Friday, September 19, 2014

திரு கே.சந்துரு : ஒரு மக்கள் நீதிபதி


திரு கே.சந்துரு : ஒரு மக்கள் நீதிபதி

ரவிக்குமார்

இந்தியாவின் நீதிபரிபாலன முறை குறித்துப் பெருமைபட சிலர்பேசுவதை நாம் கேட்டிருப்போம். வேதங்களும் ஸ்மிருதிகளும் மக்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் பலவற்றை வகுத்துத் தந்திருந்தன என்றபோதிலும் அவை காலகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவந்த பழக்கவழக்கங்களின் அடிப்படையில் சில பண்டிதர்களால் உருவாக்கப்பட்டவையே தவிர தற்போதிருப்பதுபோல மக்கள் பிரதிநிதிகளால் இயற்றப்பட்டவையல்ல. ஏற்றத் தாழ்வைத் தனது இருப்பின் அடிப்படையாகக் கொண்டிருக்கும் இந்திய சமூகத்தில் பழக்க வழக்கங்களும் அவற்றின் அடிப்படையிலான சட்டதிட்டங்களும் சமத்துவத் தன்மையோடு இருந்திருக்க வாய்ப்பில்லை. இந்திய சமூகத்தில் சட்டங்கள் இருந்தன, அவற்றின் அடிப்படையிலான நீதி பரிபாலனமும் நடந்தது. ஆனால் அது அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவில்லை. குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான நீதி என்பது பிரிட்டிஷ் ஆட்சியின்போதுதான் இங்குஅறிமுகப்படுத்தப்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியால்தான் எல்லாம் நாசமாகிவிட்டது எனப் பேசுவது இப்போது ஒரு ’ இண்டலக்சுவல் ஃபாஷன்’. பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நல்லதையும் செய்தது, கெடுதலையும் ஏற்படுத்தியது என்ற அம்பேத்கர், அது செய்த நன்மைகளில் முதன்மையானவையாக 1. பொதுவான சட்டம் 2. பொதுவான நீதிபரிபாலன அமைப்பு 3. பொதுவான நிர்வாகம் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். இந்தியாவைச் சுரண்டி வறுமைக்கு ஆட்படுத்தியதையும், சமூகத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வுகளை அப்படியே கட்டிக் காப்பாற்றியதையும், சலுகைபெற்ற வர்க்கம் ஒன்றை உருவாக்கிவிட்டதையும் பிரிட்டிஷ் ஆட்சியின் கேடுகள் என அவர் சுட்டிக் காட்டினார். ( Draft manifesto Of SCF, 1951)

ஜனநாயகத்தைக் காப்பாற்ற அரசியல் சமத்துவம் மட்டும் போதாது, சமூக, பொருளாதாரத் தளங்களிலும் சமத்துவநிலை உருவாக்கப்படவேண்டும் என்று இதனால்தான் அவர்வலியுறுத்தினார். ஆனால் சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களோ பிரிட்டிஷ் ஆட்சியில் புகுத்தப்பட்ட சமத்துவக் கூறுகளையும் மெள்ள மெள்ள நீர்த்துப்போகச்செய்துவருகின்றனர்.    

நமது நீதிபரிபாலன அமைப்பின் அடித்தளமாக இருக்கின்ற சட்டங்களை இயற்றும் அதிகாரம் மக்களவைக்கு இருக்கிறது. ஆனால் சட்டம் இயற்றும் பணிக்கு அங்கே போதுமான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் ஏறக்குறைய 200 ஆண்டுகளில் சுமார் 400 சட்டங்களை இயற்றினார்கள்.  சுதந்திரமடைந்து 40 ஆண்டுகளுக்குள் நமது நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் சுமார் 4000 சட்டங்களை இயற்றியுள்ளன. நாடாளுமன்றத்தில் பெரும்பாலான சட்டங்கள்நிறைவேற்றப்பட்டபோது குறைந்தபட்ச உறுப்பினர்கள்கூடஅவையில் இல்லையென்பது வேதனையளிக்கும் உண்மை. நாடாளுமன்றம், மாநிலச் சட்டமன்றங்கள் ஆகியவை ஓர் ஆண்டில் மிகக் குறைந்த நாள்களே செயல்படுகின்றன.  இதனால் சட்ட மசோதாக்களை விவாதிக்கப் போதுமான அவகாசம் அவற்றுக்கு இருப்பதில்லை.  

சட்டம் இயற்றுவதில் காட்டப்படும் இந்த அலட்சியம் நமதுதண்டனை அமைப்பிலும் ( Penal System) தாக்கத்தை ஏற்படுத்துகிறது.தேசிய குற்ற ஆவண மையம் (என்.சி.ஆர்.பி) வெளியிட்டுள்ள 2011 ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி  நாட்டில் அப்போதிருந்த தண்டனைக் கைதிகளில்  எஸ்சி/எஸ்டி பிரிவினர்36 %. எனவும், மொத்த விசாரணைக் கைதிகளில் இந்த சமூகத்தவரின் பங்கு 35.42% எனவும் தெரிய வந்துள்ளது.அவர்களுடைய மக்கள் தொகைக்கும் சிறைவாசிகளின் எண்ணிக்கையில் அந்தப் பிரிவினரின் பங்குக்கும் உள்ளவிகிதத்தைப் பார்க்கும்போது இந்த நாட்டின் தண்டனை அமைப்பில் சமத்துவம் நிலவுகிறதா என்ற சந்தேகம் நமக்குஎழுகிறது.

சட்டம் இயற்றும் அவைகளும், தண்டனை அமைப்பும் சமத்துவத்தைப் பாதுகாக்கும் பணியில் வழுவும்போது மக்களின்நம்பிக்கையை ஒருசில நீதிபதிகள்தாம் காப்பாற்றிவருகின்றனர். அத்தகைய நீதிபதிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர்தான் நீதியரசர் கே.சந்துரு அவர்கள். மாணவப் பருவந்தொட்டே மக்கள் பிரச்சனைகளில் ஈடுபாடுகொண்டு தனது வாழ்க்கையை அதற்கென அர்ப்பணித்துக்கொண்டவர் அவர்.

 

வர்க்கமாக / சாதியாக மக்கள் பிரிந்துகிடக்கும் இந்த நாட்டில் இப்போதிருக்கும் சட்டங்களைக்கொண்டே பிரச்சனைகள் எல்லாவற்றையும் தீர்த்துவிடமுடியாது. நீதியரசர் சந்துரு அவர்கள் ஏற்றுக்கொண்ட மார்க்சியப் பார்வையும் அதைத்தான் சொல்லும். ஆனால் ஜனநாயகத்தை ஆட்சிமுறையாக ஏற்றுக்கொண்டதொரு நாட்டில் எந்தவொரு பிரச்சனையையும் தீர்ப்பதற்கு சட்டமும் நீதியும்தான் அடிப்படைகளாக அமையமுடியும். அதைத்தான் வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

’குற்றம் செய்தவரைக்கூடத் தமது வாதத் திறமையால் நிரபராதி என நிரூபித்துக்காட்டுபவர்தான் நல்ல வழக்கறிஞர்’ என்பது நமது பொதுப் புத்தியில் பதிந்திருக்கும் கருத்து. அதற்கு மாறாக, குற்றம் செய்தவர்  எனத் தனக்குத் தெரிந்த எவருக்காகவும் வாதாடுவதில்லை என்ற கொளகையைக் கொண்ட வழக்கறிஞராக இருந்தவர் திரு சந்துரு. அவர் இலவசமாக நடத்திய வழக்குகள் ஏராளம். இலவசமாக வழக்கு நடத்தியது மட்டுமின்றி தன் கட்சிக்காரர்களுக்கு உணவு வாங்கித் தந்து வழிச் செலவுக்கும் பணம் கொடுத்து அனுப்பியவர் அவர்.வெற்றிகரமான வழக்கறிஞர்கள் எல்லோரும் வெற்றிகரமான நீதிபதிகளாக இருப்பார்கள் எனச் சொல்லமுடியாது. அதிலும் திரு சந்துரு அவர்கள் ஒரு விதிவிலக்கு. சுமார் ஒரு லட்சம் வழக்குகளில் அவர் தீர்ப்பு வழங்கியிருக்கிறார். அதில் ஒன்றுகூட சர்ச்சைக்கு ஆளானதில்லை.

திரு சந்துரு அவர்கள் நடத்திய வழக்குகளால் நேரடியாகப்பயன்பெற்றவர்கள் தனிநபர்களாக இருக்கலாம், ஆனால் அந்தத் தனி நபர்கள் பொதுநலன் சார்ந்து செயலாற்றும்போது  ஒட்டுமொத்த சமூகமும் அதனால் பயன்பெறுகிறது. அதற்கொரு உதாரணம் தான் பேராசிரியர் கல்யாணி. அவருக்காகப் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை இலவசமாக திரு சந்துரு அவர்கள் நடத்தியிருக்கிறார். பேராசிரியர் கல்யாணியின் முன்முயற்சியால் துவக்கப்பட்ட தாய்த் தமிழ்ப்பள்ளி இன்று திண்டிவனம் பகுதியிலிருக்கும் ஏழை எளிய  மக்களுக்குப் பயன் தருகிறது. தரமான கல்வியை இலவசமாக அப்பள்ளி வழங்கிவருகிறது. அதற்கு அடிப்படைக் காரணம் திரு சந்துரு அவர்கள்தான்.

பேராசிரியராகப் பணியில் இருந்தபோது கல்லூரி நிர்வாகம் கல்யாணியைப் பழிவாங்கும் நோக்கோடு பலமுறை இடமாற்றல் செய்தது. அப்படி இடமாற்றல் செய்யப்பட்டபோது அந்த உத்தரவுகளுக்கு எதிராக வழக்கு நடத்தி அவற்றை ரத்து செய்யவைத்தவர் திரு சந்துரு அவர்கள்தான். அந்த வழக்குகளில் மட்டுமின்றி கல்யாணியின் மனித உரிமை செயல்பாடுகள் காரணமாக அவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்டப் பல்வேறு பொய் வழக்குகளையும் முறியடித்தவர் அவர்தான். அதனால்தான் பேராசிரியர் கல்யாணி தொடர்ந்து திண்டிவனத்தில் இருக்க முடிந்தது. அங்கு ஒரு பள்ளியும் உருவாகியிருக்கிறது. அந்தப் பள்ளிக்கும்கூட அவர் எழுதிய நூலின் விற்பனைத் தொகையிலிருந்து இரண்டு லட்ச ரூபாய்  நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் நலனில் அக்கறைகொண்ட செயல்பாட்டாளராக, வழக்கறிஞராக, நீதிபதியாக திரு சந்துரு அவர்கள் ஆற்றியிருக்கும் பணிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு எளிய முயற்சியே இந்த நூல். இந்த நூலைத் தொகுத்திருக்கும் பத்திரிகையாளர் நிதர்ஸனா, இதற்கெனக் கட்டுரைகளை எழுதித் தந்த தோழர்கள் ஜி.ராமகிருஷ்ணன், சி.மகேந்திரன், தம் கட்டுரைகளை/ உரைகளைப் பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் அளித்தப் பெருமக்கள், இந்த நூலின் உருவாக்கத்தில் துணைநின்ற த.செ. ஞானவேலு – அனைவருக்கும் நன்றி! 

No comments:

Post a Comment