். இன்று ஒரு கட்டுரை தொடர்பாகப் பேசிக்கொண்டிருந்தபோது புத்தக விமர்சனத்துக்கு கொஞ்சம் கூடுதல் இடம் ஒதுக்கும்படிக் கேட்டேன். அவரும் ஒரு பதிப்பாளர் என்பதால் அதன் முக்கியத்துவம் அவருக்குத் தெரியும். ஆசிரியரிடம் பேசுவதாகச் சொன்னார் . மதிப்புரை எழுதித் தருமாறு புத்தகம் அனுப்பினால் பலர் எழுதுவதே இல்லை என அவர் சொன்னபோது எனக்கும் சுரீரென்றது. முரளிதரன் அங்கே இருந்தபோது அப்படி ஒரு புத்தகத்தை எனக்கு அனுப்பி நான் மதிப்புரை எழுதாமல்போனது நினைவுக்கு வந்தது.
மொழிபெயர்ப்பு போலவே மதிப்புரை எழுதுவதும் பயன் தராத வேலை என்று பலரும் அதில் ஈடுபடுவதில்லை. தாம் படித்த ஒரு புத்தகத்தின் மதிப்பை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்ற ஆர்வம் மதிப்புரைகளின் அடிப்படையாக இருந்த காலம் போய்விட்டது. இப்படிப் புலம்புவதால் பயன் எதுவும் இல்லை. இதை மாற்றுவதற்கு நாம் ஏதாவது செய்யவேண்டும் என்று கருதினேன். இந்த வலைப்பூவில் வாரம் ஒரு புத்தகம் குறித்து எழுதுவதென்று முடிவு செய்திருக்கிறேன். அது தினம் ஒரு புத்தகம் என்று மாறினாலும் வியப்பில்லை. பரிந்துரைக்க அவ்வளவு நல்ல நூல்கள் இருக்கின்றன.
பதிப்பாளர்கள் எனது முகவரிக்குத் தமது வெளியீடுகளின் ஒரு பிரதியை அனுப்பலாம்.அனுப்பியதை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும் manarkeni@gmail.com

ரவிக்குமார்

மணற்கேணி
எண் 2, நோபிள் மேன்ஷன்
10, டாக்டர் நடேசன் சாலை
திருவல்லிக்கேணி
சென்னை 600005