Saturday, July 30, 2011

தொல்காப்பியத்தின் பெரும்பகுதி கி.மு.7 ஆம் நூற்றாண்டிற்கு முந்தியது - இராம.கி


”இலக்கு என்ற சொல் எழுத்து, குறியையும், இலக்குதல் என்பது எழுதல், குறித்தலையும் சுட்டும். இலக்கின் இன்னொரு நீட்சியாய் இலகை என்ற சொல் எழுந்து இலேகை>இரேகை என்று வடபுலத்திற் திரிந்து வடமேற்குச் சந்தத்திற் புழங்கும். லகரம் துணைக்கண்டத்தின் கிழக்குப் பக்கம் பெரிதும் பலுக்கப் பட்டதென்றால் மேற்குப் பாகதங்களில் அது ரகரமாகும். தெற்கே இரேகையை மீண்டும் கடன்வாங்கி பொதுவான வரைதலையும் சிறப்பாக கையிற் தெரியும் கோடுகளையும் குறிப்பார்கள்.”
 
”இரேகையின் இன்னொரு வளர்ச்சியாய் ஒருசில முத்திரைகள் இரேகை என்று சொல்லப் பெறும். இதே போல இலக்ஷணை என்ற சொல் அரச முத்திரைகளைக் குறிக்கும். நல்ல தமிழில் இவற்றை இலகை, இலக்கணை என்றே சொல்லிப் போகலாம். இவைதாம் ஆங்கிலத்தில் logo என்ற சொல்லிற்கு இணையான சொற்கள்.”
  
”இலக்குதல் என்ற வினை இலக்கிய கோட்டிற்கு நீண்டது போல இலக்கு என்ற சொல் கருவிக்கும் நீண்டது. எழுத்தாணி என்பதை நிகண்டுகளில் ஓலைதீட்டும் படை, கண்டம், ஊசி, இலேகை, எழுதுகோல், தூலிகை (துகிலிகை) என்பார்கள். கண்டம், ஊசி என்பன கூர்மைப் பொருளைக் குறிக்கின்றன. இல் என்ற வேரும் குறி என்ற கூர்மைப் பொருளைக் குறிக்கிறது. பின்னால் இல்>இலக்கு என்ற சொல் எழுது புலத்தில் இருந்து பொதுப்புலத்திற்கு விரியும்.”
 
”இன்றைக்குத் தென்பாண்டி நாட்டில் சாத்தாரப் பேச்சுவழக்கில் இலக்கு என்ற சொல் பொதுவான குறிப் பொருளைக் குறிக்கிறது. ’இன்னாரை இந்த இலக்கில் வைத்துப் பார்த்தேன்’, ’டேய், மாங்காயைக் கீழே விழுத்தாட்ட வேண்டுமானால் சரியான இலக்குப் பார்த்துக் கல்லெறி’ என்பவை தென்பாண்டிப் பேச்சுவழக்கு.”
 
ஐந்தாம் நூற்றாண்டுத் திருமந்திரம்
 
“புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி
இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார்,
பொருந்தி யிருந்த புதல்விபூ வண்ணத்து
இருந்த இலக்கில் இனிது இருந்தாளே”
 
                  - திருமந்திரம் ஆதார வாதேயம் இயல் 1172 ஆம் பாடல்
 
என்று சொல்லும்.
 
வெறிக்குறுங் கதுப்பின் வெள்ளெயிற்று எயிற்றியர்
செம்மணி கழற்றித் தேன் இலக்கு எறிதர
 
என்பது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லாடம் 100 ஆவது பாட்டு முதலிரண்டு வரிகள்.(தேன்கூடாகிய இலக்குப் பற்றிச் சொல்லும் வரிகள்.)
 
“எத்தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற” என்பது தேவாரம் (1,4,10) இலக்கின் நீட்சியாய் இலக்கம் என்ற சொல் குறளில் எழுந்து பெரிய இலக்கைக் குறிக்கும்.
 
இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையறாக் கொள்ளாதாம் மேல்
 
                           திருக்குறள் இடுக்கண் அழியாமை 627
 
”இலக்கம் என்ற சொல் குறிப்பொருளின் இன்னொரு வளர்ச்சியைக் குறிக்கும். இன்றைக்குச் சொல்லப்படும் digit என்பதற்கு இணையாக பத்தாம் இலக்கம், நூறாம் இலக்கம், ஆயிரமாவது இலக்கம் என்ற சொற்கள் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் எங்களுக்குச் சொல்லித் தரப் பட்டன. அதாவது எண்குறியீடு என்ற பொருளில் இது ஆளப்பட்டது. [first digit, 2nd digit, 3rd digit என்று சொல்லிக் கொடுக்கப் படவில்லை.]”
 
”இலக்குமி என்ற பெயர் மணிமேகலையில் முற்பிறவிப் பெயராய் வரும்.”
 
”இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்
பகுதி விகுதி பகுத்திடை நின்றதை
வினைப்பெயர் அல்பெயர்க்கு இடைநிலை எனலே”
 
         - நன்னூல் பதவியல் நூற்பா 141
 
”என்பது நன்னூல். இதன் உருவாக்கம் பேரரசன் இராசராசன் காலத்ததாய் இருக்கலாம் என்பது ஆய்வாளர் முடிவு. இலக்கியம் இலக்கணம் என்ற இரு சொல்லையும் ஒரே அடியில் இணையாகக் கொடுத்தது இதுதான் முதல் எடுகோடு என்று நினைக்கிறேன்.”
 
”இலக்கின் இன்னொரு தொடர்ச்சி தான் இலக்கணம் என்ற சொல்லாகும். அண்ணுதல்> அணத்தல் என்பது பொருந்துதல். அண்ணம்> அணம் என்பது பொருந்தும் நிலை. ’முலை மூன்றணந்த சிறுநுதல்’ என்பது கல்லாடம் (13:12) இங்கு குறிகளின் அணத்தை விவரிக்கும் நிலை. அணங்கம் என்ற சொல்லே கூட இலக்கணத்திற்குப் பகரியாய் அகரமுதலிகளிற் சொல்லப் பட்டிருக்கிறது. அதே போல அணங்கியம் என்ற சொல் இலக்கியத்திற்குப் பகரியாய்ச் சொல்லப்படுகிறது.”
 
”இலக்கணத்தின் பொருள் இயல்பு, குறி (அடையாளம்), அழகு, ஒழுங்கு என்ற பல்வேறு பொருட்பாடுகளாகும்.”
 
”ஒருவர் பிறக்கும் போது சாதகத்தில் 12 கட்டங்களில் சந்திரன் இருந்த இடத்தைத் தொடக்க அடையாளமாக்கி இலக்கணம் சொல்லுவார்கள். இது வடமொழிப் பலுக்கில் lagnam என்றாகும் இதை ஒருவரும் lakshanam என்று சொல்ல மாட்டார்கள். எப்பேர்ப் பட்டவர் ஒலிப்பிலும் அப்படி நான் கேட்டதில்லை. lakshanam என்ற வடசொல்லோ, தமிழ்ப் பேச்சுவழக்கில் இயல்பு, அழகு, ஒழுங்கு என்ற பொருள்களைக் குறிக்கவே பயன்படும்.
 
இராமணின் தம்பி இலக்ஷ்மணன் இப்படிப் பொருள் வரும்படி அழைக்கப்படுவான். (எல்லா இலக்ஷணங்களும் பொருந்தியவன். தமிழில் இலக்குவன் என்று சொல்லுவோம்.”
 
”நல்ல தமிழிற் சொல்லும் போது lagnam, lakshanam என்ற இரண்டுமே இலக்கணம் தான். முதற் பயன்பாட்டில் இலக்கு - இடம் என்ற பொருளிலும், இரண்டாவது பயன்பாட்டில் இயல்பு, அழகு, ஒழுங்கு என்ற பொருளிலும் ஆளப்படும். வடபுல முறையில் இருவேறு ஒலிப்புக்கள் சொல்லப்பெறுவது நம்மை ஓர்ந்து பார்க்க வைக்கிறது. பொதுவாக ஒருசொல்லை வடமொழிக்குட் கடன்பெற்றாற் தான் இப்படி இருவேறு வழக்குகள் நிலைபெறும். தமிழ் வடமொழியில் இருந்து பெற்றதா? வடமொழி தமிழில் இருந்து பெற்றதா?”
 
”இலக்கணம் என்ற சொல் நன்னூல் 267 ஆம் நூற்பாவில்
 
இலக்கணம் உடையது இலக்கணப் போலி
மரூஉஎன் றாகும் மூவகை இயல்பும்
இடக்கர் அடக்கல் மங்கலம் குழூஉக் குறி
எனுமுத் தகுதியோடு ஆறாம் வழக்கியல்
  
என்று பயிலும். இலக்கணத்தின் இன்னொரு உருவமாற்றாய் நன்னூல் விருத்தியில் இலக்கணை என்ற சொல் புழங்கும்.”
 
இலக்கணம் என்ற சொல் நாலடியாரில்
 
”முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலுமென்
தீம்பாவை செய்த குறி”
                    - நாலடியார் 399 ஆம் பாட்டு
 
என்று வரும். அதே போல ஆசாரக் கோவையில்,
 
பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
நிலக்கிழமை மீக்கூற்றம் கல்விநோ யின்மை
இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்
ஒழுக்கம் பிழையா தவர்
                    - ஆசாரக் கோவை 2 ஆம் பாட்டு
 
என்று இடம்பெறும். மிகவும் முகன்மையான குறிப்பு சிலம்பு கொலைக்களக் காதையில் பாண்டியனின் வீரர்கள் கோவலனைக் குறிக்கும் வகையில் அமைவது. முன்னால் இலக்குவனைச் சொன்னது போல், எல்லா இலக்கணங்களும் பொருந்தியவன் கோவலன். இவன் சிலம்பைத் திருடியிருக்க மாட்டான் என்று அவர்கள் கொல்லனிடம் சொல்லுகிறார்கள்.”
 
”சிலம்பு காணிய வந்தோர் இவரெனச்
செய்வினைச் சிலம்பின் செய்தி யெல்லாம்
பொய்வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட
இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கிவன்
கொலைப்படும் மகனலன் என்று கூறும்”
 
                    - சிலப்பதிகாரம் கொலைக்களக் காதை 16, 159-163
 
”ஆண்மகனுக்கு உரிய இலக்கணங்களோடு இருக்கிறவன் கோவலன். என்னுடைய வரலாற்று ஆய்வில் சிலம்பு என்பது கி.மு. 75 ஐத் சேர்ந்தது என்று நிறுவியிருக்கிறேன். சிலம்பின் காலம் - 1 என்ற தொடர்
 
 
தொடங்கி சிலம்பின் காலம் - 12 என்ற முடிப்பு
 
 
என்பதில் முடியும். ஆக இலக்கணம் என்ற சொல் அதற்கு உரிய பொருளில் கி.மு.75 இல் இருந்திருக்கிறது. இதற்கும் முன்னே இலக்கணம் என்ற சொல் கி.மு.7 ஆம் நூற்றாண்டு தொல்காப்பியத்திலேயே இரண்டு இடத்தில் வருகிறது."
 
”ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கி னாகிய உயர்சொல் கிளவி
இலக்கண மருங்கில் சொல்லாறு அல்ல.”
 
                          - தொல்காப்பியம் சொல்லதிகாரம் கிளவியாக்கம் நூற்பா 510
 
”செய்யுள் மருங்கின் மெய்பெறர் நாடி
இழைத்த இலக்கணம் பிழைத்தன போல
வருவ உள எனினும் வந்தவற் றியலான்
திரிபின்றி முடித்தல் தெள்ளியோர் கடனே.”
 
                         - தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் நூற்பா 1499.

"தொல்காப்பியத்தைச் சான்றாகக் கூறுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. வையாபுரிப் பிள்ளையை ஆதாரமாய்க் காட்டித் ”தொல்காப்பியம் கி.மு.7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததில்லை,  கி.பி.5 ஆம் நூற்றாண்டு” என்று சொல்லி அதை மறுக்க ஒரு சிலர் முயல்வர். [அவர் மறுப்பு, இவர் மறுப்பு என்று பல்வேறு மறுப்புச் சொல்வதெல்லாம் வெறும் தோற்றம் தான். அனுமார் வால் போற் தோன்றும் இந்தக் கூற்றுத் தொடர்பைப் பிடித்தால் முடிவில் வையாபுரிப் பிள்ளையிடம் தான் கொண்டு சேர்க்கும்.] இப்படி முயல்பவர் எவரும் வையாபுரியாரின் அறுதிக் கூற்றை (assertion) மீள்வாசிப்பு செய்ய மாட்டார்கள். வையாபுரியாரியாரின் தன்முனைப்புக் கூற்றே இவர்களுக்கு நிறுவிப்பு ஆகிவிடும்."
 
"வையாபுரியாரின் கூற்றை மிகத் தெளிவாக புலவர் இளங்குமரன் தன்னுடைய தொல்காப்பியப் பதிப்பில் (தமிழ்மண் வெளியீடு) ஆதாரம் காட்டி மறுத்திருப்பார். நான் மீண்டும் செய்ய வேண்டியதில்லை. எப்பொழுதெல்லாம் சங்க இலக்கியத்திற்கு முன்னே போக நாம் விழைகிறோமோ, அப்பொழுது வையாபுரிப் பிள்ளையைக் கொண்டுவந்து தொல்காப்பியரின் காலத்தைக் கேள்வியெழுப்புவது, சிலருக்கு வாடிக்கையாகி விட்டது. (நியூட்டனை மறுத்து ஐன்சுடீனுக்குள் போக பூதியலுக்கு 150/180 ஆண்டு காலம் ஆகிவிட்டது இங்கும் 150/180 ஆண்டுகள் ஆகவேண்டுமோ, என்னவோ? வையாபுரியாரின் தாக்கம் அவ்வளவு இருக்கிறது.)"
 
"அதே போல 'தொல்காப்பியருக்கு முற்பட்டு பதஞ்சலி இதைக் குறிப்பிட்டார், காத்தியாயனர் அதைக் குறிப்பிட்டார்' என்ற வாக்குவாதங்களும்,உரையாடலும், நிறுவிப்பும் வேறு இடத்திற் செய்யப்பட வேண்டியவை. எனவே இங்கு நான் அதைத் தவிர்க்கிறேன். தொல்காப்பியத்தின் பெரும்பகுதி கி.மு.7 ஆம் நூற்றாண்டிற்கு முந்தியது என்றே நான் கொள்கிறேன். அதில் அங்குமிங்கும் இடைச்செருகல்கள் இருக்கின்றன. ஆனால் இவ்விரண்டு நூற்பாக்களும் இடைச்செருகல் என்று யாரும் இதுவரை சொல்லவில்லை. அதே போல 'தொல்காப்பியத்தை ஒருவர் எழுதினாரா? அது பலர் எழுதிய தொகுதியா?' என்ற கேள்விக்குள்ளும் நான் போகவில்லை."
   
"'இலக்கணம் - இலக்கியம் என்றவை இரட்டைச் சொற்கள்' என்றால், இலக்கியமும் பழங்காலத்தில் இருக்க வேண்டும் என்றே நான் கொள்ளுகிறேன்.இரட்டைப் புலவரில் ஒருவரை விடுத்து இன்னொருவரைப் பார்த்து இருவருடைய இருப்பை மறுக்க முடியுமோ?"
 
"அப்ப இலக்கியம், இலக்கணம் என்ற இரண்டு சொற்களுக்கும் குறைந்தது 2000 ஆண்டு கால வரலாறு இருந்திருக்க வேண்டும் என்று சொல்றே!”
 
“ஆமாம் அண்ணாச்சி, இருந்திருக்க முடியும் என்று சொல்கிறேன். அதுதான் சொன்னேனுங்களே! சிலவற்றை ஏரணம் மூலம் ஓர்ந்து பார்த்துத் தான் சொல்ல முடியும். அவற்றின் இருப்பை நேரடியாகக் காட்டுவது கடினமான செயல். இலக்கணம் உறுதியாக் இருந்திருக்கிறது. இலக்கியமும் இருந்திருக்க முடியும்.”
 
“சரி தம்பி, எனக்கு நேரமாச்சு. நான் கிளம்புறேன். இன்னொரு சமயம் வேறெ தலைப்புலே உரையாடலைத் தொடரலாம்.”

இலக்கியம் என்ற சொல் மூன்றாம் நூற்றாண்டு ஆளப்பட்டிருக்கிறது - இராம.கி


"இன்னுஞ் சொன்னால் ஒருவேளை ஏற்கவே இயலாது போகலாம். இலுத்ததைத்தான் (>இழுத்தது) வெள்ளைக்காரன் இழுத்தர்>எழுத்தர் (letter) என்று சொல்லுவான். 'அதன் சொற்பிறப்பு எங்கேயிருந்து வந்தது என்று தெரியவில்லை' என்று அவர்கள் அகரமுதலியிற் சொல்லுவார்கள்."
 
mid-12c., 'graphic symbol, written character,' from O.Fr. lettre, from L. littera (also litera) "letter of the alphabet," of uncertain origin, perhaps from Gk. diphthera "tablet," with change of d- to l- as in lachrymose. In this sense it replaced O.E. bocstæf, lit. "book staff" (cf. Ger. Buchstabe "letter, character," from O.H.G. buohstab, from P.Gmc. *bok-staba-m). The pl. litteræ in Latin meant "epistle, written documents, literature," a sense first attested early 13c. in M.E., replacing O.E. ærendgewrit, lit. "errand-writing." School letter in sports, first awarded by U. of Chicago football coach Amos Alonzo Stagg.
 
"இதோடு நிறுத்த மாட்டார்கள். 'literature' என்று அவர்கள் ஊரிற் சொல்லுகிறார்களே, அதுவும் 'letter' என்பதில் இருந்து எழுந்தது என்று சொல்லுவார்கள். 
        
late 14c., from L. lit(t)eratura "learning, writing, grammar," originally "writing formed with letters," from lit(t)era "letter." Originally "book learning" (it replaced O.E. boccræft), the meaning "literary production or work" is first attested 1779 in Johnson's "Lives of the English Poets" (he didn't include this definition in his dictionary, however); that of "body of writings from a period or people" is first recorded 1812.
 
"நாமோ இலுக்குதல் என்ற தமிழ்ச்சொல்லுக்கும், இலுத்தல்>இழுத்தல்>எழுத்து என்ற விரிவிற்கும், இலக்கியம் என்ற சொல்லிற்கும் உள்ள உறவை ஐயப்பட்டுக் கொண்டேயிருக்கிறோம்." .

இல்லுதல்>இலுங்குதல்>இலுக்குதல்>இலக்குதல்
இலுக்கு>இலக்கு = எழுத்து, குறி
இலக்குகளால் இயன்றது இலக்கு + இயம் = இலக்கியம்
 
"தம்பி நீ சொல்வது ஒருவேளை உண்மையாயிருக்கலாம். ஆனால் இலக்கியம் என்ற சொல் சங்க இலக்கியத்திலே இல்லையாமே?"
 
எழுத்து என்ற சொல் இருக்கு அண்ணாச்சி. அந்தப் பெயர்ச்சொல் எங்கிருந்தோ குதித்து வரவில்லை. அது இலுத்தலில் இருந்து ஏற்பட்ட வளர்ச்சி. வேறெப்படியும் எழுத்தென்ற சொல் எழ முடியாது. இலுத்தலில் இருந்து இன்னொரு வளர்ச்சி ஈல்தல். ஈலின் திரிவு ஈர்த்தல் என்றாகும். அந்த ஈர்த்தலும் எழுதுதல் என்ற பொருள் கொடுக்கும். கலித்தொகையில் ஒரே பாட்டில் இருவேறு சொற்களில் எழுதற் செய்தி வரும்.
 
நெய்தல் நெறிக்கவும் வல்லன்: நெடுமென்தோள்
பெய்கரும்பு ஈர்க்கவும் வல்லன்’ இளமுலைமேல்
தொய்யில் எழுதவும் வல்லன்;தன் கையில்
சிலைவல்லன் போலும் செறிவினான்; நல்ல
பலவல்லன் தோளாள் பவன்
 
                          - (கலித் 143.31-35).”
 
”இங்கே ஈர்த்தல், எழுதல் என்ற இரண்டு சொல்லும் ஒரே பொருளைக் குறிப்பன. அதோடு இல்>ஈல் உறவையும் குறிப்பன. இல்லில் இருந்து எழுத்தும் இலக்கியம் ஓரெட்டுத் தான்.”
.
"அண்ணாச்சி, பொதுவாய்ச் சொல்கிறேன். சங்க இலக்கியம் என்பது நமக்குக் கிடைத்த தொகுதி. இதைக் கொண்டுதரப் பலர் உழைத்திருக்கிறார்கள். குறிப்பாகத் தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவருக்குக் கிடைக்காமற் போனது ஏராளம். கிடைத்தும் தவறவிட்டது எக்கச் சக்கம். சங்க இலக்கியம் என்பதை ஏதோ அகரமுதலி மாதிரி நாமெல்லாம் நினைத்துக் கொள்கிறோம். அப்படிக் கிடையாது. நம்முடைய ஆகூழ் அவ்வளவு தான். இருப்பதை வைத்து இல்லாததை ஊகிக்க வேண்டும். சங்க இலக்கியத்தில் இல்லாது பிற்காலத்திற் புழங்கிய சொற்கள் உருவான காலம் எதுவென்று யாருக்குத் தெரியும்?"
 
"தம்பி, கடினமான கேள்வியைக் கேட்கிறாய். printed book salvation பார்க்கிறவர்கள் எப்பொழுதும் இருக்கிறார்கள். அவர்களிடம் உன் ஏரணம் பலிக்காது. ஏதொன்றையும் அச்சிற் பார்த்தாற் தான் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்."
 
"அப்படியானால் பலவற்றையும் நிறுவுவது கடினம் அண்ணாச்சி. இப்பொழுது, ஒரு வினைச்சொல் சங்க இலக்கியத்திலிருக்கும். அதோடு பொருந்திய பெயர்ச்சொல் இருக்கவே இருக்காது. இயலுமையைப் பார்க்கக் கூடாது என்றால் எப்படி? அதே போலப் பெயர்ச்சொலிருக்கும். வினைச்சொல் நேரே கண்ணுக்குத் தெரியாது. எப்படி வந்தது என்று ஓர்ந்து பார்க்க வேண்டாமா? வினைச்சொல் இல்லாமல் பெயர்ச்சொல் எப்படியெழும்? ”மொழிப்பொருள் காரணம் விழிப்பத் தோன்றா” என்பது எப்படி? அப்பொழுது தொல்காப்பியம் தவறா? இலக்கித்தல் என்ற சொல் எழுதற் பொருளில் கி.பி.8 ஆம் நூற்றாண்டுச் சிந்தாமணியில் வந்திருக்கிறது. அதன் பெயர்ச்சொல் இலக்கியம் என்றில்லாது வேறு என்னவாய் இருக்க முடியும்.?"
 
"இவ்வுருவு நெஞ்செனும் கிழியின் மேலிருந்து இலக்கித்து” - சீவக 180
 
"எனக்குத் தெரிந்து சிந்தாமணி தான் இலக்கித்தல் என்ற வினையை முதலிற் குறிக்கும் எடுகோட்டு (reference) நூல். அதற்கு அப்புறம் 9 ஆம் நூற்றாண்டுத் திவாகரத்தில் இலக்கியம் என்ற சொல் வந்திருக்கிறது. அதிலும் ம் என்கிற எழுத்துப் பிழை ஏற்பட்டு உதாரணம் என்ற பொருளில் தவறாகப் புரிந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அந்த எழுத்துப் பிழை இயலுமையைக் கூடப் பலரும் ஏற்க மாட்டேம் என்கிறார்கள். சற்று விளக்கிச் சொல்கிறேன்."
 
"திவாகரம் 1834 ஆம் சூத்திரத்தில் இருந்து பாருங்கள். ஓர் ஒழுங்குமுறை தென்படும்."
 
"1834. நூல் என்பதன் பெயர் இங்கு கொடுக்கப்படுகிறது: திவாகரத்தில் இந்நூற்பா தான் மொத்த நூல் பற்றிப் பேசுவது. நூல் என்பது இலக்கியமாகவும் இருக்கலாம்; இலக்கணமாகவும் இருக்கலாம். அதிகாரம் என்ற முதற்சொல் சிலப்பதிகாரம் என்ற நூலின் பெயரில் ஆளப்பட்டிருக்கிறது. ஆரிடம், பனுவல், ஆகமம், பிடகம், தந்திரம் ஆகிய சொற்கள் நூல் பற்றிய வேறு பெயர்களாய்க் குறிப்பிடப் படுகின்றன. இவைகள் எல்லாம் பொதுவான நூல்கள். விதப்பான “இலக்கியம்” என்று சொல்லமுடியாது. அதேபொழுது இலக்கியம் என்பதும் நூல் தான். ஆகமம் என்ற சொல் பாட வேறுபாட்டில் கேள்விக்குள்ளாக்கப் படுகிறது."
 
"1835. பாயிரத்தின் பெயர்: நூலின் முதற்பகுதி. நன்னூல், தொல்காப்பியம் போன்றவற்றில் வரும் முதற்பகுதி. இப்பொழுது நூலுக்குள் வந்துவிட்டோம். அடுத்திருக்கும் நூற்பாக்களில் வரப்போகும் பெயர்கள் நூலுக்குள் உள்ள பகுதிகளின் பெயர்கள். நூலைப் பற்றிய பெயர்கள் அல்ல."
 
"1836 மூதுரையின் பெயர்; இது பெரும்பாலும் பழைய உரை (commentary) என்றே பொருள் கொள்ள முடியும்."
 
"1837. பாடத்தின் பெயர்: பாடம் என்பது தான் ஆசிரியர் எழுதிய சரியான உண்மையான உள்ளீடு (proper actual content written by the author)."
 
"1838 நூற்பா - அகவலின் பெயர்: இது இலக்கணத்தில் வரும் விதப்பான சொல் நூற்பா - சூத்திரம். சூத்திரங்களால் ஆனது பாடம். பாடம், பாயிரம் போன்றவை சேர்ந்தது நூல். நூற்பா என்பது அகவல் யாப்பில் வரும்."
 
"1839 ஓத்தின் பெயர். இது நன்னூற் பாயிரத்தில் விளக்கப் படும். ஒரு குறிப்பிட்ட வரிசை (அல்லது தலைப்பு) பற்றிய நூற்பாக்களின் தொகுப்பு."
 
"1840 படலம் என்னும் பெயர். இதுவும் நன்னூற் பாயிரத்தில் வரும். வெவ்வேறு தலைப்புக்களின் அடியில் உள்ள நூற்பாக்களின் தொகுப்பு."
 
"1841 வேற்றிசைப்பா என்னும் பெயர். அகவலில் இருந்து மாறி விருத்த நடையில் இருக்கும் பாக்கள். இது சருக்க முடிவிலும் இலம்பக முடிவிலும் வரும் என்று கி.பி.8 ஆம் நூற்றாண்டு, 9 ஆம் நூற்றாண்டு நிலையை/வழக்கத்தைக் கூறுகிறது."
 
"1842 உரைப்பொருளின் பெயர்: விரித்துக் கூறும் உரைப்பொருள் பற்றியது."
 
"1843 பொழிப்பு என்னும் பெயர்; நூலுக்குள் வரும் நூற்பாக்களுக்கான பொழிப்பு."
 
"1844. பதிகம் என்னும் பெயர்: சிலப்பதிகாரத்தில் வருவது போன்ற பதிகம். கிட்டத்தட்ட உள்ளீட்டுச் சுருக்கம் (content summary)."
 
"இனி 1845 இல் இலக்கியத்தின் பெயர் வாராது. அது உண்மையில் இலக்கிய உதாரணம். அங்கே ம் என்பது ஏடெடுத்து எழுதுவதில் ஏற்பட்டிருக்கக் கூடிய, இயலுகிற, மீச்சிறிய பிழை."
 
"இலக்கியம் உதாரணம் எடுத்துக் காட்டல்
ஞாபகமும் பிசியும் அப்பொருள் நடைய
 
என்று படிப்பதற்கு மாறாக,
 
இலக்கிய உதாரணம் எடுத்துக் காட்டல்
ஞாபகமும் பிசியும் அப்பொருள் நடைய
 
என்று படித்துப் பாருங்கள். முழுப்பொருளும் விளங்கும். இலக்கிய உதாரணம் என்பது இலக்கியத்துள் ஒன்றை எடுத்துக் காட்டலாகும். இந்தக் காலத்தில் உதாரணம் என்று யாரும் எழுதுவதில்லை. எடுத்துக் காட்டு என்பதும் கூடக் காட்டு என்று சுருங்கிவிட்டது. ஞாபகம் என்பதும் எடுத்துக் காட்டைப் போல் அமைவது தான். ஒன்றைச் சொல்லி விளக்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஞாபகம் வர, அதையும் எடுத்துக் காட்டைச் சொல்வது போல விளக்கத்தை வலுப்படுத்தும் நடையாய் அமையும். பிசி என்பது ஒருவகைப் புதிர், சோடிப்பு, விடுகதை. இதுவும் எடுத்துக்காட்டுப் போலத்தான் ஒன்றை விளக்கும் போது அமையும். (இந்தச் சொல் தென்பாண்டி நாட்டில் அகவை முதியோரிடம் அறியவேண்டிய சொல்.)"
 
"இந்த எடுத்துக் காட்டல், ஞாபகம், பிசி என்ற மூன்று பொருளும் ஒன்று போல் அமைந்திருக்க, இலக்கிய உதாரணம் என்பது முதற்சொல்லாக  நூற்பாவில் “ம்” என்பது இல்லாது போயிருந்தாற்றான் சரியாக வரும். இலக்கியம் என்ற சொல் இங்கு குறிப்பிட்ட நூற்பாவில் பயன்பட்டிருக்கிறது. அந்த வகையில் இது குறிப்பிடத் தக்க பதிவு ஆனால் அது நூல் என்ற பொருளில் இருந்திருக்கவே வாய்ப்புண்டு. உதாரணம் என்ற பொருளில் அல்ல. அந்த 1845 ஆம் நூற்பாவை ஒழுங்காகப் புரிந்து கொண்டால் இலக்கியம் என்ற சொல் திவாகரத்தில் எடுத்தாளப் பட்டிருப்பது புரியும்."
 
"தம்பி, நிறையப் பேர் நீ தொட்டுக் காட்டும் எழுத்துப் பிழையை ஏற்க மாட்டார்கள்."
 
"அண்ணாச்சி! கிடுகுப் (critical) பொருக்கில் ஒரு நூலைப் படிக்கவேண்டும். ஆங்கிலத்தில் contextual reading என்பார்கள். எழுத்துப் பிழை இங்கு இருந்திருக்கலாம் என்று நான் உணர்த்துகிறேன். ஏற்பதும் ஏற்காததும் வாசிப்போர் உகப்பு. நான் சுவடியைப் பார்த்ததில்லை. பார்த்தவர்கள் எல்லோரும் வானுலகஞ் சேர்ந்துவிட்டார்கள். இருப்பவர்கள்தான் ஊகிக்க வேண்டும். 'வேண்டுமென்ற இடத்தில் பிழையிருப்பதாகக் கொள்வேன். வேண்டாமென்றால் மறுப்பேன்' என்றால் நான் சொல்ல என்ன இருக்கிறது?" 
 
"சரி விடு. இலக்கியப் படிப்பில் இதுவோர் இக்கு"
 
"இலக்கியம் என்ற சொல்லிற்கு இன்னோர் இக்கு எடுத்துக்காட்டுகிறேன் அண்ணாச்சி."
 
"திருவாசகம் 52 பகுதிகள் கொண்டது தில்லை நடவரசன் திருமுன்னில் இறைவனே செப்பேட்டில் எழுதிப் படியில் வைத்ததாய் ஒரு தொன்மமுண்டு. அந்தச் செப்பேடு எங்கு போனதோ, யாருக்கும் தெரியாது. இப்பொழுது நாம் படிக்கும் திருவாசகம் செப்பேட்டில் இருந்து பெறப்பட்டதாய்த் தெரிய வில்லை. காலகாலமாய்ச் சுவடியிலெழுதி 100, 150 ஆண்டுக்கொருமுறை ஏடு பெயர்த்துத் தான் திருவாசகம் நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது. எனவே அதிலும் சில்லேடுகள் செல்லரித்துப் போய், சில பதிகங்கள் குறைப்பாடலோடு வந்து சேர்ந்தன. அதாவது சில குறைப்பாடல்களில் எழுத்துப் பிழைகள் இருந்தோ, எழுத்துக்கள் இல்லாதிருந்து அவ்விடத்தில் எழுத்துக்கள் பெய்தோ, வந்து சேர்ந்திருக்கின்றன. திருமந்திரத்தில் செம்பதிப்பு வந்தது போல சுவடிகள் ஒப்பிட்டு செம்பதிப்பு வெளியிட்ட திருவாசகத்தை நான் பார்த்ததில்லை."
 
"திருவாசகத்தில் 48 ஆவது பகுதி ’பண்டாய நான்மறை’ என்னும் பதிகம் அதுவொரு குறைப்பத்து. ஏழு பாடல்கள் தாம் உண்டு. ஏழாம் பாடல் மிகவும் பேர் பெற்றது ஏனென்றால் அதில் மணிவாசகர் ’மணிவார்த்தை’ என்ற சொல்லால் தன் பெயரை வெளிப்படுத்திக் கொண்டதாய்ப் பலரும் ஊகிக்கிறார்கள். முதலிற் பாடலைப் பார்ப்போம்"
 
பேசும் பொருளுக்கு இலக்கிதமாம் பேச்சிறந்த
மாசின் மணியின் மணிவார்த்தை - பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருத்தினடி என்மனத்தே வைத்து
 
        -  திருவாசகம் பண்டாய நான்மறை 48.7
 
”இந்தப் பாட்டிற்குப் பொழிப்பு என்ன தெரியுமா? ’பேசும் பொருளுக்கு இலக்கிதமான, பேச்சுக்கு மீறிய மாசிலாமணியின் மணிவார்த்தைகளைப் பேசி, நல்ல மருத்தினடியை என் மனத்தே வைத்துப் ’பெருந்துறையே’ என்றழைத்துப் பிறப்பறுத்தேன்.’ என்ன சொல்லுகிறார் மாணிக்க வாசகர்? அதுவென்ன இலக்கிதம்? நானும் துருவித் துருவிப் பார்க்கிறேன். ஒன்றும் புரியவில்லை. இந்தவொரு பாட்டைத் தவிர இலக்கிதம் என்ற சொல் தமிழில் எந்த நூலிலும் எங்கும் வரவில்லை. அதனாலேயே அகரமுதலிகளில் இடம் பெற்றிருக்கிறது. இந்தப் பாட்டு அந்த அகரமுதலியில் எடுத்துக் காட்டாய்க் குறிக்கப் பெற்றிருக்கிறது. எந்தப் பொருளும் சொல்லப்படவில்லை. நான் மயங்காது இருக்க முடியவில்லை"
 
"நான் இளமையில் பொறியியல் முதலாண்டிற் படிக்கும் போது, எங்களுக்குக் குடிமைப் பொறியியல் (civil engineering) சொல்லிக் கொடுக்கும் போது சாலை போடுவதற்கான சல்லிக்கல் (road metal) பற்றிச் சொல்லித் தரவேண்டும். எங்கள் ஆசிரியருக்கு ஆங்கிலம் சற்று வாராது. இப்படித் தொடங்குவார். “Road metal is ......" கொஞ்ச நேரம் இடைவெளி கொடுத்து நிறுத்துவார். திடீரென்று "road metal" என்று முடித்து எங்களைபெல்லாம் பார்த்துப் புன்முறுவல் செய்வார். அவர் road metal என்பதை எங்களுக்கு விளக்கிவிட்டாராம். அந்த நிலை தான் இங்கு அகரமுதலியில் இலக்கிதம் என்ற சொல்லைப் பார்த்தால் எனக்கு ஏற்படுகிறது. ”இலக்கிதம் என்பது இலக்கிதம். Road metal is road metal." இப்படி விளக்கம் சொல்வதற்கு ஆங்கிலத்தில் அதாகுவியல் (tautology) என்று பெயர். அதை அதாலே விளக்குவது."
 
"மாறாக இலக்கிதம் என்பதை எழுத்துப் பிழை என்று கொள்ளுவோமே? தகரத்தை யகரமாய்க் கொண்டால் என்னவாகிறது?"
 
பேசும் பொருளுக்கு இலக்கியமாம் பேச்சிறந்த
மாசின் மணியின் மணிவார்த்தை - பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருத்தினடி என்மனத்தே வைத்து

"இப்படிப் பாட்டிருந்தால் பொருள் என்னவாகும்? ”பேசும் பொருளுக்கு இலக்கியமான, பேச்சுக்கு மீறிய மாசிலாமணியின் மணிவார்த்தைகளைப் பேசி, நல்ல மருத்தினடியை என் மனத்தே வைத்துப் ’பெருந்துறையே’ என்றழைத்துப் பிறப்பறுத்தேன்” என்ற பொருள் மிகச் சிறப்பாகப் பொருந்துகிறது. பேச்சுக்கு மீறிய மணி வார்த்தைகள், பேசும் பொருளுக்கு இலக்கியமாய், குறிக்கோளாய் அமைகின்றதாம். சிவநெறிக்கு திருவாசகம் இலக்கியமாய் அமைகிறது. பிறப்பறுத்தல் என்றால் வீடுபேறு. அவருடைய சமய வாழ்வின் உச்ச கட்டம். அந்த இடத்தைச் சொல்லும் போது குறிக்கோளைச் சொல்லுகிறார். இலக்கியம் என்கிறார். இலக்கியம் என்ற சொல்லின் முழுப்பொருளும் எழுத்து, குறி (அடையாளம்) ,இயல்பு, ஒழுங்கு எல்லாம் வந்து சேருகிறதே?." 
 
"இப்படிச் சரியான பொருள் கிடைக்கும் போது இலக்கிதத்தை எடுத்துக் கொள்வேனா? இலக்கியத்தை எடுத்துக் கொள்வேனா? தகரமா? யகரமா? - என்று கேட்டால் ”எனக்குத் தெரியாது. யகரமாய் இருந்தால் புது வரையறை தேவையில்லை. இருக்கும் வரையறையை வைத்தே பொருள் சொல்லிவிடலாம்” என்று சொல்ல வேண்டியிருக்கிறது. சரி இதை மணிவாசகர் காலம் எதுவென்று சொல்லலாம்?"

"மாணிக்கவாசகர் வரலாற்றைக் குழப்பிக் கொள்பவர் பலர். அவர் காலத்தை 9 ஆம் நூற்றாண்டு என்று சொல்லிப் பின்னுக்குத் தள்ளுபவரும் உண்டு. இல்லை அவர் தேவார மூவருக்கும், கல்லாடருக்கும், காரைக்கால் அம்மையாருக்கும் முந்தியவர் என்று சொல்லி அதை நிறுவ முயன்ற மறைமலை அடிகளாரும் உண்டு. அளவுக்கு மீறிய சிவநெறித் தாக்கம் கொண்டு மறைமலை அடிகளார் சொல்லுகிறார் என்று அவருடைய மாணிக்க வாசகர் கால ஆய்வைக் குறை சொல்லி ஒதுக்குபவர் பலரும் இதுவரை முடிவான எதிர்ச்சான்று கொடுத்ததாய் எனக்குத் தென்படவில்லை.”
 
”தமிழாய்வில் மாணிக்க வாசகர் காலம் என்பது இன்னும் முடிவுறாத ஆய்வு. என்னுடைய சாய்வு மறைமலை அடிகளார் பக்கம் தான். மாணிக்க வாசகரின் பாக்களை வைத்து வகைப்படுத்தல் (typology classification) மூலம் அதை நான் நிறுவ முயன்றேன். [அது தமிழ் உலகம் மடற்குழுவிலோ, அகத்தியர் மடற்குழுவிலோ வந்தது. எனக்கு நினைவில்லை. இன்னொரு முறை அதைத் தேடி என் வலைப்பதிவிற் கொண்டு சேர்ப்பேன்.] மாணிக்க வாசகரின் காலம் மூன்றாம் நூற்றாண்டாய் இருக்கலாம். அது களப்பிரர் காலம் என்றே நான் கொள்ளுகிறேன்."
 
"அப்படிக் கொண்டால், இலக்கியம் என்ற சொல் மூன்றாம் நூற்றாண்டு ஆளப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியும்."   
 

சாவு சோறு தின்றவன் சொன்ன கதைகள் - இமையம்
கடந்த கால் நூற்றாண்டுகளுக்குமேல் தமிழ்மொழியில் எழுதப்பட்ட இலக்கியப்படைப்புகளில் உயிரோட்டமுள்ள படைப்புகள், அன்றாட வாழ்வின் நெருக்கடிகளை பாசாங்கு இல்லாமல் எழுதிய படைப்புகள் என்று ஈழத்து படைப்புகளை மட்டுமே சொல்ல முடியும்.  ஈழத்தில்தான் வாழ்வதற்கான நெருக்கடிகள் இருந்தன.  அடுத்த கணத்தில் உயிருடன் இருப்போமா, யார் உயிருடன் இருப்பார்கள், யார் இறப்பார்கள் என்ற நிச்சயமில்லாத வாழ்க்கை, அடுத்த கணத்தை உயிருடனிருந்து எப்படி எதிர்க்கொள்வது என்ற சவால் ஈழத்தில் இருந்ததால் அங்கு இலக்கியம் படைக்கப்பட்டது.  தமிழ்நாட்டில் வாழ்வதற்கான நெருக்கடிகள் இல்லை, போராட்டங்கள், சவால்கள் இல்லை.  அதனால் இங்கு வீரியமான இலக்கியப்படைப்புகள் உருவாகவில்லை.  அதனால் தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் நகல் எடுக்கிற, போலி செய்கிற வேலைகளில் ஈடுபட்டார்கள்.  நகல் எடுக்கிற, போலி செய்கிற வேலையைக்கூட நிறைவாகச் செய்யவில்லை.
1980-க்குப் பிறகு ஈழத்தில் எழுதப்பட்ட படைப்புகள் தமிழ்நாட்டிலிருந்த வாசகர்களை, படைப்பாளிகளை முற்றிலுமாக நிலைகுலைய செய்தவை.  ஈழப்படைப்புகளின் வழியாக அனுபவித்த - துயரங்களை எளிதில் மதிப்பிட முடியாது.  தமிழ்நாடு ஈழத்துக்கு முழுமையாக ஆதரவு கொடுத்த நேரம் அது.  இலங்கை பேரினவாத அரசின் கொடூர முகத்தையும் நடவடிக்கைகளையும் அறிந்து வேதனைப்பட்ட காலத்தில்தான் ஈழ விடுதலைப்போராட்ட இயக்கங்களின் நடவடிக்கைகள் குறித்து வந்த படைப்புகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்திற்று.  கோவிந்தனின் “புதியதோர் உலகம்” என்ற நாவல் ஈழ விடுதலைப்போராட்ட இயக்கங்களின் ஒரு முகத்தைக் காட்டியது.  அதையடுத்து விடுதலைப்போராட்ட இயக்கங்களின் இன்னொரு முகத்தைக் காட்டியது ஷோபா சக்தியின் “கொரில்லா”, “ம்”. இந்த நாவல்கள் தந்த அதிர்ச்சி விவரிக்க முடியாதது.  எது நிஜம்?
சேரன், வ.ஜ.ஜெயபாலன், சோலைக்கிளி, அனார் போன்றவர்கள் காட்டிய உலகம் வேறு.  கோவிந்தன், ஷோபா சக்தி ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’- மு.புஷ்பராஜா போன்றவர்கள் காட்டிய உலகம் வேறு.  அண்மையில் வெளிவந்த உமா வரதராஜனின் “மூன்றாவது சிலுவை” நாவல் காட்டிய உலகம் மற்றவர்கள் காட்டிய உலகத்திற்கு நேரெதிரானது மட்டுமல்ல முரண்பட்டதும்கூட.  இலக்கிய படைப்புகளின் வழியாக ஊடகங்கள் வழியாக அறிந்திருந்த ஈழ மக்களின் வாழ்வுக்குறித்த நம்முடைய எண்ணங்களை, கற்பனைகளை முற்றிலுமாக மாற்றிப்போடுவதாக இருந்தது மூன்றாவது சிலுவை நாவல்.  கடந்த முப்பது ஆண்டுகளில் ஈழத்திலிருந்து இப்படியான படைப்பு ஒன்று வந்ததில்லை.  மூன்றாவது சிலுவை-காதல் சம்பந்தப்பட்ட நாவல்.  கிழவனுக்கும் குமரிக்குமான காதல்.  இல்லாதவளுக்கும் இருக்கப்பட்டவனுக்குமான காதல்.  கிழவனை மகிழ்ச்சிப்படுத்தி குமரிப்பெண் பெறும் பணம், அதற்கான நாடகம்.  பணத்தை, பொருளை கொடுத்து குமரியோடு உறவு கொள்ளுதலுக்கான நாடகம்.  மகளின் இளமையை பயன்படுத்தி பணம் பார்க்கும், சுகத்தை அனுபவிக்கும் தாய்.  இந்நாவலின் வழியாக தமிழ் வாசகன் அடைந்த அதிர்ச்சி, ஏமாற்றம் கொஞ்சமல்ல.  இலங்கை பேரினவாத அரசின் கொடூரம் குறித்த, ஈழ விடுதலைப் போராட்ட சாதக, பாதகமான நடவடிக்கைகள், செயற்பாடுகள், இருபக்கப் போரினால் பெறப்பட்ட நெருக்கடிகள், மக்கள் பட்ட அவதி குறித்து நாவலில் எங்குமே பதியப்படவில்லை.  விநோதம்தான். இந்த நாவலைப் படித்த பிறகு மனதில் ஈழப்போரினால் அகதிகளானவர்கள் யார், உயிரிழந்தவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது.
கோவிந்தன், ஷோபா சக்தி, சக்ரவர்த்தி, சேரன், ஜெயபாலன், உமா வரதராஜன், சோலைக்கிளி, அனார், மு.புஷ்பராஜா போன்றவர்கள் காட்டிய உலகிற்கு நேர் எதிரான முற்றிலும் புதிய ஒரு உலகத்தை- மரணத்தின் வாசனை என்று சிறுகதைத் தொகுப்பில் த.அகிலன் காட்டியிருக்கிறார்.  அதாவது போர் தின்ற சனங்களைப் பற்றிய கதைகள்.  ஈழ படைப்பாளிகள் யாரும் காட்டாத ஒரு உலகத்தை த.அகிலன் காட்டுகிறார்.  இது அசல்.  நகல் எடுத்ததோ போலி செய்ததோ அல்ல.  இது கதை அல்ல.  நிஜம்.  வாழப்பட்ட வாழ்க்கையிலிருந்து ஒரு பகுதியை எடுத்து அதற்கு மொழி வழியாக வடிவம் கொடுக்கப்ட்டது.  மரணத்தின் வாசனை தொகுப்பிலுள்ள கதைகளில் விவரிக்கப்பட்டுள்ள காட்சிகள் மனதிலும் கண்களிலும் கற்சிற்பமாக நிற்கிறது.  பொதுவாக போர் தின்ற சனங்களைப் பற்றிய கதைகள்தான் என்றாலும், தன் சொந்த மனிதர்களை பறிகொடுத்த இழப்புகளின் வழியாக கதை சொல்லப்படுகிறது.  ஏழு வயதிலிருக்கிற சிறுவன் 20 வயதுக்குள் சந்திக்கிற மரணங்களின் காட்சிகளே இச்சிறு கதைகள்.
மரணத்தின் வாசனை தொகுப்பின் முதல் கதை ‘ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்’ என்பது.  போர் என்றால் என்ன, மரணம் என்றால் என்ன, எதற்காக, எப்படி போர் நடக்கிறது என்று தெரியாத வயதில் ஒரு சிறுவன் தன் தந்தையை போருக்கு தின்னக் கொடுக்கிறான்.  ஏழு வயது குழந்தை இயற்கையாக அல்ல போரினால்- பீரங்கியால் கொல்லப்பட்ட தன் தந்தையின்-உடலை, பிணத்தைப் பார்த்து என்ன நினைத்திருக்கும்.  அந்த பிஞ்சு உள்ளத்தின் துயரினை மொழி தாங்குமா, சொல்லுமா என்பது சந்தேகமே.  நிஜமான வாழ்க்கையை பதிவு செய்யும்போது வாழ்வின் பலம்தான் அதன் உண்மைதான் முதன்மை பெறுகிறது.  மொழி இரண்டாம்பட்சமாகிறது.  அது கவிதையாக இருந்தாலும்.  ‘ஒரு ஊரில் ஒரு கிழவி’ என்ற கதையிலும் மொழி, சொற்கள், வார்த்தைகள் என்பது ஒரு ஊடகம் மட்டுமே என்பதை வாசகனால் எளிதில் உணர முடியும்.  தான் வாழ்ந்த, தன்னை வாழ வைத்த மண்ணைவிட்டு பிரிய முடியாமல் தவிக்கிறாள் ஒரு கிழவி.  விமான குண்டு விச்சுகளுக்குப் பயந்துகொண்டு ஊரே காலியாகிவிடுகிறது.  ஆனால் கிழவி போகவில்லை.  மண்ணும், சாமியும் தன்னை காக்கும் என்று நம்புகிறாள்.  சாமி தனிமையில் கிடக்குமே என்று கவலைப்படுகிறாள்.  தனிமையில் கிடக்கிற சாமியை அவள்தான் உருவாக்கினாள்.  மனிதர்கள் இல்லாத இடத்தில் தெய்வங்களுக்கு என்ன வேலை?  கிழவியை சாமி காப்பற்றவில்லை.  விமான குண்டு வீச்சில் கிழவியின் உடல் கூழாகிவிடுகிறது.  சாமி சிலையும் துண்டு துண்டாகச் சிதறிப்போய்க்கிடக்கிறது.  கிழவி செய்த குற்றம் என்ன? அவளை ஏன் போர் தின்றது என்ற கேள்வியை ஒற்றை வரியில் கேட்காமல் ஒரு கதையாக்கியிருக்கிறார் த.அகிலன்.  கேள்வியை கதாசிரியன் கேட்கவில்லை.  வாசகன் கேட்கிறான்.  ஒரு படைப்பு என்பதும், படைப்பின் வெற்றி என்பதும் வாசகனை கேள்வி கேட்க வைப்பதும் கதையில் பங்கேற்பாளானாக மாற்றுவதும்தான்.  அது மரணத்தின் வாசனைத் தொகுப்பில் சிரமமின்றி நடந்திருக்கிறது.
விலங்கினங்களிலேயே பாவப்பட்ட விலங்கினம் மனித இனமாகத்தான் இருக்க முடியும்.  அதற்குத்தான் ஆசைகள், கனவுகள், ஏக்கங்கள், நோக்கங்கள், கொள்கைகள், தத்துவங்கள் இருக்கிறது.  எல்லாவற்றையும்விட இடத்தின்மீதான ஆசை இருக்கிறது.  ‘குமார் அண்ணாவும் மிளகாய் கண்டுகளும்’ என்ற கதையில் இதைத்தான் நாம் பார்க்கிறோம்.  ஒரு விவசாயி தன் பெண்டாட்டி, பிள்ளைகளைவிட அவன் உருவாக்கியப் பயிர்களைத்தான் அதிகமாக நேசிக்கிறான்.  அந்தப் பயிர்களைக் காப்பதே தன் வாழ்க்கை என்று கருதுகிறான்.  தன் நிலமே தன் வாழ்வு என்று வாழ்கிற, நிலத்தைவிட்டு பிரிந்தால் செத்து விடுவோம் என்று எண்ணுகிற ஒரு மனிதனின் மனதை கதையில் பதிய வைப்பது சாத்தியமல்ல.  விமான குண்டுகளுக்கு, பீரங்கிக் குண்டுகளுக்கு பயந்துகொண்டு முகமறியாத, முன்பின் தெரியாத திசையில் மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கிற நேரத்தில் வயலில் தான் நட்டு வளர்த்த மிளகாய் செடிகள் தண்ணீரில்லாமல் கருகிவிடுமே என்ற கவலையில் சுடுகாடுமாதிரி மாறிவிட்ட கிராமத்திலிருக்கிற  வயலுக்கு வருகிற ஒரு மனிதன் பைத்தியமாக்கப்படுகிறான்.  பைத்தியமாகிவிடுகிறான்.  குமார் என்ற மனிதனை எது பைத்தியமாக்குகிறது.  மிளகாய்க்குத் தண்ணீர் பாய்ச்சுவது குற்றமா?  இந்தக் குற்றத்திற்காகவா ராணுவம் அவனை பிடித்துச் சென்று சித்ரவதை செய்து பைத்தியமாக்குகிறது.  மனிதர்களை மொத்த மொத்தமாக விஷவாயு குண்டுகளை வீசிகொல்கிறவர்களுக்குப் பதக்கம்.  சமூக அந்தஸ்து.  வீரன் என்ற பட்டம்.  மிளகாய் செடிக்கு தண்ணீர் பாய்ச்சப் போகிறவனுக்கு துப்பாக்கி ரவையின் மூலம் மரணம் பரிசாக அளிக்கப்படுகிறது. இப்படியான பரிசை கொடுக்கிற மனித இனத்தைவிட கேவலமான விலங்கு உலகில் வேறு என்ன இருக்க முடியும்?
‘சித்தி’ கதையில் வருகிற சித்திக்கு ஈழ மண்ணில் வாழ்ந்துகொண்டிருந்தவர்கள் எத்தனை வகையான கொடுமைகள் அனுபவித்தார்களோ, அத்தனையும் அவளுக்கும் உண்டு.  அதைவிட கூடுதலாகவும் உண்டு.  அவள் செய்த பாவம் நல்ல பெண்ணாக இருந்தது மட்டுமே.  மற்றவர்களை அனுசரித்துபோனது, பிறர் மனம் புண்படாமல் நடந்துகொண்டது, மற்றவர்களை சிரிக்க வைத்தே பழகியதுதான் அவள் செய்த குற்றம்.  ஏமாற்றிவிட்டுபோன காதலன் வருவான் என்ற நம்பிக்கையில் போர் விமானங்கள் வீசும் குண்டுகளுக்கு மத்தியில், பீரங்கி குண்டுகளுக்கு மத்தியில் பதுங்கு குழியில் காத்திருக்கிறாள்.  இந்தக் காத்திருப்பு எவ்வளவு துயரமானது?  காதலனின் வருகைக்காக ஜோசியக்காரியை நம்பிக்கொண்டிருக்கிறாள்.  பாவம் ஜோசியக்காரி என்ன செய்ய முடியும்?  பணம் பறிப்பதைத்தவிர.  அதைத்தான் அவள் செய்து கொண்டிருக்கிறாள்.  அவளும் உயிருடன் இருக்க வேண்டும் அல்லவா? துர்க்கை அம்மனை சித்தி நம்புகிறாள்.  கோபம் கொண்டசாமி, துர்தேவதையான துர்க்கை அம்மான் சுக்கு நூறாகிக்கிடக்கிறது.  ஆக்ரோசம் கொண்ட காளியும் போன இடம் தெரியவில்லை.  மரணம் மனிதர்களை மட்டுமல்ல சாமிகளையும் துரத்திக்கொண்டிருக்கிறது. சித்தியை தன் கோர பசிக்கு போர் எடுத்துக்கொண்டுவிட்டது.  சித்திப் போன்று பல ஆயிரக்கணக்கான அப்பாவி மனிதர்கள் கொல்லப்படுகின்றனர்.
த.அகிலனின் கதைகளில் மனிதர்கள் கொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.  அதோடு காணாமல் போகிறார்கள்.  காணாமல் போகிறவர்களுக்குக்கூட தாங்கள் காணாமல் போயிருக்கிறோம் என்பது தெரியவில்லை.  காணாமல் போனவர்களை மருத்துவமனையின் பிணவறைகளில்தான் தேட வேண்டி இருக்கிறது.  குவிக்கப்பட்டுள்ள பிணங்களுக்கிடையில், குவிக்கப்பட்டுள்ள எலும்புகளுக்கிடையில் தங்கள் உறவினர்களுடைய பிணம் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தோடுதான் எல்லாரும் தேடுகிறார்கள்.  தங்களுடைய ஆசையில் வெற்றிப்பெற்றவர்கள் என்று ஒருவரையும் காட்ட முடியாது.  தாயை, தந்தை, சகோதரனை, குழந்தைகளை, உறவுகளை பறிகொடுத்தபடியே இருக்கிறார்கள்.  இழப்பின் வலியை பொறுக்க முடியாமல் கதாசிரியர் கேட்கிறார் “போரை யார் கொண்டுவந்தது?”  இந்தக் கேள்வி ஒவ்வொரு கதையிலும் திரும்பத் திரும்ப கேட்கப்படுகிறது.  இக்கேள்விக்கு யாரிடம் இருக்கிறது பதில்?
எந்தக் கணம்வரை உயிருடன் இருப்போம் என்று தெரியாது.  தன்னுடன் இருக்கும் மனிதர்களில் யார் எப்போது காணாமல் போவார்கள் என்பது தெரியாது.  விமான குண்டு வீச்சில், பீரங்கி குண்டு வீச்சில் யாருடைய உடல் கூழாகும் என்பது தெரியாது.  யாரை எப்போது ராணுவம் பிடித்துக்கொண்டுபோகும் என்பதும், பிடித்துக்கொண்டுபோன மனிதனை விடுவார்களா என்பதும் தெரியாது.  ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு இடமாக எத்தனை காலத்திற்கு மாறிமாறி சென்றுகொண்டே இருக்க வேண்டும் என்பதும் தெரியாத நிலையில், அடுத்தவேளை சோறு சாப்பிட முடியுமா என்பதுகூட தெரியாத நிலையில் ஒரு மனிதனுக்கு பைத்தியம் பிடிக்காமல் (விசர்) இருந்தால்தான் அதிசயம்.  ’தோற்ற மயக்கங்களோ’ - கதையில் அகிலனின் அண்ணனுக்கு பைத்தியம் பிடித்துவிடுகிறது.  பைத்தியம் பிடித்ததற்கு அவனா காரணம்?  தலைக்குமேலே குண்டு வீச விமானம் பறந்து கொண்டிருக்கிற சத்தம் ஓயாமல் கேட்டுக்கொண்டிருக்கிறது. சுற்றிவளைத்திருக்கிறது ராணுவம் துப்பாக்கிகளுடன், பீரங்கிகளுடன்-  ஆனாலும் மனிதர்கள் உண்டார்கள், உறங்கினார்கள் முன்பின் தெரியாத ஊர்களுக்கு ஓடினார்கள். செத்துப்போனார்கள்.  மரணங்கள் பல மாதங்களுக்கு பிறகே அறிவிக்கப்படுகின்றன.  அதுவும் குறுஞ்செய்தியாக.  ‘நீ போய்விட்ட பிறகு’ என்ற கதையில் வரும சம்பவங்கள் மனதை உறையவைக்கின்றன.  நாம் எப்படிப்பட்ட காலத்தில், எப்படிப்பட்ட சமூகச்சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற கேள்வி முக்கியமானது.  இக்கேள்வியைத்தான் த.அகிலன் தன் வலியின் வழியே, தன் எழுத்தின் வழியே கேட்கிறார்.  நம்மால் வெட்கப்பட மட்டுமே முடியும்.

மரணத்தின் வாசனை தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளுமே போரில் வென்றவர்களைப்பற்றிப் பேசவில்லை, போரில் தோற்றவர்களைப் பற்றியும் பேசவில்லை.  இருபக்கப்போரிலும் மாண்டவர்களைப் பற்றி, போர் தின்றவர்களுடைய கதையைப் பேசுகிறது.  ஒரு மரணத்திற்காக அழுது கொண்டிருக்கும்போது அடுத்த மரணம் நிகழ்கிறது.  அந்த மரணத்தை அடுத்து அடுத்த மரணம்-அடுத்தடுத்து மரணங்கள் நிகழும் காலத்தில் எந்த மரணத்திற்காக அழுவது?  சாவு மட்டுமே சொந்தம், மரணம் மட்டுமே எஞ்சியிருக்கிறது என்ற சூழலில் வாழ்ந்த, செத்த மனிதர்களுடைய கதைகள் எனலாம்.  தினம்தினம் மனிதர்களை சாகக் கொடுத்துவிட்டு வாழ்ந்த ஒருவன் சொன்ன கதைகள்.  விவரணைகளாக, விளக்கங்களாக இல்லாமல் வாழ்க்கை அனுபவமாக இருக்கிறது.  போர் என்றால் வெற்றி, வீரம், பெருமை, கௌரவம், பட்டம், பதக்கம் இதைத்தான் நாம் போற்றி வந்திருக்கிறோம்.  இதைத்தான் நாம் வரலாறாக்கி குழந்தைகளுக்கு பாடமாக சொல்லித் தருகிறோம்.  போருக்கு சம்பந்தமில்லாத போரினால் செத்தவர்களைப்பற்றி, அகதியாக்கப்பட்டவர்களைப் பற்றி நாம் பேசுவதில்லை.  உலகமெங்கும் மனிதர்கள் போரினால் கொல்லப்படுவதுமட்டுமல்ல, அகதிகளாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.  மனிதர்களுடைய மரணங்கள் மரணங்கள் அல்ல.  இன்று வெறும் எண்ணிக்கையாகிவிட்டது.
போர்கள் எதன் பொருட்டு நடத்தப்படுகின்றன?  மனிதர்களை கொன்று குவித்துவிட்டு அடையப்பெறும் வெற்றிக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?  போர் மனிதர்களை அகதிகளாக்கியது.  பெயர் தெரியாத ஊர்களுக்கு விரட்டியடித்தது.  மொழி தெரியாத நாட்டில் வாழ வைத்தது.  உறவுகளைப் பிரித்தது.  பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளையும், குழந்தைகளிடமிருந்து பெற்றோர்களையும் பிரித்தது.  குழந்தைகள் இறந்தன.  பெற்றோர்கள் இறந்தார்கள்.  ஊமையாக்கப்பட்டார்கள்.  காணாமல் போனார்கள்.  பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்.  இத்தனை கொடூரங்களுக்கு பிறகும் போர் நடக்கிறது.  யாருக்கான, எதற்கான போர், அந்தப்போர் தேவையா என்று த.அகிலன் தன் கதைகளின் வழியே கேட்கிறார்.  மனித சமுதாயம் பதில் சொல்ல வேண்டிய கேள்வி.
ஒரு இலக்கியப்படைப்பின் வெற்றி, பலம் என்பது அப்படைப்பில் இருக்கும் உண்மையைச் சார்ந்தே நிர்ணயமாகும். த.அகிலனின் மரணத்தின் வாசனை-போர் தின்ற சனங்களின் கதை- சிறுகதைத் தொகுப்பு- ஒரு இலக்கிய படைப்பு.
------------------------------
மரணத்தின் வாசனை- போர் தின்ற சனங்களின் கதை
த.அகிலன்,
வடலி,
6/13, சுந்தர் தெரு, எம்.ஜி.ஆர்.நகர்,
சென்னை - 78.
விலை ரூ.125.
2009

மண்பாரம்- படைப்பின் ஊற்றுக்கண் : நா.ரமணிஇமையத்தின் முதல் நாவல் கோவேறு கழுதைகள் தமிழ் இலக்கியவாதிகளின் கவனத்தைச் சுண்டி இழுத்தது.  அதன் பிறகு அவர் எழுதிய ஆறுமுகம்’, ‘செடல்நாவல்களும் அவரைத் தவிர்க்க முடியாத, குறிப்பிட்டுக் கூற வேண்டிய, வித்தியாசமான படைப்பாளியாக இனங்காணச் செய்தன.
      இமையத்தின் சிறுகதைத் தொகுப்புகளான மண்பாரமும், வீடியோ மாரியம்மனும் அவரது நாவல்களைப் போலவே மிக முக்கியமான படைப்புகள்.  நம் பழைய இலக்கியங்களையும் நவீன இலக்கியங்களையும் தொடர்புபடுத்தும் கூறுகளையுடைய படைப்புகள் நம்மிடம் மிகவும் குறைவு.  மாற்றங்களின் ஊடாக ஓர் இனத்தில் தொடர்ந்துவரும் பழங்கூறுகள் அபூர்வமான கலைஞனின் படைப்புகளில் மட்டுமே இருக்கும்.  மண்பாரம் வேளாண்மைத் தொழில் சார்ந்த ஒரு படைப்பு.  இக்கதையின் நிலக்காட்சிகள், நிகழ்வுகள், வேதனைகள், முயற்சி வீணாகிப்போவது, அதை ஏற்கும் வாழ்வின் சாரம் இவை பழைய இலக்கியங்களின் கூறுகளை உள்வாங்கியதாக இருக்கிறது.  இது கலைஞன் பிரக்ஞையுடன் செய்வதல்ல.  படைப்பாளியின் மண்ணோடு ஓட்டிய வாழ்வும் படைப்பின் சூட்சுமங்களும் கலக்கும் ரசவாதத்தால் சாத்தியப்படுவது.  இது மண்பாரத்தில் நிகழ்ந்துள்ளது.
                மண்பாரம் என்ற கதைத் தலைப்பின் தொடரே பழமையின் கூறைக்கொண்டதுதான்.  ஓரேர் உழவன் (குறுந்.131) என்ற சங்கப்பாடலும், கெடுப்பதூஉம்.......மழை (குறள்,18) என்ற குறள் தொடரும்,நுணா மரத்தடியின் நிழலில் வைத்திருந்த சோற்றுக் குண்டான்களைச் சுற்றி மூன்று நான்கு காக்கைகள் உட்காருவதும், பறப்பதுமாக இருப்பதைப் பார்த்த அஞ்சலைக்குப் பகீரென்றதுஎன்பது போன்ற சங்கப்புலவர்களின் எளிய சித்தரிப்புகளின் மீட்டுருவும், பச்சை மண்ணைச் செங்கல் சூளையில் வைத்ததுமாதிரி உடம்பு இறுகிப்போயிற்றுஎன்பது போன்ற உவமைகளிலும் மரபில் தொடரும் கலைஞனைக் காண்கிறோம்.  இந்தச் சாரம் இல்லாவிட்டால் ஒரு விவசாயக் குடும்பம் கஷ்டப்பட்டுக் கடலை விதைத்தது, விதைப்பு முடிந்த கையோடு மழைபிடித்து அடிக்க விதைப்பு வீணாகிப்போனது என்ற வெறும் கதையாகத்தான் இருக்கும்.
      நெல் சோறுபையன்கள் விளையாட்டில் தொடங்கி சண்டைக்கார (மொறப்பாடு உள்ள) வீட்டுக் கல்யாணப் பந்தியில் திருட்டுத்தனமாக உட்காரப்போன தருணத்தில் மகனைக் கண்டுபிடித்து அடிப்பதில் முடியும் கதை.  சிறுவர்களைப் பற்றிய படைப்புகள் தமிழில் குறைவு.  இக்கதை சிறுவர்களையே மையமாகக்கொண்டிருப்பதாகும்.  சிறுவர்களின் விளையாட்டு, பேச்சு, ஆர்வம், பெரியவர்களைப்பற்றிய அவர்களின் அபிப்ராயம் என ஐந்து சிறுவர்களின் கூட்டில் நகரும் கதை இது.  ஒரு படைப்பில் அதன் நகர்வு மிகவும் முக்கியமானது.  இக்கதையின் இட, நேர நகர்வுகள் எவரையும் ஈர்க்கும்.  இனிமே என்னெ அடிச்சா சாபம் கொடுத்துடுவன்என்று பெரிய மனிதனைப்போல் மகன் பேசுவதைக் கேட்ட தாயின் ஆத்திரம் மறைந்து சிரிப்புடன் கதை முடிவதில் உள்ள உளவியல் எல்லாப் பெற்றோர்களும் அனுபவித்த ஒன்றாகும்.
      நெல்சோறு கதை போன்று சிறுவர்கள் இளம்பெண்கள் பாத்திரங்களாக இடம்பெற்ற கதைகள் பசிக்குப்பின், சின்னச்சாவு, எமன், அரையாள், அம்மாவின் இடம், மலரின் காதல் எனப் பதினேழு கதைகள் உள்ள தொகுப்பில் ஏழு கதைகள் இருப்பது சாதாரணமானதல்ல.
      ஒரு குழந்தை இரவில் விழித்துக்கொண்டு பெற்றோர்களின் தூக்கத்துக்கு எமனாகும்போது ஏற்படும் எரிச்சல், பாட்டியினால் குழந்தை அழுகையை நிறுத்தும்போது ஏற்படும் நிம்மதியில் முடிவது அஞ்சிக்கண்ணன்கதை.  இக்கதையில் நிகழுமிடம் சிறுவீடு, பாத்திரங்கள் நால்வர், நேரம் இரவின் பிற்பகுதி எனக் குறுகத்தறித்திருப்பதாக உள்ளது.
      எமன்கதை தன் அக்காவின் குழந்தையால் தம்பி கணேசனிடம் எழும் மன உணர்வையும் ஏக்கத்தையும் ஆத்திரத்தையும் கொண்ட சிறுவர் உளவியல் சார்ந்த கதை.  உரையாடலில் வளரும் கதைப்பின்னலில் தேர்ந்தவர் இமையம்.  மாறாக இக்கதையில் அவரே கதை சொல்லியாக இருக்கிறார்.  பாசம் மற்றவர்மீது மிகுந்து தன்மீது குறைவதுபோல் உணரும்போது ஏற்படும் வெளியே காட்டமுடியாமல் உள்ளுக்குள் புகையும் ஆத்திரம்தான் அக்கா லட்சுமியின் குழந்தை, தம்பி கணேசனுக்கு எமனாகத் தோன்றுவது.
      பெண்கள் ஆத்திரப்பட்டுப்போகும் ஏற்படும் சண்டைதான் உறவு’.  இக்கதையில் அப்படி ஒரு சண்டையை வாசகர் கண்முன் நிறுத்துகிறார் இமையம்.  சண்டை பால் பொங்குவதுபோல் பொங்குவதும் அது ஒரு சொட்டு நீரில் அடங்குவதுபோல் அடங்குவதையும் வைத்து சூழ்நிலைக் காரணிகளால் மாறுபடும் மனித மனத்தின் இயல்புகள் வெளிப்படுத்தப்படுகின்றன.  மனித மனங்கள் இரும்பால் செய்யப்பட்டவை அல்லவே.  மலரின் காதல்’- கதையில் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் மனிதமனம் தவிப்பதை காண்கிறோம்.  தவிப்பு, தத்தளிப்பு என்று நகர்கிறது.  வாசகனும் தவித்துப்போகிறான். இது கலைஞனின் வெற்றி அல்ல.  கலையின் வெற்றி.
      சுவாரஸ்யமாகக் கதை சொல்லுவதில் மூதாட்டிகள் சளைத்தவர்களல்ல.  வாழ்க்கையையே கதையாகச் சொல்லுவார்கள்.  அதற்குள் மாயக்கற்பனைகள், மர்மங்கள், தர்மங்கள் எனப் பல அடுக்குகள் இருக்கும்.  ஒருத்தியின் தனிப்பேச்சையே சுவை குன்றாமல் நீட்டியிருக்கிறார் மொழியின் ஆளுமையால் வித்தியாசமான பொன்னம்மாவின் குடும்பக் கதையில்.  தமிழ் எழுத்தாளர்களால் ஒரு காலத்தில் மிகவும் போற்றப்பட்ட மேஜிக் ரியலிசம்-என்ற இலக்கிய வகை, அதற்கான மாதிரி படைப்புகளை உருவாக்கமலேயே மறைந்துவிட்டது.  பொன்னம்மாள் குடும்பக் கதை.  மேஜிக் ரியலிச கதை அல்ல.  அதற்கான மாதிரியும் அல்ல.  அதையும் தாண்டியது.  படைப்பின் உச்சம் எதுவோ அது பொன்னம்மாவின் குடும்பக் கதையில் சாத்தியமாகியுள்ளது.
      மண்பாரம் தொகுப்பில் உள்ள கதைகளையும் தாண்டிய நவீன பரப்புக்குள் அவரது அண்மைக்கால வேலைபோன்ற சிறுகதைகள் போதுமான அளவில் இல்லை, வரவேண்டும்.  எதிர்பார்ப்பிற்குரிய படைப்பாளிதானே இமையம்.  மண்பாரம் – சிறுகதைத் தொகுப்பு –மண்ணும் மனிதர்களுமாக உருவான முன்மாதிரி இல்லாத படைப்பு.

----------------------

இந்திய எழுத்தின் தொடக்கம் கல்வெட்டு. அதன் தொடக்கம் நம்மூரிற்தான்- இராம.கி.


”என்ன தம்பி! இல்லுகிற சொற்கள் கூடுகின்றனவே? முடிவில் இலக்கிய இலக்கணம் வந்து விடுவாயா? இலக்கிய இலக்கணத்தை மறுக்க வேண்டுமென்றால் நீ காட்டுகிற சொற்கள் அத்தனையும் சேர்ந்து ஒரு மரபையே மறுக்க வேண்டுமாக்கும். அது கொஞ்சம் கடினம் தான்.”
 
”ஆமாம் அண்ணாச்சி, துளைத்தலிற் தொடங்கி பொருள் வளர்ச்சி ஏற்பட்டு ஒவ்வொரு சொல்லாக எழுந்த வரலாறு இருக்கிறதே அது மரம் போல. சும்மா இலக்கிய இலக்கணத்தை மட்டும் வெட்டிச் சாய்த்துவிட்டுப் போய்விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். கிடையாது ஒவ்வொரு இலையும், தளிரும், கொப்பும், கம்பும், கிளையும், சினையும், மரமும், வேரும் என்று உய்யும் ஒருங்கிய முழுமை (organic whole), ஆணிவேர் வரைக்கும் இருக்கிறது. மறுப்பதென்றால் இத்தனை சொற்களையும் மறுக்க வேண்டும். பொறுத்துப் பாருங்கள் அண்ணாச்சி!”
 
”சரி! பொறுமையாகப் போவோம். இகுதல் பற்றிச் சொன்னாய்”
 
”இகுதல் = மேலிருந்து கீழ் வருதல், இகுதலின் நீட்சியாய் ஈதல் எழும். இல்லாதவருக்குக் கொடுக்கக் கை இறங்குகிறது. ஈதலின் தொழிற்பெயர் ஈகை. வாயில் இகுந்துவரும் வாய்நீர் நாட்டுப் புறங்களில் ஈத்தா/ஈத்தை எனப்படும். பிள்ளை பெறுவதும் இகுதற் செயலே. கருப்பை வாயிலிருந்து பிள்ளை இறங்குகிறதல்லவா? ஒவ்வொரு பிள்ளையிறக்கமும் (=பிறப்பும்), நாட்டுப்புறங்களில் ஈத்து எனப்படுகிறது. "அவள் இவனை ஈன்றாள். இது எத்தனையாவது ஈத்து?". பிறப்பென்பது பிள்ளையின் பார்வையில், ஈத்தென்பது தாயின் பார்வையில், சொல்லப்படுவது. ஈனியல் என்ற சொல்லால் இன்றைக்கு genetics - யைக் குறிக்கிறோமே? ஆங்கிலம் போன்ற மொழிகளில் சொல்லப்பெறும் நிலத்திணை yield - களும் தமிழில் ஈத்தெனப்படுவதை அகரமுதலிகள் வாயிலாய் அறிந்து கொள்ளலாம்.”
 
”தம்பி, நீ சொல்லச் சொல்ல எனக்கு வியப்பு கூடிக் கொண்டே போகிறது.”
 
”இகுந்தது (=தாழ்ந்தது) ஈந்தது என்றும் வடிவங்கொள்ளும். இனி, இறக்கமான இடத்தைக் குறிக்க, ஈந்து>ஈந்தம் என்ற பெயரைத் தமிழில் உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால், இக்கால அகரமுதலிகளில் அது பதியப் படவில்லை. இருந்த இடத்தைக் குறிக்கும் ”இருத்தம்” தமிழ் அகரமுதலிகளில் உள்ள போது, ஈத்தம் பதியப்படாதது நமக்கு வியப்பாகவே இருக்கிறது.”
 
”தம்பி, கிழக்கு என்ற சொல் பள்ளமான இடத்தைச் சுட்டுவதாய்க் கேள்விப் பட்டிருக்கிறேன்.”
 
”உண்மை. மனையடி சாற்றத்தில் மனை நிலத்தின் அமைப்பு விளக்குகையில், இருப்பதிலேயே உயரமாய் தென்மேற்கு மூலையும், அதற்கு அடுத்த உயரத்தில் வடமேற்கு, தென்கிழக்கு மூலைகளும், இருப்பதிலேயே பள்ளமாய் வடகிழக்கு ஈசான மூலையும் சொல்லப் பெறும். ஈத்து என்ற சொல், கிழக்கைக் குறித்தால் தான், ஈத்தானம்>ஈதானம்>ஈசானம் என்ற சொல் ஆகப் பள்ளமான வடகிழக்கைக் குறிக்க முடியும். [இது பற்றி மேலும் ஆய வேண்டும்; என்னால் உறுதியாக இப்பொழுது சொல்ல இயலவில்லை.] [தமிழ் அகரமுதலிகளில் இல்லாது, அதே பொழுது இருப்பவற்றில் இருந்து தருக்கம் வழியாக உன்னிக்கக்கூடிய சொற்கள் பலவும் உண்டு. ஈந்தம்/ஈத்தம் அப்படிப்பட்டது.]”
 
”தம்பி, நம்மூர் வடமொழி அன்பர்கள் இதையெலாம் ஏற்க மாட்டார்கள். ஈசானத்துட் புகுந்து அவர் அடிமடியை நீ குலைக்கிறாய்.”
 
”அவர்கள் பார்வை ஏற்கும்படியில்லை. அதனால் மறுக்கிறேன். மனையடி சாற்றமே தென்னிந்தியப் புவிக்கிறுவத்தை (geography) அடியாய்க் கொண்டது என்று நெடுநாள் ஐயமுண்டு. சரி, சொல்லவந்ததைச் சொல்லுகிறேன். ஈந்தம், ஈத்தம் ஆகியவை தமிழிற் பதியப் படாதிருக்க, வடபுலப் பலுக்கில் உருவான ஈந்தம்>ஐந்தம்> ஐந்த்ரம்> ஐந்திரம் என்பது மட்டும் தமிழ் அகரமுதலிகளில் பதிவாகி இருக்கிறது. எப்படிச் சிவம், சைவம் என வடபுலத் திரிவுற்றதோ, அதைப்போல, ஈந்தம், ஐந்தமெனத் திரிந்து வழக்கம்போல் ரகரம் நுழைந்து ஐந்திரத் தோற்றம் காட்டுகிறது. [மேலை மொழிகளில் east என்னும் சொல்லும் ஈத்து எனும் சொல்லுக்கு இணையாவது கண்டு என்னால் வியக்காது இருக்க முடியவில்லை. பொதுவாய் "த்து" என்னும் மெய்ம்மொழி மயக்கம் மேலைமொழிகளில் "st" என்றே உருப்பெறுகிறது. இதற்குக் கணக்கற்ற எடுத்துக்காட்டுகளுண்டு.]”
 
”என்ன தம்பி! இப்படியே இல்லி இழித்துக் கொண்டு போகிறாயே?”
 
”அது மட்டுமில்லை அண்ணாச்சி. பள்ளம் தொடர்புடைய வேறுசில பயன்பாடுகளும் உண்டு. காட்டாக, இலந்தது இலந்தி; அது இலஞ்சியாகிக் குளம் என்ற பொருளைக் குறிக்கும். இலஞ்சி மன்றம் என்று சிலம்பிலும், மணிமேகலையிலும் வருகிறது அல்லவா? இலந்தது இன்னும் வேறு வகையில் திரிந்து இலவந்தி>இலவந்திகை என்றாகி வெந்நீர் நிறைத்துக் குளிப்பதற்காகச் செயற்கையாய்ச் செய்யப் பட்ட குளத்தையும் குறிக்கும். "இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்" என்று ஒரு பாண்டிய மன்னனை புறநானூறு பேசும்”
 
”இதை ஏற்றுக் கொள்ளுவார்கள் என்று நினைக்கிறேன்.”
 
”பள்ளம் பற்றி வேறு விதம் பார்ப்போமா? எழுதுபொருளில் துளைத்த பின், எழுத்தாணியை தரதர என்று ’இழுக்கிறோமே’, அதுவும் இல்லிற் தொடங்கியது தான். இல்லுதல்>இல்லுத்தல்>இழுத்தல். இழுத்ததின் மூலம் கிடை மட்டத்தில் பள்ளம் பறித்துக் கொண்டே போகிறோம். அது கோடாக மாறுகிறது. இலுக்கிக் கோடு போவது நம் தமிழில் மட்டுமல்லாது இந்திய மொழிகள் பலவற்றிலும் பரவியிருக்கிறது. இழுத்தது எழுத்தாணியோடு மட்டும் நிற்கவில்லை. அதன் பொருள் விதப்புப் பயன்பாட்டிலிருந்து பொதுமைப் பயன்பாட்டிற்கு மேலும் விரியும்.”
 
”இல்லிலிருந்து இலுக்கா? சரிதான் எனக்குக் குலுக்கிருச்சு.”
 
”இலுக்குதலின் எதுகையாய் கிலுக்குதல்>கிலுக்கி என்ற சொல் எழும். இது, குத்திக் கிழிக்கும் கருவிக்கு சிவகங்கை மாவட்டச் சொல். ஒன்பான் இரவுகளுக்கு அடுத்த வெற்றித் திருநாளில் (விசய தசமியில்) கிலுக்கி/கிளுக்கி தூக்கிக் கொண்டு ஊர்ப்பிள்ளைகள் எல்லாம் வாழை மரத்திற் குத்தப் போகும். அண்ணாச்சி! மொழிச் சொற்களை நாட்டுப்புறப் பண்பாடோடு புரிந்து கொள்ள வேண்டும்.”
 
”உனக்கு இதே வேலை தம்பி, சுற்றிவளைச்சு சிவகங்கை மாவட்டத்தைக் கொணர்ந்து உங்கூரைச் சொல்லலைன்னா உனக்கு இருப்புக் கொள்ளாது”
 
”அப்படி இல்லையண்ணாச்சி! ஒன்பான் இராக்கள் தமிழருக்கு வேண்டப்பட்ட திருவிழா. அதில் இப்படியொரு பகுதியும் இருக்கென்று சொன்னேன். ஊர்ப்பாசம் இருக்கக் கூடாதா? ஒரேயடியாய்த் தூக்கி வைத்தாத்தான் அண்ணாச்சி தப்பு!"
 
"இலுக்குதல்/ இலுவுதல் எல்லாம் இப்படி எழுந்த வினைகள் தான். இலுவிக் கொண்டே போனது வடக்கே (இ)லிபி என்று ஆயிற்று. மகதத்திலே -அதாங்க பீகார், வங்காளத்துலே வகரம் பகரமாயிரும். அசோகர் காலத்துலே எழுத்து பரவியது தெற்கே தமிழகமும் வடக்கே மகதமும் தான். இந்திக்காரன் இன்றைக்கும் லிக் என்றுதான் இலுக்குவதைச் சொல்கிறான். துளையிற் தொடங்கிய இந்த வேர், சொற்பிறப்பு, இந்திய மொழிகளிற் தமிழிற் தான் இருக்கிறது. ஆனாலும் இந்தியாவில் எழுத்து அசோகன் பெருமியில் இருந்து தான் முதலில் வந்ததாம். நான் என்ன சொல்ல?"
 
"அதான் சொல்லிட்டியே? அப்புறம் என்ன?"
 
"இந்திய எழுத்தின் தொடக்கம் கல்வெட்டு. அதன் தொடக்கம் நம்மூரிற்தான். 'அசோகர் கல்லை வெட்டினார்; மற்றோர் அதைப்பார்த்துப் பின்னால் எழுதினார்' என்று கீறல் விழுந்தாற் போற் சொல்லிக் கொண்டிருக்கிறோம். மகதத்தைப் பெரிதாய்ப் பேசுகிறவர்கள், அதே காலத் தமிழ்நாட்டைப் பெரிதாய்ச் சொல்வது இல்லை. அவன் பெரிய ஆள் தான். அதற்காக நாங்கள் ஒன்றும் சின்ன ஆள் இல்லை. வரலாற்றை வடக்கிருந்தே பார்த்துப் பழகிவிட்டோம், அண்ணாச்சி. ஒருமுறைதான் தெற்கிருந்து தொடங்கிப் பாருங்களேன். புதிய பார்வை கிடைக்கும்.
 
"புதிய பார்வையெல்லாம் யாருக்கு வேண்டும் தம்பி? 'அசோகர் சத்திரம் கட்டினார், சாவடி கட்டினார். சாலையின் இருமருங்கும் மரங்கள் நட்டார்' - என்று எழுதினால் வரலாற்றுத் தேர்வில் 2 மதிப்பெண்கள். இப்படிப் படித்தே வரலாற்றைத் தொலைத்தெறிந்தோம். இதைப் போய் நீ மாற்றி எழுதுங்கன்னு சொல்றே. தொலைச்சுருவாங்க தம்பி. தெற்கேயிருந்து தொடங்குவதாவது? தலைகீழாய்க் குட்டிக் கரணம் அடிச்சாலும் அது நடக்காது."
 
"அண்ணாச்சி! இப்படியே எத்தனை நாளைக்கு அடங்கிப் போறது? இத்தனைக்கும் இந்தியாவிலேயே ஆகப் பழம் பானைக் கீற்றுகள் தெற்கே கொடுமணலிலும், கொற்கையிலும் தான் அகழாய்விற் கிடைத்திருக்கின்றன. சிந்து சமவெளியை விட்டுப் பார்த்தால் ஆகப் பழைய எழுத்து எங்கே கிடைத்திருக்கிறது? வடக்கிலா? தெற்கிலா? தெற்கிற் கிடைத்தது அசோகர் கல்வெட்டிற்கும் முந்திய காலம் என்று இற்றை ஆய்வு மிகத் தெளிவாகச் சொல்லுகிறது.. அதே போல இலங்கை அநுராதபுரத்திலும் ஆகப் பழைய கல்வெட்டு பாகதத்திற் கிடைத்திருக்கிறது. எல்லாமே அசோகருக்கு முந்தியது அண்ணாச்சி. அப்புறம் என்ன அசோகன் பெருமி (பிராமி)? மண்ணாங்கட்டி. வரலாற்றை இனிமேலாவது மாற்றி எழுதுங்கள். செயினர் தமிழருக்கு எழுத்துக் கற்றுத் தரவில்லை. செயினர் இங்கிருந்து கற்றுப் போனார். இதையும் ஆய்வு மூலம் அறுதியிட்டுச் சொல்ல முடியும்." 
 
"தம்பி, நீ என்ன கத்தினாலும் ஏற்கனவே நிலைச்சுப் போன நாட்டாமைக் காரர்கள் இதை ஏற்க மாட்டார்கள்."
 
"இன்றைக்கு ஏற்கவில்லையென்றால் எதிர்காலத்தில் ஏற்பார்கள் அண்ணாச்சி. ”உண்மையே வெல்லும்” என்று இந்திய அரசு வாசகம் சொல்லுகிறது. தமிழி / பெருமி எழுத்து தெற்கே பிறந்து வடக்கே போனது. இன்றும் ஒருசிலர் இதை மறுத்துக் கொண்டேயிருக்கலாம். ஏனென்றால் அவர்களுக்கு ஐராவதத்தோடு கல்வெட்டுப் படிப்பெல்லாம் முடிந்தது. ”அதுக்கு அப்புறம் ஒன்றுமே நடக்கவில்லை. ஐராவதம் சொன்னது தான் அவர்களுக்கு வேத வாக்கு”. ஆனால் திருச்சிப் பாலத்துக்கும் கீழே காவிரிநீர் புதிதாய் ஓடிக் கொண்டேயிருக்கிறது. கல்வெட்டியல், தொல்லியல் என்பது தொடர்ச்சியான படிப்பு. அகழாய்வாளார்கள் இல்லிக் கொண்டேயிருப்பார்கள். புதிய பழஞ் செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. மீளாய்வு தொடர்கிறது."
 
"அப்ப, இழுத்தது எழுத்துன்னு சொல்றே!"
 
"உறுதியாச் சொல்கிறேன் அண்ணாச்சி. கல், களிமண், மரம், தோல், ஓலை எல்லாத்திலும் இழுத்தது எழுத்து. கீறியது கீற்று. (inscription என்று ஆங்கிலத்திற் சொல்கிறார்களே, அந்த scribe, graph என்பதும் கிறுவுவது தான். கீற்றுத் தான்.) வரைந்தது வரி."
 

இல்லென்றால் இடம் - இராம.கிஇப்பொழுதெல்லாம் ”செம்மொழி தமிழ்” என்று யாராவது சொன்னால் ”போதும் சவடால்”என்று சொல்லத் தோன்றுகிறது. 1000 ஆண்டுகளுக்கு முன் ”இலக்கியம் இலக்கணம்” என்று தானாய்ச் சொல்லத் தெரியாத ஒரு மொழிக்குச் செம்மொழிப் பட்டம் என்ன வேண்டிக் கிடக்கிறது? ஒட்டுமுடியால் ஒப்பனை செய்வதற்குக் குறைமுடியோடு இருந்து போகலாமே?. ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்”- என்று சலித்துக் கொண்டார் மொழியார்வலர்.

”அமைதி, அமைதி அண்ணாச்சி, அவ்வளவு சலிச்சுக்காதீங்க. சிலர் சொல்வது போல இலக்கியம் என்ற சொல்லை 1100 ஆண்டுகளுக்கு முன் நேரே பார்க்க முடியாது தான். இலக்கித்தல் என்ற வினையையும் 1200 ஆண்டுகளுக்கு முன்தான் பார்க்கலாம். திருவாசகக் காலத்தை 9 ஆம் நூற்றாண்டு என்னாது மறைமலை அடிகள் தருக்கத்தை ஏற்று 3 ஆம் நூற்றாண்டு என்றால், இன்னும் முன்னால் 1700 ஆண்டுகளிற் பார்க்கலாம்.

ஆனால் இலக்கணம் என்பதைக் குறைந்தது 2300/2700 ஆண்டுகளுக்கு முன் பார்க்க முடியும். இலக்கு, இலக்கம் போன்றவற்றை 2000 ஆண்டுகளுக்கு முன் பார்க்கலாம். பொறுமையிருந்தால், இணைச் சொற்கள் இருப்பிலிருந்து தருக்கத்தின் மூலம் இலக்கிய - இலக்கண இயலுமையைக் கண்டு கொள்ளலாம். பொதுவாய்த் தமிழ்ச் சொற்களுக்கு 2000 ஆண்டுப் பதிவு இருக்கிறதா? - என்று கேட்டு, அதன்பின்தான் எவற்றையும் ஏற்கலாமெனிற் பல சொற்களை ஒதுக்க வேண்டியிருக்கும்.”

சலித்துக் கொண்டவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். ”ஏதோ ஆழ்ந்து சொல்ல வருகிறாய் போலத் தெரிகிறது.”

”கொண்டைக்குள் கிடக்கும் ஈரைப் பற்றிப் பேசினீர்களே? கடற்கரை மணலில் நுணுகித் துளைக்கும் இல்லிப்பூச்சியைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லிக் கொண்டே போவதால் அது இல்லிப் பூச்சியாயிற்று. இல்லி - துளை, இல்(லு)தல் - குத்துதல் to pierce, துளைத்தல் to make a hole, பிளத்தல் to cut into two, கீறுதல் to divide; பொடித்தல், நுண்ணிதாக்கல் என்று பல்வேறு பொருள்களுண்டு. இல்>ஈல்>ஈர்> ஈர்ந்தை = பொடுகு, பேன்முட்டை. என்ற பொருள்களுண்டு. இல்லிக்குடம் பார்த்திருக்கீங்களா? ஓட்டைக்குடம், கடை மாணாக்கன், நன்னூல்”- விளக்கத்தாருக்கு வேறு வேலையில்லை, இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்பார்.

”இல்லப்பட்டது இல். மலைகளிற் குகைகள் இருக்கின்றனவே, இயற்கையாய் இருந்தாலும் சரி, செயற்கையாய் இருந்தாலும் சரி, அவை தாம் முதலில் உருவான இல்கள். மாந்தனாற் கட்டப்பட்ட மற்றவையெல்லாம் அப்புறம் எழுந்தவை. இல்லியது இல். கல்லில் தோண்டியது, துளைக்கப் பட்டது இல். இல்>ஈல்>ஈ என்றால் குகை என்ற பொருளும் உண்டு. குகையைப் பார்த்துத் தான் வீடு, மனை என்ற கட்டுமானங்கள் எழுந்தன.”

’ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்
மானம் தலைவருவ செய்யவோ - யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
அரிமா மதுகை அவர்’
                                                - நாலடியார் 198.

‘இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை’
                                               - திருக்குறள் 41.

”இல்லென்றால் இடம் என்று பொருளும் உண்டு. இருத்தல் என்ற வினையும் இல்லில் இருந்தே இல்>இர்>இரு என்று தோன்றியது. இருத்தலுக்குப் பகரியாய் ’குத்த வைத்தல்’என்றுஞ் சொல்லுவர். இருந்தல் = குந்தல்; உள்ளுதலிருந்து உட்கார்தல் போல இல்லுதலிலிருந்து இருத்தல் எழுந்தது.”

ம.இல்; க. இல், இல்லு; தெ.இல்லு; து. இல்லு; கோண். இல், இந்த்; பர் இல், பொதி (கூரை0; நா. எல்ல; கொலா.எல்ல; கூ.இடு; குவி. இல்லு.

”நிறுத்து. நிறுத்து. இப்பொழுது என்னாச்சு உனக்கு? தமிழில் மட்டுமின்றி பல திராவிட மொழிகளிலும் ”இல்” இருக்கிறதாக்கும். இன்னும் பல சொற்கள் இல்லின் வளர்ச்சியாய் திராவிட மொழிகளில் உள்ளனவாக்கும். எமனோ, பர்ரோ போன்ற வெள்ளைக்காரர்களே சொல்லி விட்டார்களாக்கும்? அப்பொழுது காது கொடுத்துக் கேட்க வேண்டுமோ?”

”ஆமாங்க, அப்படித்தானே தமிழ் செம்மொழியாகியது! ஆர்ட் சொல்லாமல் இந்திய அரசு தலையாட்டலைங்களே! தமிழன் சொல்லி யார் கேட்டார்? பரிதி மாற் கலைஞர், மறைமலையடிகள், இலக்குவனார், பாவாணர் என்று நூறுபேர் சொல்லியிருந்தாலும் வெறியர் என்று விலக்கியிருப்பார்களே? கால காலமாய் அப்படித்தானே நடக்கிறது? வெள்ளைக்காரர் சொன்னதால் தானே இந்தியர் கேட்டுக் கொண்டிருந்தார்? இது நம்மூர் வழக்கம் தானே?”

”இங்க பாரு. உங்கூர் அரசியலுக்குள் நான் வரவில்லை. இல், ஈல் என்று ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாயே! அதை மட்டும் தொடரு. எதுவரை செல்கிறது? - என்று கேட்டுவிட்டுப் போகிறேன்.”

”இனி எடுத்துக் கூறும் ஒவ்வொரு சொல்லுக்கும் மற்ற திராவிட மொழி இணைச்சொற்கள் வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். கொடுக்க வேண்டும் என்றால் அதைத் தேடுவதிலேயே என் பொழுது போய்விடும்.”

”என்ன தம்பி, இப்படிச் சொல்லிட்டே? 10 வகைத் திராவிட இணைச்சொற்கள், 4,5 வடமொழி எடுத்துக் காட்டுகள், 2,3 ஆங்கில மேற்கோள்கள் இல்லையென்றால் எந்த மொழிவிளக்கமும் ஏற்க முடியாது தம்பி. அதுதான் இன்றைய வழமை. தமிழென்றால் எப்பொழுதும் குடைய வேண்டும். இல்லை என்றாற் துளிர்த்து விட மாட்டீர்கள்” - குறும்புப் பார்வையால் குறுகுறுத்தார் மொழியார்வலர்.

”அண்ணாச்சி! வேற்றுமொழி எடுத்துக்காட்டெல்லாம் கொடுத்து எங்களாலும் செய்ய முடியும். அதையெல்லாம் செய்யாமல், நாங்கள் விளக்க முன் வரவில்லை. ’தமிழ் என்று சொன்னாலே தரமில்லை’ என்று சொல்லி இளக்காரம் பண்ணியது போதும், மொத்த உரையாடலையும் கவனியுங்க. அப்புறமாய் அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்”- விளக்கத்தார் சற்று உணர்ச்சிவசப்பட்டவர். முணுக்கென்று கோவம் வந்துவிடும்.

”தம்பி! கோவம் கண்ணை மறைச்சிடும். அவுங்க கிடக்காங்க. தமிழ்ச் சான்றுகளை நீ சொல்லு. நான் கேட்கிறேன்.”

”இல் என்றால் இடம் என்றேனா? இருத்தல் வினையும் அதிற் கிளைத்தது என்றேனா?. ஈ என்றால் அம்பு என்ற பொருளுண்டு. இல்>இள்>ஈள்>ஈட்டு என்றால் செலுத்து, குத்து என்று பொருள். ஈட்டுதலின் கருவிப் பெயர் ஈட்டி. ஈல்தல்/ஈர்தல் என்றால் பிரித்தல், பிளத்தல் என்ற பொருளுண்டு. ஈல்>ஈர்>ஈ = பிரித்தல், பிளத்தல்”

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்
                                                                 - திருக்குறள் 334

”இல்>ஈல்>ஈலி. ஈலி என்றால் கைவாள் (sword), சுரிகை (dagger) என்ற பொருள்களுண்டு. ஈர்தல் = இரண்டாக்கல் என்ற பொருளுண்டு. பனை, தெங்கு, ஈச்சை போன்றவற்றின் ஓலைக் காம்பை இரண்டாய்ப் பிரிப்பதால் ஈர்க்கு என்ற சொல்லும் எழும். அதே போல ஈரும் பொருள் நிறைந்த மரம் ஈந்தெனும் பெயர்பெறும்.. பேச்சுவழக்கில் ஈச்ச மரமாகும். ஈர்-இரு-இரள்-இரண்டு என்ற சொற்களும் கூட இந்த இல்-ஈலிற் பிறந்தவை தான். ஓர் எண்ணை இன்னொன்றால் வகுப்பதும் ஈல்தல் தான். அப்படி வகுத்துவரும் எண்ணை ஈல்வு>ஈர்வு>ஈவு என்று சொல்கிறோமே?”

”இந்த இல், ஈல் சொற்களுக்குள் இவ்வளவு குத்தல், பிரிவு வேலை இருக்கா? துளைப் பொருள் நீண்டு, தமிழில் இவ்வளவு சொற்களா?”

”இன்னும் ஏகப்பட்ட சொற்கள் இருக்கு அண்ணாச்சி! இப்பொழுது ஒரு ஆறு, போகும் வழியில் இரண்டாய்ப் பிரிந்து மீண்டும் கூடுகிறது நடுத் தீவிற்கு அரங்கம் என்று பெயர். *அருத்தது>அறுத்தது அரங்கம். அரங்கம் போலவே இன்னொரு சொல் இலங்கை. இல்லியதை (= அறுபட்டதை) இலங்கியது என்பார்கள். (ஈழம் என்பது ஈலில் எழுந்தது.) சிறுபாணாற்றுப் படையில் ஓய்மாநாட்டு மன்னன் நல்லியக் கோடன் ஊராய் மாவிலங்கை என்ற ஊர் சொல்லப்பெறும். அது தென்பெண்ணையாற்றில் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஆற்றுத் தீவு.”

”தமிழ்நாட்டிற்குத் தென்கிழக்கில் இருக்கும் இலங்கைத் தீவும் இப்படிப் பிரிந்தது தானோ?”

”ஆமாம். இதிலென்ன ஐயம்? ஒருகாலத்திற் கடல் மட்டம் உயர்ந்து, முகனை நிலத்திலிருந்து (main land)ஈல்ந்து (>ஈழ்ந்து) பிரிந்தது அந்நிலம். ஈழம், இலங்கை என்ற ஆகிய இரண்டுமே நல்ல தமிழ்ச்சொற்கள். யாரோ புரியாமற் சிங்களமென்று தவறாகச் சொல்ல, அதைப் பிடித்துச் சிலர் தொங்குகிறார்கள். அந்நாட்டின் பெயரே தமிழ்ப் பெயர் அண்ணாச்சி. நமக்கங்கு இடமில்லை என்று சிங்களன் சொல்கிறான். நாமோ ஒற்றுமையின்றிக் கோட்டை விடுகிறோம். இல்>ஈல் நமக்கு அவ்வளவு முகனைச் செய்தி.”

”அப்படி என்னப்பா முகனைச் செய்தி?”

”அண்ணாச்சி, பழந்தமிழகம் என்பது இற்றைத் தமிழ்நாடு மட்டுமல்ல; இலங்கைத்தீவும் அதற்குத் தெற்கே கடலுள் மூழ்கிய பகுதிகளும் அதனோடு சேர்ந்தவை தான். இற்றைத் தமிழ்நாடு ஈழம் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட கடற்பகுதியும், குமரிக்குத் தெற்கே கடல்கொண்ட பகுதிகளும் எனத் தமிழர் கடலுக்கு இழந்தது ஏராளம் அண்ணாச்சி. குமரிப் பெருநிலம் என்று நாம் சொன்னாற் கேலி செய்பவர்களும், மறுக்கிறவர்களும் கேலி செய்து மறுக்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கென்ன வந்தது? ஏமாளியாய் நாம் இருக்கும் வரை ஏமாற்றுக்காரன் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பான்.”

”ஆமாம் தம்பி. ஏமாறலில் இரண்டு பக்கமுண்டு, தெரியுமோ?”

”இன்னொரு செய்தியைப் பாருங்கள். ஆங்கிலத்தில் isle என்ற சொல் உண்டு தானே? அதை வெள்ளைக்காரன் எப்படி எழுதிப் பலுக்குகிறான். ஈல்>ஈழ் என்று தானே? ”சொல்லின் தோற்றம் தெரியாது” என்று அவர்கள் அகரமுதலியிற் போட்டிருப்பார்கள். island என்பதற்குத் ”நீர் மேலிருக்கும் நிலம்” என்று சுற்றி வளைப்பார்கள். ஈழம் என்ற சொல்லைப் பார்த்தாற் சுற்றி வளைக்க வேண்டாம். முகனை நிலத்திலிருந்து ஈல்ந்தது என்று சொல்வதில் ஓர் அறிவியல் உண்மையிருக்கிறது. கூர்ந்து கவனியுங்கள் ஈழமெனும் விதப்புப் பெயர், உலகத் தீவுகளைக் குறிப்பதற்கு மேலை நாடுகளிற் பொதுமைப் பெயராய் ஆகியிருக்கிறது. அப்படியெனில் முதலிற் தமிழன் கடலோடியது எப்பொழுது? நாமோ ஈல்>ஈழம் தமிழில்லை என்று சொல்லித் திரிகிறோம். தமிழனைப் போன்ற அடிமுட்டாள் கிடையாது அண்ணாச்சி.”

”இப்பொழுது சொன்னாய் பாரு, அது உண்மை. ரொம்ப நாளாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். தமிழனைப் போல அடிமுட்டாள் கிடையவே கிடையாது. இல்லையா?”

”அண்ணாச்சி, இல்லை என்று சொன்னவுடன் இன்னொன்று ஞாவகத்திற்கு வருகிறது. இல்-தல் என்று சொன்னால் துளைத்தல் என்று சொன்னேன் அல்லவா? துளைத்த பின் குறிப்பிட்ட இடத்தில் உள்ளீடு இருக்காதல்லவா? அதனால் இன்மைப் பொருளும் இல்லிலிருந்து, துளைப்பொருளிலிருந்து, எழும்பியது. இன்மைப் பொருளில் இருந்து ”இலம்பாடு” போன்ற வறுமைச்சொற்கள் எழுந்தன. இலகு போன்ற நொய்மைச் சொற்களும், இலவு போன்ற மென்மைச் சொற்களும் இல்லில் எழுந்தவை தான். நூறாயிரத்தைக் குறிக்கும் இலக்கம் என்ற சொல் நொய்மைப் பொருளில் எழுந்த சொல். வேர் தமிழில் இருந்து பின் வடக்கே போய்ப் பெயர்ச்சொல்லாகி மிகப் பின்னாளில் தமிழுக்குள் கடன்வந்த சொல். அதை விவரிக்கத் தொடங்கினாற் பெருகும் என்பதாற் தவிர்க்கிறேன். நூறு, ஆயிரம், இலக்கம், நெய்தல், குவளை, கோடி, ஆம்பல், தாமரை, வெள்ளம் போன்ற எண்களைப் பற்றி இன்னொரு நாள் பார்ப்போம்.”

”சரி எண்களை விட்டிடுவோம். ஆனால் இல்லையென்று சொல்கிறோமே, அதுவும் இல்லிலிருந்து தானா?”

”ஆமாம். இன்னொன்றையும் பாருங்கள். இல்லிக் கொண்டே போனால் என்னாவாகும்? ஒரு மட்டத்திருந்து இறங்குவோம் தானே? இல்லித்தது இலியும்; பின் இழியும். இழிதல் என்றால் இறங்குதல். இந்தச் சொல் நீர்மம் இறங்குதற்கு விதப்பாய்ப் பயனாகும். இழிவு என்னும் தாழ்ச்சிப் பொருளும் இதில் எழுந்தது தான். இழிகுதல்>இயிகுதல்>ஈகுதல்>இகுதல் என்ற வளர்ச்சியில் இறங்குதலுக்கு இன்னொரு சொல்லும் எழும். (ழகரம் யகரமாய் மாறுவது வட தமிழ்நாட்டுப் பழக்கம்.) இகுத்தல் என்னும் பிறவினை தாழ்த்தற் பொருள்கொள்ளும். இகழ்தல் வினையும் கூட இகுதலின் நீட்சி தான்.”

Friday, July 29, 2011

மணற்கேணி குறித்து இந்தியா டுடே


நிரம்ப ஊறட்டும் 


" தமிழின் சிற்றிதழ் பரப்பில் சமீப காலத்தில் உறுதியாகத் தடம் பதித்த இதழ் ( மணற்கேணி ) . ரவிக்குமாரை ஆசிரியராகக்கொண்டு வருகிறது. கவிதைகள் ,சிறுகதை ,கட்டுரைகள் என்கிற அதே மரபுதான் என்றாலும் ஆழம் அதிகம். ஜூன் இதழில் வெளியான மிஷேல் ஃ பூக்கோவின் நேர்காணல் முக்கியமானது .இலங்கை தொடர்பான பதிவுகளுக்கு உரிய இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. சேரனின் கவிதைகளும் சிவா சின்னப்பொடியின் தன் வரலாற்றுப் பதிவும் க.சண்முக சிவலிங்கத்தின் இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும் என்ற நூலுக்கான எம்.ஏ.நுஃமானின் மதிப்புரையும் முக்கியமானவை. தமிழ் பவுத்தம் குறித்த ஞான .அலாய்சியசின் ஆய்வுக்கட்டுரை இது குறித்த   விஷயத்தில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக அமையும். சங்க காலப் பெண்கள் குறித்த மூன்று கட்டுரைகளும் கவனத்தை ஈர்க்கின்றன. வெறும் பத்திகள் அல்லது சவடால்களின் தொகுப்பாக மாறிப்போன தமிழ்ச் சிற்றிதழ் உலகில் மணற்கேணி நல்வரவு" .மாத இதழாகக முயற்சி செய்யலாம் ."

-இந்தியா டுடே , ஆகஸ்டு 3, 2011

Thursday, July 28, 2011

எல்லோர்க்கும் பெய்யும் மழை - சேரன்
’தாமதமாக வந்தவன்/நிலையருகில் நிற்கின்றேன்’-என எழுதிச் செல்கிறார் ரவிக்குமார். இந்தத் தொகுதியிலுள்ள இருபத்தைந்தாவது கவிதை அது. எனனுடைய இருபத்தைந்தாவது வயதில், ‘காற்றில் கரைந்து சென்று விட்ட என்னுடைய கால் நூற்றாண்டுக் கவிதை வாழ்வு பற்றி நெடுங்கவிதைச் சுய புராணம் ஒன்றை முன்பொருதரம் எழுத ஆரம்பித்தாலும், பின்னர், வெட்கம் காரணமாக அதனை நிறுத்திவிட்டேன். கவிதையைப் பொறுத்தவரையில் முன்பு வந்தவர், தாமதமாக வந்தவர் என்பதிலெல்லாம் பெரிய திணை மயக்கங்கள் இருக்கத் தேவையில்லை. அகத்தில் தொடர்ந்தும் எரிகிற கவிதை வேட்கை, சீரிய முறையில் தன்னைத் தொடர்ச்சியாகக் கவிதைகளாக வெளியே படைத்தளித்து வருகிறதா என்பதே நமது கவனிப்புக்கு உரிய கேள்வியாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
நீண்டகாலமாகத் தீவிரமான இலக்கிய வாசகர்களாகவும் உபாசகர்களாகவும் இருந்து வந்த பல நண்பர்கள் கவிஞர்களாகவும் நாவலாசிரியர்களாகவும் திடீரென மாறிவிடுகிற மந்திர வனப்பை நான் முன்னரும் சந்தித்திருக்கிறேன், தாமதமாக வந்தாலும் சரி, முன்னவராக அமைந்தவரானாலும் சரி. ஏராளமான நல்ல கவிதைகளைத் தனது ரகசியப் பெட்டகங்களில் பூட்டி வைத்திருக்கின்ற பல நண்பர்களையும் நான் அறிவேன். கவிஞர்களைச் சூழ்ந்திருக்கும் மர்மங்களைவிட இந்த ரகசியப் பெட்டகங்களில் உறைந்திருக்கும் மர்மங்கள் அளப்பரிய ஆர்வத்தைத் தூண்டுபவை.
கடந்த ஆண்டு திடீர் திடீரென, இனிய தாக்குதல்கள் போலத் தனது கவிதைகளை ரவிக்குமார் அனுப்பி வைத்தபோது, இந்த ரகசியப் பெட்டகங்களின் எண்ணம் மறுபடியும் எழுந்தது. கடந்த ஆண்டு நமக்குப் பெருவலி எழுப்பிய ஆண்டு. ஊழியும் ஊழிக்குப் பின்பும் என நமது வாழ்வையும் கனவுகளையும் நிலத்தையும் ஈவிரக்கமற்றுச் சிதைத்த ஆண்டு. இந்தச் சிதைவிற்கு இந்தியாவும் அயல்நாடுகளும் அனைத்துலக சமூகமும் மட்டும்தான் பொறுப்பா அல்லது நாமும் நமது அரசியல் குறும்பார்வைகளும் காரணமா என்பதெல்லாம் காலங் கடந்த விவாதம். என்றாலும், அந்த நாட்களின் அவலம் இன்றைக்கும் மூளாத் தீ போல உள்ளே கனல்கிறது. முந்நூறு, நானூறு என நூற்றுக்கணக்கிலும் பின்னர் ஆயிரக்கணக்கிலும் மக்கள் கொல்லப்படுவது ஒவ்வொரு நாளும் மாறி மாறிக் கணினித் திரைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பதிவு செய்யப்பட்ட பித்துப் பிடித்த மனநிலையில் தெருத்தெருவாக எதிர்ப்புப் போராட்டங்களில் அலைக்கழிந்தபோது அவ்வப்போது மனதிற்கு ஒத்தடமாக அமைந்தவை கவிதைகள்தான்.
நண்பர் ரவிக்குமார் இடையிடையே தொலை பேசுவார். எனினும் அவருடைய கவிதைகள் அந்த நேரம் வாசிக்கத் கிடைத்தமை அற்புதமான மருந்தாக இருந்தன. நெய்தல் நிலத்துக்குரிய இரங்கலை அவருடைய கவிதைகள் வேறொரு உணர்வுத்தளத்தில் எழுப்பினாலும் நமது ஒட்டுமொத்தமான பேரிழப்புகளுக்கு எதிரொலியான இரங்கலையும் அவருடைய குரலுக்கூடாக நான் கேட்கிறேன். தாங்க முடியாத பெருவலியிலிருந்து என்னை விடுவித்து விடு’ என்று நான் திருப்பித் திருப்பி அரற்றிக் கொண்டிருந்தபோது, ‘என்னுடைய உயிரையாவது எடுத்துக்கொள், என்னுடைய காலத்தை எடுத்துக் கொள் என்று உணர்வுத் தோழமையுடன் ஒலிக்கிறது ரவிக்குமாரின் கவிதைக்குரல். கூட்டுப் பெருந்துயரின் நடுவிலும் தனிமையின் ஆவேசம் கிளர்த்தக்கூடிய நுண்ணுணர்வுகளை ரவிக்குமாரின் கவிதைகளில் இனம் காண முடிவது நிறைவு தருகிறது.

காதலா, காதலில் ஆழ்வதா அல்லது காதலை வாழ்வதா என்கிற கேள்விகளுக்கு அப்பால் சொற்களால் உருப்பெறாத கேவல்கள் வலியின் துணையுடன் கவிதைகளாக மின்னித் தெறிப்பதை ரவிக்குமார் காட்டுகிறார். எல்லாக் கவிகளும் எல்லா நேரமும் ஒரே பாடுபொருளைப் பற்றி எழுதுவதானால் அது காதலாகத்தான் இருக்க முடியும். அதற்கான காரணம் காதலின் நொய்ம்மையா அல்லது கவிகளின் நொய்ம்மையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அத்தனை கவிகளாலும் பாடல் பெற்ற பொருளாக இருந்தாலும் அதன் புதுமையும் உயிர்ப்பும் பெருகும் சிறகடிப்பும் காதலில் தங்கியிருப்பதல்ல, ஆழ்ந்திருக்கும் கவியுள்ளத்தில் தங்கியிருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.
ரவிக்குமாரின் கவிதைகளில் பிறக்கின்ற நிழல் பறவைகளில் பறந்து செல்லும் குழந்தைகளும், தனிமையின் வெஞ்சினத்தில் நாம் எளிமையாகக் கடந்து விட முடிகிற மொழியின் எல்லைகளும், தம் குரலால் காற்றையும் மழையையும் தீண்டும் மரங்களும் துடிக்கும் நாவில் கிள்ளி வைக்கப்பட்ட இதயம் எழுதிய கவிதைகளாக மலர்கின்றன. தகிக்கும் வெய்யிலில் கானல் தொடரப் போய்க் கொண்டிருப்பது கவிதையா, கவிஞனா அல்லது நமது காலமா என்ற மந்திரக் கேள்வி புகைமூட்டத்துள் கலங்கலாகத் தெரிகிறது. அந்தக் கேள்விக்கு மறுமொழி நமக்கு ஒருபோதுமே கிடைக்கப் போவதில்லை.
( மழை மரம் தொகுப்புக்கு எழுதப்பட்டு வெளியிடப்படாமல் போன முன்னுரை)

       மழைமரம்
-    ரவிக்குமார் கவிதைகள்
-    க்ரியா வெளியீடு
-    விலை ரூ 65/-