Wednesday, November 26, 2014

ஃபெர்குஸன் கலவர காலத்தில் நீதிபதி கே.சந்துருவின் முக்கியத்துவம்==============

'அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்' புதிய பதிப்புக்கான பதிப்புரை:

 ==============

”எங்கோ ஓரிடத்தில் அநீதி இழைக்கப்பட்டாலும் அது எல்லா இடங்களிலும் நீதியை அச்சுறுத்துகிறது” என்றார் மார்ட்டின் லூதர் கிங். அது இப்போது நிரூபணமாகியிருக்கிறது.  2014 ஆகஸ்டு மாதம் 9 ஆம் தேதி அமெரிக்காவின் ஃபெர்குசன் என்ற நகரத்தில் மைக்கேல் பிரவுன் என்ற கறுப்பின சிறுவன் ஒரு வெள்ளை இன போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டான். நிராயுதபாணியாக இருந்த அப்பாவி சிறுவனை சுட்டுக்கொன்ற போலீஸ்காரரர்மீது கொலைவழக்கு பதிந்து  நடவடிக்கை எடுக்கவேண்டும் என கறுப்பின மக்கள் கடந்த சில மாதங்களாக அமைதியான முறையில் போராடிவந்தனர்.

ஃபெர்குஸன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரரை குற்றமற்றவர் என க்ரேண்ட் ஜூரி எனப்படும் அமெரிக்க நீதிமன்றம் நவம்பர் 24 ஆம் தேதி விடுதலைசெய்தது. அந்த அநீதியைக் கண்டு கிளர்ந்தெழுந்த கறுப்பின மக்களின் போராட்டம் கலவரமாக வெடித்தது. கட்டிடங்களும் கார்களும் தீக்கிரையாக்கப்பட்டன. ஃபெர்குஸன் நகரில் ஆரம்பித்த கலவரம் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவிவிட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமா ஆப்ரிக்க அமெரிக்க மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தும் கலவரம் ஓயவில்லை.  

மைக்கேல் பிரவுன் என்ற அந்தச் சிறுவனும் அவனது நண்பனும் தெருவில் போய்க்கொண்டிருந்தபோது காரில் வழிமறித்த டாரென் வில்ஸன் என்ற போலீஸ்காரர் அவர்களை இழிவாகப் பேசியிருக்கிறார்,அதற்கு அமைதியாகப் பதிலளித்த சிறுவன் பிரவுனை காருக்குள் இருந்தபடி ஜன்னலின்வழியே கழுத்தைப் பிடித்து இழுத்திருக்கிறார். அவன் திமிறவே தனது துப்பாக்கியால் அந்தச் சிறுவனை சுட்டிருக்கிறார். சிறுவன் பிரவுனும் அவனது நண்பனும் போலீஸ்காரரிடமிருந்து விடுவித்துக்கொண்டு ஓடியிருக்கிறார்கள். காரிலிருந்து இறங்கிய போலீஸ்காரர் வில்சன் அவர்களை நோக்கி சுட்டிருக்கிறார்.அதில் குண்டடிபட்ட பிரவுன் தன்னை சுடவேண்டாமென கைகளை தலைக்குமேல் உயர்த்திக் கெஞ்சியபடி மண்டியிட்டிருக்கிறான்.அப்போதும் விடாமல் அவனை வில்சன் சுட்டிருக்கிறார். அருகில் சென்று அவன் தலையில் சுட்டிருக்கிறார். சிறுவன் மைக்கேல் பிரவுன் மீது 12 குண்டுகள் பாய்ந்திருக்கின்றன. அந்த இடத்திலேயே அவன் இறந்துவிட்டான்.

போலீஸ்காரர் வில்சனை நிரபராதி எனத் தீர்ப்பளித்த க்ரேண்ட் ஜூரி எனப்படும் நீதிமன்ற அமர்வு 12 உறுப்பினர்களைக் கொண்டது. அவர்களில் 9 பேர் வெள்ளையினத்தவர், 3 பேர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள். 12 உறுப்பினர் இருந்தாலும் 9 பேர் சொல்லும் தீர்ப்பே இறுதித் தீர்ப்பாகும் என்பது விதி. அந்த அமர்வில் இடம்பெற்ற வெள்ளையினத்தைச் சேர்ந்த ஜூரி ஒருவரது அப்பாவை 1960களில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்துவிட்டாராம். எனவே அந்த ஜூரி கறுப்பின மக்களுக்கு எதிராகவே செயல்பட்டுவந்தாராம். இந்தப் பின்னணியில் வெளிவந்த ஃபெர்குஸன் தீர்ப்பு கலவரமாக வெடித்ததில் வியப்பில்லை.

நீதிபதி சந்துரு அவர்களின் இந்த நூலின் விரிவுபடுத்தப்பட்ட மூன்றாவது பதிப்பு வெளியாகும் இந்த நேரத்தில் அமெரிக்காவில் வெடித்திருக்கும் கலவரம் இந்த நூலின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. அமெரிக்கக் கறுப்பின மக்கள் அனுபவித்துவரும் நிறவெறிக்கும் இந்திய தலித்துகள் எதிர்கொண்டிருக்கும் சாதிவெறிக்கும் இடையே பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. அதை ஐநா சபையும் அங்கீகரித்திருக்கிறது. சாதிவேற்றுமையும் இனவேற்றுமையைப் போன்றதே என டர்பனில் கூடிய ஐநா மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டதை நாம் அறிவோம். ஆப்ரிக்க அமெரிக்கக் கவிஞர் லாங்ஸ்டன் ஹியூஸ் எழுதிய இந்தக் கவிதை தமிழ்நாட்டில்  பஞ்சமி நிலத்துக்காகப் போராடும் தலித்துகளின் நிலையை நினைவுபடுத்துவதைப் பாருங்கள்:
 
”அவர்கள் தருவதாகச் சொன்ன நிலம் 
எப்போதும் 
உனக்கு முன்னால் 
கொஞ்சதூரத்தில்தான் இருக்கிறது
சாகும்வரையிலும்
அதை நீ அடைய முடியாது
 
ஆனால் உன் பிள்ளைகளின் பிள்ளைகள்
அவர்களின் பிள்ளைகள்
இட்டுச் செல்லப்படுவார்கள் ஒரு இடத்துக்கு
அவர்களுக்கு முன்னால்
கொஞ்சதூரத்தில்தான் இருக்கும் 
அந்த நிலம் ”
 
தமிழ்நாட்டின் நிலைமை அமெரிக்காவின் ஃபெர்குஸன் நகரை ஒத்ததாக இல்லாமலிருக்கலாம்.ஆனால் இங்கிருக்கும் தண்டனை அமைப்பின் சூழல் அதிலிருந்து பெரிய அளவில் வேறுபட்டிருக்கவில்லை என்பதை நாம் மறுக்கமுடியாது. நமது சிறைகளில் இருப்போரின் சமூகப் பின்னணியைப் பார்த்தால் இதைத் தெளிவாக நாம் புரிந்துகொள்ளலாம். 2011 ஆம் அண்டு புள்ளிவிவரப்படி தமிழக சிறைகளில் அப்போது மொத்தமிருந்த தண்டனை சிறைவாசிகள் 5200 பேரில் தாழ்த்தப்பட்டோர் 1609 ( 30.95%), பழங்குடியினர் 176 (3.38%), முஸ்லிம்கள் 671 (12.90%), கிறித்தவர்கள் 999 (19.21%) . இந்த நான்கு பிரிவினரையும் சேர்த்தால் மொத்த தண்டனைக் கைதிகளின் என்ணிக்கையில் அது 66.44% ஆகும்.

 அதே 2011 ஆம் ஆண்டில் தமிழக சிறைகளில் இருந்த விசாரணைக் கைதிகளின் மொத்த எண்ணிக்கை 7682. அதில் முஸ்லிம்கள் 943 (12.27%) தாழ்த்தப்பட்டோர் 2783 (36.22%) பழங்குடியினர் 757 (9.85%).கிறித்தவர்களும் இங்கு அதிக எண்ணிக்கையில் விசாரணைக் கைதிகளாக இருந்துள்ளனர். அவர்களது எண்ணிக்கை 1213 பேர் ( 15.79%) இந்த  நான்கு பிரிவினரையும் சேர்த்தால் 2011 ஆம் ஆண்டில் மொத்தமாக இருந்த  7682 விசாரணைக் கைதிகளில் அவர்களது எண்ணிக்கை 74.14% ஆகும். அமெரிக்க தண்டனை அமைப்பின் கதியும் இதுதான்.அங்கிருக்கும் சிறைவாசிகளில் கறுப்பினத்தவரே அதிகம். ஒபாமா இருமுறை அதிபராக வந்தபோதிலும்கூட இந்த யதார்த்தம் மாறிவிடவில்லை.
*******
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் நீதித்துறைமீது அளப்பரிய நம்பிக்கைகொண்டிருந்தார். இந்திய குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளை வகுத்தளித்து அவற்றைக் காப்பதற்கான நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவர் செய்தார். அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதப்படுத்தும் உரிமைகளின் பாதுகாவலாக நீதித்துறையையே அவர் பார்த்தார். அதற்காக உருவாக்கப்பட்டதுதான் ‘நீதிமன்ற சீராய்வு’ என்பதாகும். “ தீர்வுகள் இருக்கும்போதுதான் உரிமைகள் என்பவை மெய்யானவையாக இருக்கமுடியும். தனது உரிமைகள் மீறப்படும்போது பாதிக்கப்படும் ஒருவர் சட்டபூர்வமான தீர்வைப் பெறமுடியாவிட்டால் உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை. அதனால்தான் நமது அரசியலமைப்புச் சட்டத்தின்மூலம் உரிமைகளை உத்தரவாதப்ப்டுத்துகிற அதே நேரத்தில் அந்த உரிமைகளை நமது நாட்டின் நிர்வாக அமைப்போ, சட்டமன்ற பாராளுமன்றங்களோ பறித்துவிடாதபடி தடுக்கவேண்டியது அவசியமானது. அந்தப் பொறுப்பு நீதித்துறையிடம் விடப்பட்டது, அரசியலமைப்புச் சட்டத்தால் உத்தரவாதப்படுத்தப்பட்ட உரிமைகளின் பாதுகாவல் நீதிமன்றங்கள்தான்” என அம்பேத்கர் இதைத் தெளிவுபடுத்தினார்.
அரசியலமைப்புச் சட்ட அவையில் நீதித்துறைமீதான விவாதங்கள் நடந்த நேரத்தில், ’நீதிபதிகள் ஓய்வுபெற்றபிறகு வேறு பதவிகளில் நியமிக்கப்படுவதைத் தடுக்கவேண்டும்’ என்ற திருத்தத்தை ஒரு உறுப்பினர் கொண்டுவந்தார். ஆனால் அதை அம்பேத்கர் நிராகரித்தார். “ நீதித் துறையானது குடிமக்களுக்கிடையே உள்ள வழக்குகளைத்தான் பெரும்பாலும் கையாளப்போகிறது. அரசாங்கத்துக்கும் குடிமக்களுக்கும் இடையே மிகவும் அரிதாகத்தான் வழக்கு உண்டாகும்” எனவே, நமது நீதிபதிகள் நிர்வாகத் துறையாலோ ஆட்சியாளர்களாலோ செல்வாக்குக்கு ஆளாக்கப்படுவார்கள் என்ற அச்சம் தேவையற்றது என அம்பேத்கர் விளக்கமளித்தார். ஆனால் நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அம்பேத்கர் நமது நீதியமைப்பின்மீது வைத்த அந்த நம்பிக்கை பொய்யாகிக்கொண்டிருக்கிறதோ என்ற ஐயம்தான் நமக்கு எழுகிறது. இருளாகச்சூழும் அத்தகைய ஐயத்தின்மீது நீதிபதி சந்துரு போன்ற ஒருசிலரே அவ்வப்போது நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள்.
நிதிபதி சந்துரு அவர்களின் இந்த நூல் தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது. அவரே பங்கெடுத்த சுமார் ஐம்பது கூட்டங்கள் இதற்காக தமிழகமெங்கும் நடத்தப்பட்டிருக்கின்றன. அண்மைக்காலமாக தமிழகத்தில் சில சுயநல சக்திகள் பரப்பிவந்த வெறுப்பு என்னும் விஷத்துக்கு இந்தப் புத்தகம் ஒரு விஷமுறிவு மருந்தாக செயல்பட்டது என்று சொல்வது மிகையல்ல. அதற்கான அடையாளம்தான் இந்த நூலின் பின்னிணைப்பாகத் தரப்பட்டிருக்கும் மதிப்புரைகள்.
இந்த நூலைப் படித்தபோது எனக்குள் எழுந்த கருத்து இதுதான்: ‘ எங்கோ ஒருவரால் வழங்கப்படும் நீதி எல்லா இடங்களிலும் அநீதிக்கு எதிராகப் போராடுவோருக்கு நம்பிக்கை அளிக்கிறது’. இந்த நூலைப் படிப்பது அந்த நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்வது மட்டுமல்ல, அநீதிக்கு எதிரானப் போராட்டங்களில் பங்கேற்பதுமாகும்.

- ரவிக்குமார்
26.11.2014
   
 
 

Friday, November 21, 2014

கூனல்பிறை


" பின் நவீனத்துவ எழுத்துகளைப் போலிசெய்து தோற்றவர்கள் ஒதுங்கிவிட மீண்டும் யதார்த்தவாத எழுத்தே இலக்கியம் என்ற எண்ணம் தமிழில் வலுப்பெற்று வருகிறது. இந்தத் தொகுப்பில் இருக்கும் ஒளிவித்து ,நீர்முள்ளி ஆகிய கதைகள் அந்தக் கருத்தை உடைக்கின்றன.அந்தக் கதைகள் உரைநடைக்கும் கவிதைக்குமான எல்லையையும் அழிக்கின்றன. யசோதராவையும் ஆரியமாலாவையும் பெண் நோக்கிலிருந்து தேன்மொழி மறுவாசிப்பு செய்திருக்கிறார். மலையாளத்தில் ஸாரா ஜோசப் செய்துவரும் முயற்சிகளுக்கு இணையாக இதைக் குறிப்பிடலாம். 

தற்சுட்டு , நரிகாட்டுத் திடல்,இந்திரகோபம்  ஆகிய கதைகளில் தேன்மொழி சித்திரித்துக்காட்டும் குழந்தைகளின் உலகம் தமிழுக்கு மிகவும் புதியது. நெற்குஞ்சம்  தொகுப்பில் சுனாமியில் இறந்துபோன மகளின் புகைப்படத்தைப் பார்த்துக் கதறும் முதியவர் ஒருவரை படைத்துக்காட்டி சதத் ஹாசன் மண்டோவின் தீவிரத்தைத் தனது படைப்பில் உணரவைத்த தேன்மொழி இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஊமத்தை என்ற கதையில் காட்டியிருக்கும் மூதாட்டியின் பாத்திரதத்தின்மூலம் முதியோரை இந்த சமூகம் நடத்தும் கொடுமையான நிலையை எடுத்துக்காட்டி நமது மனசாட்சியைப் பிடித்து உலுக்குகிறார். தமிழகத்தின் இளைய தலைமுறை மது அடிமைகளாக மாற்றப்படுவரும் இன்றைய சூழலில் இந்தக் கதை மதுவிலக்கின் அவசியத்தை உணர்த்துவதாகவும் இருக்கிறது.

தேன்மொழியின் சிறுகதைகளில் குழந்தைகளும் பெண்களும் தனித்துவத்தோடு படைக்கப்பட்டிருக்கிறார்கள். தற்சுட்டு ,இந்திரகோபம் முதலான கதைகளை எழுதுவது  ஒரு தாயாக இருப்பவருக்கு மட்டுமே சாத்தியமென்றும்,  அவரோகி , பாழ்வாய் உலகு ஆகிய கதைகளில் பேசப்படும் அப்பாவின் சித்திரத்தை  மகளாக இருப்பவரால் மட்டுமே எழுதமுடியுமென்றும் நாம் ஒப்புக்கொண்டால், இந்தத் தொகுப்பின் தலைப்புக் கதையாக இருக்கும்  கூனல் பிறையில் இடம்பெற்றிருக்கும் மனப் பிறழ்வுகொண்ட பெண்ணையும் ,ஆணையும் அந்தக் குழந்தைகளையும் தேன்மொழியால் மட்டும்தான் எழுதமுடியும் என்பதையும் தயங்காமல் ஏற்றுக்கொள்வோம். " 

       - முன்னுரையில் ரவிக்குமார் 


Tuesday, November 18, 2014

ரவிக்குமார் நூல்கள்1       அதிகாரத்தின் மூலக்கூறுகள்- எலியா கனெட்டி 
 தமிழில்:ரவிக்குமார் பக்கங்கள்    40      விலை 25/-

2       எல். இளையபெருமாள்- வாழ்வும் பணியும்  - ரவிக்குமார் பக்கங்கள் 108     விலை 50/-

3       பள்ளிப்பருவம்- ஞானக்கூத்தன் ,இந்திரா பார்த்தசாரதி ,இமையம் உள்ளிட்ட ஆறு எழுத்தாளர்களின் பள்ளிப்பருவ அனுபவங்கள் தொகுப்பு:ரவிக்குமார் பக்கங்கள்    96   விலை 80/-

4      மழைமரம்- ரவிக்குமார்  கவிதைகள் ,க்ரியா வெளியீடு  பக்கங்கள்    72     விலை 65/-

5       சுவாமி சகஜானந்தா  -சட்டபேரவையிலும் மேலவையிலும் ஆற்றிய உரைகள் - ரவிக்குமார்  பக்கங்கள்  143     விலை 90/-

6       வரலாறு என்னும் கதை- எடுவர்டோ கலியானோ தமிழில் :ரவிக்குமார் பக்கங்கள்    109     விலை 70/-

7       கடல் கொள்ளும் தமிழ்நாடு- சூழலியல் கட்டுரைகள் -ரவிக்குமார் பக்கங்கள்    141  விலை    75/-

8       மாமிசம்-  உலகச்  சிறுகதைகள்  தமிழில் :ரவிக்குமார் பக்கங்கள்     63     விலை  40

9      காற்றின் பதியம்- இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்   -ரவிக்குமார் பக்கங்கள்   190   விலை   100/-

10      உரையாடல் தொடர்கிறது- எட்வர்ட் செய்த்  ,மிஷெல் ஃ பூக்கோ,மார்க்யெஸ் ,அகஸ்தோ போவால் உள்ளிட்டோரின்,கட்டுரைகளும் நேர்காணல்களும் தமிழில் :ரவிக்குமார் பக்கங்கள்  152  விலை   100/-

11      கடல் கிணறு- ரவிக்குமார் சிறுகதைகள் பக்கங்கள்     79   விலை    60/-

12      சொல்லும் செயல் - ரவிக்குமாரின்  சட்ட மன்ற உரைகள்      பக்கங்கள் 350    விலை  200/-

13      நூர்ந்தும் அவியா ஒளி-  கா.சிவத்தம்பி  குறித்த கட்டுரைகள்    பக்கங்கள் 128    விலை  100/-

14      வலசைப் பறவை- உலகக்  கவிதைகள்   தமிழில் : ரவிக்குமார் பக்கங்கள் 96   விலை    60/-

15      நூல் ஏணி- தமது ஆசிரியர்களைப்பற்றிய தலித் எழுத்தாளர்களின் பார்வைகள் பக்கங்கள்   96   விலை   80/-

16      எங்களுடைய காலத்தில் தான் ஊழி நிகழ்ந்தது- முள்ளிவாய்க்கால் படுகொலை  குறித்த கவிதைகள் -சேரன் ,லதா ,ரவிக்குமார்  பக்கங்கள்   68   விலை    50/-

17      வெள்ளை நிழல் படியாத வீடு- கறுப்புக் கவிதைகள்  தமிழில் :ரவிக்குமார் பக்கங்கள் 64     விலை  40/-

Sunday, November 16, 2014

அம்பை 70எழுத்தாளர் அம்பை இன்று தனது 70 ஆவது  பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சற்றுமுன் அவரைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன்.  தனது பிறந்த நாளைக் கொண்டாட குடும்பத்தினரோடு கோவா வந்திருப்பதாகச் சொன்னார். 

தமிழ் இலக்கிய உலகில் பெண் ஒருவர் எழுத்தாளராக அங்கீகாரம் பெறுவது அத்தனை சுலபமல்ல. அண்மையில் ஒரு எழுத்தாளர் (திரைப்பட வசனகர்த்தா ?) விளம்பரத்துக்காகக் கிளப்பிய சர்ச்சையில் எப்படியெல்லாம் பெண் எழுத்தாளர்கள் அவதூறு செய்யப்பட்டனர் என்பதை நாம்
பார்த்தோம். அந்த நேரத்தில் அறச்சீற்றத்தோடு அவர் எதிர்வினை புரிந்ததையும் பார்த்தோம். 

அம்பை எழுத்துலகில் நுழைந்த காலமும்கூட பொற்காலம் இல்லை. ஆனால் அவரது உழைப்பும் படைப்புத் திறனும் அவருக்கென ஒரு இடத்தைத் தமிழ் இலக்கிய உலகில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் உருவாக்கித் தந்திருக்கிறது. 

அம்பை படைப்பிலக்கியங்களை உருவாக்கியவர் மட்டுமல்ல. ஆழமான ஆய்வுக் கட்டுரைகளையும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். பெண் எழுத்தாளர்கள், அளுமைகளை அடையாளம்
கண்டு அவர்களின் நேர்காணல்களை ஒலி ஒளி ஆவணங்களாகத் தொகுத்து அவற்றுக்கென மும்பையில் ஒரு ஆவணக் காப்பகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார். தமிழில் எழுதும் இளம் பெண் படைப்பாளிகளை அவரைப்போல் ஊக்குவிப்பவர்கள் எவரும் இருக்க முடியாது. 

மணற்கேணி 26 ஆவது இதழ் ஈழத் தமிழ் அறிஞர் எம்.ஏ.நுஃமான் சிறப்பிதழாக டிசம்பரில் வெளிவருகிறது. அதற்கு அடுத்த இதழை அம்பை 70 என்ற தலைப்பில் சிறப்பிதழாகக் கொண்டுவர மணற்கேணி விரும்புகிறது. அதற்குப் பங்களிப்புச் செய்யுமாறு படைப்பாளிகளையும் ஆய்வாளர்களையும் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கட்டுரைகளை manarkeni@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். 
- ரவிக்குமார் 
ஆசிரியர், மணற்கேணி

Sunday, November 2, 2014

ரவிக்குமார் கவிதை


வானத்தை நோக்கி விட்டெறியும் கனவு
சிலநேரம்
இன்மையிலிருந்து இன்மையைநோக்கிப் பாயும் 
எரிகல்லாய் தடயமற்றுப் போகிறது
சிலநேரம்
மின்மினிப் பூச்சியாய் தலையைச் சுற்றி வருகிறது
சிலநேரம் பனியாக மாறி இலைகளில் படிகிறது


வானை நோக்கி விட்டெறியும் கனவு
நட்சத்திரமாக மாறுவது 
எப்போதோதான் நடக்கும்.
என்றபோதிலும் மனந்தளராதே 
உன் முன்னோர் எறிந்த கனவுதான் நிலவு
சூரியனும்கூட அப்படியென்றுதான் சொல்கிறார்கள்

Sunday, October 26, 2014

ஒரு தொல்லியல் அறிஞரின் தன்வரலாறும் இந்தியத் தொல்லியல் வரலாறும் - ரவிக்குமார்வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள்கூட அதிகம் அறியாத ஒரு துறை- தொல்லியல் துறையாகும். தமது ஆயுட்காலம் முழுவதும் அத் துறையில் பணியாற்றி பல அரிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்திச் சென்ற அறிஞர்கள் பலர் எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் மறக்கப்பட்டுவிட்டனர். வெறும் புராணங்களாலும் கட்டுக் கதைகளாலும் நிரப்பப்பட்டிருந்த இந்திய வரலாற்றை தரவுகளின் அடிப்படையில் ஒழுங்கமைத்தவர்கள் அவர்கள்தான்.ஆனால் அதை நாம் உரியவிதத்தில் அங்கீகரிக்கவில்லை. தொல்லியல் துறை சார்ந்தவர்கள் தமது ஆய்வுகளைப் பற்றியும் அவற்றை மேற்கொண்டபோது தாம் அனுபவித்த இன்னல்களைப் பற்றியும் நூலாக எழுதி வெளியிட்டது மிகவும் குறைவே.  அந்தக் குறையைப் போக்கும்விதமாக உலகப் புகழ்பெற்ற இந்திய தொல்லியல் அறிஞர்களில் ஒருவரான திலிப் சக்கரவர்த்தி தனது அனுபவங்களை நூலாக எழுதியிருக்கிறார். ஒருவகையில் அவரது சுயசரிதையாகவும் இன்னொரு வகையில் ஐம்பதாண்டுகால இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் வரலாறாகவும் அந்த நூல் அமைந்திருக்கிறது.  
1941 ஆம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் சில்ஹெட் மாவட்டத்தில் ஹலிச்சேரா என்ற கிராமத்தில் பிறந்தவர் திலிப் சக்கரவர்த்தி. அவரது அம்மாவின் குடும்பம் செல்வச் செழிப்பு மிக்கது. பல ஏக்கர் பரப்பளவுகொண்ட நிலத்தின் நடுவே அமைந்த வீடு, மூன்று நாட்களுக்கு நடைபெறும் துர்கா பூஜை, ஊருக்கே விருந்து என தனது அம்மாவின் வீட்டைப் பற்றி அவர் நினைவுகூர்கிறார். அவருக்கு பதினோரு வயதிருக்கும்போது திலிப் சக்கரவர்த்தியின் குடும்பம் அந்த கிராமத்தைவிட்டு இடம்பெயர்ந்து திரிபுராவின் தலைநகரான அகர்தலாவுக்குச் சென்றது. (இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ஹலிச்சேரா கிராமம் பாகிஸ்தானில் சேர்ந்துவிட்டது). பள்ளி கல்லூரிப் படிப்புகளை அகர்தலாவில் முடித்த திலிப் சக்கரவர்த்தி கல்கத்தா பலகலைக்கழகத்தில் முதுகலை படிப்பில் சேர்ந்தார். அப்போதுதான் பலகலைக் கழக மானியக் குழு கல்கத்தா, புனே, சென்னை,லக்னோ ஆகிய இடங்களில் தொல்லியல் படிப்பைத் துவக்குவதற்கு நிதி உதவி செய்ய ஆரம்பித்திருந்தது. இந்தியத் தொல்லியல் துறையில் ‘தொல்லியல் பள்ளி’ ஒன்றும் தனியே ஆரம்பிக்கப்பட்டது. அது அந்தத் துறையில் பணியாற்றுவோருக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது  என்றபோதிலும் அதில் மாணவர்கள் சிலரும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அப்போது அந்தப் படிப்பில் சேர்ந்த மாணவர்களில் திலிப் சக்ரவர்த்தியும் ஒருவர்.
இரும்பின் பயன்பாடு குறித்தும் நெல் பயிரிடுவது எப்போது இந்தியாவில் ஆரம்பித்தது என்பது பற்றியும் முக்கியமான ஆய்வுகளை திலிப் சக்ரவர்த்தி செய்திருக்கிறார். கி.மு 8000 – 6000 க்கும் இடைப்பட்ட காலத்திலேயே விந்திய மலைப் பகுதியில் நெல் பயிரிட்டுள்ளனர். மத்திய கங்கைச் சமவெளிப் பகுதியிலும் அப்போது நெல் பயிரிட்டுள்ளனர். பல்வேறு தொல்லியல் மையங்களில் அதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன என்றாலும் கோரக்பூருக்கு அருகிலுள்ள லோஹுரதேவா என்ற இடத்தில் கிடைத்த சான்றுகள் முக்கியமானவை எனக் கூறுகிறார் திலிப் சக்ரவர்த்தி ( பக்கம் 272 ) எவ்வளவுதான் முயற்சித்தாலும் தென்னிந்தியாவில் நெல் சாகுபடி செய்யப்பட்டதற்கான ஆதாரம் கி.மு 3000 க்கு முன்னர் கிடைக்கவில்லை. (பக்கம் 274 ) என அவர் கூறுகிறார்.
திலிப் சகரவர்த்தியின் நூல் இந்தியாவில் தொல்லியல் துறையில் 1960 ஆம் ஆண்டிலிருந்து 2010 வரை ஐம்பது ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களை அவரது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து துல்லியமாகப் படம் பிடித்துக்காட்டுவது மட்டுமின்றி பல்கலைக்கழகங்களில் நிலவிய கல்வியியல் சூழலையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
“ இந்தியப் பலகலைக்கழகங்களின் சூழல் மிகவும் குரூரமானது. பெரிய மனிதர்களின் நிழல்களில் பதுங்கிக்கொள்ளத் தெரியாவிட்டால் ஒருவர் பல்கலைக்கழக அதிகாரப் படிநிலைகளில் முன்னேறிச் செல்ல முடியாது “ என்று வேதனையோடு குறிப்பிடும் திலிப் சக்ரவர்த்தி ( பக்கம் 35 ) “ மேற்கு வங்கத்திலிருக்கும் பல்கலைக்கழக அமைப்பு 1960 களில் சீரழியத் தொடங்கியது. இடதுசாரி மாணவர் அமைப்புகளின் பொறுப்பற்ற போராட்டங்களே அதற்கு முதன்மையான காரணம்” என்கிறார் ( பக்கம் 36 ). 1963 ஆம் ஆண்டு தனது முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்து அதே பல்கலைக்கழகத்தில் அதே துறையில் பணியில் சேர்ந்த அவர் 1977 ஆம் ஆண்டு அப்போதிருந்த துறைத் தலைவர் திருமதி அனிதா ரே யுடன் ஒத்துப்போக முடியாததால் அங்கிருந்து ராஜினாமா செய்தார். அப்போது யுபிஎஸ்சி யில் ஒரு நேர்காணலுக்காக அவர் சென்றிருந்தாராம். நேர்காணல் ஆரம்பிப்பதற்கு முன்பே அங்கு நேர்காணலுக்கு வந்திருந்த ஒருவரை எல்லோரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்களாம். “ பிராந்தியவாதம், சாதிச் சார்பு, அரசியல் கட்சி சார்பு முதலான கல்விக்கு அப்பாற்பட்ட காரணிகளே நமது உயர் கல்விச்சூழலின் பின்னடைந்த நிலைக்குக் காரணம் “ என்கிறார் திலிப் சக்ரவர்த்தி ( பக்கம் 61)
”1970 மற்றும் 1980 களில் இந்தியாவின் உயர் கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட முக்கிய காரணியாக இருந்தவர் நூருல் ஹாஸன். அவரது அரசியல் சார்பு இந்திய வரலாறெழுது முறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.இந்திய- சீன யுத்தத்துக்குப் பிறகு சோவியத் யூனியன்மீது பரிவுகொண்ட பல வரலாற்று ஆசிரியர்கள் ஐசிஹெச்ஆர் அமைப்பில் சேர்ந்தனர். அவர்கள் இந்திய வரலாற்றை ஒருபக்கச் சார்போடு பார்த்தனர். அவர்கள் எழுதிய நூல்கள் இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழியாக்கம் செய்யப்பட்டன. என்சிஇஆர்டி சார்பில் பல பாடநூல்களும் அதேவிதப் பார்வையோடு எழுதப்பட்டன”. “ இப்போது இந்தியாவில் காணப்படும் வரலாற்று ஆய்வின் பல அம்சங்களும் அப்போதுதான் முளைவிட்டன. வரலாறு தொடர்பான ஒவ்வொரு விஷயமும் ஏதாவதொரு குழுவோடு இணைத்துப் பார்க்கப்பட்டது. அக்குழுவின் அரசியலோடு அடையாளம் காணப்பட்டது”. (பக்கம் 116 ) ” 1972 ஆம் ஆண்டு இந்திய வரலாற்றை ஆய்வு செய்வதற்கும் எழுதுவதற்கும் ஒரு தேசிய திசைவழி தேவை என அரசாங்கத்தால் உணரப்பட்டது. அது சோவியத் ஆதரவு நாடுகளில் பொதுவாகக் காணப்பட்ட ஒரு கருத்தாக்கம். ( பக்கம் 112) எனக் குறிப்பிடும் திலிப் சக்ரவர்த்தி அந்த நேரத்தில்தான் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த க்ளின் டேனியலோடு தனக்கு மீண்டும் தொடர்பு உண்டானது என்கிறார். அந்தத் தொடர்புதான் அவருக்கு தொல்லியல் மீது மீண்டும் ஆர்வம் ஏற்படக் காரணமாக அமைந்தது. (பக்கம் 124)
1977 ஆம் ஆண்டு திலிப் சக்ரவர்த்தி டெல்லிப் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். அது மிகப்பெரும் அரசியல் கொந்தளிப்பு நிலவிய  காலம். ” அவசரநிலைக் காலத்துக்குப் பிறகு இந்திரா ஆட்சி முடிவுக்கு வந்ததால் நூருல் ஹாஸனும் பதவியிழந்தார். அதனால் அதுவரை டெல்லிப் பல்கலைக்கழகத்திலிருந்த ‘முற்போக்கு வரலாற்றறிஞர்களின்’ பிடி தளர்ந்தது. அதைப் பயன் படுத்திக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் களத்தில் இறங்கியது. அந்த அமைப்பைச் சேர்ந்த எஸ்.பி.குப்தா என்பவர் கூட்டமொன்றை ஒருங்கிணைத்தார். அந்தக் கூட்டத்தின்போது வரலாற்றுப் பாடப்புத்தகங்களை விமர்சனம் செய்து பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. ஆர்.எஸ்.ஷர்மா இதற்கென்றே எழுதிய நூல்களும் வெளிவந்தன.” என்று அந்தக் காலகட்டத்தை வர்ணிக்கிறார் திலிப் சக்ரவர்த்தி.
திலிப் சக்ரவர்த்திக்கு இடதுசாரி வரலாற்றாசிரியர்களோடு மட்டுமல்ல வலதுசாரிகளோடும் ஒத்துப்போக முடியவில்லை. அதனால், அவர் மியூஸியம் பொறுப்பாளராக பணிமாற்றம் செய்யப்பட்டார். அந்தப் பதவியிலும் அவர் சும்மா இருக்கவில்லை. பக்லிவால் குடும்பம் என்பது இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பணக்காரக் குடும்பங்களில் ஒன்று. அவர்கள் தமக்குச் சொந்தமான 16 – 18 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த ஓவியங்கள், கையெழுத்துப் படிகள், செப்புச் சிலைகள் பலவற்றை டெல்லிப் பல்கலைக்கழக மியூஸியத்துக்குக் கொடுத்திருந்தனர். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் அவற்றைப் பெட்டிகளில் அப்படியே பூட்டிவைத்துவிட்டது. ஜமால் ஹுஸைன் என்பவரோடு இணைந்து பக்லிவால் குடும்ப கலைப்பொருட்கள் குறித்து  திலிப் சக்ரவர்த்தி  நூல் ஒன்றைப் பதிப்பித்து வெளியிட்டார். அவரை ஓரம் கட்ட நினைத்தவர்களுக்கு அது எரிச்சலை உணடாக்கியது. எனவே அவர்மீது வீண்பழி சுமத்தி வேலையிலிருந்து விரட்ட முயற்சித்தார்கள். எனவே 1988 ஆம் ஆண்டு அவர் நீண்ட விடுப்பில் சென்றார். அதன்பின் அவர் மீண்டும் டெல்லிப் பல்கலைக்கழக வேலைக்குச் செல்லவே இல்லை. ( பக்கம் 142-145)
தொல்லியல் துறையின் வரலாற்றை எழுதிச்செல்லும் திலிப் சக்ரவர்த்தி தற்போது தொல்லியல் துறை எதிர்கொண்டுள்ள முக்கியமான சிக்கல்கள் இரண்டை அடையாளப்படுத்துகிறார்:
  1. ”அயோத்திப் பிரச்சனையில் தொல்லியல் என்பது மிகமுக்கியமான பங்கு வகித்ததை நாம் அறிவோம். அதன்பின்னர் தொல்லியல் துறை எதிர்பாராத மதரீதியான சிக்கல்கள் அந்தத் துறையை நெருக்கடியில் ஆழ்த்தின.1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு 1994 இல் ‘உலக தொல்லியல் மாநாடு’ நடைபெற்றது கவனத்துக்குரியது” எனக்குறிப்பிடும் திலிப் சக்ரவர்த்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டதை துரதிர்ஷ்டமானதொரு நிகழ்வு என வருத்தத்தோடு எழுதியுள்ளார். “ அயோத்தி மிகவும் முக்கியமானதொரு வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த தொல்லியல் பகுதியாகும். அங்கு இப்போதும் ஒரு பழங்கால மதில் சுவரின் எச்சங்கள் உள்ளன. அசோகர் காலத்தைச் சேர்ந்த தூண் ஒன்றின் தலைப் பகுதி அங்குள்ள சிறிய கோயிலொன்றில் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. சுங்கர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று இன்னொரு சிறிய கோயிலில் உள்ளது.பாபர் மசூதி பிரச்சனை தொடர்பாக சண்டையிட்டுக்கொண்ட இரு தரப்பு அறிவுஜீவிகளும் அயோத்தியின் தொல்லியல் அம்சங்கள் குறித்து அக்கறை காட்டவில்லை. நீதிமன்றம் முடிவுசெய்வதற்கு முன்பே மசூதியின் இடிபாடுகளுக்கிடையே கிடைத்த 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு அங்கு கோயில் இருந்ததை உறுதிசெய்துவிட்டது. அயோத்தி சம்பவம் தொல்லியலின் எதிர்காலத்தை முடிவுக்குக்கொண்டுவந்துவிடவில்லை” என்கிறார் அவர். .
  2. ”வெளிநாட்டு தொல்லியல் ஆய்வாளர்களால் இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சி மிகவும் பாதிப்படைகிறது. அவர்கள் இந்தியத் தொல்லியல் ஆய்வாளர்களை மதிப்பதில்லை. அவர்களது கருத்துகளையும் கண்டுபிடிப்புகளையும் பொருட்படுத்துவதில்லை. தங்களது கருத்துகளை நம் மீது திணிக்கிறார்கள்.கட்டுப்பாடின்றி அவர்களை அனுமதிப்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்” எனவும் அவர் எச்சரிக்கிறார்.
திலிப் சக்ரவர்த்தி எழுதியுள்ள இந்த நூலைப் படித்தபோது தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் முக்கியமான தொல்லியல் அறிஞர்களான ஐராவதம் மகாதேவன், ஒய்.சுப்பராயலு, புலவர் ராஜு, இரா.நாகசாமி, நடன.காசிநாதன், கா.ராஜன்  ஆகியோர் இப்படி தமது அனுபவங்களையும் தமிழகத் தொல்லியல் வரலாற்றையும் இணைத்து எழுதினால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கம்தான் மனதில் எழுந்தது.
திலிப் சக்ரவர்த்தி அண்மையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வருகை தந்திருந்தார். அவரது நூலைப் படித்தபோது மனதில் எழுந்த அறச்சீற்றம் கொண்ட ஒரு அறிஞரின் சித்திரம் அவரை நேரில் சந்தித்தபோது மேலும் உறுதிப்பட்டது.
இந்த நூல் தமிழில் வெளிவரவேண்டியது மிகவும் அவசியம். யாரேனும் மொழிபெயர்க்க முன்வந்தால் மணற்கேணி அதை வெளியிடத் தயாராக இருக்கிறது.

Fifty Years of Indian Archaeology ( 1960-2010 )- Journey of a Foot Soldier
   Dilip K. Chakraborty,
Aryan Books International, New Delhi ,
2012

Friday, October 17, 2014

தினகரன் தீபாவளி மலர் 2014பண்டிகைகள் இப்போது தமது மதரீதியான பிணைப்புகளைப் பெரும்பாலும் இழந்துவிட்டன. பொருளாதார நலன்களே அவற்றை ஓயாமல் நினைவுபடுத்திக்கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சியும் துணிக்கடைகளும் பண்டிகைகளை நினைவுபடுத்துவதன்மூலம் வர்த்தகத்தைப் பெருக்கிக்கொள்கின்றன. அச்சு ஊடகங்களும் இதில் விதிவிலக்கல்ல. 

தீபாவளியை முன்வைத்து வருவாய் தேடும் வழிகளில் மலர் வெளியிடுவது முதன்மையானது. முன்னணிப் பத்திரிகைகள் எல்லாம் இந்த வாய்ப்பைத் தவறவிடுவதில்லை. 

நான் தீபாவளி மலர்களைத் தேடிப் படிப்பவன் அல்ல. அவற்றின் உள்ளடக்கம் எப்படியிருக்கும் என்பது யூகிக்கக்கூடியது என்பதால் அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. குங்குமம் பத்திரிகை ஆசிரியரும் எனது நண்பர்களில் ஒருவருமான தி.முருகன் தயாரித்தது என்பதால் தினகரன் தீபாவளி மலரைப் படித்தேன். தற்போது எழுதிவரும் எழுத்தாளர்களின் படைப்புகளோடு பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்களின் எழுத்துகளும் அதில் இடம்பெற்றுள்ளன. 

பிரபலமான கவிஞர்களின் கவிதைகள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும் ஒன்றும் ஈர்ப்பதாக இல்லை. கிளாசிக் ஸ்டோரி என வெளியிட்டிருப்பதைப்போல கவிதையிலும் செய்திருந்தால் இந்தக் குறையைத் தவிர்த்திருக்கலாம். 

இந்த மலரில் குறிப்பிட்டு சொல்லப்படவேண்டியது அசோகமித்திரனின் சிறுகதைதான். பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட 'விடிவதற்குள்' என்ற அந்தச் சிறுகதை இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த சென்னையை சித்திரிக்கிறது என நினைக்கிறேன். இப்போது தண்ணீர்ப் பிரச்சனை அன்று இருந்ததைவிட இன்னும் அதிகமாகிவிட்டது.இந்தக் கதையில் வருவதுபோல் இன்னொருவர் வீட்டில்போய் தண்ணீர் பிடிப்பது இப்போது சாத்தியமில்லை. தண்ணீர் லாரிக்காகத் தள்ளுமுள்ளு என்பதுதான் இன்றைய நிலை. ஆனால் இந்தக் கதையில்வரும் பங்கஜமும் முத்துவும் இப்போதும் இருக்கிறார்கள். அந்தக் கன்றுக்குட்டிகூட அப்படியே இருக்கிறது. கதையை வாசிக்கும்போது பங்கஜத்தின் தவிப்பு நம்மையும் தொற்றிக்கொண்டுவிடுகிறது. 

எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்தை மிகவும் அலட்சியமாகக் கருதுகிறார் என்பதற்கு இந்த மலரில் இடம்பெற்றிருக்கும் அவரது கதை இன்னுமொரு சாட்சி. எஸ்.ராமகிருஷ்ணனின் கதை எவ்வளவு போலி என்பதை அசோகமித்திரனின் கதையைப் படிப்பவர்கள் உணரமுடியும்.

கே.என்.சிவராமன் எழுதியிருக்கும் கதையையும் படித்தேன். தமிழ் சினிமா பார்த்ததுபோல் இருந்தது. 

காஷ்மீர் குறித்த ஜெயமோகனின் பயணக்கட்டுரையில் முஸ்லிம்கள்மீதான அவரது வெறுப்பும்,  உரைநடையின் பலவீனமும் போட்டிப்போட்டுக்கொண்டு வெளிப்பட்டிருக்கின்றன. விஜயபாரதத்தில் வெளிவரவேண்டிய கட்டுரையை இதில் ஏன் போட்டிருக்கிறார்கள்? அதில் அரசியல் கட்டுரைக்கான உழைப்பும் இல்லை; பயணக் கட்டுரைக்கான சுவாரஸ்யமும் இல்லை. மணியன் எழுதிய தரத்தில்கூட அந்தக் கட்டுரை இல்லை. ஜெயமோகனுக்கு திருத்தமாக உரைநடை எழுதத் தெரியவில்லை என்று பலரும் சுட்டிக்காட்டிவிட்டனர். இவ்வளவுதூரம்
பிரபலமானதற்குப் பிறகும் இப்படியொரு உரைநடையை எழுதுவது சகிக்கத்தக்கதல்ல. தெளிவாக உரைநடை எழுதுவது எப்படி என்பதை அவர் சாருநிவேதிதாவிடம் கற்றுக்கொள்ளவேண்டும். 

Thursday, October 9, 2014

வெள்ளை நிழல் படியாத வீடு - கறுப்புக் கவிதைகள்


மொழிபெயர்ப்பாளரின் குறிப்ப

மன அழுத்தத்துக்கு ஆளாகும்போதெல்லாம் கவிதைகளை நாடிச் செல்வது என் வழக்கம். ஒரு சிறிய கவிதை போதும் புற உலகிலிருந்து சட்டென்று துண்டித்துக்கொண்டு வேறு உலகில் பிரவேசிக்க. மூச்சுத் திணறவைக்கும் அரசியல் கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரப் பயணங்கள் போன்றவற்றின்போது நான் பிராணவாயுவாகக் கவிதைகளைத்தான் நாடினேன். கவிதைகள் மட்டும் இல்லாவிட்டால் மனிதத் தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் அந்தக் களங்களிலிருந்து உயிரோடு மீண்டு வந்திருக்கமுடியாது.

அத்தகைய தருணங்களில் கவிதைகளை வாசித்தது மட்டுமல்ல சிறிய கவிதைகளை மொழிபெயர்க்கவும் செய்தேன். அவற்றை முகநூலிலும், வலைப்பூவிலும் பகிர்ந்துகொண்டபோது நண்பர்கள் அளித்த வரவேற்பு என்னை ஊக்குவித்தது. நாளெல்லாம் அலைந்து உடல் செத்துக் கிடந்த இரவுகளிலும் மனம் விழித்துக்கொண்டு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்தது. இந்தக் கவிதைகளில் பெரும்பாலானவை அப்படி மொழிபெயர்க்கப்பட்டவைதான்.

 தற்போதைய தொழில்நுட்பம் நமது மொபைல் ஃபோனில் டிஜிட்டல் நூலகங்களை உருவாக்கித் தந்திருக்கிறது. லட்சக்கணக்கான நூல்களை இப்போது இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஆன்றி மிஷோவின், ரெனே சாரின் ஒரு கவிதைப் புத்தகத்தைப் படிக்க இருபது ஆண்டுகளுக்கு முன்னால் ஏங்கிக் கிடந்த அவலத்தை எண்ணிப் பார்க்கிறேன்.அந்தக் கேவல நிலை இன்றில்லை. புதிய புத்தகங்கள் மட்டுமல்ல ஆவணக் காப்பகங்களும் இன்று விரல் நுனியில் திறந்துகொள்கின்றன. யாருடைய கருணையுமின்றி இன்று எந்தவொரு புத்தகமும் எவர் கையிலும் கிடைத்துவிடும். புதிய புத்தகங்களைப் பதுக்கி வைத்துக்கொண்டு அவற்றிலிருந்து மேற்கோள்களை மட்டும் அவ்வப்போது உதிர்த்து ’சீன்’ போட்டவர்கள், பழைய ஆவணம் ஒன்று கிடைத்துவிட்டால் அதை மறுபதிப்பு செய்தே அறிவாளி ஆனவர்கள் – இனி வழக்கொழிந்துபோவார்கள். அறிவு ஜனநாயகமயமாகிவரும் காலம் இது. 

 இந்தத் தொழில் நுட்பத்தை முதலாளித்துவத்தின் விளைவு என்பதா அல்லது பொதுவுடமையின் சாட்சியமாகக் கொள்வதா என்பது புரியவில்லை. ” அறிவுத்தளத்தில் நிகழ்த்தப்படும் சாதனைகள் பொதுவுடமை குணாம்சம் கொண்டவைதான். அவை சுதந்திரமாக எங்கும் சுற்றிவரக்கூடியவை. மிகவும் முன்னேறிய முதலாளித்துவத்தின் விளைபொருள்களாக இருந்தபோதிலும் இலவசமாக இவை கிடைப்பதன்மூலம் முதலாளித்துவம் சாராத வெளி ஒன்றை இவை திறக்கின்றன.” என்று சிந்தனையாளர் ஸ்லாவோஸ் ஸிஸேக்  ( Slavoj Zizek- Web Chat,The Guardian, 08.10.2014) ) குறிப்பிடுவது கவனத்துக்குரியது.

 இந்தக்கவிதைகளில் சில, சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டவையென்றாலும் இவற்றை நூலாக வெளியிடுவது அவசியம் எனக் கருதினேன். சமூக வலைத் தளங்களில் எல்லாவற்றுக்கும் ஆயுள் குறைவு. ஒரு நிலைத் தகவலை அடுத்த நொடியிலேயே இன்னொரு நிலைத்தகவல் மூடிவிடுகிறது. தமிழ்நாட்டில் இப்போது மட்டுமல்ல இன்னும் ஒரு நூற்றாண்டுக்காவது அச்சு ஊடகம் உயிர்ப்போடு இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. 

 வாசிப்பின் ஜனநாயகம் கருதியே மணற்கேணி சிறுநூல் வரிசை துவக்கப்பட்டது. அதன் மூலம் வெளியாகும் இந்த ஆப்ரிக்க அமெரிக்கக் கவிதைகள், போராட விரும்பும் எவர் ஒருவருக்கும் உத்வேகத்தை அளிக்கும் என நம்புகிறேன். இந்த நூலை வாசிப்போர் இத்துடன் வெளியாகியிருக்கும் அரபுக் கவிதைகள் தொகுப்பையும் வாசிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 

 - ரவிக்குமார் 

09.10.2014

Sunday, October 5, 2014

" தாழ்த்தப்பட்ட வகுப்பு என சொல்லக்கூடாது! ஜனநாயக வகுப்பு என அழைக்கவேண்டும்!" - மேக்நாத் சாஹா


கல்கத்தா யுனிவர்சிட்டி கமிஷனுக்கு விஞ்ஞானி மேக்நாத் சாஹா அளித்த பதிலில் பல்கலைக் கழகத்தில் விடுதியில் தங்கிப் பயின்ற தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள் அனுபவித்த கொடுமைகளை எடுத்துரைத்திருக்கிறார்: 

" ஜனநாயக வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ( இவர்களை தாழ்த்தப்பட்ட பிரிவினர் - depressed class- என அழைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. )போதுமான அளவில் சிறப்புக் கவனம் எடுக்கப்படவேண்டும். தற்போது கல்லூரி விடுதிகள் பிராமணர்கள், கயஸ்தா, வைத்யா, நபசாக் ஆகிய ஒருசில பணக்கார வகுப்பினரின் தனியுரிமையாக இருக்கின்றன என்பது பரவலாக சொல்லப்பட்டுவரும் ஒரு குற்றச்சாட்டு. ஜனநாயக வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களை விடுதிகளில் சேர்ப்பதில்லை. அப்படியே சேர்த்தாலும் அங்கு அவர்கள் உரிமையோடு இருக்கமுடிவதில்லை, மற்றவர்களின் தயவில்தான் இருக்கவேண்டிய நிலை. அவர்களோடு ஒரே அறையில் தங்குவதற்கும் ஒரே இடத்தில் சாப்பிடுவதற்கும் யாராவது ஒரு உயர்சாதி மாணவன் மறுப்புத் தெரிவித்தால் அந்த துரதிர்ஷ்டம் கொண்ட ஜனநாயக வகுப்பு மாணவனை அங்கிருந்து வெளியேற்றிவிடுகிறார்கள். அவன் அறையிலேயே உணவருந்தும்படி செய்யப்படுகிறானப்படியான பல சம்பவங்களை நான் நேரில் கண்டிருக்கிறேன்" என சாஹா அதில் எழுதியிருக்கிறார். 

தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு தனி விடுதிகளைக் கட்டும் முயற்சியையும் சாஹா கடுமையாக எதிர்த்தார்:

" பொதுப் பணத்தில் கட்டப்பட்ட கல்லூரி விடுதிகளில் மற்றவர்களைப்போலவே தங்களுக்கும் உரிமை உண்டு எபன ஜனநாயக வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் கருதுகின்றனர். சுயமரியாதையோடும் கண்ணியத்தோடும் வாழ்வதற்குத் தங்களை அனுமதிக்கவேண்டும் என அவர்கள் கேட்கிறார்கள்.அவர்களுக்கென்று தனியே விடுதிகளைக் கட்டினால் அது சாத்தியமாகாது. அப்படி தனி விடுதி கட்டவேண்டுமென்றால் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு விடுதி என்ற அடிப்படையில் ஒவ்வொரு கல்லூரியிலும் குறைந்தது இருபத்தைந்து விடுதிகளாவது கட்டவேண்டியிருக்கும். " என்று அவர் கேலியாக சுட்டிக்காட்டினார். 

விஞ்ஞானி மேக்நாத் சாஹா பிறந்த நாள் : அக்டோபர் 6

அறிவியல் பாடங்களைத் தாய்மொழியில்தான் கற்பிக்கவேண்டும் என வலியுறுத்திய விஞ்ஞானி மேக்நாத் சாஹா
======================
1917 ஆம் ஆண்டு கவர்னர் ஜெனரலால் அமைக்கப்பட்ட கல்கத்தா யுனிவர்சிட்டி கமிஷன் கேட்ட கேள்விகளுக்கு விரிவாகத் தனது கருத்துகளை சாஹா பதிவு செய்தார். அதில் அவர் கூறியிருப்பது:
" தற்போது இருக்கும் முறை மிகவும் இயற்கைக்கு மாறான ஒன்றாகும்.மாணவர் இயற்கையாகக் கற்றுக்கொள்வதை மறக்கும்படி செய்யப்படுகிறார். ஒவ்வொரு வார்த்தையையும் மனப்பாடம் செய்து நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய அந்நிய மொழியில்சிந்திக்கும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறார். ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ள போதுமான அவகாசம் கொடுப்பதற்குப் பதிலாக 13 - 14 வயதுகொண்ட ஒரு ஆங்கிலேய பையன் பேசுவதைப்போல சரளமாக ஆங்கிலத்தில் பேசும்படி மாணவர்களை நாம் நிர்ப்பந்திக்கிறோம். அதன் விளைவு- அவர் எல்லாவற்றையும் மனதுக்குள் மொழிபெயர்த்து மனப்பாடம் செய்யவேண்டியதாகிறது. அந்தப் பழக்கத்திலிருந்து அவர் பிறகு விடுபடவே முடிவதில்லை"

Saturday, October 4, 2014

மேக்நாத் சாஹா ( 1893-1956): சாதியால் மறைக்கப்பட்ட விஞ்ஞானி


அறிவியல் துறையில் நோபெல் பரிசுக்காக இந்தியாவில் பிறந்த ஒருவரின் பெயர் பரிசீலிக்கப்படுவதாக செய்திகளில் பார்த்தேன். மகிழ்ச்சியான செய்திதான். அதே நேரத்தில் இந்திய அறிவியல் துறையை ஆட்டிப்படைக்கும் சாதிய பாகுபாடுகள் நினைவுக்கு வந்தன. இதுகுறித்து அமெரிக்காவின் காம்ப்ரிட்ஜில் பேராசிரியையாக இருக்கும் அபா சூர் ( Abha Sur). எழுதியிருக்கும் Dispersed Radiance  என்ற நூல் முக்கியமானது. 

இந்தியாவில் பிறந்த விஞ்ஞானிகளில் மிக முக்கியமாபன பங்களிப்புகளைச் செய்த மேக்நாத் சாஹா ( Meghnad Saha) வைப் பற்றி அந்த நூலில் மிக விரிவாக அபா சூர் எழுதியிருக்கிறார். சாஹாவின் பெயரும் நோபெல் பரிசுக்குப் பரிசீலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சுன்ரி என்ற தீண்டாத சாதியின் உள்சாதியாக பட்டியல்படுத்தப்பட்ட சாஹா சாதியில் பிறந்தவர் மேக்நாத் சாஹா . அம்பேத்கர் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1893 இல் பிறந்த சாஹாவுக்கும் அம்பேத்கருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.  அம்பேத்கர் இறந்த அதே ஆண்டில் அவரும் இறந்தார். 

Astro Physics இல் தேர்ந்த விஞ்ஞானியாக இருந்த சாஹா நட்சத்திர மண்டலம் குறித்து thermal iinisation of elements என்ற அடிப்படையில் உருவாக்கிய சாஹா சமன்பாடு ( Saha Equation) என்பது அந்தத் துறையில் அதன்பின் செய்யப்பட்ட ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக அமைந்தது. சூரியக் கிரணத்தின் எடையையும் அழுத்தத்தையும் கண்டறிவதற்கான கருவியையும் சாஹா உருவாக்கினார். சுதந்திர இந்தியாவில் இந்திய நதிகளை ஒழுங்கமைக்கும் திட்டங்களை வகுத்தார். அம்பேத்கருடன் இணைந்து அவர் உருவாக்கியதுதான் தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம். 

அபா சூர் தனது நூலில் இரண்டு அத்தியாயங்களை சாஹாவுக்காக ஒதுக்கியிருக்கிறார். நேரு தலைமையில் அமைந்த அரசு சாதியின் காரணமாக மேக்நாத் சாஹாவை எப்படியெல்லாம் புறக்கணித்தது என்பதை விவரித்திருக்கிறார். சூரின் நூல் முழுவதையும் தமிழில் மொழிபெயர்க்கவேண்டும். குறைந்தபட்சம் சாஹா பற்றிய இரண்டு அத்தியாயங்களையாவது தமிழில் யாராவது மொழிபெயர்த்தால் அதை மணற்கேணி வெளியிடும். 

Friday, October 3, 2014

உதவுங்கள்!

மணற்கேணி சிறுநூல் வரிசைக்கு உதவுங்கள்! 

சமூக அரசியல் முக்கியத்துவம் கொண்ட மொழிபெயர்ப்புகளையும் கட்டுரைகளையும் 50-60 பக்கங்களில் 25- 30 ரூபாய் விலையில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் புத்தகக் கடைகளுக்கு அனுப்பி  அவர்களிடமிருந்து பணம் வாங்குவது அத்தனை எளிதல்ல. இந்த நூல்கள் சமூக அக்கறையுள்ள இளைஞர்களைச் சென்றடையவேண்டும். அதற்கு புத்தகக் கடைகள் பயன்படும் எனத் தோன்றவில்லை. எனவே இந்தப் பணியில் இணைந்து உதவுமாறு அக்கறையுள்ள நண்பர்களை அழைக்கிறோம். 

சிறு நூல் ஒன்றை 1000 படிகள் வெளியிட சுமார் இருபதாயிரம் ரூபாய் செலவாகிறது. ஒரு நூலுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து உதவி செய்பவர்களின் பெயர் அந்த நூலில் அச்சிடப்படும். தயாரிப்பு விலையில் அவர்களுக்கு அந்தத் தொகைக்கு ஏற்ற பிரதிகள் அனுப்பப்படும். 

இதைப் பயனுள்ள பணியாகக் கருதுவோர் தொடர்புகொளுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள். 

தொகை அனுப்புவதற்கான வங்கிக் கணக்கு விவரம்: 

Manarkeni publication
Syndicate Bank ,
Pondicherry Branch 
Current account number : 96013070002032
IFSC code : Synb0009601

அ- சுரர்களின் அரசியல்- தலித்துகளும் மதுவிலக்கும்

மணற்கேணியின் சிறுநூல் வரிசையில் அடுத்த வெளியீடு:

அ- சுரர்களின் அரசியல்- தலித்துகளும் மதுவிலக்கும்
- ரவிக்குமார்

பக்கங்கள் 40
விலை 20/- ரூபாய்

அந்த நூலுக்கு எழுதப்பட்டிருக்கும் பதிப்புரையிலிருந்து:

" தமிழ்நாட்டில் மதுவிலக்கு ரத்துசெய்யப்பட்டபோது அதை ராஜாஜி கடுமையாக எதிர்த்தார்.அன்றைய முதலமைச்சரின் வீட்டுக்கே சென்று தனது கோரிக்கையை வலியுறுத்தினார். அவரைப்போலவே அப்போதிருந்த தலித் தலைவர்களும் மதுக் கடைகள் திறக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார்கள். ஆனாலும் வருவாயைக் காரணம் காட்டி அன்றைய அரசு மதுக்கடைகளைத் திறந்தது.’கருவாடு விற்ற காசு நாறாது’ என்பார்கள்.ஆனால், கள், சாரயம் விற்ற காசு சமூகத்தைத் தலைகவிழச் செய்துவிட்டது.

மதுக்கடைகள் திறக்கப்பட்டதால்,” வருஷக் குடியர், மாதக் குடியர்,வாரக் குடியர், தினக் குடியர் பெருகி அவர்கள் மற்றோரால் இகழப்பெற்று சீரழிவதுடன் இல்லாட்களாகிய பெண்களையும் குடிக்கக் கற்பித்தது போதாமல் தங்கள் பிள்ளைகளுக்கு சுரம் கண்டால் கொஞ்சம் பிராந்தி வாங்கிக்கொடு, குழந்தைகளுக்கு சளி பிடித்தால் பத்தாய் வாங்கி கொடுவென்னும் பெருவழக்கத்தால் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரையில் குடியர்களாகை சீரழிந்து சிந்தை நைந்து குலமரபின் பேரழிந்து பாழாகிப் போகின்றார்கள்” என 1913 ஆம் ஆண்டில் அயோத்திதாசப் பண்டிதர் எழுதியதைப் போன்ற காட்சியை இப்போதும் நாம் காணமுடிகிறது (தமிழன் 13,ஆகஸ்டு 1913)

Wednesday, October 1, 2014

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட லதாவின் சிறுகதைகள்
சிங்கப்பூரில் வசிக்கும் ஈழக் கவிஞர் லதாவின் சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு The Goddess in the Living Room' என்ற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளன. ஆறு பேர் மொழிபெயர்த்துள்ள இந்தத் தொகுப்பில் 14 கதைகள் இடம்பெற்றுள்ளன. மேற்கத்திய நாடுகளில் தயாரிக்கப்பட்டதுபோன்ற வடிவமைப்பு. அழகாக இருக்கிறது. 


மணற்கேணி 24 ஆவது இதழில் லதாவின் அரச மரம் கதை வெளியாகியுள்ளது. நான் அறிந்த அளவில் லதாவைப்போல அரசியல் கூருணர்வுகொண்ட பெண் எழுத்தாளர் வேறு எவரும் ஈழத்தில் இல்லை. சேரனுக்குப் பிறகு உருவான ஈழக் கவிஞர்களில் அகிலனுக்கு அடுத்ததாக நான் லதாவைக் குறிப்பிடுவேன். லதா முதலில் ஒரு கவிஞர். அதற்கடுத்தே சிறுகதை ஆசிரியர். நேர்த்தியான கட்டுரைகள் சிலவற்றையும் அவர் எழுதியுள்ளார். 


ஈழத்து எழுத்தாளர்கள் பலரோடும் நான் பழகியிருக்கிறேன். எம்.ஏ. நுஃமான் ஒருவரிடம் தான் ஒளிவுமறைவற்ற தோழமையை நான் கண்டிருக்கிறேன். இப்படிச் சொல்வது எனது பிழையாகவும் இருக்கலாம். ஆனால் இதைச் சொல்லத் தோன்றுகிறது. அந்தப் பின்னணியில் லதா தனித்துத் தெரிகிறார். தன்னை முன்னிறுத்திக்கொள்ளாத அவரது பண்பு இன்றைய சூழலில் அரிது. லதாவுக்கு என் வாழ்த்துகள்! 

Saturday, September 20, 2014

பத்மினி கோபாலனை சந்தித்தேன்


பத்மினி கோபாலனை சந்தித்தேன்


மான்டிசோரி கல்விமுறையை சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பிரபலப்படுத்தி வருபவர் பத்மினி கோபாலன் ' சில்வர் டங்' ஶ்ரீனிவாச சாஸ்திரியின் மகள் வழிப் பேத்தி. எண்பது வயதில் இந்த அறப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். 


இன்று ( 20.09.2014) மாலை ஐந்து மணியளவில் பேராசிரியர் கல்யாணியோடு சென்று அவரை சந்தித்தேன். சுமார் இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். வீட்டின் வரவேற்பறையில் கம்பீரமாக ஒரு பெண்மணியின் ஓவியம் மாட்டப்பட்டிருந்தது. அது அவரது அம்மாவா என்று கேட்டேன். பாட்டி- ஶ்ரீனிவாச சாஸ்திரியின் மனைவி என்றார். பெயர் லக்ஷ்மி. தஞ்சை மன்னார்குடியைச் சேர்ந்தவர். ஶ்ரீனிவாச சாஸ்திரி வலங்கைமான்காரர். உலகப் புகழ்பெற்றது அவரது ஆங்கிலப் புலமை. ஆனால் சாஸ்திரியின் மனைவி லக்ஷ்மியோ எழுதப் படிக்கத் தெரியாதவர். 


ஆசாரங்களைப் பின்பற்ற விருப்பமில்லாத சாஸ்திரியின் நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்த அவரது உறவினர்கள் அவரது மனைவியை ஒருமுறை காசி யாத்திரைக்கு அழைத்தார்களாம். முதலில் வருவதற்கு ஒப்புக்கொண்ட லக்ஷ்மி அம்மையார் எதற்காக அந்த யாத்திரை என்று கேட்டாராம். உன் கணவர் ஆசாரங்களைக் கடைபிடிக்கவில்லை அந்தப் பாவத்தைப் போக்குவதற்குத்தான் உன்னை காசிக்கு அழைத்துச் செல்கிறோம் என்று அவர்கள் பதில் சொன்னார்களாம். அதைக் கேட்ட அந்த அம்மையார் ' நானோ என் கணவரோ எந்தப் பாவமும் செய்யவில்லை. நான் காசிக்கு வரவேண்டிய அவசியமும் இல்லை' என மறுத்துவிட்டாராம். 


தனது பாட்டியைப் பற்றிப் பேசும்போது பத்மினி கோபாலன் அவர்களின் குரலில் கம்பீரம் கூடி முகம் பிரகாசித்தது. கல்வியோடு நல்ல பண்பாட்டையும் புகட்டுகிற 

மான்டிசோரி முறையைப் பரவலாக்குவதில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார். " நான் ஒரு கல்வியாளர் அல்ல. எனது முயற்சியிலேயே பத்துக்கும் மேற்பட்ட மாநகராட்சிப் பள்ளிகளில் அந்தக் கல்விமுறையை அறிமுகப்படுத்த முடிந்திருக்கிறது. கல்வியாளர்கள் இதில் கவனம் செலுத்தினால் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கமுடியும்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் அவர். 


Friday, September 19, 2014

பள்ளிகளில் பாகுபாடு

மணற்கேணி பதிப்பகத்தின் அடுத்த வெளியீடு


பள்ளிகளில் பாகுபாடு


தமிழில்: பேராசிரியர் சே. கோச்சடை


பள்ளிகளில் இருக்கும் சாதிய பாகுபாடுகளைக் களைவதற்கான தேசிய அறிவுரை மன்றத்தின் (NAC) செயல்திட்ட அறிக்கை. இந்தியப் பள்ளிகளில் நிலவும் சாதிய பாகுபாடுகளை வகைப்படுத்தி அட்டவணையிட்டிருக்கும் இந்த அறிக்கை அவற்றைக் களைவதற்கு ஆசிரியர்களும், அரசாங்கமும், சமூகமும் செய்தவேண்டிய பணிகளை ஒரு செயல்திட்டமாக முன்வைக்கிறது. சமத்துவத்தின்மீது நம்பிக்கைகொண்ட அனைவர் கையிலும் அவசியம் இருக்கவேண்டிய ஆவணம். ஆங்கிலத்தில் வெளியான இந்த அறிக்கையை பேராசிரியர் சே. கோச்சடை எளிமையாகப் புரியும் விதத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். 56 பக்கங்கள் 

25/- ரூபாய் 
கவிஞர் கே.ச்ச்சிதானந்தனுடன் ரவிக்குமார்

ரவிக்குமார் மொழிபெயர்ப்பில் இரண்டு நூல்கள்

மணற்கேணி 24 வெளிவந்துவிட்டது

குரு உத்சவும் குரு பூர்ணிமாவும்

மணற்கேணி 24 இல் வெளியாகியிருக்கும் தலையங்கம் 


குரு உத்சவும் குரு பூர்ணிமாவும்   

ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்ற பெயரில் கொண்டாடவேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்ட சுற்றறிக்கைக்கு  நாடெங்கும் எதிர்ப்பு எழுந்ததையொட்டி 'அதுவொரு கட்டுரைப் போட்டிக்கான தலைப்புதான் ' என்று சொல்லி  சற்றே அதில் மத்திய அரசு பின்வாங்கியது. 

ஆசிரியர் தினம் என்பதை குரு உத்சவ் என அழைக்கவேண்டும் என்பது வெறுமனே பெயர் மாற்றும் பிரச்சனை அல்ல. அதுவொரு பண்பாட்டுத் தாக்குதல். அதனால்தான் இந்த அளவுக்கு அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது.மத்திய அரசின் இந்த 'குரு உத்சவ்' அறிவிப்போடு இந்துத்துவ அமைப்புகளால் ஊக்குவிக்கப்படும் 'குரு பூர்ணிமா' என்பதையும் சேர்த்துப் பார்க்கவேண்டும்.அப்போதுதான் இது அவர்களது பரந்துபட்ட செயல்திட்டத்தின் அங்கமாக   இருப்பது நமக்குப் புரியும். 

குருபூர்ணிமா என்பது வேதங்களைத் தொகுத்து அவற்றை ரிக், யஜூர், சாம, அதர்வ என நான்காகப் பகுத்தவரெனவும் மகாபாரதத்தை இயற்றியவரெனவும் கூறப்படுகின்ற வியாஸரின் பிறந்த நாள் எனச் சொல்லப்படுகிறது. ஜூலை மாதத்தில் வரும் பௌர்ணமியைத்தான் குரு பூர்ணிமா என்று கடைபிடிக்கிறார்கள். அந்த நாளிலிருந்துதான் இந்துக்களின் புனித மாதங்களாகக் கருதப்படும் சதுர்மாதங்கள் துவங்குவதாகக் கணக்கிடப்படுகிறது. சதுர் என்றால் நான்கு என்று பொருள். அந்த நான்கு மாதங்களிலும் அசைவ உணவைத் தவிர்த்து விரதம் இருப்பது இந்துக்களிடையே சில பிரிவினரிடம் காணப்படும் வழக்கமாகும்.

டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக அரசு அறிவித்திருந்த போதிலும்  இந்துத்துவ கொள்கையைக் கடைபிடிப்பவர்கள் வியாசரின் பிறந்த நாளைத்தான் ஆசிரியர் தினம் என்று கொண்டாடுகிறார்கள். அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் இந்தப் பழக்கம் பரவலாக இருக்கிறது.அந்த நாளில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை செய்யவேண்டும் என வற்புறுத்தப்படுகிறார்கள் 

குரு பூர்ணிமா முதலான மதம் சார்ந்த நடைமுறைகள்  திட்டமிட்ட வகையில் தமிழகத்திலும் பரப்பப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள் குரு பூர்ணிமாவை ஊக்குவிக்கின்றன. அந்தக் கொள்கைகளை ஆதரிக்கும் ஆர்கனைசர் பத்திரிக்கையில் 2006 ஆம் ஆண்டு குரு பூர்ணிமாவை சிலாகித்து கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.அதுவே அதற்கொரு அடையாளமாகும்.’ குருவுக்கும் சிஷ்யருக்குமான உறவு மிகவும் புனிதமான ஒன்று.ஞானத்தை அடிப்படையாககொண்ட அது ஆன்மீகத் தன்மைகொண்டது. ஆன்மீகத் துறையில் தேர்ச்சி கொண்ட ஒருவரையே குரு என்று சொல்ல முடியும்’ என அந்தக் கட்டுரையில் எழுதியுள்ளனர். ஆனால் அக்கட்டுரைகூட குருவுக்கு பாதபூஜை செய்யும்படி வலியுறுத்தவில்லை. ஆசிரியர்களை மதிக்கவேண்டும் என்ற பெயரில் மாணவர்களின் சுயமரியாதைக்கு பங்கமேற்படுத்துவது எவ்விதத்திலும் நியாயமல்ல. மாணவர்களை பாதபூஜை செய்யச்சொல்வது அவர்களை அவமதிப்பதுதானே தவிர வேறல்ல. 

குருவை மதிக்கவேண்டும் என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். கல்வியறிவு விகிதம் இப்போதும்கூடக் குறைவாகவே இருக்கின்ற நமது நாட்டில் மாதா, பிதா குரு , தெய்வம் என்றுதான் வரிசைப்படுத்துகிறோம். அந்த அளவுக்கு ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற மரபுதான் நம்முடைய மரபு. காலவோட்டத்தில் எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டபோதிலும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் மரியாதை இன்றும் மாறிவிடவில்லை.ஆனால் அதை வைத்துக்கொண்டு மீண்டும் குருகுலக் கல்வி முறையை நாம் கொண்டுவர எண்ணினால் அது தவறாகவே முடியும்.ஆசிரியர்களை நாம் எவ்வளவுதான் மதித்தாலும் பண்டைய காலத்தில் இருந்ததுபோன்ற குரு சிஷ்யக் கல்வி முறையை நாம் பரிந்துரைக்கமுடியாது. இது ஜனநாயகத்தின் காலம். எனவே அது கல்விமுறையிலும் வெளிப்படவே செய்யும்.  

ஆசிரியருக்குத்தான் எல்லாம் தெரியும் மாணவர்களுக்கு எதுவும் தெரியாது; ஆசிரியர் என்பவர் வங்கி ஒன்றின் கஸ்டமர் போன்றவர் அவர் தன்னிடம் உள்ள அறிவை, காலியாக இருக்கும் வங்கியின் லாக்கரில் வைப்பதுபோல மாணவர்களின் தலைக்குள் பொதித்துவைக்கிறார் என எண்ணுகிற அணுகுமுறை இப்போது வழக்கொழிந்துவிட்டது. 'வகுப்பறை என்பது மாணவரும் ஆசிரியரும் சேர்ந்து கற்றுக்கொள்கிற இடமாகப் பார்க்கப்படவேண்டும் என்ற கருத்தாக்கம் இப்போது மேலோங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ‘ சமச்சீர் கல்வி ‘ முறை இந்த அணுகுமுறையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதுதான். அதில் மாணவருக்குப் பயிற்றுவிப்பதைவிடவும் அவர் கற்றுக்கொள்வதற்கு உதவுவது என்கிற விதத்தில்தான் ஆசிரியரின் பணி வரையறுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அந்த முறையில் பயிலும் மாணவர்களின் கல்வித்திறன் ஒப்பீட்டளவில் நன்றாக இருக்கிறது‘ எனக் கல்வியாளர்கள் கூறுகின்றனர். 

இப்படி,கல்வியை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்று மாநில அரசு   முயற்சி எடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அதற்கு ஒத்துழைக்கவேண்டிய மத்திய அரசு  பழக்கம், மரபு என்ற பெயரில் மூடத்தனங்களை மாணவர்களிடையே விதைப்பது எந்தவிதத்திலும் சரியாக இருக்காது. மத்திய அரசின் இத்தகைய  நடவடிக்கைகள்  கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதன் தேவையைத்தான் வலியுறுத்துகின்றன.

- ரவிக்குமார் 
ஆசிரியர் , மணற்கேணி 

அக்டோபர் – 12 செம்மொழி நாள் ஆய்வரங்கு

 அக்டோபர் – 12  செம்மொழி நாள் ஆய்வரங்கு வணக்கம்

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல்தேதியை செம்மொழி நாளாகக் கடைப்பிடிக்க கேரள அரசு முடிவுசெய்திருக்கிறது. மலையாள மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் கொடுக்கப்பட்டதையடுத்து கேரள அரசு இதை அறிவித்திருக்கிறது. 

 கேரள மாநில கலாச்சாரத் துறையும், கேரள சாகித்ய அகாதமியும் இணைந்து மாவட்டம்தோறும் நிகழ்ச்சிகளை இதற்காக ஏற்பாடு செய்யவிருக்கின்றன. கேரள சாகித்ய அகாதமி மலையாளத்தில் இருக்கும் பழமையான ஆயிரம் நூல்களை எண்வயத் தொழில்நுட்பத்தின்மூலம் ( Digitisation)  பிரதியெடுத்து நூலகங்களுக்கு இலவசமாக வழங்க முடிவுசெய்திருக்கிறது. மொழிபெயர்ப்புக்கென தனியாக ஒரு பிரிவும் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்தத் தகவல்களை கேரள கலாச்சாரத் துறை அமைச்சர் கே.சி.ஜோசப் தெரிவித்திருக்கிறார்.

 தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் வழங்கப்பட்டதுகுறித்துப் பெருமைபடப் பேசி மகிழும் நாம் அந்த அங்கீகாரம் கிடைத்த நாளை நினைவுகூரும் விதமாக எதையும் செய்யவில்லை என்பதை  நினைத்தால் வருத்தமே எஞ்சுகிறது.அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி  தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்கும் ஆணையை  மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது( அரசாணை எண்: IV-14014/7/2004-NI-II dated 12.10.2004.) அந்த நாளை நாம் ஏன் கேரள அரசு செய்வதுபோல செம்மொழி நாளாகக் கடைபிடிக்கக்கூடாது?  மாநில அரசாங்கம்தான் இதைச் செய்யவேண்டும் என்பதில்லை.நாமே முனைந்து இதை முன்னெடுத்தாலென்ன? 

மணற்கேணி ஆய்விதழ் சார்பில் எதிர்வரும் அக்டோபர் 12 , ஞாயிறன்று ’ செம்மொழி நாள் ஆய்வரங்கு ‘ ஒன்றை விழுப்புரத்தில் ஏற்பாடுசெய்ய விரும்புகிறேன். தமிழ் மொழியைக் கொண்டாடுவதோடு மட்டுமின்றி அதை மேலும் வளப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை வகுப்பதாகவும் இந்த ஆய்வரங்கு அமையவேண்டும். 
  
இந்த ஆய்வரங்கில் பங்கேற்க இதுவரை எட்டு பேர் ஒப்புதல் அளித்துள்ளனர். அவர்களின் பெயர்களும் தலைப்புகளும் அக்டோபர் 2014 முதல் வாரத்தில் வெளியிடப்படும். தமிழ் ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன் 

அன்புடன்

ரவிக்குமார் 
ஆசிரியர், மணற்கேணி 

கடல் கிணறு: ரவிக்குமார் சிறுகதைகள்


ரவிக்குமார் ஒரு கட்டுரையாளராகவே நிலை பெற்றிருந்தாலும், இந்தக் கதைகள் புனைவு தளத்திலும் அவரது ஆற்றலை வெளிப்படுத்துவதோடு, ஒரு குறிப்பிடத்தக்க இலக்கிய அனுபவமாகவும் அமைந்துள்ளன. தமிழ் மக்களின் சமூக, அரசியல் வாழ்வின் சில ஆதாரமான கூறுகளை, இந்தக் கதைகள் சமகாலப் புனைவு மொழியின் பசுமையோடும் நுட்பத்தோடும் பதிவு செய்கின்றன.

தலித் இலக்கியம் அதன் உட்பொருளில் பின் நவீனத்துவக் கூறுகளையும், பின் நவீனத்துவ உருவம் அதன் உட்கிடையாக தலித் வாழ்வின் கலக உணர்வையும் கொண்டது. 
  தமிழ் சூழலில் இந்த இருவேறு ஓடைகளது இசைவின் சாத்யகூறுகளை  கூர்மையான இலக்கிய உணர்வோடு பரிசீலித்து அதில் வெற்றியும் அடைந்தவர் ரவிக்குமார்.

இலக்கியத்தின் வினையாற்றும் சக்தி குறித்த நமது நம்பிக்கைகளும், கற்பிதங்களும் வெகுவாக நெகிழ்ந்துவிட்ட இன்றைய சூழலில், ரவிக்குமார் தனது கதைகள் வாயிலாக முன்வைக்கும் முனைப்புகளும், அக்கறைகளும் நமக்குள் தீவிரமான ஒரு சலனத்தை ஏற்படுத்த விழைகின்றன.

- திலீப்குமார் 

நீதி அமைப்பைப் புதிர்நீக்கம் செய்யும் புத்தகம் - தேன்மொழி
கிராமத்தின் பொதுவெளியில் ஒரு மரம் அதனருகில் ஒரு மேடை - அப்படியொரு அமைப்பைப் பார்த்தால் நமது பொதுப்புத்தி சொல்லும் அது நீதி வழங்கப்படும் இடம் என்று. கூடவே, நம் மனம் நிமிர்ந்தமர்ந்த, நேர்கொண்ட பார்வையோடு ஒருவரை  அங்கு அமர்த்தி விடும். அந்த இடத்தில் அவர்தான் நீதிபதி. நாம் அறிந்திருக்கிறோம், இங்கிருக்கும் எல்லாவற்றையும் விட நீதி மேலானது என்பதை .சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஹரப்பாவில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வில் மேடை ஒன்று அடையாளம் கண்டறியப்பட்டது. அது  நீதி வழங்கும் ஒரு இடமாக இருந்திருக்கக்கூடும் என்று சொல்லப்பட்டது.

நீதி அமைப்புகளால் வழங்கப்படும் தீர்ப்பை சத்தியவாக்குபோல் நாம் நம்புகிறோம். நீதிபதியின் முன், வழக்கறிஞர்கள் கைகூப்பும் ஒவ்வொரு தருணமும் நீதி தேவதையை அவர்கள் ஆரத் தொழுகிறார்கள்.

​முற்காலங்களில் , கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே  மெய் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு.அமைச்சர்கள்,  அறிஞர்கள் எனப் பலர் கூடி விவாதித்து பின்னர் அரசனால் தீர்ப்பு வழங்கப்பட்டது என அறிகிறோம். அந்தத் தீர்ப்பின் விளைவாகத் தண்டனை வழங்கப்பட்டதை சில கல்வெட்டுகளின் வழியாகவும் நம்மால் அறியக்கூடுகிறது. முற்காலத்தில் சமிதி, சபா என்ற அமைப்புகள் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் பணியை மேற்கொண்டன என்பதை நாம் வரலாற்றில்  படித்திருக்கிறோம். அப்போது  தீர்ப்பின் மொழி அனைவருக்கும் புரிந்தது. காலப்போக்கில் , நீதிமன்றங்கள் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு , வருவாய், கல்வி, பாதுகாப்புத் துறைகளைப் போல அதுவும் ஒரு தனித்துறையாக மாறியது. அதன் விளைவாக, வழக்கின் மொழியும் , தீர்ப்பின் மொழியும் மக்களுக்கு அந்நியமாயின. நீதிமன்றங்கள் ஆங்கில மொழியைத் தங்களது அலுவல் மொழியாக மாற்றிக் கொண்ட செயல்பாடு, இந்த அந்நியத் தன்மை உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியது. அற மதிப்பீடுகளைப் புறக்கணித்து தீர்ப்புகள் பெரும்பாலும் சாட்சியங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட போது, அது மக்களின் நம்பிக்கையை கரையச் செய்தது. வழக்கு நிலுவை, வாய்தா, காலநீட்டிப்பு என்பதன் வழியாக தாமதப்படுத்தப்படும் நீதி , மறுக்கப்படும் நீதி என்ற கருத்தை தாங்கிய எதிர்மனோநிலை கொண்டவர்களாக மக்களை மாற்றியது. தீர்ப்பு என்பதை சாதகம் அல்லது பாதகம்  என்ற இரட்டை வார்த்தைகளாக மக்கள் சுருக்கிக் கொண்டார்கள். தீர்ப்பின் மதிப்புமிக்க காரணிகளான ஆளுமை, மதிநுட்பம் மற்றும் முடிவெட்டும் திடம் ஆகியவற்றின் முக்கியத்துவம் உணரப்படாமல், சாரமற்றதாகவும்,  மாற்றங்களை உண்டாக்கும் தகுதியற்றவையாகவுமே  தற்காலத்தில் தீர்ப்புகள் கருதப்படும் நிலை உருவாகிவிட்டது.

​இருப்பினும் நீதியின் கதவுகள், தட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன, வழக்குகள் குவிந்து கொண்டேதான் இருக்கின்றன். வெவ்வேறு செயல்பாட்டு முறைகள் கொண்ட நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்ட போதும், வழக்கின் எண்ணிக்கை குறையவில்லை.வழக்குகளோடு மக்கள் நீதிமன்றங்களை அணுகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஏனென்றால், நீதியைக் கடவுளோடு அவர்கள் இணைத்துப் பார்க்கிறார்கள். நீதிமன்றத்தைக்  கோயிலாகவும் நீதிபதியைக் கடவுளாகவைம் உருவகித்துக்கொள்கிற மனித மனம் நீதி அமைப்புக்குள் தன் பிரச்சனைக்கான நியாயத்தை அடைந்துவிட முடியும் என நம்புகிறது. ஒரு இடத்தில் தோற்கும் போது இன்னொரு இடத்தைப் பற்றிக்கொள்ளுதல் மனித இயல்பு. அதுதான் மேல்முறையீடுகளுக்குக் காரணமாக அமைகிறது. நல்லது /  கெட்டது, தர்மம்/ அதர்மம்  என்பதை பகுத்துப்பார்த்து செயல்படும் அறநெறிக் கோட்பாடுகளின் பாதுகாவலராக நீதி அமைப்பை நாம் நினைத்துக்கொள்கிறோம். பகுத்தறிவை உள்ளடக்கிய அறநெறியும், உணர்வுகளை செம்மைப்படுத்தும் ஆன்மீகமும் மானுடத்தை இயக்கிய போது , நீதி எல்லாவற்றுக்கும் தலையாயது என அது ஒத்துக் கொண்டது.

சமநீதி என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இயங்கும் இன்றைய காலக்கட்டத்தில் ஒருசில நீதிபதிகளின் முயற்சிகளால் நீதியின் மொழி புதிர்த்தன்மையிலிருந்து சற்றே விடுபட்டிருக்கிறது. அது மனிதர்களுக்காக, மனிதர்களால் உருவாக்கப்பட்டு, மனிதர்களிடையே உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஒன்றுதான் என்பதை மதிப்பிற்குரிய நீதிபதி சந்துரு அவர்களின் ‘ அம்பேத்கார் ஒளியில் எனது தீர்ப்புகள் என்ற இந்தப் புத்த்கம் விளங்கவைக்கிறது.  நம்முள் இத்தனைகாலமும் மூடப்பட்டுக்கிடந்த கதவுகளை ஒவ்வொன்றாகத் திறந்து, தீர்ப்புகள் இப்படித்தான் எழுதப்படுகின்றன என்ற வெளிச்சத்தை இந்த நூல் நம் மீது பாய்ச்சுகிறது. நம்மில் பலருக்கும் நீதிமன்றத் தீர்ப்புகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஆனால், அந்த்த் தீர்ப்புகள் எப்படி உருவாக்கம் பெற்றன என்ற நுட்பமான செயல்பாட்டைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்காது. அதை சாத்தியப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.அனுபவம்,ஆய்வு,சுயசரிதை என்ற வடிவங்களின் கூறுகள் ஆங்காங்கே தென்பட்டாலும் அவற்றையெல்லாம் தாண்டிப் புதுவகை இலக்கியமாக இந்த நூல் திகழ்கிறது.அதுமட்டுமின்றிப் படைப்பிலக்கியத்தின் வடிவங்களோடும் இதைப் பொருத்திப் பார்க்க முடிகிறது.

இந்தப் புத்தகத்தை தீர்ப்புகளின் தொகுப்பு என்பதாக மட்டும் எடுத்துக் கொண்டால் அது நம் போதாமையின் வெளிப்பாடாகவே இருக்கும். இதிலிருக்கும் தீர்ப்புகள் வெறும் தீர்ப்புகள் அல்ல. இச்சமூகத்தில், மறுக்கப்பட்டதை எதிர்த்து, இயற்கையில் கிடைக்க வேண்டியதைக் கொடு என இடப்பட்ட ஆணைகள் தான் இந்த்த் தீர்ப்புகள். போராட்டங்களின் முடிவில் எட்டப்படுவதை, சில சமயம் எட்ட முடியாமல் போனதை,  சாத்தியப்படுத்தியப் பெருமை இத்தீர்ப்புகளுக்கு உண்டு. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு போராட்டத்தின் விளைவு/ வெற்றி என்று சொல்வதைவிடவும், இந்தத் தீர்ப்புகளின் அடித்தளத்தில் பல போராட்டங்களால் ஏற்படும் விளைவும், வெற்றியும் குவிந்திருப்பதை நம்மால் உணரமுடிகிறது.

இப்புத்தகத்தின் முதல் அத்தியாயமாக  ’பெளத்தம் ஏன்?’  என்ற கட்டுரை உள்ளது. பெளத்தம், புத்தர் என்றவுடன், முன்வைக்கப்படும் சில விமர்சன்ங்கள் உள்ளன. புத்தரிடம் ,  அவரது, தாய், வளர்ப்புத் தாய் மற்றும் மனைவி ஆகிய நெருங்கிய பெண் உறவுகள் , தங்களை சங்கத்தில் சேர்த்துக் கொள்ள கோரும்போது , புத்தர் மறுத்து விடுகிறார். சீடர்களுக்கும் புத்தருக்கும் அது குறித்த விவாதம் நடக்கிறது. பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனக் கேட்கும் ஒரு சீடனிடம் புத்தர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
“ பெண்களைப் பார்ப்பதைத் தவிருங்கள். அப்படியே பார்த்துவிட்டால் பார்க்காத்துபோல் சென்றுவிடுங்கள். அவர்களோடு பேசாதீர்கள். .... பெண்களோடு இச்சையில் மகிழ்ந்து வாழ்வதைவிட கொடும் புலியின் வாயில் விழலாம், கொலைகாரர்களின் வாளுக்குப் பலியாகலாம்( The Gospel of Buddha, Compiled from ancient records by PAUL CARUS, London, 1894, p-93)என்கிறார். இதை எடுத்துக்காட்டி பௌத்தம் பெண்களுக்கு எதிரானது என வாதிடுவோர் உண்டு. ஆனால் பௌத்தத்தை ஆராய்ந்தால் அதிலும் குறிப்பாக அதை இந்து மதத்தோடு ஒப்பீட்டால் அது இந்து மத்த்தைவிடவும் பெண்களை மதித்த ஒரு மதமாகவே நாம் கருதமுடிகிறது.

 பௌத்தம் மீதான இத்தகைய விமர்சனங்களுக்குப் பதிலளித்து அது பெண்களுக்கு அளித்திருக்கும் சிறப்பான இடத்தை விவரித்த அம்பேத்கர் , பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் இந்து சட்ட மசோதாவை நிறைவேற்ற முடியாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1951 இல் தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்தியப் பெண்கள், பௌத்தத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இடத்தைப் புரிந்துகொள்ளாததுபோலவே அம்பேத்கர் பெண்ணினத்துக்கு ஆற்றிய தொண்டையும் அங்கீகரிக்கவில்லை.பிரக்ஞைபூர்வமாக அரசியல் செயல்பாடுகளில் பங்கெடுக்கும் பெண்களும் இந்த வரலாற்று மறதிக்கு ஆளாகியிருப்பதுதான் நம்மை சங்கடப்படுத்துகிறது. அம்பேதகரை மட்டுமல்ல நீதிபதி சந்துரு அவர்களையும் தமிழ்நாட்டுப் பெண்ணிய அமைப்புகள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அப்படிப் புரிந்துகொண்டிருந்தால் பெண்ணடிமையின் உற்பவிப்புத் தளங்களில் முக்கியமான ஒன்றான  கோயிலில் பெண்களும் அர்ச்சகராகலாம் என்று அவர் அளித்த புரட்சிகரமான தீர்ப்பை அவர்கள் கொண்டாடியிருப்பார்கள்.

இலக்கியம் என்ன செய்யும்? இலக்கியம் என்ன தரும் ? இது இலக்கியம் சாராதவர்கள் அடிக்கடி கேட்டுக்கொள்ளும் கேள்வி. இலக்கியம் காலத்தின் கண்ணாடி, அது வரலாற்றைக், கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது, இலக்கியம், ஆக்கம்/அழிவு, வாழ்வு/ மரணம், துக்கம்/ மகிழ்ச்சி எல்லாவற்றுக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. ஆனால், இலக்கியம் சமூகத்தை சமன் செய்யக்கூடிய வலுமிக்க தீர்ப்புகளை வழங்கும் என்பதை இப்புத்தகம் புதிய தகவலாய்த் தருகிறது (பக்கம்41, ப- 44, ப- 80)

சிலப்பதிகாரம் உள்ளிட்ட அநேக இலக்கியங்கள் அற போதனைக்  குவியல்களாக நம்மிடம் உள்ளன. நாம் அவற்றை சரியாக்க் கையாண்டதே இல்லை. ஆனால், இதிலிருக்கும் தீர்ப்புகள் , இலக்கியத்தை மிகச் சரியாக்க் கையாண்ட நீதிபதியை நமக்குக் காட்டுகின்றன.

பஞ்சமி நிலம் குறித்த தீர்ப்பை வழங்க இலக்கியம் மட்டுமல்ல, வரலாறும்  இவருக்குப் பயன்பட்டிருக்கிறது. நீதிபதி அவர்கள் தனது தீர்ப்பு ஒன்றில் அமெரிக்காவின் பூர்வகுடியான ஆதிவாசி ஒருவரின் கவித்துமான வரிகளைக் குறிப்பிட்டுள்ளார்:


ஒரு வண்ண ஓவியத்தை சிறு கீறல்களை உண்டாக்கி அழிக்கவோ

அதன் அழகைக் குலைக்கவோ முடியாது.

பூமியின் வெதுவெதுப்பையும் ஆகாயத்தையும் எப்படி உங்களால்

வாங்கவோ விற்கவோ முடியும்?

இந்த எண்ணமே வினோதமானது

காற்றின் தூய்மையும், நீரின் தவளைகளும் நமக்குச் சொந்தமில்லாத
போது , அவற்றை எப்படி வாங்க முடியும்?

இந்த பூமியின் ஒவ்வொரு அடியும் எனது மக்களுக்கு உரியது

இந்த மண்ணில் ஊடுருவும் ஒளிக்கதிர், மணல், கடற்கரை, அடர்ந்த காடுகளின் ஊடே தோன்றும் பனித்துளி, அங்கு ரீங்காரமிடும் உயிர் வாழ் இனங்கள் அனைத்தும் எம்மக்களின் மனங்களில் என்றும் நிறைந்திருக்கிறது.

நட்சத்திரங்களுக்கு இடையே உலவிக் கொண்டிருக்கும் எம்மக்களைப் பார்த்து தங்களின் தாய்நாட்டையே மறந்து கொண்டிருக்கிறனர் அந்த வெள்ளையர்கள்

எங்கள் மூதாதையர் இந்த அழகான பூமியை ஒருபோதும் மறப்பதில்லை.

இந்த உலகத்தின் ஒரு அங்கம் நாங்கள்

இந்த உலகம் எங்களின் ஒரு அங்கம்

இங்கு மலர்கின்ற பூக்கள் எங்களின் உடன்பிறந்த சகோதரிகள்

இங்கு காணப்படும் குதிரை மற்றும் கழுகுகள் எங்களின் சகோதரர்கள்

இங்குள்ள மலை உச்சி, தெளிந்த நீரோடைகள் மனிதர்கள் எல்லோரும் ஒரே குடும்பம் “  (ப-42)அம்பேத்கர் என்ற பெயர் , அந்த வார்த்தை, தீண்டத்தகாதவர்களோடு மட்டுமே தொடர்புபடுத்தி பார்க்கப்பட்டு வருவதையும், வேறு இனத்தவர்/ இனத்தோடு தொடர்புபடுத்தி பார்க்கப்படுவதில் மிகப் பெரிய தீண்டாமை பின்பற்றப் படுவதையும் நம் மனசாட்சி ஒத்துக் கொள்ளும். தொடர்ந்து தீண்டாமைக்கு குரல் கொடுத்தவர் என்ற ஒற்றை வரியில் அவரது குரல்வளை நசுக்கப்படுவதற்கும்  நாமே சாட்சிகள். நமக்கு தெரியாது , இராமாயணம், மகாபாரதம் எப்போது யாரால் எங்கே எப்படி எழுதப்பட்ட்து என்பது. ஆயினும் சொல்லப்பட்டதை நாம் நம்புகிறோம், வியக்கிறோம். நமக்குத் தெரியும், நம் அரசியலமைப்பு  எப்போது எழுதப்பட்டது என்பது. நாம் அறிவோம், அது யாரால் எழுதப்பட்டது என்பதை. இந்திய வரைபடத்துள் நம்மை ஒருங்கிணைக்கும் அதன் திறமையை , உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தைத் தாங்கும் அந்த பலம் மிக்க தூணை. மொழிகளால் இனங்களால் பிரிந்துகிடப்போரைக் கட்டி அரவணைக்கும் அதன் அளவிட முடியா சக்தியை, அது வழங்கும் பாதுகாப்பை. ஆயினும் , நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம், வியக்க மாட்டோம், வணங்க வேண்டாம் மதிக்க்கக் கூட மாட்டோம். அப்படியொரு நிராகரிப்பு. அதன் பின்னணியில் பார்க்கும்போதுதான் இந்த நூலின் சிறப்பு நமக்குப் புலப்படும்.

ரவிக்குமார் தனது பதிப்புரையில், அம்பேத்கரின் சிந்தனைகள்  வேறெந்தத் துறையையும் விட நீதித்துறைக்கு அதிகம் பயன்படக் கூடும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ம்பேத்கரது சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுத்து , அவரை நிராகரிக்கப்படவே முடியாத ஒரு ஆளுமையாக மாற்றி இருக்கிறது இந்தப் புத்தகம். தீண்டாமைச் சுவர், சமத்துவமில்லாத கல்லறை என, இச்சமூகத்திலிருக்கும் சாதியின் அத்தனை கோர முகங்களையும் காரி உமிழும் இந்தத் தீர்ப்புகளுக்கு நன்றி சொல்லவேண்டும். சமத்துவத்தின்மீது மதிப்பு கொண்டவர்களை இந்தப் புத்தகம் அம்பேத்கரின் சிந்தனைக்குள் அழைத்துச் செல்கிறது. சாதீய வெறி அடங்க சிறுமிகளைப் பாலியல் காவு கொள்ளும் நாற்றமடிக்கும்  இந்தச் சமூகத்திற்கு அம்பேத்கரை இதைவிட தெளிவாக வேறு எவராலும் அறிமுகம் செய்ய முடியாது.

வெ.இறையன்பு அவர்கள் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல , சமன் செய்தல் என்ற கருத்தாக்கத்தை இத்தீர்ப்புகள் அடிப்படையாகக் கொண்டுள்ளன. அம்பேத்கரின் சிந்தனைகளைக் கறை படிந்த சமூகத்தின் மேடு பள்ளங்களைச் சமன் செய்யும் கருவியாகப் பயன்படுத்திய நீதிபதி சந்துரு அவர்களின் சீரிய பணிக்கு நாம் தலைவணங்குகிறோம்.

சுதந்திரத்தை எவரும் அன்பளிப்பாகப் பெற இயலாது. போராடித்தான் அதனைப் பெற முடியும். தன்னிலை உயர்வு என்பது மற்றவர்களின் ஆசீர்வாதத்தால் வருவதன்று. அது ஒருவர் தம் சொந்ப் போராட்டத்தின் மூலமாகவும் , செயல்களினாலும் மட்டுமே அடையக் கூடியது ”     என்று நீதியரசர் சந்துரு அவர்கள் மேற்கோள் காட்டியிருக்கும் அம்பேத்கரின் வரிகள் இச்சமூகத்தில் ஒடுக்கப்பட்டவராகத் ம்மை உணரும் ஒவ்வொருவருக்குமாக எழுதப்பட்ட வரிகள்.

நிலம் மனிதனின் அடிப்படை வாழ்வாதாரம்,. அவனிடமிருந்த வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது, அவன் பலவீனப் படுத்தப்படுகிறான். மனிதனை பலவீனப்படுத்தும் எந்தக் காரியமும் மனித குலத்துக்கே எதிரானது , என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் மீட்பு என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு, எந்த சட்ட சஞ்சிகைகளிலும் வெளியிடப்படாத போதும், இத்தீர்ப்பு இரு நீதிபதிகளடங்கிய அமர்வில் உறுதி செய்யப்பட்டது (ப -42) என்பதை நீதிபதி அவர்கள் வேதனையோடு பகிர்ந்து கொள்கிறார்.தமிழகம் முழுவதும் பரவலான பாராட்டுகளை எனது தீர்ப்புகள் பெற்றிருப்பினும் துரதிர்ஷ்டவசமாக சட்ட சஞ்சிகைகளில் அத்தீர்ப்புகள் வெளியிடப்படவில்லை” “ தீர்ப்புகளை ஆவணப்படுத்தாவிட்டால், அவை சட்ட சரித்திரத்திலிருந்து மறைக்கப்பட்டு விடும் வாய்ப்புண்டுஎன்னும் அவரின் வரிகளில் மறைந்திருக்கும் வேதனையில் பதைபதைப்பில், தீண்டாமையின் வேர் பாய்ந்திருக்கும் ஆழத்தை நாம் புரிந்துகொள்கிறோம்.

நீதிபதி சந்துரு அவர்கள் வழங்கிய வரலாற்றுச் சிறப்புவாய்ந்த அரிய தீர்ப்புகளை சாதியின் கோரப்பிடியிலிருந்து காப்பாற்றி ஆவணப்படுத்தியதன் வாயிலாக  மணற்கேணி பதிப்பகம் தனக்குக் கூடுதல் பெருமை சேர்த்துக் கொள்கிறது