Wednesday, July 27, 2011

இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள் = மைதிலி : கவிதைகள் மதிப்பீடு முனைவர் ரா.செயராமன்

கவிதையின் உள்ளடக்கத்தைவிட அதன் அமைப்பை ஆராய்வது சிறப்பானது. அமைப்பு என்பது இலக்கியக் கூறுகள் பின்னிப்பிணைந்து வெளிப்பட்டுள்ள முறையாகும். மொழியும் இதனுள் அடங்கும். இலக்கியத்தில் இரு அனுபவங்கள் உள்ளன. உள்ளடக்கத்தைப் படைப்பாளி புரிந்து கொண்டு பதிவு செய்தது ஒன்று. மற்றொன்று இலக்கியமாக்கும் அனுபவம். இலக்கியமாக்கும் அனுபவங்கள் காரணமில்லாமல் சிக்கலாக்கித் தரப்படும் போது, படிப்பவருக்கு பெருஞ்சுமை ஆகிவிடுகிறது. கிசுகிசுக்களும் விடுகதைகளும் தீவிரவாதிகளின் சங்கேத மொழிகளும் அவற்றிற்கான இலக்கணத்தைப் பெற்றிருக்கின்றன. எழுத்துக்கும் வாசிப்புக்கும் இடையில் உள்ள பிணக்கைத் திறனாய்வாளன் சரிசெய்யவும் நெறிப்படுத்தவும் தேவையில்லை. இலக்கியப் படைப்புகள் படிப்பவர்களிடம் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுவது விரைந்து கடந்து செல்லும் உலகில் தேவையில்லாதது. இலக்கியப் படைப்புகள் தவிர்க்கப்படக் காரணமாகிவிடும். சமூகத்தில் கருத்துப் பரிமாற்றம் எளிதாக நிகழ வேண்டும். இலக்கியத் தகுதி என்பது அதில் சொல்லப்படும் உள்ளடக்கத்தின் தகுதியாக இருக்க வேண்டும். அதாவது அனுபவப் பதிவுகளில் தகுதி இருக்க வேண்டும். மைதிலி கவிதைகளில் உள்ளடக்கம் ஆராய எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவற்றில் பொருண்மை மயக்கம் குறைவாகவே இருக்கிறது. மொழி வெளிப்பாட்டிலும் கவிதைப் பின்னலிலும் சிக்கல்கள் குறைவாக உள்ளன.

மைதிலி கவிதைகளில் பாடுபொருள்கள் கைக்கிளைக் காதல், காதல் முறிவு, பிரிவு, குடும்ப உறவுக்குள் ஒரு பெண் நிறைவடைதல் என்ற ஒரு தொகுதியாக அமைகிற அதே நேரத்தில், ஆண்களை மறுக்கிற பெண்ணியத்திற்குரியவைகளாகவும் உள்ளன. ஏழை வர்க்கச் சார்பாகவும் போர்ச் சூழலைச் சுயசார்புடன் விளக்குபவையாகயும் வேறு சில கவிதைகள் அமைகின்றன.

இனிய அனுபவங்கள் ஏற்படும் போது  அவற்றை அன்புக்கு உரிய ஒருவருடன் பகிர்ந்து கொள்ள நினைப்பது இயல்பு. நுகர்வுப் பொருள்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது இயல்பு. கவிதை என்பதால் செவிப்புலனுக்கு இனிய பாடும் குயில் ஓசை, கண்ணுக்கு இனிய செவ்வந்திப் பூவின் அழகு, மூக்குக்கு இனிய மல்லிகை மணம் இவையெல்லாம் காதலனைக் காதலிக்கு நினைவுபடுத்துகின்றன. எனவே, காதலனிடம் இந்தத் தூண்டுதல்கள் தன்னை நினைவுபடுத்தினவா என்று காதலி கேட்கிறார் (ப.20). பகல் தனிமையிலும், இரவு அமைதியிலும் தன் நினைவு காதலனுக்கு வந்ததா என்று கேட்கிறார் (ப.20). அதீத இன்பத்திலும் துன்பத்திலும் நெருக்கமானவர் பற்றி நினைவு வருவது இயல்பு. சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும் என்பது காரணமாகும். அவற்றால் நெருக்கம் கூடும் என்பது மரபு. நேரில் சந்திக்கும் சூழலில் காதலிக்கப்படுபவன் காதலியை காதலி வீட்டில் உள்ள மாமரம், மதிலில் உள்ள காகம், வேலியில் உள்ள இப்பில் இவைகளாகவே கருதுவதாக அவள் குறைபட்டுக் கொள்கிறாள் (ப.19).  அஃறிணைப் பொருள்களும் உயிரற்ற பொருள்களும் போல ஒரு இளைஞியை இளைஞன் பார்க்கிறான் என்று அவள் குறிப்பிடுவதால் அவன் கிளர்ச்சி அடையாதவனாகிறான். காத்திருப்பதில் சுகமும் சோகமும் உண்டு என்று தெரிந்தும் கடைசியில் சிதைவுபட்ட உணர்வுகளே காதலிக்கு எஞ்சுகின்றன (ப.47). அன்றாடம் பழகும் ஒருவனாகவே காதலன் இருப்பதை,
நீ சொல்லவே நினைத்திராத / விஷயங்களையும்
உன்னிடம் ஒரு போதும் / இருக்கச் சாத்தியமற்ற /
புத்தகத்தையும் / பெற்றுக் கொள்ள எண்ணுவேன்...
கடிகார முள்ளசைவிற்கும் / காலடி யோசைகளிற்கும்
இடையில் / கரைந்திழுபடும் / என் காதல் மனம் (ப.46)

என்று கவிதை குறிப்பிடுகிறது. கைக்கிளைக் காதல் பாடல்கள் இரங்கலும் இரங்கல் நிமித்தமும் என்ற இறுதி அவலத்தை நினைவுபடுத்துகின்றன. ஆனால்
கடற்கரைக் காற்றதிர்வில் / கண் மடல்களில் படிந்து
கரைந்தொழுகுகிறது உப்பு /
எனக்காக ஒரு பறவை / தூரமாய்க்காத்திருக்குமா (ப.48)

என்று மற்றும் வேறு ஒருவனுக்கான ஏக்கமாக அது மாற்றமடைகிறது. அதாவது தீவிரக் காதலிலிருந்து மீளவில்லை. வேறு ஒருவருக்கான ஏக்கம் அது.

காதல், காமம் என்ற இரண்டுள் எது ஏதனுள் அடங்கும் என்ற கருத்து ஆராயப்பட வேண்டியது. ஆண்கள் பெண்களின் அன்பைத் தேடவில்லை. உடலையே தேடுகிறார்கள் என்று அறிந்து இளைஞி சலிப்படைகிறாள்.
குறிதேடி யலையும் கண்களால்
சலிப்படைந்து போன சிறுமென் இதயம் (ப.60)
ஒருவரை ஒருவர் பார்க்கும் போது கண், மார்பு, குறி என்று பார்வை வேறுபடுவதைப் பொருத்து அவரின் உள்ளத்தைப் புரிந்து கொள்ள முடியும். குறியைப் பார்ப்பவர் பாலியல் உறவுகளை மட்டுமே விரும்புகிறாவார். இளைஞியும் வேறு வழியில்லாமல் அவர்களுள் யாராவது ஒருவருடன்தான் காதலைத் தொடர வேண்டியுள்ளது.
குறிதேடும் குவிமையம் / ஒன்றெனவே ஒடுங்கு மெனில்
யாராயிருந்தால் என்ன (ப.59)

காமுகனுக்கும் காதலனுக்கும் நோக்கம் குறியாக இருப்பதால் இருவரும் வேறுபாடு இல்லாதவர்களாகிறார்கள். இளைஞியின் நோக்கமும் இறுதியில் காமம் என்பதால் காதல் உறவு ஏற்படுகிறது என்றும் விளக்கலாம். காமம் இருவரையும் சமாதானப்படுத்திக் கொள்வதற்காக வாக்குறுதிகள் பேச வைத்துவிடுகிறது. எல்லை மீறுகிறார்கள். ஆனால் அந்த உறவு திருமண உறவாக மாறுமா என்பதற்கு எந்த உறுதியுமில்லை. காதலுக்குள் காமம் அடங்கவில்லை. காமத்திற்குள் காமம் அடங்கிவிடுகிறது.

இளைஞனால் தவிர்க்கப்படுகிற, பிரியப்படுகிற நிலையையும் இளைஞி புலப்படுத்துகிறாள். தன்னை ஏற்றுக் கொள்ளச் சொல்லி ஒருவனிடம் கெஞ்சுவது இழிவு. அதையும் இளைஞி செய்கிறாள்.
     உயிரைப் பிடித்தபடி கேட்கிறேன் / என்னை ஏற்றுக் கொள்.
     ஏதோ அருவருப்பானதைத் / தொட்டவன் போலத் திரும்பிக் கொள்கிறாய்.
கோபம் / உன் குறியைச் / சூம்பவைத்து விடுகிறது. (ப.62)

ஏற்றுக் கொள்ளச் சொல்வது, மண உறவு, பாலுறவு என்ற இரண்டுக்கும் பொதுவான வேண்டுதலாக நிற்கிறது. அவன்மேல் வெறுப்பையும் வெளிப்படுத்துகிறாள். முகம் சுருங்குவதை குறி சுருங்குவது என்று குறிப்பிடுகிறாள். ஒரு முத்தம் கொடுத்தாவது விடை கொள்ளத் தன்னைச் சமாதானப்படுத்திக்கொள்ளவும் செய்கிறாள். இளைஞனுக்கு எந்த வாழ்வியல் நுட்பங்களையும் உணர்த்த முடியாத நிலை அதுவாகிறது. அப்போது அவளது ஆன்மாவும் சாவின் கடைசி நேரத் துடிப்புகளை உணர்கிறது (ப.54). மிரளும் மனத்தைச் சமாதானப்படுத்த வழி இல்லாமல் அதற்குரிய வழியை அவனிடமே கேட்கிறாள் (ப.45). இது ஒரு சரணாகதி நிலையாகும். ஒரு குழந்தைதான் தன்னை அடிக்கும் தாயின் கால்களைச் சுற்றிக் கொள்ளும். அதற்கு வேறு போக்கிடம் இல்லை.

இளைஞன், இளைஞி இருவரும் சேர்ந்த வாழ்க்கையைப் பற்றிப் பேசும் கவிதைகளும் உள்ளன. பாலுறவுக் காட்சி ஒரு கவிதையில் வருணிக்கப்படுகிறது.
அவன் தனது பேனாவால் / தாள்களில் கிறுக்குவது போல
தனக்குரிய சீப்பால்  / தலையை அழுந்தி வாரிக் கொள்வது போல
தாடியைச் சீவுகிற சவரக் கத்தியை
கவனமாகக் கையாள்வது போல
எல்லாம் முடிந்து அமைதியாகத் தூங்குகிறான்

தாளில் கிறுக்கும் வன்முறையும் தாடியை மழிக்கிற கவனமும் கொண்டதாக உடலுறவு நிகழ்த்தப்படுகிறது. தாடி, சவரம் என்பன ஆண்பாலுக்குரியவைகளாகும். பேனா ஆண் உறுப்பையும் தாள் பெண் உறுப்பையும் குறித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதில் தனது இறுதி நிலையையும் இளைஞி
என் இத்தனை நாளைய / காதலும் கனிவும்
இதந்தரு மென் உணர்வுகளும் / பொங்கியெழுந்த குறியின் முன்
ஒழுகிக் கிடக்கிறது / கட்டிலின் கீழே (ப.42)

என்று விவரிக்கிறாள். மோகமுள்ளின் உறுத்தல் தீர்ந்து இதற்குத்தான் எல்லாம் என்று உறுதியாகிறது. ஒரு பெண்ணுக்குக் காமமும் தொடர்ந்து வரும் குழந்தைப் பேறும் நிறைவேறும்போது முழு மனிதத்தை அடைந்து விட்டதாகத் தோன்றுகிறது. தொடை நடுவு கிழிவுபட்டு ரத்த வெள்ளத்தில் ஜனிக்கப் போகும் சிசுவுக்காகத் தயாராகிறாள் அவள் (ப.40-41). ஒரு பெண்ணுக்கான கட்டுப்பாடுகள் அன்புடன் தொடர்புடையவை. கட்டு உடைந்தால் அன்பு சிதையும். கட்டுக்குள் இருத்தல் என்பது அடைபடுவதாகும். துரத்தப்படுவதுமாகும். அடைபடுவதால் துயர இசையும் துரத்தப்படுவதால் ஓடுவதும் நிகழ்கின்றன என்கிறார் கவிஞர் (ப.51).  குடும்பம் பெண்ணுக்குத் திருப்தி தரும் அதே நேரத்தில் ஒடுக்குமுறைக்கும் உட்படுத்துவதாக இருக்கிறது.

பெண்ணியம் சார்ந்த வேறு பல படிநிலைகளில் அமையும் கருத்துகளும் உள்ளன. ஒரு இளைஞனை இளைஞி அடுத்த பார்வையில் தவிர்த்துவிடலாம். பழகிய பின் தவிர்க்கலாம். காதலித்த பிறகு தவிர்க்கலாம். குடும்பம் நடத்திய பின்பும் தவிர்க்கலாம். அல்லது தவிர்க்கப்படலாம். யாரைத் தவிர்ப்பது, யாருடன் சேர்வது என்ற வரையறை எல்லாரிடமும் உண்டு. ஒரு இளைஞனை, அவன் ஆளுமையை
என் விழி உன் விழியுடன் ஒரு சங்கமிப்பைத் தேடி நிற்கும் (ப.19)
உனக்கேயுரிய கம்பீரமான ஓசை (ப.19)

என்றும் விரும்புவதாகச் சொல்லும் இளைஞி பல் இளிக்கிற தெரு மனிதர், கத்தி பாய்ச்சும் கண்கள், அருவருப்பான பேச்சு (ப.24) என்றும் வேறு ஆண்களைக் குறிப்பிடுகிறார். ஆணுடனான தொடக்க நிலை உறவுகள் விருப்புடனும் வெறுப்புடனும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குடும்பத்தை வெறுத்துத் தனித்துப்போக வரும் குழப்பங்களும் வெளிப்பட்டுள்ளன. சுருங்கி ஒடுங்குதல், சிட்டெனப் பறப்பது இரண்டில் எது வாழ்வு என்று முடிவு செய்ய முடியாத நிலை அது (ப.39). வாசலில் பெண்களின் கிளர்ச்சி ஊர்வலம் போய்க் கொண்டிருக்கையில், வீட்டினுள் வேகவைத்த கறியுள் உப்புச் சுவை தந்த நிறைவின் முனகலும் வேலைப் பளுவின் நீண்ட பெருமூச்சும் உடையவளாக அவள் இருக்கிறாள் (ப.36). இருந்தபோதும் அவளுள் உள்ள கிளர்ச்சியை
நாற்றமுடை நிறைந்த கிடங்குள் / நானிருப்பினும்
மூர்க்கம் மிகுந்த எதிர்த்தாக்கு தலிற்கென / சுதந்திரம் பீரிட்டெழுகிற
ஆன்மாவை / நான் பெற்றுள்ளேன் (ப.34)

என்று வெளிப்படுத்துகிறாள். உடல் கட்டுப்படுத்தப்பட்ட நிலை, உள்ளம் சுதந்திர நிலை. ஆனால் குடும்பத்திற்குள் கிடைக்கும் காதல் வார்த்தைகளிலும் அன்பு அரவணைப்புகளிலும் கட்டுண்டு விடாது கதவு தட்டச் சொல்கிறாள். சுரண்டிக் கொண்டே இருக்கவும் சொல்கிறார் கவிஞர் (ப.28). இறுதியில் அது அழுத்துகிற ஆணின் முரட்டுத் தேகத்தை வெறுப்பதில் வந்து முடிகிறது (ப.25). இதம் தரும் தொடுதலும் வாசகங்களும் இனி இல்லை (ப.37). என்று உறுதி எடுத்துக் கொள்கிறாள் பெண். சமூக நிலையில் நின்றும் கலைஞர்கள் தம் ஆதாரமான பெண் புனைவை இழப்பர் என்றும் தம் உடல் அசைவுகளைக் கோடுகளில் ஓவியன் முடக்கிப் போட முடியாது என்றும் தம்மைப் பற்றிப் போதையாய்க் கலைஞன் இசைக்க முடியாது என்றும் அவள் எச்சரிக்கிறாள்; புகழுக்கு இனி மயங்கப் போவதில்லை என்றும் அறிவுறுத்துகிறாள் (ப.37).

ஆணையும் சமூகத்தையும் எச்சரித்து அடக்கி விட்டுத் தன் சுயத்தை அறிய முயற்சிக்கப் போவதாக முரசறைகிறாள். உண்மையை அறிவதற்கும் தன்னை நிர்வாணப்படுத்திக் கொள்வதற்கும் தொடர்பு உள்ளது. தன் விடுதலைக்கும் நிர்வாணப்படுத்திக் கொள்வதற்கும் அதே போல் தொடர்பு உள்ளது. எனவேதான்,
இறுகி இறுகிக் கட்டிய / சேலைகள் சட்டைகளை
உரித்தெறிந்துபின் / ஒவ்வொரு அங்கங்களிலும்
என்னை நான் / காண முயல்வேன் (ப.24)
என்று தடைகளை உடைத்து எறிகிறாள். வளையல்களை நொறுக்கியெறியயும் நகைகளை அறுத்து எறியவும் சபதம் எடுத்துக் கொள்கிறாள் (ப.24). மரபாலும் சமூகத்தாலும் சுமத்தப்பட்டதும் தாக்குதலுக்கு எளிதில் உள்ளாவதும் எதிர்வினை ஆற்றாததும் ஆன ஆடை, அணிகலன்கள் முதல் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இது ஒரு சுயதாக்குதல்தான் என்ற போதும் மரபுக்கு எதிரானது. சமூகம் ஒருவர் மீது சுமத்தும் இலக்கணங்களை மறுதலிப்பது இது. எதிர்க்கும் போதும் எளிமைப்படுத்திக் கொள்ளும் போதும் இது நிகழ்கிறது. சுயமாக மூழ்கி, சுயத்தில் மூழ்கி தன்னைக் கண்டடைய நிர்வாணப்படுதல் ஒரு தொடக்கச் செயலாக உள்ளது. ஆணைத் தவிர்த்துவிட்டு, ஆதிக்கம் செலுத்தும் அவன் உடலை ஒதுக்கி விட்டு, தன் உடலைத் தழுவிக் கொண்டு, ஒரு பெண் தன் பெண்மையைத் தேடும் முயற்சி இது. காமத்தைத் தீர்க்க மற்றொருவர் தேவை. அவர் எதிர்பாலினத்தவரைச் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. நயமான வன்முறையாகவும் அது உள்ளது. காமத்தைத் தானே சுயமாகத் தீர்த்துக் கொள்வது ஒரு அஹிம்சை முறையாகும். காமம் அதீத அஹிம்சையில் சுய இன்பமாக வெளிப்படுகிறது. பாலியல் வறுமையினால் தோன்றும் அஹிம்சைப் போராட்டம் அது. இணை முரண்களாகப் படைக்கப்பட்ட ஆணும் பெண்ணும் ஒருவரை மற்றவர் தவிர்த்து விட்டு நகர முடியும் என்று நம்பும் போக்கு இது. படைப்புச் செயல் நின்று போகும். வேறு ஒரு நிலையில் எதிர்க்கும் மனநிலை கொண்ட பெண்கள் தங்களுக்குள் காதல் கொள்வதையும் பின்பு பிரிவையும் கவிதை பதிவு செய்துள்ளது,
உன் கருப்பையில் / என் முலைகள் அழுந்த
காமம் வற்றிப் போயிற்று / இன்று / வான் கூவரில்...
எந்தப் புதை குழியில் தேடுவேன் / உன் உறைந்துபோன புன் சிரிப்பை     (ப.61)

ஜோ-ஆன் பிரிகிற பெண்ணாக இருக்கிறபட்சத்தில் இந்த உறவு ஒருபால் உறவாகவே இருக்க முடியும். மார்பில் முகம் பதிக்கும்போது ஒருவரது முலை மற்ற பெண்ணின் வயிற்றில் பதியும். ஒரு பால் சேர்க்கை மையத்திலும் நிகழலாம். இது இங்கு விளிம்பு நிலையில் நிகழ்கிறது. நிகழாததை நிகழ்ந்துவிட்டதாகவும் ஒருவர் சொல்ல வாய்ப்பு உள்ளது. அதிருப்தி எதிரான நிலைப்பாடுகளை எடுக்க வைத்து விடுகிறது. எரிச்சலூட்ட நினைக்கிறது. அதிர்ச்சியடைய வைக்க ஆசைப்படுகிறது.

ஒரு இளைஞி மற்றொரு இளைஞியை நாட வைப்பவை ஆண் எதிர்ப்பும் பெண் விடுதலை எழுச்சியும் என்ற இரண்டுமாக இருக்கின்றன. ஆண்களால் தவிர்க்கப்படுகிற சூழலிலும் ஒரு பெண் மற்றொரு பெண்ணைக் காதல் கொள்ள வேண்டிய சூழல் எழுகிறது. ஒருபால் காதலுக்கும் சேர்க்கைக்கும் சமூகத்தின் இறுக்கமான கட்டுப்பாடுகளும் காரணமாகி விடுகின்றன. எதிர் பாலினத்தவர் உறவு கிடைக்கப் பெறாத ஒரு பாலினத்தவர் தன் பாலினத்தவரிடம் அடைக்கலம் அடைய வேண்டியிருக்கிறது.
யோனி முலைகளற்ற பெண்ணை / யாரும் காதல் கொள்வாரா
அவளை அன்பு செய்ய / யாருள்ளார் இங்கு (ப.60)

தலைகோதி விரல் பின்னி நட்புடன் இருக்கத் தெரிந்த தனக்கு உடல் வடிவாக இல்லாததால் காதல் கைகூடி வரப்பெறவில்லை என்கிறாள் இளைஞி (ப.60)

நிராகரிக்கப்படும் போது நிராகரிப்பவரைப் பற்றிய ஆராய்ச்சி எழுகிறது. தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட தன்னைப் பற்றிய ஆராய்ச்சியும் ஒருவருக்கு எழுகிறது. சேரவும் சேராமலும் இருக்கும் போது அவ்விருபொருள்களைப் பற்றிய ஆராய்ச்சி எழுவது போலவே, சுயத்தைப் பற்றிய ஆராய்ச்சியும் ஒருவருக்கு எழுகிறது. தான் என்றும் பிற என்றும் உள்ள பிரிவினை இங்கு மறைந்து போகிறது. தான் ஒரு பொருளாகி விடுகிறது. உயிருள்ளன, உயிரில்லாதன என்றும் அஃறிணை, உயர்திணை என்றும் பொருள் வகைப்பாடுகள் பற்றிய சிந்தனை தோன்றுகிறது. உடல், உயிர், மனம், மெய்ப்பாடுகள் பற்றிய ஆய்வாக அது விரிவடைகிறது. எலும்பு, குருதி, தசை என்றும் அது மேலும் ஆழமாகிறது. பரிணாமத் தோற்றத்தில் போய் அது நிற்கிறது. காம உணர்வு பொங்கி வழியும் முலையும் யோனியும் எந்தப் பொருள்கள் ஆனவை என்ற கேள்வி
புராதன திசுக்களின் கூழ்மத்திலிருந்து
கூடவே முலைகளும் யோனியும் / பொருந்திப் போயிற்று (ப.60)

என்று விடை காண வைக்கிறது. தன்னைக் காதலுக்கும் காமத்திற்கும் உள்ளாக்கும் உறுப்புகள் தன்னுடனேயே உயிரின் தோற்றக் காலத்திலிருந்து இருக்கின்றன என்ற புரிதல் இறுதியில் அவலத்தையே தருகின்றன. ஒரு ஆணை நிராகரிப்பது போல இந்த உறுப்புகளை ஒரு பெண் நிராகரிக்க முடிவதில்லை. காதல் நிறைவேறாமை தத்துவ ஆய்வை நோக்கி ஒருவரை இந்த முறையில் தள்ளி விடுகிறது.

சமூகம் என்பது மனிதர்களால் நிறைந்து வழிவது; இளைஞன்களும் இளைஞிகளும் நிறைந்தது அது. எல்லாரும் எல்லாரையும் பொருட்படுத்த முடிவதில்லை. பொருட்படுத்தப்படுபவர் பொருட்படுத்துபவரைப் பொருட்படுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. காதல் மற்றும் காம உறவுகளிலும் இது பொருந்தும். நிராகரிப்பவரின் கூற்றில் நிராகரிக்கப்படுபவருக்கு தத்துவார்த்தமான ஆறுதல் சொல்லப்படுகிறது. காதலி கடக்கும் பாதையில் காதலிக்கப்படுபவன் மரம் போலவே நிற்கிறான். மரம் வழியில் போவோரை நினைவில் கொள்வதில்லை. மனிதர்களும் அவ்வாறே நினைவில் கொள்வதில்லை. சிதைவுபடாமல் காதலி இருக்க வேண்டும். ஏனெனில் வாழ்வு இனிது. அது பாடல் போல் காற்றில் கரைந்து கொண்டிருக்கிறது (ப.30). காதலிக்கப்படுபவர் நல்லவராகவும் உதவுகிறவராகவும் இருக்கிறார். தியாகவும் செய்கிறவராக இல்லை. யாரோ வேறு ஒருவருக்குத் தியாகம் செய்கிறவராக இருக்கலாம். யாருக்கும் தன்னைத் தியாகம் செய்ய விரும்பாதவராகவும் இருக்கலாம். காதல், திருமணம் என்பதில் ஒருவர் தன்னை இழத்தல் என்பது இருக்கிறது. மறுக்கப்பட்டவரிடம் மறுக்கிறவர் நட்பையும் உறவையும் கோரி நிற்க வேண்டியுள்ளது. யாரையும் முழுதாக நிராகரிக்க முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. ஆழமான உறவுகள் சமூக வளர்ச்சியில் குடும்பத்திற்குள் கூடக் குறைந்து வருகின்றன.

வாழ்க்கை முரண்களால் நிறைந்தது. ஏமாற்றம் எதிர்பார்ப்பில் இருக்கிறது. இயலாமையில் செயல்படுதல் தெரியவருகிறது. அன்புறுதலில் அடங்குதல் இருக்கிறது. வானம் என்ற ஒன்று இருப்பதால் சிறகுகள் இருக்கின்றன. மறத்த இருப்பதால் உறவுகளும் இருக்கின்றன (ப.52). எந்த முகத்திற்குள் எந்தப் பாம்பு, எந்த எருமை, எந்தப் பசுவும் பதுங்கி இருக்கலாம் (ப.29) என்று மனிதரின் வெளிப்படையற்ற தன்மை விமர்சிக்கப்படுகிறது. தத்துவ ஆராய்ச்சி மரண உணர்விலிருந்து தோன்றுவதாகச் சொல்லப்படுகிறது. மரண விருப்பம் அல்லது தற்கொலை உணர்வு தன்னிடம் இல்லை என்ற போதும் நண்பர், உறவினர், கோபக்காரர்கள் அதை தன் மேல் திணித்து விட்டுப் போய் விடுகிறார்கள் என்று ஒருவர் வருந்த வேண்டியிருக்கிறது (ப.49). வலு இல்லாத நொய்ந்து போன உள்ளம் எதையும் தேர்ந்தெடுப்பதில்லை. அல்லது தகுதிக்கு மீறியவற்றைத் தேர்ந்தெடுக்கிறது; புறக்கணிக்கப்படுகிறது. குற்றப் பின்புலம் கொண்ட உள்ளங்களுக்குச் சுயநோவு இல்லை. அந்தப் பின்புலம் எங்கும் கவிதைகளில் புலப்படவில்லை.  நல்ல உள்ளங்கள் நாகரிக உலகில் நீடித்து நிற்க முடியாது. நிலைபெற உருமாறியாக வேண்டும். இல்லையெனில் அழிவு தேடிவரும்.

ஒருவரது  சுயவாழ்வு தனக்குள்ளும் தற்சார்பான உறவுகளுக்குள்ளும் சுருங்கிப் போகும் என்றாலும் சமூக, அரசியல் சூழலிருந்து யாரும் தப்ப முடிவதில்லை. 1980களில் போராளிகளுக்கும் சிங்களப்படைகளுக்கும் இடையிலான போர் தன் கொடூரத்தை எட்டிவிடுகிறது. போராளி ஒரு காதலிப்பவளுக்குச் சொல்வது: தான் தன் நண்பர்களின் மாற்று உரு. அவர்கள் எண்ணங்களின் பிரதி. அவர்தம் பாடல்கள் கொண்டு செல்ல வேண்டும். காதலிப்பவள் பிரிந்து போகும் ஒரு வண்ணத்துப் பூச்சி. பிரிவு துயரமானது என்ற போதும் விடை பெறுதல் தவிர்க்க முடியாதது (ப.31). குடும்பம், காதல் உருவாக ஒரு அமைதியான சூழல் தேவை. அந்தச் சூழலை உருவாக்கக் குடும்பமும் காதலும் தம்மைப் பலியிட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அரும்பு மீசை கொண்ட போராளி இளைஞன் கன்னத்தில் காயம்பட்டு, குருதியில் உடல் ஊறச் செத்துக் கிடக்கிறான். அந்த உடல் கண்டு ஒரு பெண்ணுக்குப் பால் உணர்ச்சிக் குறுகுறுப்பு ஏற்படுகிறது. மற்றொரு பெண்ணும் அதே உணர்வுக்கு உள்ளாகி நிற்பதைக் கண்ட முதல் பெண், செத்துக்கிடக்கிற ஆணாக மாறுகிறாள் (ப.27). முதல் பெண்ணின் கூற்றில் கவிதை அமைந்துள்ளது. அவலமும் காம உணர்வும் ஒன்றாகப் பெருகிச் செத்துக் கிடக்கிறவனை உயிர்த்தெழச் செய்ய முடிவதில்லை. பெண் பறவையை ஆறுதல் படுத்த செத்த ஆண் பறவைக்குள் கூடுவிட்டுக் கூடுபாய்ந்த முனிவனைப் போல அவள் மாற முடிவதில்லை. மற்றொரு பெண்ணின் காதலையும் காமத்தையும் கொந்தளித்த உணர்வு எழுச்சிகளையும் எல்லாமுமான அவளையும் தான் பெற்றுவிட வேண்டும் என்ற பொறாமையாலும் ஒரு பெண் அவ்வாறு ஆணாக மாறக் கருதியிருக்கலாம். தீவிரமாகக்  காதலிக்கப்படுவதன் ருசிக்காக அவர் பால் மாறவும் தயங்குவதில்லை. தீவிரமாக விரும்பப்பட வேண்டும் என்ற தாகம் ஒரு பெண்ணுக்குள் இருக்கிறது. விரும்புகிறவர் ஒரு ஆணாக அல்லாமல் பெண்ணாகவும் இருந்து விடலாம் என்பதில் தடையில்லை. மேலும் அது புரட்சிகரமானது. தனித்தன்மை வாய்ந்தது. பரிசோதனைகளுக்கு விரும்பத்தக்கது. உயிர்த்தெழச் செய்ய வேண்டும் என்ற வேட்கை காமத்தின் மூலமாகப் பீறிட்டு எழுகிறது. பீறிட்டு எழும் காமம் அதே போலப் பீறியிட்டு எழும் காமத்துடன் பின்னிப் பிணையத் தவிக்கிறது.

நகருக்குள் வெளியிடங்களிலிருந்து நாள்தோறும் போய்வர வேண்டியவர்கள் அரசப்படையினரால் காரணம் கேட்டுக் குடைந்து எடுக்கப்படுகிறார்கள். போராளிகளும் அவர்களும் அடித்துக்கொள்கிறார்கள். சட்டைகளும் சதைகளும் பிய்ந்து அவலக் கதறலாயிருக்கிறது. குருதியோடு நம்பிக்கைகளும் கலைந்து போகின்றன. வேற்று மொழியில் அதட்டும் குரல் குழந்தைகளை மிரண்டு அழவைக்கிறது. தம் முதுகிலிருந்து மீறிட்டு எழும் குருதியும் சகிக்கத் தக்கதாக இல்லை (ப.58). ஒரு பெண் என்னும் போது உயிர் அச்சத்தோடு வல்லுறவையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. போர்ச்சூழலை மக்கள் எதிர்கொள்வது வேறு. ஒருவரது காம உணர்வும் மற்றவரது மரண அச்சமும் ஒன்றாகப் பிணைந்து கிடக்கின்றன. பாட்டிக் கிழவிகள் நாய் குரைக்கும் போதெல்லாம் சிடுசிடுக்கிறார்கள். போராளியின் கனவு நிறைவேறிவிடும் (ப.16) என்ற நம்பிக்கை ஒரு புறமும் இறந்து போன போராளிகளின் ஆவி காக்கி மற்றும் கறுப்பு உடைகளுடன் வந்து காதல் என்று சொல்லிக் கட்டி அணைக்குமோ என்ற அச்சம் மறுபுறமும் இருக்கவே செய்கின்றன.

வர்க்கச் சூழலை விவரிக்கும் போக்கிலும் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. தொழிலாளர் தினந்தன்று போற்றப்படும் உழவுத் தொழிலாளி மீண்டும் மாடு போல உழைப்புக்கு உள்ளாக்கப்படுபவனாகிறான். அவன் கனவுகளைச் சாக்குருவிகள் அள்ளி வீசிவிடுகின்றன. கனவுகள் செத்துப் போய் விடுகின்றன. தொழுவத்தில் உள்ள எருதுகள் எலும்புகளாகத் தெரிகின்றன. குழந்தை குழிந்த கண்களுடன் இசைக்கிறாள் (அழுகிறாள்). மனைவியின் உடலோ எரிந்து சாம்பலாகி விட்டது. (ப.21-22). இவ்வாறான அவலங்கள் வேளாண்மைத் தொழிலாளிக்கு இருப்பதாகவும் ஒருநாள் கொண்டாட்டத்தில் அவை மறைவதில்லை என்றும் சொல்லப்படுகின்றன.

இந்தக் கவிதைகளில் தமிழ் மரபு இலக்கியங்களில் காணப்படும் அடிகள், கருத்துகளின் தாக்கம் அல்லது பொருத்தம் புலப்படுகிறது. சிலவற்றைத் தொகுத்துத் தரலாம்.
1. அ. உன் பூனையோ / அடுப்பு மேடையில் / சாகக் கிடக்கிறது.
அரிசிப் பானைக்குள் / பெருச்சாளி நாட்டியம் (ப.21)

ஆ. கறவாப் பால்முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் (சிறுபாணாற்றுப்படை:130-2)
2. அ. நீ இறந்த விதத்தை விளக்கினால்
வார்த்தைகள் கூடக் / காயம்பட்டுவிடும் (ப.16)

ஆ. அம்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று அவன்
அருநிறத்து இயங்கிய வேலே (புறம்: 235:13-5)

தைத்த முள்ளை வலி உடனே  இல்லை என்றாலும் உடனே எடுத்துவிட வேண்டும்; பின்பு அது வலிதரும் (ப.23). இந்தக் கருத்து இளைதாக முள்மரம் கொல்க (குறள்.879) என்ற கருத்துடன் பொருந்தக் கூடியது. முலைகளற்ற பெண் காமுறுதல் கூடாது (குறள்.402) என்ற கருத்து எதிர்பால் நிலையில் கவிதைகளில் அழுத்தமாகவும் எதிராகவும் பதிவாகியுள்ளன. அன்புக்கும் காமத்திற்கும் உடல் அழகு ஒரு தகுதியாக இருப்பதில்லை. அவை உடலுள் கிளர்ந்து வற்றாது எழுந்து கொண்டெயிருக்கின்றன. அழகு புறவயமானது. இரண்டுக்கும் தொடர்பில்லை. போராளி குருதி நனையச் செத்துக் கிடக்கையில் மலர் மலர்ந்து, மரம் செழித்து, தென்றல் வருடி வசந்த காலம் மேலோங்கியிருக்கிறது (ப.16). இது
வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே (புறம்:242:5-6)

என்ற குடவாயில் கீரத்தனாரின் கருத்தை ஒத்துள்ளது. பண்பாட்டுச் சூழலால் எழுந்த ஒத்த எண்ணங்களின் அடிப்படையில் கூட இந்தக் கருத்துகள் பொருத்தமாக அமைந்திருக்கலாம்.
இயற்கையைத் தன் உணர்வுக்கு ஏற்ப மாற்றிச் சொல்லும் போக்கும் கவிதைகளில் புலப்படுகிறது. தற்குறிப்பேற்ற அணி மரபான காப்பியங்களில் பயன்படுத்தப்பட்டுச் சலித்துப் போன ஒரு அணி.
பெரியகோயிலின் துருவேறிய மணிக்கூண்டு
அழும்போது / இலைப் பறவைகள் தூங்கும் போது
மிகவும் சஞ்சல மடைகிறேன் / மாலை நேரங்கள் துயருடன் கழிகின்றன
இரவுகளில் ஓயாது புலம்புகிறது மழை
திறந்து வைத்த மரக் கதவுகளில் / ஓங்கியழுகிறது காற்று (ப.53)

நடக்கும் நிகழ்வுகளைத் தனக்குச் சார்பானவைகளாக எடுத்துக் கொள்வது அறியாமையாலும் நிகழ்கிறது. தன்னை மையப்படுத்திப் பார்ப்பதாலும் இது நிகழ்கிறது. அல்லது ஏதேனும் ஒன்றை மையப்படுத்திப் பார்க்கும் போது மற்றவை, மற்றவர்கள் அந்த ஒன்றுக்கு ஏற்பச் செயல்படுவது போலவும் உணர்வு கொள்வது போலவும் தோன்றி விடுகிறது. உயர்திணை, அஃறிணை என்று வேறுபாடுகள் இதில் இல்லை. அவை கவித்துவம் என்ற அடிப்படையிலும் இவ்வாறு வருணிக்கப்பட்டுள்ளன.

இயற்கையும் மனித வாழ்வும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் இருப்பதும் கவிதைகளில் பேசப்படுகிறது. சூரியன் நகரமெங்கும் தாவித்திரிகிறான். முற்றம் கூட்டப்பட்டது. பூக்களின் மணம் நிறைந்தது. கடல் உப்புக் காற்றை புற்கள் வாசனை பிடிக்கின்றன. தெருவில் பெண்கள் உறுமும் கிளர்ச்சி ஊர்வலம் போய்க் கொண்டிருக்கிறது. ஒருத்தி சமையிலின் ருசி பார்த்துக் கொண்டு உள்ளே நிறைவாக இருக்கிறாள் (ப.36). மனிதர்களின் செயல்பாடுகள் தம்முள் வேறுவேறாக உள்ளன. இயற்கைச் செயல்பாடுகளுடன் தொடர்பு இல்லாமல் உள்ளன. ஒவ்வொன்றையும் தனித்தனியே பார்ப்பதால் இப்படித் தொடர்பில்லாமல் நிகழ்வுகள் தோன்றுகின்றன. தம் செயலுக்கான பொறுப்பை ஒவ்வொன்றும் தம்மிடத்தில் வைத்துள்ளன. இயற்கையை ஆதரவாக
உணரப்பட்டது / என் தனிமை
இன்று கூட வந்தது / காற்று மட்டும் தான் (ப.48)

என்று பார்க்கும் பார்வையும் கவிதைகளிலும் வெளிப்படுகிறது. இயற்கையை கவித்துவத்திற்காக எப்படியும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நெறி கவிதைகளில் பின்பற்றப்பட்டுள்ளது தெரிகிறது.

படிமம் கவிதைக்குள்ளும் முழுக் கவிதையாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. காதல் உணர்வு ததும்பிய நிலையில் காதலி
புறாவின் குறுகுறுப்பின் / மர்ம வசீகரம் / நீ
நானே மழையாய் / நானே வெளியாய்
நினைவுகள் நீருண்டு கிளர்கிறது (ப.26)

என்று உருவம் மாறுகிறாள். புறாவின் குரல் குறுகுறுப்பை உணர்ந்தவர்கள் அறிவார்கள். கரப்பான் பூச்சி உடலில் ஊர்கையில் உணர்வின் அடியாழத்திலிருந்து அருவருப்பு எழுந்து வெளித்தள்ளும். தரையில் அலமாரியை இழுக்கையில் தொலைக்காட்சிப் பெட்டி கிரீச்சிடலில் விவரிக்க முடியாத வேண்டா உணர்வு மனதில் கீறலை ஏற்படுத்தும். அதுபோலப் புறாவின் குறுகுறுப்பு அடியில் காம உணர்வின் மையத்தைக் கிளறிவிடும். பிடித்த ஆண் பெண்ணின் காம உணர்வை மெல்லிதாகக் கிளறுகிறான். மகிழ்ச்சியில் மழையாகவும் வெளியாகவும் காதலி உருமாறுகிறாள். சிறு உடலில் இருந்து கொண்டு பெரிதாகத் தோன்றும் இன்பங்களை அனுபவிக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. பெரிய உருவங்களாக உருமாறி நுகர்வுகளில் ஈடுபடத் தோன்றுகிறது. பெரிய உருவங்களாக உருமாறுவது மூலம் அடையும் இன்பங்களும் பெரியதாகத் தோன்றலாம். காதல் தோல்வியில் அவள் வருந்தும்போது,
அவன் நினைவு / உதய ஒளியிலும்
நிசிநேர நிலவிலுமிருந்து / அது இனி மறைந்து விடும் (ப.33)

என்று தன் மனதிற்கு உதய ஒளியையும் நிலவையும் படிமமாக்குகிறாள். தன் காதல் உணர்வு உதய ஒளியும் நிலவும் போல உயர்வானது; தான் உயர்வானவள் என்று அவள் கருத்து வெளிப்படுத்தப் படிமங்கள் பயன்பட்டுள்ளன மேலும் உயர்வானவற்றிடம் உள்ள உறவை இழந்து விட்டவனாகிறான் என்று தன் உயர்வை காதலி புலப்படுத்துகிறாள். எதிர்ச்சொற்களைப் படிமமாகப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது.

அலைகளில் ஈரம் கரையும் வரைக்கும்
அன்பே / நாம் இணைதல் / அசாத்தியம் (ப.33)

அலை ஈரமாகவே இருப்பது. அதில் எந்த ஈரமும் கரையமுடியாது. ஈரம் உலரும் வரைக்கும் என்று எதிர்ச்சொல் கொடுத்திருக்க வேண்டிய இடத்தில் கரையும் என்று நேர்ச்சொல் கொடுக்கப்பட்டுள்ளது. தான் இயல்பான உணர்வில் இல்லை என்பதைத் தன்னை அறியாமல் ஒரு காதலி வெளிப்படுத்தும் போதே இவ்வாறான படைப்பு நுட்பங்கள் அமைய முடியும். அலை உலராது என்பதால் இணைய வாய்ப்பு இல்லை. ஆம்புலன்ஸ் என்ற சொல் தலைகீழாக எழுதப்பட்டு, மனிதன் உள்ளே இயல்பான நிலையில் இல்லை என்று புலப்படுத்துவதைப் போன்றது இது. ஒரு முழுக்கவிதையும் படிமமாக அமைகிறது: வாய்பாடு போல அது நிற்கிறது. சான்று - கடிப்பதால் சொறிகிறேன். சொறிவதால் தோல் உரிகிறது. ரத்தம் கசிகிறது. எரிகிறது, தழும்பும் வரும். சொறியக் கூடாது என்று நினைக்கிறேன். இருந்தாலும் சொறிந்து விடுகிறேன். கடித்தால் சொறியத் தானே சொல்லும் (ப.50). இந்தக் கருத்தில் அமையும் கவிதை ஒரு வாய்பாட்டுத் தன்மையில் பழமொழி போல அமைகிறது. குயில்பாட்டு ஒரு வாய்ப்பாட்டுக் கவிதையாகும். எளிய அனுபவம் என்றாலும் அதில் கருத்துகளைப் பொருத்திக் கொண்டே செல்லலாம். மரம், தெரு, ஆறு என்ற எந்த ஒன்றையும் தொடர்ந்து உற்றுநோக்கிக் கொண்டே இருந்தால் வாழ்வின் தத்துவங்களைப் புரிந்து கொள்ள முடியும். உடல் சார்ந்த அனுபவங்களிலிருந்து அது இங்கே உருவாகிறது.

கவிதைகளில் இரவு, பகல், காலை, மாலை என்று நேரங்கள் பாடுபொருளாக வருகின்றன. நாய்களின் இரவு நேரக் குறைப்பு அர்த்தமற்ற பயங்களையும் சலிப்பையும் தருகின்றன. வாசிக்க முடியாமலும் மறந்துபோன தோத்திரங்களை நினைவுபடுத்த முடியாமலும் போகின்றன. ரத்தம் சிவப்பானது என்பது கரிய இருட்டு நேரத்தில் நினைவில் வந்து கொண்டே இருக்கிறது (ப.57). பேய்க் கதைகளும் பேய் நம்பிக்கைகளும் மேல் எழுகின்றன (ப.14). போர்ச்சூழலும் மூட நம்பிக்கைகளும் மனிதர்களின் நிம்மதியைக் குலைத்துவிடுகின்றன. இரவு தானாக வந்து போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் இருளில் தான் இளைஞன்கள் காணாமல் போய், பகலில் உடல் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் காண நேரிடுகிறது. வீட்டுக்கு வெளியில் விடப்பட்ட சப்பாத்துத் தடங்கள் காலையில் தெரியவருகிற போது அச்சம் ஒவ்வொரு இரவிலும் தொடர்கிறது. இளைஞிகள் உள்ள வீடுகளில் மேலும் அது கூடுகிறது. காலையும் பகலும் கவிதைகளில் போற்றப்பட்டுள்ளன. இரவில் ஏற்பட்ட கலக்கங்களை காலைதான் போக்குகிறது. கூவும் சேவலும் பாடும் பறவையும் சுய நினைவடையச் செய்கின்றன (ப.43). காலை நேரத்தை அஸ்தமனம் என்று மூடர் சிலர் சொல்வதாகக் கவிதை சொல்கிறது (ப.43). காலை நேரம் மரணச் சடங்கின் பறை முழக்கமும் ஒப்பாரியும் நிறைந்திருப்பதால் (ப.18) அவ்வாறு கூறப்பட்டிருக்கலாம். இந்த மாதிரியான காலை வேண்டாம் என்று பிரித்து மறுக்கப்படுகிறது. அவலமும் குழந்தைத் தனமும் நிறைந்த கடந்த கால இரவும் பகலும் போல, உயிர்ப்புடையதாக நிகழ்கால நேரங்கள் இல்லை; முலை பற்றும் கணவன் பிடியிலும் உயிர்ப்பு இல்லை (ப.55).  இவ்வாறு ஈழத்து வாழ்வுக் காலமும் புலம்பெயர் வேற்று நாட்டில் வாழும் காலமும் வேறுபடுத்திக் கூறப்படுகின்றன. அறிவு வளர்ச்சியும் முதிர்ச்சியும் பக்குவத்தைக் கொண்டு வந்து விடுகின்றன. தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும் பொறுப்பை, உறவுகளுக்குமான பொறுப்புகளை ஏற்க மனமில்லை என்றால் குழந்தைப் பருவம் உயர்வானதாகத் தோன்றிக் கொண்டே இருக்கும். பிறர் தோளில் சவாரி செய்த பருவம் அது. அறியாமை நிறைந்த பருவத்தில் ரசனையும் ஆர்வமும் நிறைந்தே இருக்கும்.

கவிதைகளின் கூற்றுகள் தன்மையில் இருந்தாலும் அது கவிஞருடையதாக இல்லாமல் உண்மையில் முன்னிலையில் இருப்பவருக்கும் உரியதாக இருக்கிறது; படர்க்கைக்கும் உரியதாக இருக்கிறது. நான், நீ, அவன், அவள் என்பன மாறி மாறி அமைகின்றன. போர் நிறைந்த சூழலிலிருந்து எழுதப்படும் கவிதைகளில் எழுதுபவர் நேர்மையானவராக இருத்தால் தான் ஒரு போராளியாக இல்லை என்ற உண்மையை வெளிப்படுத்தியாக வேண்டி உள்ளது. இதை,
ஒரு எரிமலை / குந்திக் கொண்டிருக்கிறது
ஒரு கடமைமிக்க வீராங்கனை / உலவிக் கொண்டேயிருக்கிறாள்
.....................................................................
குறும்பும் சிரிப்பும் கொண்டவளாய்
கனத்த மார்புகளுடையவளாய் / நேசிக்கப்படுகிறேன் நான் (ப.13)

என்று கவிஞர் வெளிப்படுத்துகிறார். போராளியாக இல்லாத குறையை குற்ற மனப்பான்மையை போரை ஆதரித்து எழுதுவதன் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. இரவில் சலன மற்றுக் கரையும் மனிதர்கள் என்ற நூல் தலைப்பு கூட அவ்வாறானதுதான். இளைஞன்கள் கறுத்த இரவுகளில் கடத்திக் கொல்லப்படுவது சலனமின்றி நிகழ்கிறது; அது காலையில் தெரிய வருகிறது.

காதலையும் ஏமாற்றத்தையும் விடுதலையையும் மிகுதியாகப் பேசும் கவிதைகளைக் கொண்ட தொகுதியில் இந்த மேற்கண்ட கவிதை முதலாவது வைக்கப்படுகிறது. இதில் தான் வளமான உடல் கொண்டதாகவும் விரும்பப் படுவதாகவும் சொல்லப்படுகிறது. இலக்கியப் படைப்புகளில் பலரும் மாந்தர்களாக இடம்பெற வாய்ப்புள்ளது. அப்படி இல்லாமலும் இருக்கலாம்.
உடல்வனப்பால் ஈர்க்கமுடியாது, தனது அதீத அன்பு வெளிப்பாட்டால் ஈர்க்கும் முயற்சிகள் நடந்தது பல கவிதைகளில் பதிவாகியுள்ளன.  தன்னைப் பற்றியும் பிறர் பற்றியும் தன் சமூகம் பற்றியும் எந்த மாதிரியான பதிவுகளை ஒருவர் ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்பது எந்த மாதிரியான பதிவுகளை அவர் அழிக்க விரும்புகிறார் என்பதையும் பொறுத்தது.

நூல்
மைதிலி, 2003 , இரவில் சலன மற்றுக்கரையும் மனிதர்கள், காலச்சுவடு பதிப்பகம்,  669, கே.பி.சாலை, நாகர்கோவில்-629 001.

(முனைவர் ரா.செயராமன்
இணைப் பேராசிரியர்
தமிழ்த்துறை
பாரதியார் பல்கலைக்கழகம்
கோவை-641 046)

No comments:

Post a Comment