Sunday, July 17, 2011

அவிழும் சொற்களின் வண்ணமும் வாசனையும் - க.மோகனரங்கன்


    சில மாதங்களுக்கு முன் நண்பர்களோடு தலைக்காவிரிக்குச் சென்றிருந்தேன். காவிரியைப் பல ஊர்களில், பல தோற்றங்களில் பார்த்திருந்தாலும், அந்நதி உற்பத்தியாகும் இடம் இதுதான் என்பதால் மனதிற்குள்ளாகவே ஒரு கற்பனை விரிந்திருந்தது. ஒரு சிறிய மலைக்குன்றின் அடிவாரத்தில் சிறிய சுனை. ஒன்றரை அடிக்கு ஒன்றரை அடி இருக்கும் ஒரு சதுரம். நீர் நிரம்பிக் காணப்பட்டது. இதுதான் தலைக்காவிரி என்றார்கள். ஒரு பெரும் ஜீவநதியின் மூலம் இச்சிறு ஊற்றுதானா? எனக்குச் சற்று ஏமாற்றமாகக்கூட இருந்தது. ஆனால், அந்த ஊற்று எப்போதும் வற்றுவதேயில்லை. கடும் கோடையின்போதும் கசிந்து கொண்டுதான் இருக்கும். ஒரு மெல்லிய ஓடையாகக் கீழிறங்கத் தொடங்கும். அதனுடன் குடகில் பல்வேறு காட்டருவிகளும் கலந்து பெருகித்தான் காவிரி என்னும் மாநதி பாய்கிறது என்று உடன் வந்த நண்பர் நதிமூலம் பற்றி விளக்கிச் சென்னார்.
    நான் வாசிக்கத் தொடங்கிய காலந்தொட்டே ரவிக்குமாரின் எழுத்துகளைத் தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும், அவ்வப்போது படித்து வந்திருக்கிறேன். ஒரு வங்கி ஊழியராக, மனித உரிமை ஆர்வலராக, மொழிபெயர்ப்பாளராக, சிறுபத்திரிகை ஆசிரியராக, தலித் சிந்தனையாளராக & என பரந்துபட்ட ஒரு தளத்தில் காலத்தையொட்டி தீவிரமான கருத்தியல் விவாதங்களை உருவாக்கும் விதமாக அவரது பங்களிப்பு தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. அவர் நேரடி அரசியலில் இறங்கி சட்டமன்ற உறுப்பினராக ஆனபோது, நண்பர்கள் பலரைப் போலவே எனக்கும் ஐயமாகவே இருந்தது. அங்கும் அவருடைய கரிசனம் பலராலும் கவனிக்கப்படாது புறக்கணிக்கப்பட்ட தரப்பினர் மீதானதாகவே இருந்தது. அவரது கவனஈர்ப்பின் காரணமாகத் தமிழக அரசு பலவிஷயங்களில் சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆக, பல்வேறு களங்களுக்குத்தன் பணிகளை மாற்றி கொண்டபோதிலும், அவருடைய ஈடுபாடும் அக்கறையும் ஏதோவொரு விதத்தில் புறக்கணித்து ஒடுக்கப்படுபவர்கள் சார்பாகவே இருந்து வருவதைக் காண்கிறோம்.
    இடையறாது பாயும் ஒரு ஜீவநதியின் ஊற்று முகமாக ஒரு சிறிய சுனை இருப்பதைப் போலவே ரவிக்குமார் பெற்றிருக்கும் அறிவுஜீவி, அரசியல்வாதி படிமங்களுக்கு அடியில் அவரது நேசமூலமாக ஒரு நெகிழ்வான மனம் ஒளிந்திருக்கிறது. அம் மனம் காரணமாகவே அவர் இடையறாத ஒரு கள செயல்பாட்டாளராகத் தொடர்ந்து இன்றளவும் இயங்கி வருகிறார். இத்தொகுப்பு நெடுக வெளிப்படுவது அந்த நெகிழ்வான, பிரியத்திற்காக ஏங்கும் மனதின் விதவிதமான சித்திரங்களே அவருடைய அரசியல் நண்பர்கள் எவரேனும் இத்தொகுப்பைப் படித்தால் அவர்கள் சற்று ஏமாற்றத்துக்குக்கூட உள்ளாகக்கூடும். காரணம், இதில் எவ்விவிதமான அரசியல் சார்ந்த முழக்கங்களும், பிரகடனங்களும் இல்லை. ‘அவிழும் சொற்கள்’ என்ற தலைப்பே தொகுப்பின் சாரமான தன்மையைக் குறிப்புணர்த்துவதாக அமைந்துள்ளது. ‘அவிழ்தல்‘ என மிக மென்மையாக ஒலிக்கும் சொல் மலர் விரிவதைக் குறிப்பது. இங்கு ஒரு மனம் தன் ரகசியங்களின் வாசனையுடன் அவிழ்வதைக் குறித்து நிற்கிறது. இத்தொகுப்பின் முகப்பில் அவர் எழுதிய சுருக்கமான தன்னுரையில் ஒரு வரி எனக்கு மிகவும் முக்கியமானதாகப் பட்டது. ‘‘ பெருவதற்கு எவரும் இல்லை என்றாலும்கூட நாம் நேசத்தைத் தரமுடியும் என்பதை இக்கவிதைகளை எழுதும்பொழுதுதான் நான் கண்டுகொண்டேன்‘‘ என்பதே அவ்வரி. உலகில் இதுகாறும் நிகழ்ந்தேறியிருக்கின்ற ஆகப்பெரிய செயல்கள், அடிப்படை மாறுதல்கள் எல்லாவற்றுக்குமான தொடக்கப் புள்ளியாக இத்தகைய பெறும் கையறியாத நேசமே காரணமாக அமைந்திருக்கிறது. இன்னொரு விதமாகச் சொல்வதென்றால் எல்லா கலைகளும், அப்புள்ளியிலிருந்தே நம்முடன் உறவாடத் தொடங்குகின்றன.
    உள்ளூர ஆழமாக உணர்ந்த ஆனால், பட்டவர்த்தனமாக வெளிக்காட்டிக்கொள்ள முடியாத ஒரு வகை ஊமைப் பிரியத்தின் தவிப்பே இத்தொகுப்பின் பேரளவு கவிதைகள். ஊர் மணத்துடன் பால்யத்தின் நினைவுகளை மீட்டும் காட்சிச் சித்திரங்களுடன் கூடிய எளிய சொற்களால் அமைந்த இக்கவிதைகளின் பலம் இதன் அந்தரங்கமான குரல். தனக்குத்தானே பேசிக்கொள்வதைப் போன்ற ஒரு தணிவான தொனியில், பாவனைகள் ஏதுமின்றி இயல்பாக எழுதப்பட்டிருப்பதால் வாசிப்பின்போது வரிகள் பலவும் மனதுக்கு நெருக்கமாகிவிடுகின்றன.
    ‘கவிதை எதையாவது உணர்த்துகிறது என்றால் அது மனிதனின் அந்தரங்கமான தனிமையைத்தான்’ என்றார் ரஷ்யக் கவிஞரான பிராட்ஸ்கி. பிறருடன் சாதாரணமாகப் பகிர்ந்து கொள்ள முடியாத ஒன்றைத்தான் கவிஞன் தன் சொற்களின் ஆழத்தில் ஒளித்து வைக்க முயல்கிறான் போலும்.ரவிக்குமாரின் சிறு கவிதையொன்றில் அத்தகைய தனிமைபற்றிப் பேசப்படுகிறது: 
          நெரியும் மனிதரிடை நிற்கும்போதும் 
          மூச்சுத் திணற வைக்கிறது தனிமை. 
          இருப்பு உடல்களால் அளவிடப்படுவதல்ல 
          என்பதை யார் உனக்குப் புரிய வைப்பது?
    கூட்டத்தின் நடுவே இதுபோன்று தனிமையை உணர நேரிடும் துரதிர்ஷ்டசாலிகளே இயல்பாகக் கவிதையை நாடி வருகிறார்கள் எனத் தோன்றுகிறது.
    யுகயுகமாக பார்க்கவோ, பேசவோ வாய்க்காத இருவர் சந்தித்துக் கொள்ள நேரிடும்போது ஏற்படும் தத்தளிப்பு சாதாரணமான ஒன்றல்ல. காதலின் மிருதுவான வாசனை அடர்ந்து எப்புள்ளியில் காமத்தின் நெடியாகிறது என யார் துல்லியமாகக் கணிக்க முடியும். உள்ளத்தின் தவிப்பைச் சொல்ல முனையும் கவிதை உடலின் தவிப்பை உள்ளுணர்த்துவதும் இயல்பாகவே முடியும்.
    ‘‘உன் சிறு பிராயம் குறித்து 
       கேட்பது எதற்காக என்று குழம்புகிறாய்’‘ எனத்துவங்கும் இத்தொகுப்பின் முதல் கவிதை தண்மையான குரலில் தனது ஊர், பால்யம் பற்றிய காட்சிச் சித்திரங்களை வரிசையாக அடுக்கிச் செல்கிறது. 
       ‘‘உன் தெரு இல்லை, உன் ஊர் இல்லை என 
       விலக்கி விடாதே‘‘ என இரைஞ்சும் தொனியில் மேல் நகர்ந்து 
       ‘‘வயல்களின் நடுவே 
       அல்லிக்கொடிகள் அடர்ந்த குளத்தில் 
       உனக்கு பூப்பறித்து தருகிறேன் 
       வா‘‘
 என முடிகிறது. இந்த இறுதிப் படிமம் உள்ளுரையாக ஒரு தீவிரமான உடலியல் விழைவைக் கொண்டிருப்பதை ஒரு நுட்பமான வாசகன் மாத்திரமே உய்த்துணர இயலும்.
    வெளிக்காட்ட முடியாத பிரியத்துக்கு அடுத்ததாக இத்தொகுதியில் மறுபடியும் மறுபடியும் இடம்பெறுவது மழை பற்றிய சித்திரங்களே. நிபந்தனையற்ற கருணையின் குறியீடாகவே மழை எக்கவிதையிலும் பெய்து கொண்டிருக்கும். அம்மழையும் ‘ காலம் தப்பி கதிர்களைச் சிதைப்பதாக‘, ‘கடலில் பெய்வதாக‘, ஊரை மூழ்கடிக்கும் பேய் மழையாகவே ரவிக்குமாரின் கவிதைகளில் பெய்கிறது. 
              ‘‘ மழை அழுவதைக் கேட்டதுண்டா நீங்கள்? 
        எல்லோரும் கைவிட்டு விட்ட நிலையில் 
        ஒவ்வொருவரிடமாக ஓடித் தனது நியாயத்தை 
        எடுத்துச் சொல்ல முயலும் 
        ஒரு பெண்ணைப் போல அது அரற்றி 
        மன்றாடுவதை? 
        தரையில் மோதி மோதி திசைகளை சபிப்பதை கேட்டதில்லையா நீங்கள்?‘‘ 
மிக சாதாரணமான சொற்களைக் கொண்டு இதுபோன்றதொரு மனவெழுச்சி தரும் காட்சிப் படிமத்தை அவர் இயல்பாக பல இடங்களில் உருவாக்கி விடுகிறார். 
              ‘‘காத்திருக்கும் நேரத்தில் 
        மருளும் கண்களுக்குள் ஒரு 
        முழுக்குப் போட்டு எழலாம் எனத் தோன்றுகிறது‘‘
என ஒரு கவிதையில் எழுதுகிறார். குளம் என்ற சொல்லை நேரடியாக பயன்படுத்தாமலேயே அதைப் படிமமாக்கிவிடுகிறார். 
             ‘‘மொழி கண்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்போது 
        உதடுகள் பதறுகின்றன.‘‘ 
இது இன்னொரு இருவரிக் கவிதை. நல்ல கவிதைக்கும்கூட இந்த இலக்கணம் பொருந்தும். மொழி மௌனத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்போது கவிதையில் அர்த்தங்கள் பதறும். அவ்வாறு மௌனத்தின் ஆழத்தைத் தன்னுள் கூட்டியிராத வெற்று வரிகளை வாசகன் எளிதாகக் கடந்து விடுவான். இத்தொகுப்பிலும் அதுபோலச் சில வரிகள் இருக்கவே செய்கின்றன. 
        ‘‘ரெயில் வரும் சத்தத்தை ரசித்தபடி 
        கிடக்கிறது தண்டவாளத்தில் 
        கைவிடப்பட்ட குழந்தை‘‘ 
இதிலுள்ள முரண் மிகச் சாதாரணமானது. பொதுப்புத்தி சார்ந்த எளிய தர்க்கத்தைத் தாண்டிய ஆழம் எதுவும் இல்லாதது. முன்சொன்ன வரிகளுக்கும், இதற்கும் உள்ள இடைவெளியை ஒரு தீவிரமான வாசகன் எளிதாகவே கண்டுகொள்வான். நாம் எழுதும் ஒவ்வொரு வரியையும் பாதுகாத்துக் கொண்டே ஆகவேண்டும் என்ற தன்முனைப்பை விட்டுவிட்டாலே இத்தகைய மேலோட்டமான வரிகளை விலக்கிக்கொண்டு விடலாம்.
    திரும்பவும் ரவிக்குமாரின் முகப்புரையிலிருந்து ஒரு வரியைச் சுட்ட விரும்புகிறேன். ‘‘இந்த கவிதைகளை எழுதிய பிறகு இவற்றின் பிரசுரத் தகுதிபற்றி நிறையவே சந்தேகங்கள் இருந்தன’’. இந்த சந்தேகம் அவருக்குள் நீடித்து இருக்கும் வரையிலும், அவர் கவிஞனாகவும், அவர் எழுதுவது பலபோது கவிதைகளாகவும் அமையும்.

     ( சேலத்தில் நடைபெற்ற நூல் அறிமுக விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

No comments:

Post a Comment