Wednesday, June 29, 2011

ஒரு பேப்பர் ஒரு உரையாடல் ..இரவிக்குமார்ஒரு இலக்கியவாதியாக அறியப்பட்ட நீங்கள் எப்போது அரசியலில் ஈடுபட ஆரம்பித்தீர்கள்?
கட்சி அரசியலில் ஈடுபட்டது இப்பொழுது சில மாதங்களுக்கு முன்னர்தான். அதாவது கடந்த சட்டசபைதேர்தலுக்கு முன்னர். அதற்கு முன்னால் அரசியல் தொடர்பு என்பது எனது மாணவப்பருவம் தொட்டு இருந்து வருகிறது. முதலில் கல்லூரிக் காலத்தில் திராவிடர் கழகத்தின் மாணவர் பிரிவில் பணியாற்றியிருக்கிறேன். ஆதற்கு பின்னர் மார்க்சிய லெனினிய அதாவது நக்சல்பாரி அரசியலால் ஈர்க்கப்பட்டு அதனுடைய மாணவர் அமைப்பிலும் அதனை தொடர்ந்து பண்பாட்டு அமைப்பிலும் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் செயல்பட்டுள்ளேன். பின்னர் மனிதவுரிமைகள், குறிப்பாக தலித் இயக்கப் பிரச்சனைகள் என எனது செயற்பாடுகள் அரசியல் சார்ந்தவையாக இருந்தாலும் கட்சி அரசியலில் ஈடுபட்டது இப்போதுதான்.

அரசியலை ஒரு சாக்கடை என்றும் அதனால் நல்லவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற ஒரு கருத்து உண்டு. இல்லை நல்லவர்கள் அரசியலில் ஈடுபட்டால்தான் அதனை நேர்மையானதாக மாற்ற முடியும் என்ற கருத்தும் உண்டு. இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?
அரசியலை அப்படி எதிராகப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் இன்றைக்கு இந்த தேர்தல் அரசியல் மூலமாக ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு சில நன்மைகளை செய்யமுடியம் என்பதை நான் நம்புகிறேன். அந்த அடிப்படையிலதான் தொடர்ந்து தேர்தல்களை புறக்கணித்துக் கொண்டிருந்த விடுதலைச்சிறுததைகள் இயக்கம் கூட தேர்தலில் பங்கெடுகக்கலாமா என யோசித்துக் கொண்டிருந்தபோது .. பங்கெடுக்கலாம் என வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். ஆகவே அரசியலைப்பற்றி எதிரான அபிப்பிராயம் எனக்கு கிடையாது. என்னைப் பொறுத்தவரையில் அடிப்படையில் ஒரு எழுத்தாளன என்ற வகையில் எழுத்தாளருக்கு தேவையான கற்பனையும் ஒரு படைப்பு ஊக்கமும், imagination and creativity என்று சொல்வார்கள். இது வந்து எழுத்தாளனுக்கு அடிப்படையான விசயம் அது இன்றைக்கு அரசியலில் சுத்தமாக இல்லாத நிலையைப் பார்க்கிறோம். அதனால் புதிய திட்டங்களை புதிய அணுகுமுறையை அவர்களால் கொடுக்கமுடியவில்லை. அந்தவிதத்தில் எழுத்தாளனுக்கு உரித்தான இந்த அடிப்படைத்தகுதிகளை அரசியல் தளத்தின் ஊடாக கோண்டுபோய் சேர்க்கும்போது சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என நான் நினைத்தேன். அதன் மூலமாக மற்றவர்கள் செய்யாத சில விடயங்களை செய்யமுடியும் என நான் நினைத்தேன். அந்தவிதத்தில் அரசியலுக்கு வருவதை நான் சாதகமாகத்தான் பார்த்தேன். இன்றைக்கு எனது குறுகிய கால அனுபவத்தில் என்னால் சிலவற்றை செய்யவும் முடிந்திருக்கிறது.

சட்டசபை, தேர்தல் என கட்சி அரசியலில் ஈடுபடாமல் இல்லாமல் ஒரு இயக்கமாக இருந்திருந்தால் .. நீங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கூடுதலான சேவையாற்ற முடியும் என்ற கருத்திருக்கிறது அது பற்றி ..
அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஏனெனில் விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரை பத்தாண்டுகளுக்கு மேலாக அது தேர்தலைத் தவிர்த்த இயக்கமாகவே இருந்து வந்தது. 99ல்தான அது தேர்தலில் ஈடுபட்டது. அதுவரை அது ஒரு வலிமையான இயக்கமாக எல்லாரினதும் கவனத்தை பெற்றது என்பது உண்மைதான். ஆனால் தேர்தலுக்கு வந்த பின்னர்தான் தாழத்தப்பட்ட மக்களை இன்றைக்கு ஒன்று திரட்டி அவர்களை ஒரு அரசியல் கட்சியாக மாற்ற முடிந்தது. அதற்கு முன்னர் இயக்கம் வலுவாக இருந்தது. இன்றைக்கு மக்கள் ஒரு வலுவான சக்தியாக மாறியிருக்கிறார்கள். அதற்கு இந்தியாவைப் பொறுத்தவரையில் பாராளுமன்ற அரசியல் என்பது ஒரு வழிமுறையாக இருக்கிறது என்பதை நாம் மறுத்துவிட முடியாது.

திராவிட கழகத்தின் மாணவர் இயக்கத்தில் சேர்ந்து இயங்கியதாக குறிப்பிட்டீர்கள். ஆனால் திராவிட இயக்கத்தைப்பற்றியும் பெரியார் பற்றியும் நீங்கள் தீவிரமான விமர்சனம் கொண்டவர் என அறிகிறேன் ..
நான் தொடர்ந்து திராவிட இயக்கத்துடன் நெருக்கமாக நம்பிக்கையோடு செயற்பட்டு வந்த காரணத்தால் அதனுடைய செயற்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அதன் தத்துவார்த்த தளத்தில் குறிப்பாக பொருளாதார அடிப்படையில் இருந்த போதாமை கருதியே என்னுடைய மாணவபருவத்தில் மார்க்சிய அரசியலை நோக்கி ஈர்க்கப்பட்டேன் அதற்கு பின்னாலும்கூட தமிழ்நாட்டை பொறுத்தவரையில் திராவிட இயக்கம் திராவிட அரசியல் என்பது வலுவான சக்தியாக இருக்கின்ற காரணத்தினால் தொடர்ந்தும் அதை நான் கவனித்து வந்தேன். குறிப்பாக 1998ல் பாரதிய ஜனதா கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு வழங்கியபோது என்னை போன்றவர்களுக்கு, குறிப்பாக அதை தொடரந்தும் ஆதரவோடும் ஒரு நம்பிக்கையோடும் பாரத்துக் கொண்டிருந்தவர்கள் என்ற வகையில் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால்தான் பெரியாருடைய கருத்துக்களை தமிழில் மீண்டும் எழுச்சி பெற வைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு நான் ஆசிரியராக இருந்து நடாத்தி வந்த நிறப்பிரிகை பத்திரிகையில் பெரியாரியம் என்ற கூட்டு விவவாதம் ஒன்று நடாத்தினோம் அதில் எனது பங்கு முக்கியமானது. அதனைத் தொடர்ந்து பெரியாரைப்பற்றிய ஒரு விவாதம் மீண்டும் வந்து ஒரு தமிழ்ச் சூழலில் ஒரு கவனிப்பும் வருவதற்கு எனது பங்கும் முக்கியமானது. குறிப்பாக தினமணி போன்ற பத்திரிகைகளில் அதைப்பற்றிய விவாதம் தொடர்ந்து வருவதற்கு எனது கட்டுரை காரணமாக இருந்தது. அந்த நிலையில் தி;;.மு.கவின் பாஜக ஆதரவான நிலைப்பாடு என்பது அதிர்ச்சியாக இருந்தது. அதற்கான காரணத்தை தி;மு.க. அரசியல் சந்தர்ப்பவாதமாக இருந்தது என்றோ அல்லது அதனுடைய தலைவர் தவறாக நடந்து கொண்டார் என்றோ.. நான் எளிமைப்படுத்தி புரிந்து கொள்ள விரும்பவில்லை அதற்கான காரணங்களை ஆய்வு செய்ய விரும்பினேன். ஏற்கனவே கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ரஷ்யாவிலும் சோசலிசம்; வீழ்ச்சி அடைந்தபோது அதற்கான காரணங்களை ஸ்ராலினுடைய அதிகார விடயமாக எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தபோது …அதைத் தாண்டி லெனின் தேசிய இனப்பிரச்சனையை கையாண்டதில் பிரச்சனையிருக்கிறதா? மார்க்ஸ் ஏங்கல்ஸ் போன்றவர்களின் அணுகுமுறையிலேயே ஏதாவது கோளாறு இருக்கிறதா? என்கின்ற ஆய்வுகளை நாங்கள் மேற்கொண்டிருந்தோம்.. அப்படி பார்க்கும்போது தேசிய இனப்பிரச்சனைகளைப்பற்றி மார்க்ஸ் உட்பட அதற்கு பின்னால் வந்த சிந்தனையாளர்கள் எல்லாம் எப்படியெல்லாம் பார்த்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து அதற்கான காரணங்களை அறிந்தோம். அதைப்போலவே திராவிட இயக்கத்திலுள்ள இந்த நிலைப்பாட்டுக்கு அதனுடைய மூலகர்த்தாக்களாகிய பெரியார் போன்றவர்களிடம் ஏதாவது காரணங்கள் இருக்கிறாதா என மீண்டும் மறுவாசிப்புக்கு உட்படுத்தி பார்க்கிற போது சிறுபான்மையர்களை அணுகுகின்ற விதத்தில் சில பிரச்சனைகள் தென்பட்டது. அந்த பின்னணியில் தி.மு.க வின் நிலைப்பாட்டை விளங்கிக் கொண்டேன். அதற்கு காரணம் இதுதான் என்பதை 98ல் எழுதினேன். அது திராவிட இயக்கத்தின் மீதான, அதனுடைய தொடக்கநிலை கருத்தியலாளரான பெரியாரைப்பற்றிய விமர்சனமாக நீண்டது. மற்றபடி அவர்களைப்பற்றி அவதூறாகவோ கொச்சைபடுத்தியோ எதுவும் சொல்லவில்லை. இந்த விமர்சனங்கள் என்னிடம் இருக்கிறது என்பது உண்மைதான்.

ஈழத்தமிழ் மக்கள் விடயத்தில் .. அண்மையில் தமிழ்நாட்டிலிலுள்ள அகதி முகாம்களுக்கு சென்று அங்கு அவர்கள்படும் அவலங்களை ஒரு அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தி ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தீர்கள். தமிழ்நாடு அரசும் சில அனுகூலமான முடிவுகளை எடுத்திருக்கிறது. இந்த விடயத்தில் உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
ஈழத்தமிழ் அகதிகள் அல்லது புலம்பெயர்ந்த மக்கள்பற்றிய எனது கவனம் என்பது, உலகத்தமிழ் மாநாடு நடந்தபோது அதற்கு இணையாக புலம்பெயரந்த மக்களின் நலன்களைப்பற்றி கவனத்தை ஈர்க்கவேண்டும் என்பதற்காக, குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் அங்கேயிருந்த சிந்தனையாளர்கள் ரஷ்ய அதிபர் பிரான்சுக்கு வருகை தந்தபோது, அரசாங்கம் அவரை வரவேற்க முற்பட்டபோது, ரஷ்யாவிலிருந்து புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்தவர்களின் கவனத்தை ஈரப்;பதற்காக பிரான்சிலிருந்த சிந்தனையாளர்கள் இணைந்து ஒரு மாநாட்டை ஒழுங்கு செய்தார்கள் என்பதை ஹியுகோவின் வாழ்க்கை வரலாற்றில் படித்திருக்கிறேன். அதுதான் ஒரு உந்துதலாக இருந்தது. உலகத்தமிழர் மாநாட்டு சமயத்தில் ஏன் நாங்கள் இப்படி முயற்சி மேற்கொள்ள முடியாது என நண்பர்களுடன் இணைந்து புலம்பெயரந்த ஈழத்தமிழர் மாநாடு என ஓன்றை நடாத்தினோம். தொடர்ந்து அகதிகள் பிரச்சனை என்பது என்னுடைய கவனத்தில் இருந்து வந்தது. அதையொட்டித்தான நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனதும் முதல் உரையிலேயே இந்த விடயததை கவனப்படுத்தினேன். இன்றைக்கு அவர்களுக்கு வழங்கப்படும் பணக்கொடை இரண்டு திகரிக்கப்பட்டுள்ளது. அகதி முகாம்களுடைய நிலை இன்றைக்கு சீரமைக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கென வீடுகள் கட்டுவதற்கான ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் இரண்டு விடயங்களை தெரிவிக்கலாம் என நினைக்கிறேன் குறிப்பாக அகதிகளுடைய பிள்ளைகளுடைய படிப்பு. இதற்கு முன்னால் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அவர்களுக்கு படிப்புக்கென்று இட ஒதுக்கீடு இருந்து வந்தது. அதற்கு பின்னால் வந்த அதிமுக ஆட்சியில் அது ரத்து செய்யப்பட்டது. அதை மீண்டும் கொண்டுவருவதற்கு நான் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். இது மிக முக்கியம் என்று பார்க்கிறேன. ஏனென்றால் இந்த மக்கள் என்றைக்காவது திரும்பிப் போனார்கள் என்றால் சொந்த நாட்டுக்கு போகும்போது இங்கிருந்து பண்ட பாத்திரங்களையோ வேறு சொத்துக்களையோ எடுத்திட்டு போகமுடியாது. அவர்கள் தங்களோடு கொண்டுபோகக்கூடிய ஒன்றாக கல்வி மட்டும்தான் உள்ளது. ஆகவே அவர்களை கல்வி ரீதியாக வளமுள்ளவர்களாக மாற்ற வேண்டும் மீண்டும் அவர்கள் நாடு திரும்பும்போது அவர்களால் நாட்டை கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும்.
இரண்டாது இந்திய அளவில் அகதிகளுக்கான ஐ.நா. சபையின் தீர்மானங்கள். அதில் இந்தியா கையெழுத்திடாமல் இருக்கிறது. அதன் காரணமாக அகதிகளுக்கு சட்ட ரீதியாக கிடைக்கக்கூடிய உரிமைகள் கிடைக்காமல் இருக்கிறது. அதுமட்டுமல்ல இந்திய அளவில் அகதிகளின் பிரச்சனைகளை அணுகுவதற்கு தேசிய அளவில். ஒரு சட்டமும் இல்லாத நிலை இருக்கிறது. அதற்காக உருவாக்கப்பட்ட மாதிரிச் சட்டம் கூட இன்னமும் நடைமுறைக்கு வராமல் இருக்கிறது. ஐ.நா.சபையின் தீர்மானங்களில் இந்தியாவை கையெழுத்திட வைப்பது இந்திய அளவில் அகதிகளின் நலனுக்காக தேசியச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது ஆகிய இரண்டும்; தேசிய அளவிலான எனது கவனமாக இருக்கிறது. இதனை தேசிய அளவிலான மனிதவுரிமை இயக்கங்களுடன் தொடர்புகொண்டு அதனை ஒரு பிரச்சாரமாக கொண்டு செல்வதை எனது அடுத்த முயற்சியாக கொண்டுள்ளேன்.

ஈழத்தில் வன்முறைகள் அதிகரித்து செல்கின்றது .. இந்நிலையில் தமிழ்நாட்டுமக்களின ஆதரவை ஈழத்தமிழர்கள் வேண்டி நிற்கிறார்கள். அந்தவகையில் அண்மையில் ஈழத்தமிழரின் பிரதிநிதிகளாக தமிழ் தேசியக்கூட்டணி பாராளுமன்ற உறப்பினர்கள் இந்தியாவுக்கு வந்திருந்தார்கள். அவர்களை சந்திக்க கலைஞர் கருணாநிதியும் திரு.மன்மோகன் சிங்கும் மறுத்து விட்டார்கள். திரு. மன்மோகன் சிங்கை சந்திக்காததைக் காட்டிலும் திரு. கருணாநிதி அவர்கள் சந்திக்க மறுத்தமை ஈழத்தமிழர்களுக்கு வேதனையைக் கொடுத்துள்ளது. இப்போது கலைஞர் தலைமையிலான கூட்டணியில் இருக்கும் நீங்கள் இதுபற்றி என்ன கருத்துக் கொண்டுள்ளீர்கள்?
நாங்கள் ஆரம்பத்திலிருந்தே ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பாக சட்டமன்றத்தினை நல்ல முறையில் பயன்படுத்தி வருகிறோம். இந்தவிடயத்தை சட்டசபையில் கிளப்பியதே விடுதலைச்சிறுத்தைகள் அமைப்புத்தான். சிங்கள பொலிசாருக்கு தமிழ்நாட்டில் பயிற்சியளிக்கப்பட்டபோது அதனை ஒரு பிரச்சனையாக எடுத்து அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு நாங்கள்தான காரணமாக இருந்தோம். அடுத்ததாக செஞ்சோலை சிறார்கள் மீது நடந்த விமானத்தாக்குதலை ஒட்டி, அந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் நாங்கள் முயற்சி எடுத்தோம். அங்கு ஒரு தீர்தமானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவை நடந்து கொண்டிருந்தபோது இரண்டு முறை ஈழத்தமிழர் பிரச்சனையை முன்வைத்து வெளிநடப்புச் செய்தோம். அதுமட்டுமல்லாமல் சட்டப்பேரவையில் ஈழத்தமிழருக்கு ஆதரவான இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இரண்டையும் நாங்கள்தான கொண்டுவந்தோம். அந்த தீரமானங்களை முதலமைச்சர் மிகவும் அக்கறையாகப் படித்தார். அவர் உள்ளாரந்து ஈழத்தமிழர்களின் நலனில் மிகவும் அக்கறை கொண்டவர். ஏற்கனவே இந்தப்பிரச்சனையால் ஓருமுறை அவர் ஆட்சி இழந்துள்ளார். அப்போது பெரும்பான்மை அரசாக இருந்தபோதே ஈழத்தமிழர் பிரச்சனையால் ஆட்சியை இழந்துள்ளார் இன்றைக்கு காங்கிரஸ் ஆதரவை வேண்டி நிற்கும் நிலையில் அந்த ஆட்சியை காப்பாற்ற வேண்டியதும் இன்றைக்கு ஈழத்தமிழரின் நலனுக்கு அவசியமாக இருக்கிறது. அந்தவிதத்தில் அவர் சாதுரியமாக இந்த பிரச்சனையை கையாளுகிறார் என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்று சொன்னால் அவர் சட்டப்பேரவையில் on record ஆக பேசியவிடயங்கள். அவ்வளவு அழுத்தம் திருத்தமாக வேறு யாரும் பேசியிருக்க முடியாது. குறிப்பாக அகதிகள் என்ற வார்த்தையை சொல்ல அவர் வாய் கூசினார் அதாவது தமிழர்களை அகதி என்று சொல்கிற நிலமை இன்றைக்கு இருக்கிறதே என்று வருத்தப்பட்டார். இது சட்டப்பேரவையின் ஆவணங்களில் பதிவாகியுள்ளது. அந்த அளவுக்கு அவருக்கு ஈழத்தமிழர் பிரச்சனையில் அவருக்கு அக்கறையுண்டு. இவர்களை பார்க்க மறுத்ததை ஒரு வயஉவiஉயட விடயமாகவே பார்;க்கிறேனே தவிர அவர் மனப்பூர்வமாக மறுத்துவிட்டார் என்று சொல்லமுடியாது.
இன்றைக்கு இந்திய அரசாங்கத்தின் அணுகுமுறை தீரமானிப்பது அரசியல் என்பதை விடவும் சில அதிகாரிகளாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் ஈழப்பிரச்சனைக்கு எதிரான மனச்சாய்வு பட்டவர்களாக இருக்கிறார்கள் இது எளிதில் மாறக்கூடியதாக இல்லை. ராஜிவ் கொலை விடயமும் இருக்கிறது. ஆகவே இந்த விடயத்தை மௌ;ள மௌ;ளத்தான அணுக முடியும். ஆனால் ஈழத்தமிழருக்கு ஒரு இன்னல் என்றால் நிட்சயமாக நாங்கள் எல்லாம் எங்களால் இயன்றதை செய்து அந்த இன்னலை களைவதற்கு நாங்கள் பாடுபடுவோம் பாடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.


சாதிகளை குறிப்பிட்டு விமர்சிப்பது சரியா? சாதிப்பிரிவினைகளை இல்லாமல் செய்யவேண்டும் என்று முயற்சிக்கிறீர்களா? அல்லது சாதிகளை வைத்துக்கொண்டே அவற்றுக்கிடையில சமத்துவம் இருந்தால் போதுமானது என்று நினைக்கிறீர்களா?
நிட்சயமாக எந்தவொரு தலித் சமூகத்தை சேர்ந்தரும் சாதி அமைப்பு இருக்கவேண்டும் என விரும்பமாட்டார்கள். சாதிகளை வைத்துக்கொண்டே ஏற்படுத்தும் சமத்துவத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. நாங்கள் ஏற்றுக்கொண்ட அம்பேத்கரின் பார்வை அடிப்படையாக எதை சொல்கிறதென்றால் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதுதான். அதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். எப்படியெல்லாம் சாதிமனோபாவம் வெளிப்படுகிறது என்ற கோணத்தில் விமர்சிக்கிறோமே தவிர சாதி ஒழிப்பு என்பதுதான் எங்களது அடிப்படையான நோக்கம். அதுதான் எங்களது அணுகுமுறை.

காலச்சுவடு சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிற்கு நீங்கள் ஒரு ஆலோசகராக இருக்கிறீர்கள். ஆனால் காலச்சுவடு பார்ப்பனிய நலன்களை (பின்தளத்திலாவது) பேணுகின்ற பத்திரிகை எனச் சொல்லப்படுகிறதே?
நான் காலச்சுவடு பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் இருந்திருக்கிறேன். சட்டமன்ற உறுப்பினரான பின்னர் அதிலிருந்து விலகி ஆலோசகராக இருக்கிறேன். என்னுடைய அனுபவத்தை பொறுத்தவரை அவர்கள் பார்ப்பன நலனைப் பேணுபவர்களாக நான் உணரவில்லை. குறிப்பாக தொடர்ந்து காலச்சுவடு பத்திரிகையில் பெரும்பாலான தலையங்கங்கள் என்னால் எழுதப்பட்டுள்ளது. அந்த தலையங்கங்கள் பலமுறை பார்ப்பனிய நலன்களுக்கு எதிரான பொருளை கொண்டிருக்கிறது. அடிப்படையில் இந்த மாதிரியான விரிவான கட்டுரைகளை நான் அதில் எழுதியிருக்கிறேன். என்னால் மட்டுமல்ல பலராலும் எழுதப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கிற பத்திரிகையினை பார்ப்பன நலன் பேணும் பத்திரிகையாக நான் பார்க்கவில்லை. அவர்கள் பிறப்பால் பார்ப்பனர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். இன்றைக்கு இருக்கிற ஆசிரியரோ அல்லது இதற்கு முன்னால் ஆசிரியராயிருந்த சுந்தர ராமசாமி அவர்களோ பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் ஆனால் சுந்தர ராமசாமி பார்ப்பனியத்தை ஆதரித்து எழுதியவரில்லை அதற்கு எதிரான வாழ்க்கையைத்தான் கடைப்பிடித்தார். அவரது இறப்பு கூட, இறந்ததற்கு பின்னால்கூட எந்தவித சடங்குகளுக்கு இடமுமில்லாமல் அவருடைய உடல் எரியுட்டப்பட்டது. எரியூட்டப்பட்ட இடம்கூட, வேறொரு பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு சொந்தமான சுடுகாட்டில்தான் எரியூட்டப்பட்டது. அங்கு அவரது சாதிக்காரர்கள், உறவினர்கள் பத்து இருபது பேர்கூட வரவில்லை. அதைவிட தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள். அவரது எழுத்தை விமர்சிப்பவர்கள்கூட நூற்றுக்கணக்கில் அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்கள். எனது அனுபவத்தில் நான் எல்லாவிதத்திலும் நுணுக்கமாக சாதியம் வெளிப்படுவதை அவதானிக்கிற ஆள் என்றவிதத்தில் அப்படி வெளிப்படடிருந்தால் நிச்சயமாக அதனைச் சகித்துக்கொண்டு இருந்திருக்க மாட்டேன். என்னுடைய அனுபவத்தில் அந்த பத்திரிகையை ஒரு பார்ப்பனிய நலன் பேணும் பத்திரிகை என்று சொல்ல மாட்டேன். குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்சனையிலும்கூட சுந்தர ராமசாமி காலத்திலும் சரி இப்போதும் சரி ஈழத்தமிழர் பிரச்சனைபற்றி எழுத்தில் ஆழமாக அணுகுகின்ற பத்திரிகையாகாத்தான் வெளிப்படுகிறது.

உங்களது அரசியல் வேலைகளால் இலக்கிய முயற்சிகள் தடைப்பட்டிருக்கும். புதிதாக ஏதாவது முயற்சிகளில் ஈடுபட்டுள்ளீர்களா?
எழுத்து முயற்சிகள் குறிப்பாக ஆக்க எழுத்து முயற்சிகள் பாதிக்கப்பட்டுத்தான் உள்ளது. நான் “தலித்”; என்ற இலக்கிய பத்திரிகையை நடாத்திக் கொண்டிருக்கிறேன். இந்த இதழை ஈழத்து தமிழ்க் கவிதைகளின் சிறப்பிழாக வெளியிடவிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் அது வெளிவரவிருக்கிறது. அதில் தமிழ்நாட்டில் இதுவரைக்கும் அறியப்படாத பல ஈழத்துக்கவிஞர்களை நான் அதில் அறிமுகப்படுத்துகிறேன். குறிப்பாக பெண் கவிஞர்களின் கவிதைகளை இதில் கொண்டு வருகிறேன். அனார், விநோதினி என்கிற கவிஞரகள். இவர்கள் தமிழ்நாட்டில் இதுவரைக்கும் அறியப்படாத கவிஞர்கள். அந்த கவிதைகள் குறிப்பாக ஈழத்து கவிதைப்போக்கை மட்டுமல்ல தமிழ்நாட்டு கவிதைப் போக்கிலிருந்து முற்றிலும் வேறுபட்டு அற்புதமான விதத்தில் வெளிப்படுகின்றன. அவை தமிழ் இலக்கிய உலகத்துக்கு புதிய வழியை திறந்துவிடும் என்று நம்புகிறேன். கிட்டத்தட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட கவிதைகள் ஈழத்து தமிழ் கவிதை சிறப்பிதழில் சேர்க்கப்பட்டுள்ளன.
2006 டிசம்பர் மாதத்தில் லண்டனிலிருந்து வெளிவரும் ஒருபேப்பர் என்ற பத்திரிகையில் வெளியான  நேர்காணல்)  பேட்டி கண்டவர் : கோபிரத்னம்

No comments:

Post a Comment