Thursday, September 18, 2014

நூல் ஏணி - தலித் பார்வையில் ஆசிரியர்கள்

இந்த நூலுக்கு ரவிக்குமார் எழுதியுள்ள முன்னுரை:

 

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகை 721.47இலட்சத்தில் ஆதிதிராவிடர்கள் 144.38 இலட்சமும்,பழங்குடியினர் 7.95 இலட்சமும் உள்ளனர்எனவே தமிழகத்தின்மொத்த மக்கள் தொகையில் ஆதிதிராவிடர் 20.01 விழுக்காடும்,பழங்குடியினர் 1.10 விழுக்காடும் உள்ளனர்.

ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மக்கள் தொகையில்பெரும்பான்மையினர் பொருளாதாரத்தில் பின்தங்கிசமூகத்தின்விளிம்பில் உள்ளனர்அநேக குடும்பங்கள் வாய்ப்புகள்வளங்கள்இன்றி உள்ளதோடு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் ஏனையவருவாய் ஈட்டும் நேர்வுகளில் அவர்களின் நுழைவுரிமை ஒருவரம்பிற்குள் உள்ளதுமாநிலத்தில் கல்வியறிவு பெற்றோர்விழுக்காடு 80.09 என்பதை ஒப்பிட்டு நோக்கும் போதுஆதிதிராவிடர்களின் கல்வி அறிவு 73.26 விழுக்காடாகவும்,பழங்குடியினருடைய கல்வி அறிவு 54.34 விழுக்காடு என்றநிலையில் மிகவும் குறைவானதாக உள்ளது.” – என்கிறது தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை வெளியிட்டிருக்கும் 2014-15 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு செயலாக்கத் திட்டம் என்ற ஆவணம்.

ஆதிதிராவிட / பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக்காக எத்தனையோ முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள்மேற்கொண்டு வந்தபோதிலும் பொதுவான கல்வியறிவு பெற்றோரின் சதவீதத்துக்கும் இந்த சமூகத்தினரில் கல்வி அறிவு பெற்றோரின் சதவீதத்துக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதைக் காணமுடிகிறது. இதற்கு அரசாங்கமும் சமூகமும் சேர்ந்து பொறுப்பேற்கவேண்டும். ஏனெனில் அரசாங்கம் போடும் சட்டங்கள் சாதிய சமூகத்தின் முன்னால் செயலற்றுப் போய்விடுகின்றன. அவற்றைச் செயல்படவைக்கும் அரசியல் உறுதி இருந்தாலொழிய இந்த நிலையை மாற்ற முடியாது.

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கல்வி நிறுவனங்களில் நடைபெற்று நாளேடுகளில் வெளியான சாதிவெறி நடவடிக்கைகளுக்கு ஒருசில சான்றுகளை மட்டும் இங்கே தருகிறேன்:

 

பாகுபாடு காட்டப்பட்டதால் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திய மாணவர்கள் :

திருநெல்வேலியைச் சேர்ந்த மனித உரிமைக் கல்வி பாதுகாப்புக் கூட்டமைப்பின் ( HREPC ) சார்பில் நெல்லையில் நடைபெற்ற பொது விசாரணை ஒன்றில் சாதிய பாகுபாடு காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் நின்றுபோன தலித் மாணவர்கள் கலந்துகொண்டு சாட்சியமளித்தனர். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 52 கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1680 தலித் மாணவர்கள் படிப்பைத் தொடராமல் இடைநின்றது கண்டறியப்பட்டது. சக மாணவர்களாலும், ஆசிரியர்களாலும் சாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்ட காரணத்தினாலேயே தாங்கள் படிப்பைத் தொடரமுடியவில்லை என அந்த மாணவர்கள் கூறியுள்ளனர்.

காரணம் எதுவும் இல்லாமல் ஆசிரியர்களால் அடிக்கப்படுவது, பாதியிலேயே பள்ளியிலிருந்து நீக்கி மாற்றல் சான்றிதழ் ( Transfer Certificate) கொடுக்கப்படுவது போன்ற பல்வேறுவிதமான கொடுமைகளைப் பொது விசாரணையில் கலந்துகொண்ட மாணவர்கள் விவரித்துள்ளனர். (http://www.thehindu.com/news/national/tamil-nadu/dalit-school-dropouts-narrate-their-discrimination-accounts/article4064737.ece )

தலித் மாணவர்களோடு ஒன்றாக அமர மறுத்த மாணவர்கள் :

தர்மபுரியில் தலித் குடியிருப்புகள்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு சில நாட்கள் கழித்து பாதுகாப்புக்காக அந்த கிராமங்களைச் சேர்ந்த தலித் மாணவர்களை போலிஸ் வேனில் பள்ளிக்கு அழைத்துப் போய் திரும்ப அழைத்துவந்து விட்டார்கள். ஆனால் பள்ளிக்குப் போன தலித் மாணவர்கள் அங்கு வேறுவிதமான பிரச்சனையை எதிர்கொள்ள நேர்ந்தது. அதுவரை தலித் மாணவர்களோடு பேதமின்றி ஒன்றாக அமர்ந்து படித்த பிற சாதி மாணவர்கள் அந்த கலவரத்துக்குப் பிறகு தலித் மாணவர்களோடு ஒன்றாக அமர மறுத்துவிட்டனர். இது, ஏற்கனவே கலவரத்தால் தமது பாடநூல்கள் உள்ளிட்ட அனைத்து உடமைகளையும் இழந்து நிற்கும் தலித் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. (http://www.thehindu.com/news/national/tamil-nadu/dalit-students-face-discrimination-in-dharmapuri/article4102614.ece )

செருப்பு அணிந்துசென்ற மாணவனுக்கு நேர்ந்த கொடுமை :

மதுரை மாவட்டம் வடுகப்பட்டி என்ற ஊரில் 12 வயது தலித் மாணவன் செருப்பு அணிந்து பிற சாதியினர் வசிக்கும் தெருவழியே சென்றான் என்பதற்காக அவனது செருப்பை அவன் தலையில் வைத்து ஊர் நெடுக சுமந்து செல்லும்படி செய்யப்பட்டான். அந்த சம்பவத்துக்குப் பிறகு அவன் பள்ளிக்குச் செல்ல மறுத்துவிட்டான். அந்தப் பள்ளியில் படிக்கும் தலித் மாணவர்கள் எல்லோரும் வெறுங்காலோடுதான் பள்ளிக்குச் செல்கிறார்கள் என்ற விவரம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரியின் நேரடி விசாரணையில் தெரிய வந்தது. (http://timesofindia.indiatimes.com/city/madurai/Dalit-boy-was-subjected-to-humiliation-says-probe-team/articleshow/20546252.cms )

தலித் மாணவர்களில்லாத பஞ்சாயத்து யூனியன் பள்ளி :

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்திலுள்ள பச்சையங்காடு பகுதியில் நூறு தலித் குடும்பங்கள் வசிக்கின்றன. பள்ளிக்குச் செல்லும் வயதில் 54 பிள்ளைகள் அந்தத் தெருவில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் தனியார் பள்ளியில் படிக்கிறார்கள். அதே ஊரில் இருக்கும் பஞ்சாயத்து யூனியன் துவக்கப் பள்ளியில் ஒரு தலித் மாணவர்கூட இல்லை. 1980 களில் அந்தப் பள்ளியில் தலித் மாணவர்கள் சாதிய ரீதியில் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஒட்டுமொத்தமாக அந்தப் பள்ளியிலிருந்து மாற்றி தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். மீண்டும் ஒரு தலித் மாணவரை சேர்ப்பதற்கு அந்தப் பள்ளி நிர்வாகம் இதுவரை அக்கறை காட்டவில்லை. (http://www.thehindu.com/news/national/tamil-nadu/dalit-students-shun-this-government-school/article3315446.ece )

தலித் சத்துணவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு :

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்துக்கு அருகில் உள்ள கம்மாபட்டி பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் சத்துணவுப் பணியாளர்களாக இரண்டு தலித் பெண்கள் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஊரைச் சேர்ந்த பிற சாதியினர் தமது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்ததால் அந்த இரண்டு பணியாளர்களும் வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டனர்.  “ பிற சாதியினர் சமைக்கும் உணவை சாப்பிடும் வழக்கம் எங்களுக்கு இல்லை என்று அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். இதை தீண்டாமையாகப் பார்க்கக்கூடாது அந்த ஊரில் இருக்கும் வினோதமான ஒரு வழக்கம் என்றே பார்க்கவேண்டும்”  என்று அதற்கு நியாயம் கற்பிக்கும் விதமாக அந்த மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராகப் பொறுப்பு வகிக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ) கூறியிருக்கிறார்.(http://www.firstpost.com/india/why-untouchability-makes-tamil-nadu-the-most-lopsided-state-368799.html )

அம்பேத்கர் பற்றிய பாடத்தை நடத்துவதற்கு எதிர்ப்பு

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள சீ.ரா.அரசு மேல் நிலைப் பள்ளியில் அம்பேத்கர் பற்றிய பாடத்தை நடத்தக்கூடாது என தலித் அல்லாத மாணவர்களால் ஆசிரியர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். அதையும் மீறி பாடம் நடத்திய ஆசிரியர்கள்மீது கல்லெறிந்து தாக்கிய சம்பவமும் நடந்திருக்கிறது. தலித் அல்லாத சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தமது சாதித் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் போன்வற்றைக் கொண்டாடுதல் அவர்களின் படங்களை பள்ளியின் சுற்றுச் சுவரில் வரைந்து வைத்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடுவதாகத் தெரிய வந்துள்ளது. (http://m.newindianexpress.com/tamil-nadu/363325 )

மேற்குறிப்பிட்ட சம்பவங்களில் அரசு தலையிட்டு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்பது உண்மைதான். எனினும், ஒருசில சுயநலமிகளின் வெறுப்புப் பிரச்சாரத்தால் தமிழ்ச் சமூகம் எப்படி ஒரு சீக்குப் பிடித்த சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை இந்த சம்பவங்கள் நமக்குக் காட்டுகின்றன.

அவநம்பிக்கையூட்டும் இப்படியான சம்பவங்கள் நடந்தாலும்கூட வகுப்பறைகளில் பாகுபாடு பார்க்காமல் நலிந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களைப் பரிவோடும் அக்கறையோடும் அணுகிக்கைதூக்கிவிடும் ஆசிரியர்களும் இருக்கவே செய்கின்றனர். இன்று சமூகத்தில் உயர்ந்த நிலையிலிருக்கும் எந்தவொரு தலித்தின் வாழ்விலும் அப்படியான ஆசிரியர்களின் பங்களிப்பு இருக்கிறது.

நன்றியுணர்வுக்குப் பெயர்போன சமூகம் தலித் சமூகம். தான் சாப்பிட்ட பழைய சோற்றுக்காகத் தனது உயிரையே தாரைவார்த்த தலித்துகளை நாம் அறிவோம். தினையிலும் சிறியஅளவு உதவியை ஒருவர் செய்தால்கூட அதை தினந்தோறும் சொல்லி மகிழும் மனம் தலித்துகளுடையது. அதற்குச் சான்று பகர்வதாக இருக்கிறது இந்தத் தொகுப்பு. தமிழ் தலித் எழுத்தாளர்கள் சிலர் தம்மை பாதித்த, தம் மீது செல்வாக்கு செலுத்திய  தலித் அல்லாத ஆசிரியர்களை இங்கே நினைவுகூர்ந்துள்ளனர். சமத்துவத்தின்மீது மதிப்புகொண்ட அந்த ஆசிரியர்களின் முன்னுதாரணம் மேலும் பல ஆசிரியர்களை அந்தத் திசை நோக்கி ஈர்க்கும் என நம்புகிறேன்.

ஃ ப்ரான்ஸ் நாட்டின் கல்வியைச் சீரமைப்பதற்கான பரிந்துரைகளை அந்த நாட்டு அரசாங்கம் கோரியபோது அந் நாட்டைச் சேர்ந்த சிந்தனையாளர் பியர் பூர்தியூ என்பவர் ஒன்பது பரிந்துரைகளை முன்வைத்தார். “ கல்வி என்பது வாழ்நாள் முழுதும் நீடிக்கவேண்டும். வேலையில் சேர்வதோடு  படிப்பை முறித்துவிடக்கூடாது” என்பது அவர் முன்வைத்த பரிந்துரைகளில் ஒன்று. அது நமது நாட்டுக்கும் பொருந்தும். இதன் பொருள் ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி கொடுக்கவேண்டும் என்பதல்ல. அவர்கள் தம்மை எப்போதும் மாணவர்களாக உணரவேண்டும் என்பதுதான் இதற்கு உண்மையான அர்த்தம். தமிழ்நாட்டு ஆசிரியப் பெருமக்கள் இந்த நூலை ஒரு மாணவராகஇருந்து கற்கவேண்டும் என வேண்டுகிறேன்.

ரவிக்குமார்

18.09.2014    

 

 

 

No comments:

Post a Comment