Thursday, June 23, 2011

உதிராத அரசு தோண்டப்படாத புதைகுழி - ரவிக்குமார்


    

       அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பொருளாதார மந்தநிலையின் தாக்கம் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. . இதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கவலையோடு கூறிக்கொண்டிருக்கிறார்கள்.அதன் பாதிப்பு இந்தியாவில் இல்லை என நமது ஆட்சியாளர்கள் பெருமைபட்டுக்கொண்டாலும் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை நாம் அனுபவிக்கவே செய்கிறோம். அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டிருக்கும் செய்தியை அண்மையில் இந்தியாவுக்கு வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவும் உறுதிப்படுத்தியிருந்தார். இந்தச் செய்தி உலகெங்குமுள்ள அமெரிக்க எதிர்ப்பாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நியூயார்க் நகரிலிருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டபோதும் இப்படித்தான் அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
அமெரிக்காவின் வீழ்ச்சி இப்படி ஒடுக்கப்பட்ட மக்களால் கொண்டாடப்படுவது ஏன்? என்ற கேள்வி நமக்கு எழும். 2001 செப்டம்பர் 20ஆம் தேதி தனது நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது ஜார்ஜ் புஷ் சீனியர் கூறினார்: ’ அமெரிக்க மக்கள் கேட்கிறார்கள், ஏன் அவர்கள் நம்மை வெறுக்கவேண்டும்? ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை அவர்கள் வெறுக்கிறார்கள். நமது சுதந்திரங்களை அவர்கள் வெறுக்கிறார்கள்& மத சுதந்திரம், பேசுவதற்கான சுதந்திரம், எவருக்கும் வாக்களிப்பதற்கான சுதந்திரம், ஓரிடத்தில் கூடி விவாதிக்கவும் கருத்து வேறுபடவுமான சுதந்திரம். இந்த சுதந்திரங்களைத்தான் அவர்கள் வெறுக்கிறார்கள்.’ ஆனால் உண்மை அதுவல்ல என்பது நமக்குத் தெரியும்.
      அமெரிக்கா என்பது இன்று ஒரு நாடு மட்டுமல்ல. அது ஒரு குறியீடு. ஒடுக்குமுறையின் குறியீடு. அதனால்தான் இப்படியான எதிர்வினை ஏற்படுகிறது. அமெரிக்காவை வெறுப்பவர்கள் அதன் சுதந்திரத்தைக் கண்டு பயப்படவில்லை. அதன் அதிகாரத்தைக் கண்டுதான் ஆத்திரப்படுகிறார்கள். இன்று சோவியத் யூனியனும், தகர்ந்துவிட்ட நிலையில் உலகெங்கும் அமெரிக்க ஆதிக்கமே கொடிக்கட்டிப் பறக்கிறது. ஆங்காங்கு உள்ள ஒடுக்குமுறை அரசுகளோடு அமெரிக்கா அமைத்துள்ள கூட்டணி அந்தந்த நாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்களின் கோபத்தைக் கிளறிவிட்டுள்ளது. இப்போது உலகின் எந்தவொரு மூலையிலும் உள்ள ஒரு சிறிய நாட்டை எடுத்துக்கொண்டாலும் அங்கே இருக்கின்ற மக்கள் தமது ஆட்சியாளர்களை மட்டும் எதிர்த்துப் போராடினால் போதாது. அந்த ஆட்சியாளர்களைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்தாக வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் அமெரிக்க எதிர்ப்பு என்பது வெறும் கொள்கை சார்ந்ததாக மட்டும் இல்லாமல் இப்போது ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர் வாழும் உரிமையோடு பின்னிப்பிணைந்ததாக மாறிவிட்டது.
அமெரிக்காவின் வரம்பற்ற அதிகாரத்துக்கு இந்திய & அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஒரு எடுத்துக்காட்டாகும். நாற்பத்தைந்து நாடுகள் இடம் பெற்றிருக்கும் ‘நியூக்ளியர் சப்ளையர்ஸ் குரூப்’ இந்த ஒப்பந்தத்துக்கு அளித்துள்ள ஒப்புதல் அமெரிக்கா விரும்பினால் எதையும் செய்துவிட முடியும் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.அமெரிக்கா சொன்னதும் சிறு சிறு முணுமுணுப்புகளை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நாடுகளும்கூட வாயை மூடிக்கொண்டன. ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் வலுவானவைதான் என்றபோதிலும் அமெரிக்காவை எதிர்க்கக்கூடிய அளவுக்கு அவை வலிமைப் பெற்றவையாக இல்லை. அதனால்தான் ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளை நிறுத்துவதாக இருந்தாலும், ஈராக் மீது போர் தொடுப்பதாக இருந்தாலும், ஈரானுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவதாக இருந்தாலும் அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஐ.நா., உலக வங்கி, ஐ.எம்.எஃப். முதலான சர்வதேச அமைப்புகளும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.
உலகிலேயே ராணுவத்துக்கு மிக அதிகமாக செலவிடும் நாடாக அமெரிக்கா விளங்குகிறது. இரண்டாவது உலகப்போருக்குப் பிறகு எந்தவொரு நாடும் அமெரிக்கா அளவிற்கு ராணுவத்திற்காக செலவிட்டதில்லை. 2007ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ செலவு ஐம்பது லட்சம் கோடி ரூபாயை தாண்டிவிட்டது எனத் தெரியவந்துள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள நாடுகள் யாவும் சேர்ந்து ராணுவத்துக்காக செலவழிக்கும் தொகையைவிட அதிகமாகும். இந்த செலவை நியாயப்படுத்துவதற்காக தனது நாட்டு மக்களை எப்போதும் பயத்திலேயே ஆழ்த்தி வைத்திருக்கிறது அமெரிக்க அரசு. அமெரிக்க ஆட்சியாளர்கள் முன்பெல்லாம் கம்யூனிசம் என்ற பூச்சாண்டியைக் காட்டி மக்களை மிரட்டி வந்தார்கள். அதன்பிறகு ஈராக்கையும், சதாம் உசேனையும் காட்டி மிரட்டி வந்தார்கள். இப்பொழுதோ பயங்கரவாதம் என்ற புதிய பூதம் அமெரிக்க அரசுக்குக் கிடைத்துவிட்டது. அல்கய்தா, பின்லேடன் என ஓயாமல் தனது மக்களை அச்சுறுத்தலிலேயே வைத்துக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. இப்படி மக்களை அச்சுறுத்துவதற்கு தொடர்பு சாதனங்களின் உதவியைத்தான் அமெரிக்கா நம்பியுள்ளது. நேரடியாக போரில் ஈடுபடுவதற்கு மட்டுமல்லாமல், இத்தகைய பீதியூட்டலுக்கும் சேர்த்து அமெரிக்கா ஏராளமாகச் செலவழிக்க வேண்டியிருக்கிறது.
ஏகாதிபத்தியம் குறித்த கோட்பாடுகள் ஏற்கனவே பல சிந்தனையாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. மார்க்சிய சிந்தனையாளர்கள் இதில் முக்கியமானவர்கள். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே ‘‘ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் உச்சகட்டம்’’ என லெனின் வரையறுத்துவிட்டார். ஒரு சிலரின் கைகளில் அபரிமிதமான மூலதனம் குவியும்போது ஏற்படும் விளைவுகளையும் அவர் அப்போதே சுட்டிக்காட்டியிருக்கிறார். ஏகாதிபத்தியக் கருத்தியல் அனைத்து வர்க்கத்தினரையும் ஊடுருவி அவர்களைத் தமது ஆதரவாளர்களாக மாற்றும் வல்லமை கொண்டது என்று குறிப்பிட்ட லெனின், சோஷலிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்பவர்களையும் ஏகாதிபத்திய கருத்தியல் பாதித்திருக்கிறது என்பதைக் குறிப்பிட்டு அத்தகைய நபர்களை ‘‘சமூக ஏகாதிபத்தியவாதிகள்’’ என வர்ணித்தார். அந்தளவில் அவர் சொன்னது சரிதான். ஆனால் ஏகாதிபத்தியத்தின் எதிர்காலத்தை கணித்ததில்தான் லெனினும், பிற மார்க்சியர்களும் தோல்வியடைந்துவிட்டனர். லெனின் அனுமானித்தது போல எப்படி சோஷலிஸ நாடுகளில் அரசு உலர்ந்து உதிரவில்லையோ அப்படியே முதலாளித்துவமும் தனது புதைகுழியைத் தானே தோண்டிக்கொள்ளவில்லை. சோஷலிஸ நாடுகள் என்று சொல்லப்பட்டவை தமக்குச் சிக்கல் நேர்ந்தபோது அதைச் சமாளித்து மேலே செல்வதற்குப் பெரிய அளவில் முயற்சிகளைச் செய்யவில்லை. பொருளாதாரத் தளத்தில் மட்டுமின்றி கருத்தியல் தளத்திலும் அவை தேங்கித்திணறிக் கொண்டிருக்கின்றன. பொருளாதாரத் தளத்தில் அவை முதலாளித்துவத்திடம் சரணடைந்தன. கருத்தியல் தளத்திலோ தேசியவாதம் முதலான பாசிசச் சிந்தனைகளின் செல்வாக்குக்கு ஆளாகியுள்ளன. ஆனால் தனக்கு நேரிடும் நெருக்கடிகளைச் சமாளித்து மேலே செல்வதற்கு முதலாளித்துவம் கற்றுக்கொண்டு விட்டது போல் தோன்றுகிறது. அதனால்தான் அது இவ்வளவுகாலம் தாக்குப்பிடிக்க முடிகிறது. இப்போது வந்துள்ள நெருக்கடியையும்கூட அது சமாளித்து விடக்கூடும். ஏனென்றால் இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கு இடதுசாரிகளிடம் எந்தவொரு திட்டமும் இதுவரை இல்லை என்பது வருந்தத்தக்க உண்மையாகும்.
‘‘போக்கிரி தேசம்’’ என்பது நோம் சோம்ஸ்கியால் அதிகம் பயன்படுத்தப்படுகிற ஒரு கருத்தாக்கமாகும். அமெரிக்காவை வர்ணிப்பதற்கு அதை அவர் உபயோகப்படுத்துகிறார். சர்வதேசச் சட்டங்கள், நெறிமுறைகள் முதலானவற்றை மதிக்காமலும், சர்வதேச நீதிமன்ற ஆணைகளை உதாசீனப்படுத்தும் விதத்திலும் நடந்துகொள்கிற ஒரு அரசாங்கத்தைப் போக்கிரி தேசம் எனக் கூறலாம் என்கிறார் சோம்ஸ்கி. தான் இந்த பதத்தை அதன் நேரடியான அர்த்தத்திலேயே கையாள்வதாக அவர் குறிப்பிடுகிறார். இதே சொல்லுக்கு ஒரு பிரச்சார அர்த்தமும் இருக்கிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் வராத நாடுகளைக் குறிப்பிடுவதற்கு இதே சொல்லை அமெரிக்க அரசு பயன்படுத்துகிறது. உதாரணமாகச் சொன்னால் கியூபாவை போக்கிரி தேசம் என அமெரிக்கா அழைக்கிறது. அது பிரச்சார நோக்கத்தில் அந்த சொல்லைப் பயன்படுத்துவதாகும் என்கிறார் சோம்ஸ்கி. இன்றையச் சூழலில் உலகில் சட்டத்தை மீறி செயல்படும் மிகவும் வன்முறையான நாடாக அமெரிக்காவே விளங்கிக்கொண்டிருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாமில் அப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசியது; லத்தீன அமெரிக்க நாடுகளில் தலையிட்டு அங்கே ஆட்சிக் கவிழ்ப்புகளை அரங்கேற்றியது. சூடான் மீது குண்டுவீசி அந்த நாட்டின் மருத்துவ வசதிகளை நிர்மூலம் செய்தது; லிபியா மீது தாக்குதல் நடத்தியது; நிகரகுவாவைத் தாக்கியது; ஈராக்கின் மீது போர் தொடுத்தது. ஆப்கானிஸ்தானை அழித்துக் கொண்டிருப்பது; இஸ்ரேலை ஊக்குவித்து பாலஸ்தீன மக்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பது & இப்படி அமெரிக்கா செய்துவரும் அத்துமீறல்களைப் பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும்.
       இந்த நூலில் மிகச் சுருக்கமாகவும் துல்லியமாகவும் அமெரிக்காவுக்கு எதிரான வாதங்களை ராஜு தொகுத்துவைத்திருக்கிறார்.நாற்பத்தொன்பது தலைப்புகளில் அவை முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஈராக்கில் அமெரிக்க ராணுவம் நிலைகொண்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள், ஆப்கானிஸ்தான் கொள்கையால் அதற்கு உருவாகியிருக்கும் நெருக்கடி, பொருளாதாரச் சரிவை அது சந்திப்பதற்கானக் காரணங்கள் என எல்லாஅம்சங்களையும் இந்த நூல் பேசுகிறது. அமெரிக்க வல்லரசு, இப்போது கேள்விகேட்க ஆளில்லாத ஆதிக்க சக்தியாக வளர்ந்து நிற்பதை விவரிக்கும் நூல், அந்த நிலையைக்கண்டு நாம் மனம் தளர்ந்துவிடக் கூடாது என்பதிலும் கவனம் செலுத்தியிருக்கிறது. வியட்நாம் மக்களின் வீரம் செறிந்த போராட்டங்களையும், லத்தீன் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் உருவாகியிருக்கும் அரசுகள் அமெரிக்க மேலாண்மைக்குச் சவாலாக இருப்பதையும், குறிப்பாக வெனிசூலாவில் ஹ்யூகோ சாவேஸ் தலைமையில் அமைந்திருக்கும் அரசுகுறித்த நம்பிக்கையையும் ராஜு இந்நூலில் தந்திருக்கிறார். அமெரிக்கா என்பது வீழ்த்தவே முடியாத ஒரு சக்தியல்ல என்ற கருத்தை இந்த நூல் முன்வைத்துள்ளது. இடதுசாரிச் சிந்தனைகளை ஏற்றுக்கொண்டு செயல்படும் அரசியல் செயல்பாட்டாளர்களுக்கு கையேடாக விளங்குகிறது இந்தப் புத்தகம்.இதை துவக்கப்புள்ளியாககொண்டு மார்க்சியத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப மறுவாசிப்புச் செய்வதற்கு அவர்கள் முற்படவேண்டும்.அதற்கானத் தூண்டுதலையும் இது வழங்குகிறது.
       எண்பது வயதை எட்டிவிட்டபோதிலும் தான் கொண்ட கொள்கைப் பிடிப்பால் ஒரு இளைஞனைப்போல் இயங்கிக்கொண்டிருப்பவர் ராஜு. சிற்றிதழ்களில் கட்டுரை எழுதவரும் இளைஞர்களிடையே அரசியல் பிரச்சனைகளை அலசக்கூடியவர்கள் அருகிப்போய்விட்ட காலம் இது. அவ்வாறு எழுதுகிற ஒருசிலரும்கூட ஆங்கிலத்தில் வாசிப்பதில்லை என்பதை வரையறைக்குட்பட்ட அவர்களது எழுத்துகள் காட்டுகின்றன. இத்தகையச் சூழலில் பரந்த வாசிப்பு மட்டுமின்றி அரசியல் அனுபவமும் கொண்ட ராஜு, நூல் எழுத முன்வந்திருப்பது வரவேற்கப்படவேண்டியதாகும். இத்தகைய நூல்களையும் வெளியிட்டிருக்கிறோம் என உயிர்மை பதிப்பகம் நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

போக்கிரி தேசம்
- மி.ராஜு
உயிர்மை பதிப்பகம்
விலை ரூ 85/-

No comments:

Post a Comment