Saturday, July 30, 2011

இல்லென்றால் இடம் - இராம.கிஇப்பொழுதெல்லாம் ”செம்மொழி தமிழ்” என்று யாராவது சொன்னால் ”போதும் சவடால்”என்று சொல்லத் தோன்றுகிறது. 1000 ஆண்டுகளுக்கு முன் ”இலக்கியம் இலக்கணம்” என்று தானாய்ச் சொல்லத் தெரியாத ஒரு மொழிக்குச் செம்மொழிப் பட்டம் என்ன வேண்டிக் கிடக்கிறது? ஒட்டுமுடியால் ஒப்பனை செய்வதற்குக் குறைமுடியோடு இருந்து போகலாமே?. ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்”- என்று சலித்துக் கொண்டார் மொழியார்வலர்.

”அமைதி, அமைதி அண்ணாச்சி, அவ்வளவு சலிச்சுக்காதீங்க. சிலர் சொல்வது போல இலக்கியம் என்ற சொல்லை 1100 ஆண்டுகளுக்கு முன் நேரே பார்க்க முடியாது தான். இலக்கித்தல் என்ற வினையையும் 1200 ஆண்டுகளுக்கு முன்தான் பார்க்கலாம். திருவாசகக் காலத்தை 9 ஆம் நூற்றாண்டு என்னாது மறைமலை அடிகள் தருக்கத்தை ஏற்று 3 ஆம் நூற்றாண்டு என்றால், இன்னும் முன்னால் 1700 ஆண்டுகளிற் பார்க்கலாம்.

ஆனால் இலக்கணம் என்பதைக் குறைந்தது 2300/2700 ஆண்டுகளுக்கு முன் பார்க்க முடியும். இலக்கு, இலக்கம் போன்றவற்றை 2000 ஆண்டுகளுக்கு முன் பார்க்கலாம். பொறுமையிருந்தால், இணைச் சொற்கள் இருப்பிலிருந்து தருக்கத்தின் மூலம் இலக்கிய - இலக்கண இயலுமையைக் கண்டு கொள்ளலாம். பொதுவாய்த் தமிழ்ச் சொற்களுக்கு 2000 ஆண்டுப் பதிவு இருக்கிறதா? - என்று கேட்டு, அதன்பின்தான் எவற்றையும் ஏற்கலாமெனிற் பல சொற்களை ஒதுக்க வேண்டியிருக்கும்.”

சலித்துக் கொண்டவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். ”ஏதோ ஆழ்ந்து சொல்ல வருகிறாய் போலத் தெரிகிறது.”

”கொண்டைக்குள் கிடக்கும் ஈரைப் பற்றிப் பேசினீர்களே? கடற்கரை மணலில் நுணுகித் துளைக்கும் இல்லிப்பூச்சியைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லிக் கொண்டே போவதால் அது இல்லிப் பூச்சியாயிற்று. இல்லி - துளை, இல்(லு)தல் - குத்துதல் to pierce, துளைத்தல் to make a hole, பிளத்தல் to cut into two, கீறுதல் to divide; பொடித்தல், நுண்ணிதாக்கல் என்று பல்வேறு பொருள்களுண்டு. இல்>ஈல்>ஈர்> ஈர்ந்தை = பொடுகு, பேன்முட்டை. என்ற பொருள்களுண்டு. இல்லிக்குடம் பார்த்திருக்கீங்களா? ஓட்டைக்குடம், கடை மாணாக்கன், நன்னூல்”- விளக்கத்தாருக்கு வேறு வேலையில்லை, இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்பார்.

”இல்லப்பட்டது இல். மலைகளிற் குகைகள் இருக்கின்றனவே, இயற்கையாய் இருந்தாலும் சரி, செயற்கையாய் இருந்தாலும் சரி, அவை தாம் முதலில் உருவான இல்கள். மாந்தனாற் கட்டப்பட்ட மற்றவையெல்லாம் அப்புறம் எழுந்தவை. இல்லியது இல். கல்லில் தோண்டியது, துளைக்கப் பட்டது இல். இல்>ஈல்>ஈ என்றால் குகை என்ற பொருளும் உண்டு. குகையைப் பார்த்துத் தான் வீடு, மனை என்ற கட்டுமானங்கள் எழுந்தன.”

’ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்
மானம் தலைவருவ செய்யவோ - யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
அரிமா மதுகை அவர்’
                                                - நாலடியார் 198.

‘இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை’
                                               - திருக்குறள் 41.

”இல்லென்றால் இடம் என்று பொருளும் உண்டு. இருத்தல் என்ற வினையும் இல்லில் இருந்தே இல்>இர்>இரு என்று தோன்றியது. இருத்தலுக்குப் பகரியாய் ’குத்த வைத்தல்’என்றுஞ் சொல்லுவர். இருந்தல் = குந்தல்; உள்ளுதலிருந்து உட்கார்தல் போல இல்லுதலிலிருந்து இருத்தல் எழுந்தது.”

ம.இல்; க. இல், இல்லு; தெ.இல்லு; து. இல்லு; கோண். இல், இந்த்; பர் இல், பொதி (கூரை0; நா. எல்ல; கொலா.எல்ல; கூ.இடு; குவி. இல்லு.

”நிறுத்து. நிறுத்து. இப்பொழுது என்னாச்சு உனக்கு? தமிழில் மட்டுமின்றி பல திராவிட மொழிகளிலும் ”இல்” இருக்கிறதாக்கும். இன்னும் பல சொற்கள் இல்லின் வளர்ச்சியாய் திராவிட மொழிகளில் உள்ளனவாக்கும். எமனோ, பர்ரோ போன்ற வெள்ளைக்காரர்களே சொல்லி விட்டார்களாக்கும்? அப்பொழுது காது கொடுத்துக் கேட்க வேண்டுமோ?”

”ஆமாங்க, அப்படித்தானே தமிழ் செம்மொழியாகியது! ஆர்ட் சொல்லாமல் இந்திய அரசு தலையாட்டலைங்களே! தமிழன் சொல்லி யார் கேட்டார்? பரிதி மாற் கலைஞர், மறைமலையடிகள், இலக்குவனார், பாவாணர் என்று நூறுபேர் சொல்லியிருந்தாலும் வெறியர் என்று விலக்கியிருப்பார்களே? கால காலமாய் அப்படித்தானே நடக்கிறது? வெள்ளைக்காரர் சொன்னதால் தானே இந்தியர் கேட்டுக் கொண்டிருந்தார்? இது நம்மூர் வழக்கம் தானே?”

”இங்க பாரு. உங்கூர் அரசியலுக்குள் நான் வரவில்லை. இல், ஈல் என்று ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாயே! அதை மட்டும் தொடரு. எதுவரை செல்கிறது? - என்று கேட்டுவிட்டுப் போகிறேன்.”

”இனி எடுத்துக் கூறும் ஒவ்வொரு சொல்லுக்கும் மற்ற திராவிட மொழி இணைச்சொற்கள் வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். கொடுக்க வேண்டும் என்றால் அதைத் தேடுவதிலேயே என் பொழுது போய்விடும்.”

”என்ன தம்பி, இப்படிச் சொல்லிட்டே? 10 வகைத் திராவிட இணைச்சொற்கள், 4,5 வடமொழி எடுத்துக் காட்டுகள், 2,3 ஆங்கில மேற்கோள்கள் இல்லையென்றால் எந்த மொழிவிளக்கமும் ஏற்க முடியாது தம்பி. அதுதான் இன்றைய வழமை. தமிழென்றால் எப்பொழுதும் குடைய வேண்டும். இல்லை என்றாற் துளிர்த்து விட மாட்டீர்கள்” - குறும்புப் பார்வையால் குறுகுறுத்தார் மொழியார்வலர்.

”அண்ணாச்சி! வேற்றுமொழி எடுத்துக்காட்டெல்லாம் கொடுத்து எங்களாலும் செய்ய முடியும். அதையெல்லாம் செய்யாமல், நாங்கள் விளக்க முன் வரவில்லை. ’தமிழ் என்று சொன்னாலே தரமில்லை’ என்று சொல்லி இளக்காரம் பண்ணியது போதும், மொத்த உரையாடலையும் கவனியுங்க. அப்புறமாய் அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்”- விளக்கத்தார் சற்று உணர்ச்சிவசப்பட்டவர். முணுக்கென்று கோவம் வந்துவிடும்.

”தம்பி! கோவம் கண்ணை மறைச்சிடும். அவுங்க கிடக்காங்க. தமிழ்ச் சான்றுகளை நீ சொல்லு. நான் கேட்கிறேன்.”

”இல் என்றால் இடம் என்றேனா? இருத்தல் வினையும் அதிற் கிளைத்தது என்றேனா?. ஈ என்றால் அம்பு என்ற பொருளுண்டு. இல்>இள்>ஈள்>ஈட்டு என்றால் செலுத்து, குத்து என்று பொருள். ஈட்டுதலின் கருவிப் பெயர் ஈட்டி. ஈல்தல்/ஈர்தல் என்றால் பிரித்தல், பிளத்தல் என்ற பொருளுண்டு. ஈல்>ஈர்>ஈ = பிரித்தல், பிளத்தல்”

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்
                                                                 - திருக்குறள் 334

”இல்>ஈல்>ஈலி. ஈலி என்றால் கைவாள் (sword), சுரிகை (dagger) என்ற பொருள்களுண்டு. ஈர்தல் = இரண்டாக்கல் என்ற பொருளுண்டு. பனை, தெங்கு, ஈச்சை போன்றவற்றின் ஓலைக் காம்பை இரண்டாய்ப் பிரிப்பதால் ஈர்க்கு என்ற சொல்லும் எழும். அதே போல ஈரும் பொருள் நிறைந்த மரம் ஈந்தெனும் பெயர்பெறும்.. பேச்சுவழக்கில் ஈச்ச மரமாகும். ஈர்-இரு-இரள்-இரண்டு என்ற சொற்களும் கூட இந்த இல்-ஈலிற் பிறந்தவை தான். ஓர் எண்ணை இன்னொன்றால் வகுப்பதும் ஈல்தல் தான். அப்படி வகுத்துவரும் எண்ணை ஈல்வு>ஈர்வு>ஈவு என்று சொல்கிறோமே?”

”இந்த இல், ஈல் சொற்களுக்குள் இவ்வளவு குத்தல், பிரிவு வேலை இருக்கா? துளைப் பொருள் நீண்டு, தமிழில் இவ்வளவு சொற்களா?”

”இன்னும் ஏகப்பட்ட சொற்கள் இருக்கு அண்ணாச்சி! இப்பொழுது ஒரு ஆறு, போகும் வழியில் இரண்டாய்ப் பிரிந்து மீண்டும் கூடுகிறது நடுத் தீவிற்கு அரங்கம் என்று பெயர். *அருத்தது>அறுத்தது அரங்கம். அரங்கம் போலவே இன்னொரு சொல் இலங்கை. இல்லியதை (= அறுபட்டதை) இலங்கியது என்பார்கள். (ஈழம் என்பது ஈலில் எழுந்தது.) சிறுபாணாற்றுப் படையில் ஓய்மாநாட்டு மன்னன் நல்லியக் கோடன் ஊராய் மாவிலங்கை என்ற ஊர் சொல்லப்பெறும். அது தென்பெண்ணையாற்றில் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஆற்றுத் தீவு.”

”தமிழ்நாட்டிற்குத் தென்கிழக்கில் இருக்கும் இலங்கைத் தீவும் இப்படிப் பிரிந்தது தானோ?”

”ஆமாம். இதிலென்ன ஐயம்? ஒருகாலத்திற் கடல் மட்டம் உயர்ந்து, முகனை நிலத்திலிருந்து (main land)ஈல்ந்து (>ஈழ்ந்து) பிரிந்தது அந்நிலம். ஈழம், இலங்கை என்ற ஆகிய இரண்டுமே நல்ல தமிழ்ச்சொற்கள். யாரோ புரியாமற் சிங்களமென்று தவறாகச் சொல்ல, அதைப் பிடித்துச் சிலர் தொங்குகிறார்கள். அந்நாட்டின் பெயரே தமிழ்ப் பெயர் அண்ணாச்சி. நமக்கங்கு இடமில்லை என்று சிங்களன் சொல்கிறான். நாமோ ஒற்றுமையின்றிக் கோட்டை விடுகிறோம். இல்>ஈல் நமக்கு அவ்வளவு முகனைச் செய்தி.”

”அப்படி என்னப்பா முகனைச் செய்தி?”

”அண்ணாச்சி, பழந்தமிழகம் என்பது இற்றைத் தமிழ்நாடு மட்டுமல்ல; இலங்கைத்தீவும் அதற்குத் தெற்கே கடலுள் மூழ்கிய பகுதிகளும் அதனோடு சேர்ந்தவை தான். இற்றைத் தமிழ்நாடு ஈழம் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட கடற்பகுதியும், குமரிக்குத் தெற்கே கடல்கொண்ட பகுதிகளும் எனத் தமிழர் கடலுக்கு இழந்தது ஏராளம் அண்ணாச்சி. குமரிப் பெருநிலம் என்று நாம் சொன்னாற் கேலி செய்பவர்களும், மறுக்கிறவர்களும் கேலி செய்து மறுக்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கென்ன வந்தது? ஏமாளியாய் நாம் இருக்கும் வரை ஏமாற்றுக்காரன் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பான்.”

”ஆமாம் தம்பி. ஏமாறலில் இரண்டு பக்கமுண்டு, தெரியுமோ?”

”இன்னொரு செய்தியைப் பாருங்கள். ஆங்கிலத்தில் isle என்ற சொல் உண்டு தானே? அதை வெள்ளைக்காரன் எப்படி எழுதிப் பலுக்குகிறான். ஈல்>ஈழ் என்று தானே? ”சொல்லின் தோற்றம் தெரியாது” என்று அவர்கள் அகரமுதலியிற் போட்டிருப்பார்கள். island என்பதற்குத் ”நீர் மேலிருக்கும் நிலம்” என்று சுற்றி வளைப்பார்கள். ஈழம் என்ற சொல்லைப் பார்த்தாற் சுற்றி வளைக்க வேண்டாம். முகனை நிலத்திலிருந்து ஈல்ந்தது என்று சொல்வதில் ஓர் அறிவியல் உண்மையிருக்கிறது. கூர்ந்து கவனியுங்கள் ஈழமெனும் விதப்புப் பெயர், உலகத் தீவுகளைக் குறிப்பதற்கு மேலை நாடுகளிற் பொதுமைப் பெயராய் ஆகியிருக்கிறது. அப்படியெனில் முதலிற் தமிழன் கடலோடியது எப்பொழுது? நாமோ ஈல்>ஈழம் தமிழில்லை என்று சொல்லித் திரிகிறோம். தமிழனைப் போன்ற அடிமுட்டாள் கிடையாது அண்ணாச்சி.”

”இப்பொழுது சொன்னாய் பாரு, அது உண்மை. ரொம்ப நாளாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். தமிழனைப் போல அடிமுட்டாள் கிடையவே கிடையாது. இல்லையா?”

”அண்ணாச்சி, இல்லை என்று சொன்னவுடன் இன்னொன்று ஞாவகத்திற்கு வருகிறது. இல்-தல் என்று சொன்னால் துளைத்தல் என்று சொன்னேன் அல்லவா? துளைத்த பின் குறிப்பிட்ட இடத்தில் உள்ளீடு இருக்காதல்லவா? அதனால் இன்மைப் பொருளும் இல்லிலிருந்து, துளைப்பொருளிலிருந்து, எழும்பியது. இன்மைப் பொருளில் இருந்து ”இலம்பாடு” போன்ற வறுமைச்சொற்கள் எழுந்தன. இலகு போன்ற நொய்மைச் சொற்களும், இலவு போன்ற மென்மைச் சொற்களும் இல்லில் எழுந்தவை தான். நூறாயிரத்தைக் குறிக்கும் இலக்கம் என்ற சொல் நொய்மைப் பொருளில் எழுந்த சொல். வேர் தமிழில் இருந்து பின் வடக்கே போய்ப் பெயர்ச்சொல்லாகி மிகப் பின்னாளில் தமிழுக்குள் கடன்வந்த சொல். அதை விவரிக்கத் தொடங்கினாற் பெருகும் என்பதாற் தவிர்க்கிறேன். நூறு, ஆயிரம், இலக்கம், நெய்தல், குவளை, கோடி, ஆம்பல், தாமரை, வெள்ளம் போன்ற எண்களைப் பற்றி இன்னொரு நாள் பார்ப்போம்.”

”சரி எண்களை விட்டிடுவோம். ஆனால் இல்லையென்று சொல்கிறோமே, அதுவும் இல்லிலிருந்து தானா?”

”ஆமாம். இன்னொன்றையும் பாருங்கள். இல்லிக் கொண்டே போனால் என்னாவாகும்? ஒரு மட்டத்திருந்து இறங்குவோம் தானே? இல்லித்தது இலியும்; பின் இழியும். இழிதல் என்றால் இறங்குதல். இந்தச் சொல் நீர்மம் இறங்குதற்கு விதப்பாய்ப் பயனாகும். இழிவு என்னும் தாழ்ச்சிப் பொருளும் இதில் எழுந்தது தான். இழிகுதல்>இயிகுதல்>ஈகுதல்>இகுதல் என்ற வளர்ச்சியில் இறங்குதலுக்கு இன்னொரு சொல்லும் எழும். (ழகரம் யகரமாய் மாறுவது வட தமிழ்நாட்டுப் பழக்கம்.) இகுத்தல் என்னும் பிறவினை தாழ்த்தற் பொருள்கொள்ளும். இகழ்தல் வினையும் கூட இகுதலின் நீட்சி தான்.”

No comments:

Post a Comment