Wednesday, July 27, 2011

சங்ககாலக் கவிதைகளின் தொடர்ச்சி - இமையம்
“கல்போல் பிரியலம் என்ற சொல்தாம்
மறந்தனர் கொல்லோ” - (அகம்)

மழை மரம் கவிதை நூலில் உபதேசங்கள், தத்துவங்கள், அறம்சார்ந்த விவாதங்கள் இல்லை.  தனக்கான எல்லா அடையாளங்களையும் உதறிவிட்டு எழுதியிருக்கிறார் ரவிக்குமார்.  கோட்பாடு சார்ந்து அவர் எழுதவில்லை.  கோட்பாடுகள் அவரைக் குருடாக்கவில்லை.  தினசரி வாழ்விலிருந்து கவிதைகளை உருவாக்கியிருப்பதால் அவை பல பரிமாணங்கள் கொண்ட உள்ளீடு நிறைந்தவையாக இருக்கின்றன.  எல்லாவற்றுக்கும் மேலாக நவீன தமிழ்க் கவிதைகள் செய்கிற மாய்மாலங்கள் எதுவும் இந்நூலில் இல்லை.  கவிதை என்பது சொற்களுக்கு உயிரூட்டுவது.
ரவிக்குமாரினுடைய மழை மரம் கவிதை நூலை படிக்கும்போதே அகநானூறு பாடல்களை படிக்க வேண்டும் என்று தோன்றியது.  அகநானூறு பாடல்கள் காதலை மட்டுமே பேசின.  அதோடு பிரிவின் துயரத்தை, ஆற்றாமையை, இயலாமையை, காதலின் வெம்மையைப்பற்றி மட்டுமே பேசுகிறது.  மழை மரமும் அதையேதான் பேசுகிறது.  காலங்கள்வேறு, காதலர்கள் வேறு, மொழிவேறு.  ஆனால் கவிதையின் மையம் ஒன்றுதான்.  அதாவது துக்கம், காதலியின் பிரிவால் அல்லது காதலனின் பிரிவால் புலம்புவது.  அதுவும் இயற்கையிடம் சொல்லி புலம்புவது.  ரவிக்குமாருக்கு அணில்,  குளம், நிலவு மரம் போன்ற பலவும் உதவுகின்றன.
“ஓடுகின்ற மேகங்காள் ஓடாத தேர் ஒன்றில் /  வெறுங்கூடு வருகுதென்று கூறுங்கள்” (அகம்)
காதலன் காதலிக்கு செய்தியை மேகத்தின் வழியாக அனுப்புகிறான்.  அதுவும் எப்படிப்பட்ட செய்தியை? தேர் என்றாலே ஓடும்.  ஆனால் இவனுடைய தேர் ஓடாதது.  அந்த ஓடாதத் தேரில் வருவது மனிதனல்ல. உயிரல்ல - வெறும் கூடு.  இது காதலிக்கு அனுப்பக்கூடிய செய்தி.  காதலியை பிரிந்து வாடுகிறவனுடைய துயரத்தை இதைவிட குறைந்த சொற்களில், இவ்வளவு ஆழமாகவும், செறிவாகவும் சொல்ல முடியுமா?  இரண்டாயிரம் வருடங்கள் கழித்து அந்தக் காதலனுடைய துயரம் நம் கண்ணில் கண்ணீரை வரவழைக்கிறது.  ஓடாத அந்தத் தேரில் வெறும் கூடாக போவது காதலன் அல்ல; சங்க கால புலவன் அல்ல; நாம்தான். அந்த உயிரற்ற கூடு ஒவ்வொரு வாசகனையும் இன்றும் நிலைகுலைய வைக்கிறது.  இந்த வரிகள் தந்த வலியை நவீன தமிழ் கவிதை என்று வர்ணிக்கப்படுகிற இன்றைய கவிதைகள் தரவில்லை.  ரவிக்குமார் எழுதுகிறார்;
“நம் பிறப்பையும் ஊர்களையும் / ஏழுகடல்கள் பிரித்திருக்கின்றன” (ப.42)
அகநானூறு பாடல் முடிவடையாத கடல்போல விரிவான ஒரு உலகை காட்டுகின்றன.  அதற்குள் கற்பனை செய்வதற்கு ஆயிரம் ஆயிரம் விசயங்கள் இருக்கின்றன.  அதற்கு அந்த கவிதை இன்றுவரை இடம் தந்துகொண்டேயிருக்கிறது.  அதேமாதிரி ரவிக்குமாரின் வரிகளுக்குப் பின்னாலும் ஒரு உலகம் இருக்கிறது.  அந்த உலகத்திற்குள் என்னால் பயணம் செய்யமுடிகிறது.  கவிதை மொழி என்ற மூடியால் தன்னை மூடி மறைத்துக்கொள்ளவில்லை.  ‘எழுகடல்கள் பிரித்திருக்கின்றன’ என்ற சொல் நம்மை கற்பனை செய்யக்கோறுகிறது.  ஏழுகடல்கள் என்பது எவ்வளவு தூரம்?  ஏழுகடல்கள் தாண்டி இருக்கிற காதலனும் காதலியும் இணைய முடியுமா? உண்மையில் கவிதை எதை உணர்த்த எழுதப்படுகிறது.  கவிதை என்பது சொற்களில் இருக்கிறதா, சொற்கள் விவரிக்கும் உலகத்தில் இருக்கிறதா?
சங்ககால மக்கள் காதலை உணவாக, தண்ணீராக, உயிராக போற்றி கொண்டாடியவர்கள்.  காதல் செய்வதும் போர் செய்வதும்தான் அவர்களுக்கு வாழ்க்கை நெறிமுறையாக இருந்திருக்கிறது.  காதல் என்பது கொடுப்பதுமல்ல பெறுவதுமல்ல.  அது ஒரு நினைவு, உணர்ச்சி.  நினைவை, உணர்ச்சியைப் போற்றி காப்பதுதான் காதல்.  அது ஒரு எலும்புறுக்கிநோய்.  நோயைத்தான் அக்காலமக்கள் கொண்டாடினார்கள்.  ரவிக்குமாருக்கும் அதே நோய்தான்.
“ரத்தத்தில் பிறந்து அதையே தின்று / பெருகும் புற்று நோய்போல / என்னுள் நொடிதோறும் / கிளைத்து பரவுகிறது நேசம் / அதன் பாரம் என்னை அழுத்துகிறது / அதை நீ எடுத்துக்கொள்” (ப.12)
நேசம்-காதல் சுமக்க முடியாத சுமையாக, பாரமாக இருக்கிறது.  அந்த சுமையும் பாரமும் இல்லாமல் இருக்க முடியுமா என்றால் முடியாது.  இது மனித மனத்தின் விசித்திரம் மட்டுமல்ல, சாபமும்கூட.  சாபத்தை கூடைகூடையாக அள்ளத்தான் காலம்தோறும் மனிதர்கள் போட்டிப்போடுகிறார்கள். சுமை வேண்டி மனம் அவஸ்தைப்படுகிறது.  அதனால் மனம் இப்படி கெஞ்சுகிறது.
“உன் குன்றிமணிக் கண்களில் / மிதக்கும் கனவுக்குள் / என்னை எழுதுகிறேன் /
இடம் கொடு என் அணில் குஞ்சே”
இன்று கற்பனைகளில் மட்டுமே காதலிக்கிறார்கள்.  இக்காலத்தில் வீடு கட்டுவதுதான் காதலாக இருக்கிறது.  அதுவே வாழ்க்கையாக இருக்கிறது.  இன்று நாம் கடவுளுக்கும் மதத்திற்கும் கொடுக்கும் முன்னுரிமையை சங்கக்கால மக்கள் காதலுக்குக் கொடுத்தார்கள்.  காதல்தான் அவர்களுக்கு வீடு, உறவு, கடவுள், மதம் எல்லாம்.  அவர்களுக்கு காதலிக்கவும் வாழவும் தெரிந்திருந்தது.  அதனால்தான் அவர்களுக்கு இரவு கொண்டாட்டத்திற்குரியதாக இருந்தது.  நமக்கு தூக்கத்திற்குரியதாக இருக்கிறது.  நமக்கு காதலிக்கவும் தெரியவில்லை.  வாழ்க்கையை வாழவும் தெரியவில்லை.  ரவிக்குமார் இதில் சற்று மாறுபட்டவராக இருக்கிறார்.
“வறுத்த அரிசியின் வாசனையாய் / மனமெங்கும் பரவும் உன் / நினைவை ரசித்தபடி
கோடை வானத்து / நட்சத்திரங்களைக் கோர்த்து / உன் பெயரை எழுதுகிறேன்” (ப.35)
ரவிக்குமார் தன் கவிதைக்கான சொற்களை மூளையை கசக்கியோ நினைவின் அடுக்கிலிருந்தோ, படித்த புத்தகங்களிலுள்ளவற்றை உருமாற்றியோ எடுக்கவில்லை.  மாறாக வாழ்க்கை அனுபவத்திலிருந்து எடுத்திருக்கிறார்.  காதலை எழுதமுடியுமா?  அதற்கு சொற்கள் உண்டா? இதுவரை தமிழில் எழுதப்பட்ட எல்லாக் கவிதைகளுமே காதலை அறிவதற்கான சொற்களை தேடும் முயற்சியே.  ரவிக்குமாரின் சொற்கள் மன அவஸ்தையில், கோபத்தில், வெறுப்பில், கசப்பில் எரியப்பட்ட சொற்கள் அல்ல. அவருடைய கவிதைகள் காமம் சார்ந்தவை அல்ல.  காமத்தை முன்மொழிபவையும் அல்ல.  அவை உள்ளுணர்ச்சிகளின் கணநேர வெளிப்பாடுகள் மட்டுமே.  கவிதை மொழியும், கவிதை விவரிக்கும் அனுபவமும் நமக்கு நெருக்கமானதாக இருக்கிறது.  அதனால் நூலை படித்து முடித்த பிறகும் மழைமரம் - கவிதைகளுக்கும் வாசகனுக்குமான உறவு தொடர்ந்து இருக்கிறது.  இந்த உறவுதான் கவிதை என்பது,  இலக்கியம் என்பது.  சங்கக்கால கவிஞன் மட்டுமல்ல அதற்கு பிறகுவந்த எல்லா தமிழ் கவிஞர்களும், ஏன் உலகிலுள்ள எல்லா கவிஞர்களுமே நிலவை நுணுகிநுணுகிப்பார்த்து ஆராய்ந்து எழுதிவிட்டார்கள்.  நிலவைப்பற்றி ஒரு வரியாவது எழுதாத கவிஞன் என்று உலகில் ஒருவரைக்கூட காட்டமுடியாது.  ரவிக்குமாரும் இதற்கு விதிவிலக்கல்ல.  அவரும் நிலவைப்பற்றி எழுதியிருக்கிறார்.  யாரும் எழுதாத முறையில். இந்தத் தனித்த பார்வைதான் அவருடைய கவிதைகளுக்கான பலம்.
“உலகத்து காதலர்கள் / உண்டு தீர்த்த பின்பும் / முழுதாய் இருக்கிறது நிலா” (57)
மழைமரம்-நூலிலுள்ள ஐம்பத்தி மூன்று கவிதைகளுக்கும் தலைப்புகள் வேறுவேறாக இருக்கலாம்.  ஐம்பத்தி மூன்று கவிதைகளும் ஒரே விசயத்தைத்தான் பேசுகின்றன.  நேசம் கொண்டதால் ஏற்பட்ட வலி.  ஐம்பத்தி  மூன்று வகையான காயங்கள், வலிகள்.  ஐம்பத்தி மூன்று குன்றிமணிகளை கோர்த்த ஒரு மணி- மழைமரம்.  மழையை விட மரத்திலிருந்து பொய்யும் மழைதான் கூடுதல் குளிரை தரும்.  உடலில் சிலிர்ப்பையும் நடுக்கத்தையும் தரும்.  மழைவிட்ட பின்பும் பெய்யும்-மரத்தின் மழை.
“அந்த மரம் / மழையைத் தன்னோடு / விளையாட அழைத்தது / மழை இலைகளில் பூத்தது.... / ஒருமழை கிளம்பியது / மரத்திற்குள்ளிருந்து” (ப.43)
ரவிக்குமாரின் கவிதைகளில் மரம், மழை, அணில், நிலவு, வறண்ட குளம், கோடை, புழுதி, கோரைப்பாய் போன்றவை திரும்பத்திரும்ப வருகின்றன.  இயற்கை சார்ந்த விசயங்களும் அன்றாட வாழ்வியல் சார்ந்த விசயங்களும் இரண்டற கலந்து கிடப்பது சங்கக்கால கவிதைகளின் தொடர்ச்சி எனலாம்.
“சொற்களின் சாவிக் கொத்தில் / எது உன்னைத் திறக்குமெனத் தெரியாது”
ரவிக்குமாரின் இந்த வரிகள் வாசகனுடைய கற்பனைக்கான கதவை திறந்து விடுகிறது.  நேசம்-அன்பு-காதல் என்பது சுமக்க முடியாத பாரமாக இருக்கிறது.  சுமை இறக்கிவைக்கவும் முடியவில்லை.  சுமை இல்லாமலும் வாழ முடியவில்லை.  இதுதான் மனித வாழ்வின் புதிர்.  நேசத்தை சுமக்க முடியாதபோது ஏற்படும் தத்தளிப்பு, ஆற்றாமை துன்பமாக இருக்கிறது.  அது இல்லையென்றால் பெரும் துன்பமாக இருக்கிறது.  மனித வாழ்க்கை துன்பத்தை நோக்கியப் பயணம்தான்.  ரவிக்குமாரின் கவிதைகள் காதலியின் அருகாமையை நாடுவதல்ல.  அதற்கான ஏக்கமோ புலம்பலோ அல்ல.  பிரிவினால் ஏற்பட்ட கசப்பும் அல்ல.  உள்ளத்தை அடைவதற்கான வழி உள்ளத்தைத் தருவது.  ரவிக்குமார் காதலை வழிபடுகிறார்.  அவருடைய பக்தி அதில்தான் இருக்கிறது.  காதல்-நினைவு, ஒரு கற்பனை.  அந்த கற்பனை எவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது.  கற்பனை தரிசனம் எளிதில் கிட்டுவதில்லை.  இச்சையால் ஒருபோதும் காதல் மட்டுமல்ல, கவிதையும் வராது.
“தருவதைவிடவும் கடினமானது /  பெறுவதுதான்”
மழை மரம் நூலில் நேரில் நிற்கும் பெண்ணாக இருக்கிறாள் வாசவதத்தை.  அவள் உபகுப்தனை சந்தித்த மறுகணமே தன் காதலை மட்டுமல்ல, தன் உயிரையும் அர்ப்பணிக்க தயாராகிறாள்.  ஒவ்வொரு கணமும் அர்ப்பணிப்புக்காகக் காத்திருக்கிறாள்.  அர்ப்பணிப்புக்கான காத்திருத்தல்தான் அவள் வாழ்க்கை.  அவளுடைய அர்ப்பணிப்பை  புறக்கணிப்பதில்  தான் உபகுப்தனின் வாழ்க்கை நெறி இருக்கிறது.  ஆனால் அவளுடைய நேசத்தை கடைசிவரை ஏற்காத உபகுப்தன் மீது நமக்கு கோபம் வருகிறது.  நம்முடைய கோபம் நியாயமானதுதானா?  ‘தருவதைவிடவும் கடினமானது பெறுவது’ என்பது கௌதம புத்தனின் சீடனுக்கு தெரியாதா?  காவி ஆடையை எதற்காக அவன் அணிந்திருக்கிறான்.  காதலின் பெரும் சுமை என்பது என்னவென்று அறியாதவனா?  அந்த சுமையை சுமக்கவா அவன் காவி ஆடையை அணிந்திருக்கிறான்.  அவனுடைய பயணம் வாசவதத்தையின் நேசத்தை ஏற்பதற்காக அல்ல.  திருவோட்டுடன் அதுவும் என்றுமே நிரம்பாத திருவோட்டுடன் மனித வாடையற்ற தெருவில் அலைவதுதான் அவனுடைய வாழ்க்கைநெறி.
“நிரம்பாத திருவோட்டுடன் /  மனிதர்கள் அற்ற தெருவொன்றில் / இரந்துகொண்டிருந்த” (ப.28)
‘காலைக் கிரணங்கள் நம்மை’ என்பது மற்றொரு முக்கியமான கவிதை.  இக்கவிதை ஒரு அழகிய ஓவியம்போல தீட்டப்பட்டிருக்கிறது.  காட்சிகள் கண்களில் படர்கிறது.  அதனால்தான் கோரைப்பாயில் வரையப்பட்ட மான்கள் காதலியின் தோளில் இளைப்பாறுகின்றன.  கவிதைக்குப்பின்னால் ஒரு காட்சி அல்ல, பல காட்சிகள் இருக்கின்றன.  ஒரு கதை-சம்பவம், வாழ்க்கை இருக்கிறது.  இந்தப் பண்புதான் ரவிக்குமாரின் கவிதைகள் சங்ககாலக் கவிதைகளின் தொடர்ச்சி என்று காட்டுவது.  காதலை சொல்ல நாம் கூடைகூடையாக சொற்களை சுமந்துகொண்டு திரிகிறோம்.  காதலை சொல்ல, அதை அறிய, அதை பெற சொற்கள் எந்தவிதத்தில் உதவும்?  காதல், நேசம், உறவு என்பது சொற்களை தவிர்த்தவை என்பது நமக்கு எப்போது புரியும்?  கவிஞருக்குப் புரிந்திருக்கிறது.
“சொற்களைக் கைவிட்டு /  சங்கேதங்களால் பேசிக்கொள்ளத் / தொடங்கியிருக்கின்றன” (ப.49)
சில கவிதை நூல்கள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்.  சில நூல்கள் கவிதை எழுதத் தூண்டும்.  ரவிக்குமாரின் மழை மரம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது.  இதற்கு காரணம் கவிதைக்குள் இருக்கிற, கவிதை விவரிக்கிற வாழ்க்கைதான்.  சொற்கள்தான் கவிதையை, வாழ்க்கையை கட்டமைக்கின்றன.  சொற்கள் வாழ்க்கைக்கு வலு சேர்க்கிறதா, வாழ்க்கை சொற்களுக்கு வலு சேர்க்கிறதா?  கவிஞன் எவற்றில் தோய்ந்துநிற்கிறான்.  எது கவிதை, யார் கவிஞன் என்பதை எது தீர்மானிக்கிறது.  கவிஞர் சொற்களால் கட்டமைத்து உருவாக்கிக் காட்ட, உருவாக்கிய உலகம் எது?    காதலிப்பவர்கள் எல்லாம் கவிதை எழுதுவதில்லை.  அவ்வாறு எழுதப்படுவதெல்லாம் கவிதைகளும் அல்ல.  ரவிக்குமார் எழுதியிருப்பது கவிதையாக இருக்கிறது.
“காற்றில் பயணித்த / மகரந்தத்தூள் ஒன்று /  சூலகத்திற்குள் விழுவதுபோல்
 விழுந்துவிட்டேன்” (ப.41)
இக்கவிதை தரும் பொருள், அனுபவம் என்ன என்பதை மெத்த படித்தவனால்தான் புரிந்துகொள்ள முடியும் என்பதில்லை.    எளிமையும் நேரடித்தன்மையும் தற்காலத் தமிழ்க்கவிதைக்கு புதியதொரு முகத்தைக் கொடுத்துள்ளது.  நவீன  தமிழ்க் கவிஞர்களும், கவிதைகளும் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் வாசகனை மிரட்டுபவை.  சங்கக்கால கவிதைகள் இன்றும் உயிரோட்டத்துடன் இருக்கின்றன.  அக்கவிதைகள் தருகிற வலி, துக்கம் இன்றும் வாசகனை நிலைகுலைய வைக்கின்றன.  நவீன கவிதைகள் ஏன் எந்த அனுபவத்தையும் தருவதில்லை?  எழுதப்பட்ட ஆறுமாதங்களுக்குள்ளாக கவிதையை எழுதிய கவிஞனாலேயே அக்கவிதை படிக்கப்பட முடியாமல் போவதற்கு எது காரணம்?  இதுகுறித்து நவீன தமிழ்க் கவிஞர்கள் சிந்திப்பார்களா?  நவீன தமிழ்க் கவிதையின் பிம்பம் வாசகனை மிரட்டுவது மட்டுமல்ல, கவிதையின் ஆன்மாவை நெருங்க முடியாதபடி தடுப்பது.  அதனால் இன்று வாசக பரப்பில் கவிதைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.  நவீன தமிழ்க் கவிதை உணர்த்துவது சங்கக்காலக் கவிஞர்கள் வாழ்ந்த இலக்கிய பெருவாழ்வில் நாம் ஒரு துளிகூட வாழவில்லை என்பதைத்தான்.  நாம் வாழவே இல்லையோ என்று சந்தேகம் வருகிறது.  அதுதான் நிஜமோ.  தமிழின் நவீன கவிஞர்கள் தங்களுக்கென்றும், தங்களுடைய கவிதைக்கென்றும் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் எதுவும் ரவிக்குமாரின் கவிதைகளில் இல்லை.  தன் கவிதை பல முறை படித்தால்தான் புரியும் என்று அவர் கூறவில்லை.  ஆத்ம திருப்திக்காக எழுதுவதாகவும் அவர் அறிவிக்கவில்லை.  கவிதையில் புரட்சி செய்ததாகவும் தம்பட்டம் அடிக்கவில்லை.  மாறாக மனதில் எழுந்த உணர்ச்சிகளுக்கு சொற்களின் மூலமாக ஒரு வடிவத்தைத் தந்திருக்கிறார்.  அதற்கு உதாரணமாக ‘தாமரையோ அல்லியோ இல்லாத’- என்று துவங்கும் கவிதையைச் சொல்லலாம்.
“கரையில் இருக்கும் நாணலைப் பறித்து / குளிக்கும் வானில் / உன் பெயரை எழுதுவேன் / பசி கொண்ட மீன்கள் அதை /  இரையென்று கவ்வுவதைக்/  கண்ணீர் மல்கப் பார்த்தபடி அமர்ந்திருப்பேன்” (ப.32)
“யாரோ கனவை, வெட்டிச் சாய்க்கிறார்கள்” (ப.60) என்று பாலை இரவு என்ற கவிதையில் ரவிக்குமார் எழுதுகிறார்.  தெறிப்பான இதுபோன்ற வாக்கியங்களை நாம் பல இடங்களில் பார்க்க முடியும்.  சாதாரணமாக இருப்பதுபோல தோன்றினாலும் இவை எளிய, கவிதைகள் என்று சொல்ல முடியாத அளவுக்கு பல சித்திரங்களை தனக்குள் கொண்டிருக்கின்றன.  ரவிக்குமாரின் கவிதைகள் ஜோடனைகளை, பாவனைகளை தவிர்த்தவை.  எளிமைதான் அதன் பலம்.  நம் காலத்தில் போர் செய்வதற்கு வாய்ப்பில்லை.   போர் செய்தாலும் நியூட்ரான் குண்டுகள் மட்டுமே போர் செய்யும்.  அன்பும் நேசமும் பகிர்ந்து கொள்ள வேண்டியவை.  காதல் தரும் வலியை வலிமையாகவும் நுட்பமாகவும் பதிவு செய்திருக்கிறார் ரவிக்குமார்.  தமிழ் சினிமாவின் நாயக நாயகிகள் ஓயாமல் உமிழ்ந்து கொண்டேயிருக்கிற சொல் காதல்.  ரவிக்குமாரின் சொற்கள் வேறு ஒரு காதலை காட்டுகின்றன.  பசியைவிட பெரிய தீயாக மனிதனை எரித்துக்கொண்டிருப்பது காதல்.  என்றுமே அணையாத இந்தத் தீயை என்ன செய்வது?  அந்தத் தீ மனதை ஓயாமல் பொசுக்கிக்கொண்டே இருக்கிறது.  மனம் பொசுங்கும்போது ஏற்படும் வலிதான் ரவிக்குமாரின் கவிதைகள்.  மழை மரம் அதன் எளிமையில் ஒளிர்கிறது.  கவிதைக்கு எளிமைதான் பலம்.
க்ரியா தனக்குத்தானே நூலாக்கத்தில் போட்டியை ஏற்படுத்திக்கொண்டு பல முன்மாதிரிகளை உருவாக்குகிற பதிப்பகம்.  மழை மரம் நூல் தயாரிப்பு வரும் காலத்தில் தயாரிக்கப்படும் பல நூல்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும்.

--------------
மழை மரம்
ரவிக்குமார்
க்ரியா பதிப்பகம், 18. பிளாட் எண்:3, தெற்கு அவன்யூ, திருவான்மியூர், சென்னை - 41.
விலை - 65,

No comments:

Post a Comment