Sunday, June 26, 2011

நல்லாப்பிள்ளை பாரதப் பதிப்பு: சில இழப்புகள்மீது உருவான பெரும் இருப்பு -மு. ஏழுமலை

ஒரு மொழியில் உருவான இலக்கியம், அம்மொழி, அம்மொழி சார்ந்த இனம் ஆசியவற்றைக் கடந்து, பரவலாகப் பல மொழிகளுக்கான இலக்கியமாக உருவாதல் என்பது சிறப்பு. இச்சிறப்பை முழுமையாகப் பெற்றவை, வடமொழியில் உருவான இராமாயணம், பாரதம் என்னும் இரு இதிகாசங்களாகும். இவ்விரு இதிகாசங்களும் மற்ற மொழிகளில் இயற்றப்படும் போது அந்த மொழி வழங்கும் நிலத்தின் பண்பாட்டை உள்வாங்கி அம்மொழியில் உருவான இலக்கியங்களாகவே தோன்றின. அப்படி உருவாவதற்கான நெகிழ்வுத் தன்மையை இவை பெற்றுள்ளன. இத்தன்மைதான் இந்தியா முழுவதிலும் பல்வேறு மொழிகளில் அந்தந்த மொழி, இனம், வட்டாரம் சார்ந்த அடையாளப் பதிவுகளுடன் கூடிய பாரதம் உருவாகும் சூழ்நிலையைச் சாத்தியப்படுத்தியுள்ளது. வடமொழியிலேயே பல்வேறு இராமயண, பாரத நூல்கள் தோன்றி, மூல நூலைக் கண்டறிவதில் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளன.
வடமொழியில் உருவான இவ்விரு இதிகாசங்களில் இந்தியா முழுமைக்கான இதிகாசமாக பரவலாக்கம் பெற்றதில் இராமாயணத்தைவிட பாரதத்திற்கு முதன்மையான இடமுண்டு. பாரதக் கதையை ஒரு சமூகம் சார்ந்த நிகழ்வாக, வாழ்வியலாக காணும் சாத்தியக் கூறுகள் பெரும்பான்மையாக உள்ளன. இக்கதைக்கரு உடைபடாமல் ஒவ்வொரு மொழியும் தம் இனம், வட்டாரம், சார்ந்த பண்பாட்டுக் கூறுகளுக்கும் அடையாளங்களுக்கும் ஏற்ப மாற்றித் தமக்காக மகாபாரதத்தை வடிவமைத்துக் கொண்டன. இவ்வாறு பாரதத்தைப் பயன்படுத்திக் கொண்ட, பயன்பெற்ற மொழிகளுள் முதன்மையானது தமிழ்மொழி.
கி.பி. 4ஆம் நூற்றாண்டில் வடமொழியில் உருவான வியாச பாரதத்தைத் தொடர்ந்து, தமிழில் பல பாரத நூல்கள் உருவாகத் தொடங்கின. இவற்றுள், கி.பி. 9ஆம் நூற்றாண்டில் உருவான பெருந்தேவனார் பாரதம், கி.பி. 14ஆம் நூற்றாண்டில் உருவான வில்லிபாரதம், கி.பி. 18ஆம் நூற்றாண்டில் உருவான ‘நல்லாப்பிள்ளை பாரதம்’ முதலானவை குறிப்பிடத்தக்க பாரத நூல்களாகும். இவற்றில் பதினெட்டுப் பருவங்களையும் கொண்ட முழுமையான பாரதத்தைத் தமிழுக்குக் கொடுத்த பெருமை தொண்டை மண்டலத்தில் கீழ்முதலம்பேடு என்னும் கிராமத்தில் வாழ்ந்த ‘நல்லாப்பிள்ளை’ அவர்களுக்கே உரியது.
தமிழ்ப் பண்பாட்டு மரபுகளையும் சமகால நிகழ்ச்சிகளையும் உள்வாங்கி, பதினெட்டுப் பருவங்களில் ஒரு முழுமையான நூலாக நல்லாப்பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூல் சிறந்த முறையில் பதிப்பிக்கப்பட்டு மக்களிடம் பரவலாக்கம் செய்யப்பட்டதா என நோக்கும் பொழுது, ஏமாற்றமே கிடைக்கின்றது. இதன் மூலம் தமிழ்ச் சமூகம் ஒரு மிகப்பெரிய பணியின் மதிப்பை எவ்வாறு உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் உருவான நல்லாப்பிள்ளை பாரதத்திற்கு, 1888இல் சிதம்பரம் சாமிநாதய்யர் பாரிசோதித்த ஒரு பதிப்பும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், திரிசிபுரம் அ. சுந்தரநாதபிள்ளை அவர்களால் அச்சிடப்பட்ட ஒரு பதிப்பும் மட்டுமே வெளிவந்துள்ளன. இதனால் நல்லாப்பிள்ளை பாரதப் புத்தகம் குறிப்பிட்ட சிலரிடமே உள்ளதையும் மிகச் சிலரே வாசித்து அறிந்ததையும், மிகக் குறுகிய வட்டத்தில் பரவலாக்கம் பெற்றதையும் உணர்ந்துகொள்ள முடிகிறது.
இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 99 ஆண்டுகளுக்குப் பிறகு நல்லாப்பிள்ளை பாரதம் மூன்றாம் பதிப்பாக முனைவர் இரா.சீனிவாசன் அவர்களால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 13,949 செய்யுள்கள், 131 சருக்கங்கள் கொண்ட இந்நூல் 2248 பக்கங்களைக் கொண்டதாக மிகப் பெரிய நூல் வடிவில் இரண்டு பாகங்களாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் 2007ஆம் ஆண்டிலும், இரண்டாம் பாகம் 2009ஆம் ஆண்டிலும் ‘கலைக்கோட்டம்’ பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளன.
இப்பதிப்பில் 13,949 செய்யுள்களையும் சந்தி பிரித்து மிக எளிமையாக வாசித்துப் புரிந்து கொள்ளும் முறையில் உருவாக்கியிருப்பது மிகச் சிறப்பானதாகும். முடிந்த அளவிற்கு இலக்கணப் பிழைகளைத் தவிர்த்து உண்டாக்கியிருப்பது பதிப்பாசிரியாரின் இலக்கணப் புலமையை வெளிப்படுத்துவதாய் உள்ளது. இதோடு நல்லாப்பிள்ளை பாரதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வில்லிபாரதச் செய்யுள்களை * என்ற குறியிட்டு வேறுபடுத்திக் காட்டியிருப்பதும், ஒவ்வொரு சருக்கத்திலுமுள்ள செய்யுள்களின் கருத்துகளை முழுமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் செய்யுள்களின்மேல் ஒரு வரியிலான தலைப்பிட்டிருப்பது கதையோட்டதைப் புரிந்துகொண்டு நூலை வாசிப்பதை எளிமையாக்கியுள்ளது.
இதோடு, செய்யுள்களைப் பதிப்பிப்பதற்கு முன், இப்பதிப்புரைக்காக அவர் வகுத்துக் கொண்டுள்ள பதிப்பு முறைகளைக் கூற வேண்டும். 1888ஆம் ஆண்டில் வெளிவந்த முதல் பதிப்பின் முகப்புப் பக்கம், முதற்பதிப்பின் முகவுரை, அப்பதிப்பில் உள்ள நல்லாப்பிள்ளையின் வரலாறு, முதற்பதிப்பைச் குறித்த சிறப்புச் செய்திகள் என, முன் வெளிவந்த பதிப்பைப்பற்றி மிக விரிவாக வெளிப்படுத்தியிருப்பது பதிப்பின் நேர்மையைப் புரிந்துகொள்ள உதவுகின்றது. இவையல்லாமல் பாரத நாட்டில் உள்ள ஐம்பத்தாறு நாடுகள், சந்திரகுல மன்னர்களின் பெயர்கள், பதினெட்டு மொழிகள், கௌரவர்களின் பெயர்கள் முதலியவற்றைப் பட்டியலிட்டிருப்பதும் சிறப்பானது. தொடர்ச்சியாகப் பாரதப் போரில் ஒவ்வொரு நாளும் வகுத்த வியூகங்கள், அக்குரோணி என்று குறிப்பிடும் சொல்லிற்கான படை எண்ணிக்கை, இந்த பாரத நூலில் இடம் பெற்றுள்ள கிளைக்கதைகள் முதலானவற்றையும் பட்டியலிட்டிருக்கிறார். நல்லாப்பிள்ளை தம் பாரத நூலில் பயன்படுத்தியுள்ள வில்லிபாரச் செய்யுள்கள், நல்லாப்பிள்ளை பாரதத்தில் உள்ள இடைச்செருகல்கள், மிகைச்செய்யுள்கள் முதலிய ஆராய்ச்சிக் குறிப்புகளையும் வெளிப்படுத்தியுள்ளார். பொருளடைவு, சிறப்புப்பெயர் விளக்க அகர வாரிசை, ஒவ்வொரு பாரதப் பாத்திரத்திற்குமான விரிவான குறிப்பு ஆகியவற்றையும் 226 பக்கங்களில் விரிவான பதிப்பு முன் வரைவை உண்டாக்கியிருப்பது என்பது, பதிப்பிற்கான இலக்கணத்தை முழுமையாக உள்வாங்கிச் செயல்பட்டிருக்கும் தன்மையை உணர்த்துகின்றது.
இப்பதிப்பின் முதல் பாகத்தில் 54 பக்கங்களிலும் இரண்டாம் பாகத்தில் 27 பக்கங்களிலும் விரிவான பதிப்புரைகளை முன்வைத்திருக்கிறார். இப்பதிப்புரைகள், பதிப்பாசிரியாரின் பாரதம் தொடர்பான வாசிப்பையும், தமிழ்ச் சமூகத்தில் பாரதம் தொடர்பாக உண்டாகியுள்ள தாக்கங்களான வழிபாடு, நிகழ்த்து கலை போன்றவற்றை இவர் உள்வாங்கியிருக்கும் விதத்தையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளன. தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு பாரதம் செயல்படுகிறது என்பதையும் எவ்வாறு பாரதம் விழாவாகக் கொண்டாடப்படுகிறது என்பதையும், பாரதம் தொடர்பாகத் தமிழ்ச் சமூகத்தில் வெளிவந்த நூல்களான பெருந்தேவனார் பாரதம், வில்லிபாரதம், ஆதிபருவத்தாதி பருவம், அரங்கநாதக் கவிராயர் பாரதம், பாரத மாவிந்தம், மகாபாரதச் சுருக்கம், பாரதசார வெண்பா, உரைநடை பாரத நூல்கள் எனப் பல பாரத நூல்கள் குறித்த விரிவான அறிமுகத்தையும் பதிவு செய்திருப்பதன் வழியே பாரத நூல்கள் பற்றிய விரிவான வரலாற்றைப் புரிந்துகொள்ள முடிகிறது. வியாச பாரதம், வில்லிபாரதம், நல்லாப்பிள்ளை பாரத நூல்களை ஒப்பிட்டுப் பல குறிப்புகளையும் தந்துள்ளார். இவ்விரிவான பதிப்புரைகளின் மூலம் அவர் சீரிய வாசிப்பையும் தேடலையும் மேற்கொண்டிருப்பதையும், அவரின் சீரிய பணியையும் உணர்ந்துகொள்ள முடிகிறது.
நல்லாப்பிள்ளை அவர்கள் தம் நூலின் மூலம் தமிழ்ச் சமூகத்திற்கு உணர்த்த எண்ணியவை, முனைவர் இரா. சீனிவாசன் அவர்கள் தம் பதிப்பின் மூலம் முழுமையாக வெளிப்பட்டிருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. 1 பதிப்பாசிரியரும் நல்லாப்பிள்ளை அவர்கள் வாழ்ந்த அதே தொண்டை மண்டலப் பகுதியைச் சார்ந்தவர்; அப்பகுதி பண்பாட்டுக் கூறுகளை முழுமையாக உள்வாங்கியவர். 2 பாரதம் தொடர்பாகத் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டுள்ள திரௌபதியம்மன் வழிபாடு, பாரதப் பிரசங்கம், தெருக்கூத்து நிகழ்த்து கலை முதலானவற்றைக் கண்டு கேட்டு முழுமையாக அனுபவித்த சூழலும் பாரதத்தின்மீது அவருக்கிருந்த ஆர்வமும். இவை தான் இந்த மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தச் செய்திருக்கின்றன.
பதிப்பின் உள்ளிருந்து பேசும் நிலையிலிருந்து விலகி, இப்பதிப்பு வெளிவந்த பிறகு, வாசகர்களிடத்திலும், நல்லாப்பிள்ளை அவர்கள் வாழ்ந்த இருப்பிடத்திலும் இப்பதிப்பு ஏற்படுத்திய தாக்கத்தை உணர்ந்தவன் என்ற முறையில் அவற்றையும் பதிவு செய்ய வேண்டும். 96 ஆண்டுகளுக்கு பிறகு, மிகச் சிறப்பான பதிப்பாக வெளிவந்த நிலையில், இப்பதிப்பின் அணிந்துரையில் பேராசிரியர் வீ. அரசு ‘வாராது வந்த மாமணி’ என்று குறிப்பிட்டதைப் போல நீண்டநாள் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் போல் பாரதப் பிரசங்கிகளும், தமிழறிஞர்களும் கொண்டாடினார்கள். குறிப்பாக, பாரதப் பிரசங்கத்தில் ஈடுபட்டிருக்கும் இளம் பிரசங்கிகளுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.
பதிப்பாசிரியர் மேற்கொண்ட 1000 கிலோமீட்டர் களஆய்வுப் பயணத்தின் முடிவில் நல்லாப்பிள்ளை அவர்களின் இருப்பிடமான கீழ்முதலம்பேடு என்னும் கிராமத்தைக் கண்டுபிடித்து இப்பதிப்பில் குறிப்பிட்டிருக்கிறார். இவையல்லாமல், நல்லாப்பிள்ளை பாரதப் பதிப்பின் முதல் பாகத்தை ஆவ்வூரில், அம்மக்களின் வேண்டுகோளுங்கிணங்கி வெளியிட்டார். அப்பொழுது, அம்மக்கள் தங்கள் ஊருக்கான சிறப்பாகவும், தங்கள் ஒவ்வொருக்கான அடையாளமாகவும் இந்நூலைக் கொண்டாடிய விதம் மெய்சிலிர்க்கச் செய்தது. இதன் தொடர்ச்சியாக, 2010 செப்டம்பர் 19ஆம் நாள் இரண்டாம் பாகம் மீண்டும் அவ்வூரில் வெளியிடப்பட்டது. அப்பொழுது அவ்வூரின் ஊராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான நல்லாப்பிள்ளை வாழ்ந்த தெருவிற்கு ‘பாரதம் பாடிய நல்லாப்பிள்ளை தெரு’ என்று பெயர் சூட்டுதல், அந்தப் பெயர்ப் பலகையை இரண்டாம் பாகம் வெளியீட்டு விழாவின் போது திறத்தல் என்பதும், விழாவில் அப்பெயர் பலகை திறப்பின் பொழுது அம்மக்கள் ஏற்படுத்திய உணர்வும் பதிப்பாசிரியர் இரா. சீனிவாசன் அவர்களின் உழைப்பிற்குக் கிடைத்த வெகுமதியாகவே கொள்ளலாம்.
நல்லாப்பிள்ளை பாரதம் - இரண்டு பாகங்கள்

ஆசிரியர் : முனைவர் இரா. சீனிவாசன்
வெளியீடு : கலைக்கோட்டம், 12, புதுத்தெரு, விநாயகபுரம், அம்பத்தூர், சென்னை - 600 053.

ஆகஸ்டு 2007, (முதல் பாகம்), டிசம்பர் 2009 (இரண்டாம் பாகம்)
பக்கம் : 1608 (முதல் பாகம்) 640 (இரண்டாம் பாகம்)
விலை : 1500 (முதல் பாகம்) 650 (இரண்டாம் பாகம்)


கட்டுரையாளர் பற்றிய குறிப்பு:
மு. ஏழுமலை அவர்கள் சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறையில் வேலூர் மாவட்ட நாட்டார் பெண் தெய்வங்கள் குறித்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார். அலைபேசி எண்: 99620 82440.
- - - -

No comments:

Post a Comment