Tuesday, September 13, 2011

11. மாற்று மருத்துவமா? ஏமாற்று வேலையா?
நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து அதை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை வாழமுடியும் என்பது எவ்வளவு உண்மையோ, அதேயளவு உண்மை, நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளா விட்டால் அதன் மோசமான பக்கவிளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும் என்பது.

ஆனால் இது தொடர்பில் நீரிழிவு நோயாளிகள் பலரும் உரிய கவனம் செலுத்துவதில்லை என்கிறார்கள் நீரிழிவு நோய் நிபுணர்கள்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளத் தவறினால் ஏற்படும் பல்வேறு பின்விளைவுகளில் முதன்மையானது, அவர்களின் நோய் எதிர்ப்புத்தன்மை குறைந்துவிடுவது என்பதாகும். இதன் விளைவாக, மற்றவர்களைக் காட்டிலும் நீரிழிவு நோயாளர்களுக்கு தொற்றுநோய் வேகமாக பரவும் என்கிறார் நீரிழிவு நோய் நிபுணர் பாலாஜி.

அடுத்ததாக, நீரிழிவு நோய் இரத்த நாளங்கள் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் தன்மை கொண்டது என்பதால், தலை முதல் கால் வரை மனித உடலின் சகல பாகங்களிலும் இதன் பின்விளைவுகள் வெளிப்படும். குறிப்பாக, கண், இதயம், சிறுநீரகம் மற்றும் கால்களில் இது ஏற்படுத்தும் நேரடி பாதிப்புக்கள் உயிராபத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.

நீரிழிவு நோயின் தாக்குதலில் இருந்து ஒருவரை பாதுகாத்துக் கொள்வதற்கு இன்றைய நிலையில் இருக்கும் ஒரே வழி என்பது அலோபதி முறையிலான தொடர் மருத்துவ சிகிச்சை முறை மேற்கொள்வது மட்டுமே. ஆனால் பலரும் இதை செய்வதில்லை என்பதோடு, இந்தியா இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளில், சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட பல்வேறு மாற்று மருத்துவ சிகிச்சை முறைகளை நாடிச் செல்கிறார்கள்.

இதன் பின்னணியில் பல்வேறு பொருளாதார மற்றும் உளவியல் காரணிகள் இருப்பதாக கூறப்படுகிறது. காரணங்கள் எவையாக இருந்தாலும், விளைவுகள் என்னவோ விபரீதமாகவே இருக்கின்றன. அதாவது மாற்று மருத்துவத்தை நம்பிச்சென்ற நீரிழிவு நோயாளர்கள் பலர் நீரிழிவு நோய் முற்றிய நிலையில் அல்லது அதன் பக்கவிளைவுகள் மோசமடைந்த நிலையில், அலோபதி மருத்துவத்திற்கு திரும்புவது என்பது ஏறக்குறைய அன்றாட நிகழ்வாகி வருகிறது.

ஏராளமானவர்கள் மாற்று மருத்துவம் என்கிற பெயரில் பல்வேறு சிகிச்சை முறைகளை நாடிச்சென்றாலும், விஞ்ஞான ரீதியில் அந்த சிகிச்சை முறைகள் எவையும் நிரூபிக்கப்படவில்லை என்கிறார் நீரிழிவு நோய் நிபுணர் மோகன்.

அலோபதி மருத்துவத்தின் மருந்து மற்றும் சிகிச்சை முறைகளை பரிசோதிப்பதற்கு உலகெங்கும் ஏற்கும் நடைமுறை இருப்பதை சுட்டிக்காட்டும் மருத்துவர் பாலாஜி, அந்த நடைமுறைகளின் அடிப்படையில் இந்திய உபகண்டத்தில் இருக்கும் மாற்று மருத்துவத்தின் சிகிச்சை செயற்பாடுகள் எவையும் இதுவரை நீரிழிவை குணப்படுத்துவதாக நிரூபிக்கப்படவில்லை என்கிறார்.

மாற்று மருத்து சிகிச்சை நடைமுறைகளே விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்படாத சூழலில் தினமும் வெறும் பாகற்காய் ரசம் சாப்பிட்டாலே நீரிழிவு நோய் குணமாகிவிடும் என்பதற்கெல்லாம் மருத்துவ ரீதியில் எந்தவித ஆதாரங்களும் இல்லை என்கிறார் நீரிழிவு நோய் தொடர்பான உணவியல் நிபுணர் இந்திரா பத்மாலயம்.

நீரிழிவைப் பொறுத்தவரை, மாற்று மருத்துவத்தின் பயன்பாடு விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்படும் வரை நீரிழிவு நோய்க்கு அலோபதி மருத்துவமே பயனுள்ளது என்று கூறும் மருத்துவர் மோகன், அதன் பக்கவிளைவுகள் தொடர்பில் ஆண்டுதோறும் பரிசோதனைகள் செய்துகொள்வது அவசியம் என்றும் வலியுறுத்துகிறார்.

2 comments:

 1. இந்தக் கட்டுரை தவிர இப்பிரிவில் உள்ள எஞ்சிய 10 கட்டுரைகளும் ramasamy winmaniram @twitter-ல் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

  naturalfoodworld.wordpress.com பார்த்திடக் கோருகின்றோம்.

  எமது வலைப்பூ rssairam.blogspot.com-செய்திச் சுடர்

  ReplyDelete
 2. அலோபதி மருத்துவர்கள் எவரும் மாற்று மருத்து முறை எதையும் ஒப்புக் கொண்டதாக அலோபதி மருத்துவம் தோன்றிய காலம் தொட்டு சான்றுகள் இல்லை.

  சீனா போன்ற நாடுகள் எவ்வளவு முயன்றும்,மக்களுக்கு மாற்று மருத்துவதைப் பரிசீலிக்கலாம் என்ற நம்பிக்கை வருவதில்லை;அலோபதி மருத்துவத்தின் மருந்துப் பொருள்கள் தயாரிக்கும் லாபியின் வலிமை அவ்வளவு பெரிது..

  மாற்று மருத்துவ முறைகள் அமைப்பு ரீதியாக வலிமையாக இல்லாதது இதற்கான முக்கியக் காரணம்.

  சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு சித்த மருத்துவ முறையில் இயங்கிய ஆர்எம்பிக்கள் இப்போது எங்கே போனார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் சமுதாயத்திற்கு அளித்த பங்களிப்பை உங்களுடைய பாட்டன், பாட்டிகளிடம் கேட்டுப் பாருங்கள்..

  அலோபதி மருத்துவ முறையின் சோதனை முறைகளின் நன்மையை ஏற்றுக் கொண்டு மாற்று மருத்துவ முறைகள் உட்பட அனைத்தையும் ஆய்ந்து வேண்டியதை தேர்ந்தெடுப்பதே புத்திசாலித் தனம்.

  ReplyDelete