Tuesday, September 13, 2011

9. சிறுவயதில் வரும் முதல் ரக நீரிழிவு நோய்
இந்தியாவில் சுமார் நான்கு முதல் எட்டு லட்சம் குழந்தைகள் டைப் ஒன் எனப்படும் முதல் ரக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் இந்த முதல் ரக சர்க்கரை நோய் என்பது குழந்தை பிறந்தது முதல் முப்பது வயது வரை தாக்கும் தன்மை கொண்டது.

இந்த முதல் பிரிவு சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பில் இது வரை உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் எட்டப்படவில்லை.

இதுவரை செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகளின்படி சில வகையான வைரஸ்கள் மனித உடலை தாக்கும்போது மனித உடலில் இயற்கையிலேயே இருக்கும் நோய் எதிர்ப்புச்செல்கள் அந்த வைரஸை எதிர்த்து அழிக்கும் ஒருவித நோய் எதிர்ப்பு வேதிப்பொருளை உடலில் உருவாக்குகிறது.

இந்த நோய் எதிர்ப்பு வேதிப்பொருளானது, திடீரென்று கணையத்தை தாக்கி அதில் இருக்கும் இன்சுலின் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்களை முற்றாக அழித்து விடுகிறது. இதனால் கணையமானது இன்சுலின் சுரக்கும் தன்மையை இழந்து விடுகிறது. விளைவு முதல் ரக நீரிழிவு நோய்.

அதாவது, மனித உடல், வைரஸ் தாக்குதலில் இருந்து தன்னை காப்பதற்றிக்கொள்வதற்காக உருவாக்கும் நோய் எதிர்ப்புத்தன்மை என்கிற தற்காப்புக்கவசம், அதே மனித உடலின் ஒரு பகுதியான கணையத்தின் செல்களை தாக்கி அழிப்பது ஏன் என்பது இதுவரை புரியாத மருத்துவ புதிராக இருந்து வருகிறது.

அதேசமயம், இந்த குறிப்பிட்ட வைரஸ் தாக்கும் எல்லோருக்குமே இப்படி நடப்பதில்லை என்கிறார் இது குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள நீரிழிவு நோய் நிபுணர் மருத்துவர் ராமச்சந்திரன். பிறக்கும்போதே, சில குறிப்பிட்ட மரபணுக்களை தங்களின் உடலில் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே இந்த ரக நீரிழிவு நோய் உருவாவதாக அவர் தெரிவித்தார். ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு இந்த முதல் ரக நீரிழிவு நோய் வந்திருந்தால், அவர்களின் சகோதர சகோதரிகளுக்கு இதே ரக நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப் பதாகவும் அவர் கூறினார்.

இந்த ரக சர்க்கரை நோய் தாக்குவதை முன்கூட்டியே தடுக்க முடியாது என்பதுடன், இந்த நோயின் அறிகுறிகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும்போது, அந்த குழந்தைக்கு நீரிழிவு நோய் ஏற்கெனவே வந்துவிட்டிருக்கும் என்பதால் இந்த குறிப்பிட்ட ரக நீரிழிவு நோயை அதன் அறிகுறிகளை வைத்து முன்கூட்டியே அறிந்துகொள்வதோ, அல்லது அதன் ஆரம்பகட்டத்தில் கண்டுபிடிப்பதோ, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ சாத்தியமில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

மருத்துவரீதியில் பார்த்தால், முதல் ரக நீரிழிவு நோயாளர்கள் அனைவருமே மற்ற எல்லோரையும் போலவே ஆரோக்கியமான முழுமையான வாழ்க்கையை வாழமுடியும். ஆனால் அவர்கள் அனைவரும் தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் இருப்பது அவசியம். இத்தகைய தொடர் சிகிச்சையும், கண்காணிப்பும் சிறுவயது குழந்தைகளுக்கு அளிக்கும் பொறுப்பு என்பது அவர்களின் பெற்றோர்களையே சாரும் என்பதால், இதன் தாக்கங்கள் அவர்களையே அதிகம் பாதிக்கும்.

இந்த நோய் வந்த பிறகு, தினமும் ஒன்றுக்கும் மேற்பட்ட இன்சுலின் ஊசிகள் போட்டுக் கொள்வதன் மூலம், பாதிக்கப்பட்ட குழந்தை ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். அதேசமயம் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று தொடர்ந்து கண்காணிக்கப்படுவது மிகவும் அவசியம்.

இப்படி அன்றாடம் ஒன்றுக்கு மேற்பட்ட இன்சுலின் ஊசிகளை போட்டுக்கொள்வதும், தொடர் கண்காணிப்பில் இருப்பதும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கும், அதன் பெற்றோருக்கும் ஏற்படுத்தக்கூடிய பன்முக நடைமுறை சிக்கல்கள் என்ன என்பதை,
இரண்டரை வயதாக இருக்கும்போது முதல் ரக நீரிழிவு நோயால் தாக்குதலுக்குள்ளான சென்னையைச் சேர்ந்த சிறுமி
சவுந்தர்யா, அவரது தந்தை திருமுருகன் மற்றும் தாயார் கவுரி ஆகியவர்களின் பேட்டிகள் மூலம் இந்த பகுதி விளக்க முற்படுகிறது.

இந்தியாவில் ஒரு குழந்தைக்கு முதல்ரக நீரிழிவு நோய் தாக்கினால், அந்த குழந்தையும் அதன் பெற்றோரும் பலவிதமான சமூக மற்றும் பொருளாதார சிக்கல்களை அன்றாடம் சந்திப்பதை அவர்களின் அனுபவங்கள் வெளிப்படுத்துகின்றன.

அதேசமயம், பெற்றோரின் அன்பும், பள்ளிக்கூடத்தின் அரவணைப்பும், சமூகத்தின் சரியான புரிதலும், அன்றாட இன்சுலின் ஊசி பாவனையும் இருந்தால் முதல் ரக நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் சிறுவயது குழந்தைகளும் மற்றவர்களைப்போல வெற்றிகரமான வாழ்க்கை வாழமுடியும் என்பதே மருத்துவர்களின் அறிவுரை.

No comments:

Post a Comment