Sunday, July 3, 2011

நாங்கள் மாமிசம் தின்பவர்களின் மத்தியில்த்தான் வாழ்ந்து வருகின்றோம்


அன்புடன் ரவிக்குமார் அவர்களுக்கு

வணக்கம்

உங்கள் கவிதைகளை வாசித்தேன். முதல் இரண்டு கவிதைகளின் தாக்கம் மிக அருகில் உணர்ந்து கொண்டவை போலிருக்கின்றன. நாங்கள் மாமிசம் தின்பவர்களின் மத்தியில்த்தான் வாழ்ந்து வருகின்றோம். அதுதான் போலும் கவிதைகளுடன் சட்டென நெருக்கத்தை ஏற்படுத்தின போலும்.

யுத்தத்தை அல்லது வன்முறையை எந்தத் தேசத்தில் இருந்தாலும் அதன் வடு எமக்கிடையில் ஒத்த அனுபவங்களை தருவதாக அமைவது ஒன்றும் வியப்பானதல்ல. வன்முறைக்கான காரணங்கள் வேறுபடுகின்ற போதும் வன்முறையாளர்கள் ஒரே மாதிரித்தான் சிந்திப்பார்கள் எனத் தோன்றுகின்றது. உங்களின் இந்த இரண்டு கவிதைகளும் ஈழப் போராட்டகாலத்தின் வன்முறைகளுக்கு மிகவும் பொருத்தமாகவே இருக்கின்றன.

குழந்தைகளை வீரர்களாக்கிக் கொன்ற வீர வரலாறுகளும் எம்மண்ணில் நடந்தேறின. வெற்றிக் கூச்சல் எல்லாவற்றையும் நியாயப்படுத்தி விடும் என அவர்கள் நம்பினார்கள்.

“வீடுகளை மட்டுமல்ல வீதிகளையும்
நகரங்களையும் ரத்தத்தால்
மெழுகுங்கள்
தசைகளைப் பிய்த்துத் தெருக்களை
ஜோடியுங்கள்
தலைமுடியைப் பொசுக்கி வாசனையூட்டுங்கள்
கவனமாயிருங்கள்
குழந்தைகளின் ரத்தத்தைப் பிடிக்கும்போது
அவை அலறுவதைக் கேட்காதீர்கள்
அந்த ஒலி உங்கள் காதுகளில் விழாமலிருக்க
தெய்வங்களின் பெயர்களை முழங்குங்கள்
சாகும்வேளையில் கடவுளின் பெயரைக்கேட்டால்
அவற்றுக்கும் புண்ணியம்தானே“ இந்த வரிகள் மிகவும் மனதை வருத்துகின்றன.

உங்களின் முதலாவது கவிதைக்கு அரசியற் பரிணாமம் மிகஅதிகம். சாவுகளை மிகச் சாதாரண நிகழ்வுளாக்கிய ஒரு சூழலை மிக மிக அண்மையில் உணர்ந்திருக்கின்றோம். உண்மையில் நர மாமிசத்துக்கான வேட்டையாகத்தான் யுத்தம் முடிந்துபோனது. இலங்கையின் அரசுகள் படிப்படியாகச் செய்து வந்த்தை தற்போதைய அரசு மிகச் சடுதியாகச் செய்திருக்கின்றது. அதை நேர்த்தியாகப் பதிவு செய்திருப்பதைப் போல உங்களின் கவிதையுள்ளது. இது எனது வாசிப்பில் உணர்ந்து கொண்டது. அதற்கு காரணம் கீழ்வரும் வரிகள் எனலாம். நீங்கள் இதைக்கருதாமலும் எழுதியிருக்கலாம்.  எனது சூழல் என்னை இவ்வாறு எண்ண வைக்கலாம் எனக் கருதுகின்றேன்
.
“எனக்கு நானே
சமாதானம் சொல்லிக்கொண்டேன்.
கொஞ்சம் கொஞ்சமாக என்
பொறுமை போயிற்று
மனிதர்கள்
சாகும்வரைக்கும் காத்திருப்பது
கஷ்டமாகிவிட்டது
எனவே
உயிருள்ளவர்களை உட்கொள்ள ஆரம்பித்தேன்
அதிலொரு சிக்கல்
நமது இரை நம்மைவிடப் பலவீனமானதாய் இருக்கவேண்டும்
அல்லது அதைப் பலவீனப்படுத்தும் உபாயம்
நமக்குத் தெரிந்திருக்கவேண்டும்“

யுத்த்த்தில் மிகவும் பலவீனப் பட்டுப் போபவர்கள் மக்கள் தானே எனவேதான் மக்களை நோக்கியே போரிடுபவர்களின் உபாயங்கள் திரும்புகின்றன. ஈழப்போராட்டத்தின் யதார்த்தமும் இவ்வாறுதான் முடிந்திருக்கின்றது.

மற்றது உங்கள் கவிதைகளின் மொழியும் சொல்ல்ல் முறையும் யதார்த்தப் பின்புலத்திலிருந்து வெளிப்படுகின்றன. பிற இந்திய தமிழ்க் கவிதைகளிடம் பெரும்பான்மையும் காணக்கிடைக்காத யதார்த்த மொழிதல் உங்களிடம் இருப்பதாக நினைக்கின்றேன். அதற்குக் காரணம் மக்களுடன் இணைந்து நீங்கள் செயற்படுவதாக இருக்கலாம்.

தவிர நீங்கள் அனுப்பிய மற்றைய கவிதைகள் தனிமையும் ஆற்றாமையும் நிரம்ப்ப் பெற்ற கவிதைகள். அனுபவம் சார்ந்து வித்தயாசப்படுகின்றன. ஆயினும் பொதுவான தமிழின் அண்மைய நவீன கவிதைகளின் தடத்திலேயே உள்ளன. மிகமுக்கியம் உங்களின் மொழியும் மொழிதலும் என நினைக்கின்றேன்.

நட்புடன்
சித்தாந்தன்  

( ஈழத்துக் கவிஞரும் மறுபாதி இதழின் ஆசிரியருமான உதயணன் சித்தாந்தன் 21.08.2010 அன்று எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் )

No comments:

Post a Comment