Thursday, June 23, 2011

இதுவரை சந்திக்காத மனிதர்களைக் காண்பிக்கும் வீடியோமாரியம்மன். ---------------------------------------------------------------------------------------------------------இரத்தின.புகழேந்தி

 புதினங்களைப் போலவே சிறுகதைகளிலும் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார் இமையம். பனிரெண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'வீடியோ மாரியம்மன்'. வழக்கம்போல க்ரியா வெளியிட்டிருக்கிறது. வீடியோவுக்கும் மாரியம்மனுக்கும் என்ன தொடர்பு என்று தலைப்பைப் பார்த்த உடன் யோசிப்பவர்களுக்கு சிற்றூர் வாழ்வனுபவம் குறைவாக இருக்கலாம். கிராமக்களில் கோயில் திருவிழாக்களின்போது தமிழகத்தின் மரபுவழி நாட்டுப்புற நிகழ்த்துகலைகளைக் காணலாம். இன்று அந்தப் பண்பாடு மெல்ல நவீனமயமாகி வருவதைத்தான் கலைத்தன்மையோடு விமர்சிக்கிறது முகப்புச் சிறுகதை. வீடியோ கலாச்சாரம் தமிழகத்தில் காலூன்றத் தொடங்கி கால் நூற்றாண்டுக்கு மேலாகிறது.மரபு சார்ந்த ஒரு பண்பாட்டில் புதிய வழக்கம் நுழைக்கப்படும்போது எத்தகைய அதிர்வுகள் உண்டாகின்றன என்பதை யதார்த்த நிகழ்வுகளால் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். சிறுதெய்வ வழிபாட்டுமரபு என்பது தொன்மைத் தொடர்ச்சியுடையது.பகுத்தறிவுக் கண்கொண்டு பார்ப்வர்களுக்கு அது மூட நம்பிக்கையாகத் தோன்றலாம். அந்த மக்களைப் பொறுத்தவரை அவர்களின் உணர்வுகளோடு தொடர்புடைய நம்பிக்கை சார்ந்த ஒரு வழக்கம் அது. அந்த வழக்கத்தை மீறுகிற எந்த ஒன்றையும் புறமதள்ளிவிடுகிற மக்கள் கூத்துக்கு மாற்றாக வீடியோவை ஏற்றுக்கொள்கின்றனர். அதற்கு விலையாக அவர்கள் உயிரென மதிக்கும் கடவுளை நடு வீதியில் கிடத்திவிட்டு செல்பவர்களை எப்படி மன்னிக்க முடியும். கடலூர் மாவட்டத்தின் கடைக்கோடி சிற்றூர் ஒன்றில் நிகழும் திருவிழாக் காட்சிகளை படிப்போரின் கண்முன் நிறுத்துகிறார் இமையம். கிராமத்து காதல், குறும்புகள் எல்லாம் அளவாக கதைக்களத்தில் நடந்தேறுகின்ற காட்சி நம்மை அந்த கிராமத்திற்குக் கை பிடித்து அழைத்துச் செல்கின்றன. கதை நுட்பம் கைவரப் பெற்றவரல்லவா?..
 'உயிர் நாடி' கதை ஏழை உழவனின் மனப்போராட்டத்தை காட்சிப் படுத்துகிறது. நெடுஞ்சாலை என்றில்லை எந்தசாலை ஓரத்திலும் இனி விவசாயம் செய்வது சாத்தியமில்லை. தொழிற்சாலைகள், பொருளாதார மண்டலங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், வீட்டு மனைகள் என வரிசைகட்டி நம் விளை நிலங்களைக் கூறு போட காத்திருக்கிறது ஒரு கூட்டம். "விதை நெல்லெடுத்து விருந்து/விளை நிலங்களில் வீடுகள்/ நாம் எங்கே போகிறோம்" என்ற கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. ஊரே நிலங்களை விற்றுவிட இந்த ஏழை உழவன் மட்டும் என்ன செய்ய முடியும், 'கம்பனி ஆரம்பிக்கிறவனுவோ, ரோடு போடுறவனுவோ வேற எங்கியாச்சம் போயி செய்யக்கூடாதா? எம் பாவத்துல வந்துதான்காயறுக்கணுமா? பாதி போனாக்கூட பரவாயில்லெ. நறுவுசா போவப்போவுதே. போறதுக்கு, வர்றதுக்கு எடமில்லாம என்னெ ஊனம் பண்ணி மொடக்கிப் போடப் பாக்குறாங்களே. அதுக்கு எங் கண்ணெ ரெண்டயும் புடுங்கிப்புடலாமே' என்று வாய் விட்டு புலம்புவதைத் தவிர.
 மயிர் நீத்தால் உயிர் நீக்கும் கவரிமான் பரம்பரை என்று சொல்லக்கேட்டிருப்போம். ஆனால் அருணாச்சல உடையார் வாழ்த்து செத்திருக்கிறார் 'நல்ல சாவு' கதையில். மானம் உயிரினும் மேலானது என்பதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பிப்பதற்காக தன் உயிரைத் துறந்து நீதி இலக்கியங்களுக்கு உயிரூட்டிய அந்த மனிதர்தான் இத்தொகுப்பின் நாயகராக எனக்குத் தோன்றுகிறார்.
 பெற்று வளர்த்த தாய் தந்தையரை விட்டு, உறவுகளைப் பிரிந்து  குழந்தைகளின் படிப்பிற்காகவும் வேலை நிமித்தமாகவும் புதிய தலைமுறை ஒன்று கிராமங்களை விட்டு நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருவது அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது. வயது முதிர்ந்த காலத்தில் ஆதரவாக இருக்கும் என்று கருதிய பிள்ளைகள் அனாதையாக தவிக்கவிட்டுச் சென்றாலும் விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும்போது தாயின் உள்ளம் பிள்ளைகளைக் கண்டு நெகிழும். அந்த நெகிழ்ச்சியை 'அம்மா' கதை நமக்கு உணர்த்துகிறது. நாமே தாயாகி விடுகிறோம் அப்படி ஒரு உரையாடல், தாய் மொழி என்பதன் பொருள் இப்போது புரிகிறது.
 நட்பா, காதலா என இனம்புரியாத உறவுகள் சிலருக்கு ஏற்படுவதுண்டு. அப்படி ஒரு உறவை நமக்கு அறிமுகம் செய்கிறது ' நாளை ' என்ற கதை மனித மனத்தின் அத்தனைப் பரிமாணங்களையும் காண்பிக்கும் கதை இது. தள்ளாத காலத்தில் மனைவியை இழந்த ஒருவரும் கணவனை இழந்த ஒருவரும் எந்த எதிர்பார்ப்போ, தேவைகளோ இன்றி அன்பு ஒன்றுக்காக மட்டுமே பழகும் ஒரு தூய நட்பை அழகாக,  கொச்சைப்படுத்தாமல் எச்சரிக்கையாக கதையாக்கியிருக்கும் பாணி கதாசிரியரின் திறமைக்கு மெருகூட்டுகிறது.
 'நிஜமும் பொய்யும்' என்ற கதை படிக்காத ஒரு தாயின் மனதையும் படித்துவிட்டு சென்னைக்கு வேலைக்கு சென்ற மகனின் மனதையும் வடித்துக் காட்டுகிற ஒரு கதை. கடித வடிவில் கதை அமைந்திருப்பது படிப்பதற்கு அலுப்பின்றி நகர்கிறது. கடிதம் எழுதும் வழக்கம் குறைந்து வரும் இன்றைய சூழலில் இது போன்ற கதை வடிவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
வேளாண் தொழிலில் ஆண் துணையின்றி ஒரு பெண்படும் பாட்டை ஓவியமாக்கியிருக்கிறது 'பயணம்' கதை. அருகருகே உழைத்தாலும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இன்னும் சிற்றூர்களை விட்டு விலகவில்லை எனபதை ஆங்காங்கே காணமுடிகிறது. மேல்சாதிக் காரர்களாகக் கருதிக்கொண்டிருப்பவர்களிடம் எவ்வளவு கீழான குணங்கள் உள்ளன என்பதை பாதிக்கப்படும் தாழ்த்தப்பட்ட சாதியினர் கூறும்போது அதில் வெளிப்படும் நியாயங்களை யாராலும் மறுக்க இயலாது. அத்தகைய உரையாடல்கள் இக்கதைக்கு வலுச் சேர்க்கின்றன.
 அரசு அலுவலகங்களின் நுழைவாயில்களிலேயே தொடங்கிவிடும் ஊழலை ஏளனம் செய்யும் கதை 'எழுத்துக்காரன்'. கணவன் மனைவிக்கிடையே நடக்கும் குடும்பச் சண்டை பெரிதாகி உதைவாங்கமுடியாத மனைவி தற்கொலை செய்துகொள்ள முயல்வது கிராமங்களில் தான் பெரும்பாலும் அடிக்கடி நிகழும் சம்பவம். அப்படி ஒரு சம்பவத்தைக் கதையாகப் பின்னி தாய் குழந்தை பாசத்தை தற்கொலை செய்துகொள்ள முயலும் தாயைக் காப்பாற்றும் முருகன் கதாப்பாத்திரம் வெளிப்படுத்துகிறது.
 மர்மமான முறையில் மரணத்தைத் தழுவும் பெண்கள் சிறு தெய்வமாக வழிபடப்படுகின்றன்ர். இதற்கு தீப்பாய்ந்த நாச்சியம்மன் ஒரு உதாரணம். இக்கதையில் வன்னியர் சாதி ஆணின் கருவைச் சுமக்கும் தலித் பெண் மர்மமான முறையில் அவ்வூர் குளத்தில் பிணமாகக்கிடக்கிறாள். மக்கள் அவளைக் கடவுளாக்கி விடுகின்றனர். இச்சம்பவத்தை யதார்த்தமாகவும், வலிகளோடும், சாதியக்கொடுமைகளைத் தோலுரித்துக்காட்டுகிறார் 'சத்தியக்கட்டு' கதையில்.  
 நெருக்கடிகள் நிறைந்த இன்றைய வாழ்க்கை அழகுகளையும் அவலங்களையும் ஒரு சேர படம் பிடிக்கும் வீடியோ மாரியம்மன் தொகுப்பு இமையத்தின் படைப்புலக வரலாற்றில்  மேலும் ஒரு புதிய அத்தியாயமாய் அமைகிறது.
வீடியோ மாரியம்மன்( சிறுகதைகள்)
இமையம்

வெளியீடு:
க்ரியா
எச்-18, தெற்கு நிழற்சாலை,
திருவான்மியூர்,
சென்னை- 600 041.
www.crea.in
பக்: 227
விலை ரூ.150.

No comments:

Post a Comment