Sunday, July 24, 2011

.இந்தியாவின் சிறந்த பத்து இளம் எழுத்தாளர்களில் ஒருவராகத் தேன்மொழி


கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என பலதுறைகளிலும் தடம் பதித்துவரும் தேன்மொழியைப் பற்றி டெல்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் ஞாயிறு மலரில்( 17.07.2011) வெளியாகியிருக்கும் சிறப்புக் கட்டுரையில் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளனர்.இந்தியாவின் சிறந்த பத்து இளம் எழுத்தாளர்களில் ஒருவராக அவர் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறார். தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான அம்பையின் கருத்து  அக்கட்டுரையில்  வெளியிடப்பட்டிருக்கிறது. அவர் தேன்மொழியின் சிறுகதைகளை பாராட்டிக் கூறியிருக்கிறார். ’’ அவரது சிறுகதைகள் அவரது கவிதைகளின் நீட்சிபோல் உள்ளன.அவை சாதாரண மனிதர்களின்,  அவர்களது  வாழ்க்கை மற்றும் வலிகளினூடாக கவித்துவத்தோடு பயணிக்கின்றன’’. என்று குறிப்பிட்டிருக்கிறார் அம்பை.
மணற்கேணி இதழின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருக்கும் தேன்மொழியின் கவிதைகள் ‘துறவி நண்டு ‘ என்ற பெயரில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளன. அவரது சிறுகதைகள் ‘நெற்குஞ்சம் ‘ என்ற தலைப்பில் மணற்ேணி வெளியீடாக 2009இல் வெளியிடப்பட்டன. "புதுமைப்பித்தன் கதைகளில் மூட்டைப் பூச்சிகள் ‘அபிவாதயே’ சொல்லும். அதைப் போல், தேன்மொழியின் கதைகளில் மரப்பாச்சி கலகக்காரியாக வருகின்றது.உச்சியை இழந்த நெட்டைப் பனைமரம், ஆடைப் பூச்சு ஏதுமற்ற ஆதித் தாய் ஏவாளாகக் கட்டற்று விடுதலையின் உருவகமாகத் தோற்றம் கொள்கின்றது.‘சத்து உரிந்த வார்த்தைகள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டன’ என்கிறது இவருடைய மரப்பாச்சி. ஆனால், தேன்மொழியின் வார்த்தைகள் அனைத்தும் சுடுசரம் ஒக்கும், சாணைத் தீட்டப்பட்ட கூர்மையான சொற்களாக ஒளிர்கின்றன.
பத்துக் கதைகளும், இவரைத் தனித்து அடையாளம் காட்டும் ஒரு குரலாக ஒலிக்கின்றன. சாட்சி நிலையில் நின்று, உணர்ச்சி வயப்படாமல், எந்த விதமான மதிப்பீட்டு அறிவுரைகளும் வழங்காமல், வாழ்க்கையின் ‘நகைமுரணை’, (Irony)அழகியல் விரவிய நாகரிகக் குரலில்(sophisticated), உரைநடைக் கவிதையாக, மனிதாபிமானக் கதைகள் சொல்லும் தேன்மொழி, தமிழின் எதிர்காலம்."  என்று அந்தத் தொகுப்பு குறித்துக் கூறியிருந்தார் இந்திரா பார்த்தசாரதி.

தேன்மொழியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு ' தினைப்புனம்’ இன்னும் சில நாட்களில் மணற்கேணி வெளியீடாக வெளிவரவுள்ளது. அந்தக் கவிதை நூலுக்கு ஈழத்துக் கவிஞரும் மொழியியல் அறிஞருமான திரு எம்.ஏ.நுஃமான்  பின் அட்டைக் குறிப்பொன்றை வழங்கியுள்ளார்.

’’எளிமையுள் மர்மங்கள் புதைந்த கவிதைமொழி
தேன்மொழிக்குக் கைவந்திருக்கிறது.
பெண் என்ற அடையாளச் சுமையில் இருந்து
நீங்கிய கவிதைகள் இவை.

நம்மைச் சூழ்ந்த உலகம், இயற்கை,
மனிதர்கள் - அவர்களின் வாழ்க்கை,
அன்பு, காதல், குரூரம் பற்றிப் பேசுகின்றன இக் கவிதைகள்.

‘உயிரின் வாசம் கழுவித் துடைக்கப்பட்ட பிணவறை’,
‘பிணங்களின் வாசத்தைச் சுவாசிக்கும் பூமி’
போன்ற படிமங்களினூடு
ஈழத்தின் துயரத்தையும் தேன்மொழி
தன் சில கவிதைகளில் பதிவுசெய்திருக்கிறார;.

தலைப்புகள் அற்ற இக்கவிதைகள்
நம்முள் பொருள் விரிவு பெற்று
பல தலைப்புகள் கொண்டவைகளாக விரிகின்றன.’’
என்று அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.’’

தமிழ்ப் பெண் கவிகள் பெரும்பாலோர் தமக்குக் கிடைத்த ஊடக கவனத்துள் மூழ்கித் திளைத்து முடங்கிவிட்ட நிலையில் அமைதியாகத் தனது படைப்புகளை வழங்கிவரும் தேன்மொழிக்கு இன்னும் பல அங்கீகாரங்கள் காத்திருக்கின்றன என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள் தேன்மொழி!1 comment:

  1. தேன்மொழி அவர்களின் எழுத்துகளைப் பற்றிய இப்பதிவை நான் விரும்பிப் படித்தேன். நன்றி ரவிக்குமார்! திரு எம்.ஏ.நுஃமான் அவர்களின் பின் அட்டை கருத்துரை ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கின்றது!

    ReplyDelete