Friday, September 19, 2014

குரு உத்சவும் குரு பூர்ணிமாவும்

மணற்கேணி 24 இல் வெளியாகியிருக்கும் தலையங்கம் 


குரு உத்சவும் குரு பூர்ணிமாவும்   

ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்ற பெயரில் கொண்டாடவேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்ட சுற்றறிக்கைக்கு  நாடெங்கும் எதிர்ப்பு எழுந்ததையொட்டி 'அதுவொரு கட்டுரைப் போட்டிக்கான தலைப்புதான் ' என்று சொல்லி  சற்றே அதில் மத்திய அரசு பின்வாங்கியது. 

ஆசிரியர் தினம் என்பதை குரு உத்சவ் என அழைக்கவேண்டும் என்பது வெறுமனே பெயர் மாற்றும் பிரச்சனை அல்ல. அதுவொரு பண்பாட்டுத் தாக்குதல். அதனால்தான் இந்த அளவுக்கு அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது.மத்திய அரசின் இந்த 'குரு உத்சவ்' அறிவிப்போடு இந்துத்துவ அமைப்புகளால் ஊக்குவிக்கப்படும் 'குரு பூர்ணிமா' என்பதையும் சேர்த்துப் பார்க்கவேண்டும்.அப்போதுதான் இது அவர்களது பரந்துபட்ட செயல்திட்டத்தின் அங்கமாக   இருப்பது நமக்குப் புரியும். 

குருபூர்ணிமா என்பது வேதங்களைத் தொகுத்து அவற்றை ரிக், யஜூர், சாம, அதர்வ என நான்காகப் பகுத்தவரெனவும் மகாபாரதத்தை இயற்றியவரெனவும் கூறப்படுகின்ற வியாஸரின் பிறந்த நாள் எனச் சொல்லப்படுகிறது. ஜூலை மாதத்தில் வரும் பௌர்ணமியைத்தான் குரு பூர்ணிமா என்று கடைபிடிக்கிறார்கள். அந்த நாளிலிருந்துதான் இந்துக்களின் புனித மாதங்களாகக் கருதப்படும் சதுர்மாதங்கள் துவங்குவதாகக் கணக்கிடப்படுகிறது. சதுர் என்றால் நான்கு என்று பொருள். அந்த நான்கு மாதங்களிலும் அசைவ உணவைத் தவிர்த்து விரதம் இருப்பது இந்துக்களிடையே சில பிரிவினரிடம் காணப்படும் வழக்கமாகும்.

டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக அரசு அறிவித்திருந்த போதிலும்  இந்துத்துவ கொள்கையைக் கடைபிடிப்பவர்கள் வியாசரின் பிறந்த நாளைத்தான் ஆசிரியர் தினம் என்று கொண்டாடுகிறார்கள். அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் இந்தப் பழக்கம் பரவலாக இருக்கிறது.அந்த நாளில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை செய்யவேண்டும் என வற்புறுத்தப்படுகிறார்கள் 

குரு பூர்ணிமா முதலான மதம் சார்ந்த நடைமுறைகள்  திட்டமிட்ட வகையில் தமிழகத்திலும் பரப்பப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள் குரு பூர்ணிமாவை ஊக்குவிக்கின்றன. அந்தக் கொள்கைகளை ஆதரிக்கும் ஆர்கனைசர் பத்திரிக்கையில் 2006 ஆம் ஆண்டு குரு பூர்ணிமாவை சிலாகித்து கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.அதுவே அதற்கொரு அடையாளமாகும்.’ குருவுக்கும் சிஷ்யருக்குமான உறவு மிகவும் புனிதமான ஒன்று.ஞானத்தை அடிப்படையாககொண்ட அது ஆன்மீகத் தன்மைகொண்டது. ஆன்மீகத் துறையில் தேர்ச்சி கொண்ட ஒருவரையே குரு என்று சொல்ல முடியும்’ என அந்தக் கட்டுரையில் எழுதியுள்ளனர். ஆனால் அக்கட்டுரைகூட குருவுக்கு பாதபூஜை செய்யும்படி வலியுறுத்தவில்லை. ஆசிரியர்களை மதிக்கவேண்டும் என்ற பெயரில் மாணவர்களின் சுயமரியாதைக்கு பங்கமேற்படுத்துவது எவ்விதத்திலும் நியாயமல்ல. மாணவர்களை பாதபூஜை செய்யச்சொல்வது அவர்களை அவமதிப்பதுதானே தவிர வேறல்ல. 

குருவை மதிக்கவேண்டும் என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். கல்வியறிவு விகிதம் இப்போதும்கூடக் குறைவாகவே இருக்கின்ற நமது நாட்டில் மாதா, பிதா குரு , தெய்வம் என்றுதான் வரிசைப்படுத்துகிறோம். அந்த அளவுக்கு ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற மரபுதான் நம்முடைய மரபு. காலவோட்டத்தில் எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டபோதிலும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் மரியாதை இன்றும் மாறிவிடவில்லை.ஆனால் அதை வைத்துக்கொண்டு மீண்டும் குருகுலக் கல்வி முறையை நாம் கொண்டுவர எண்ணினால் அது தவறாகவே முடியும்.ஆசிரியர்களை நாம் எவ்வளவுதான் மதித்தாலும் பண்டைய காலத்தில் இருந்ததுபோன்ற குரு சிஷ்யக் கல்வி முறையை நாம் பரிந்துரைக்கமுடியாது. இது ஜனநாயகத்தின் காலம். எனவே அது கல்விமுறையிலும் வெளிப்படவே செய்யும்.  

ஆசிரியருக்குத்தான் எல்லாம் தெரியும் மாணவர்களுக்கு எதுவும் தெரியாது; ஆசிரியர் என்பவர் வங்கி ஒன்றின் கஸ்டமர் போன்றவர் அவர் தன்னிடம் உள்ள அறிவை, காலியாக இருக்கும் வங்கியின் லாக்கரில் வைப்பதுபோல மாணவர்களின் தலைக்குள் பொதித்துவைக்கிறார் என எண்ணுகிற அணுகுமுறை இப்போது வழக்கொழிந்துவிட்டது. 'வகுப்பறை என்பது மாணவரும் ஆசிரியரும் சேர்ந்து கற்றுக்கொள்கிற இடமாகப் பார்க்கப்படவேண்டும் என்ற கருத்தாக்கம் இப்போது மேலோங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ‘ சமச்சீர் கல்வி ‘ முறை இந்த அணுகுமுறையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதுதான். அதில் மாணவருக்குப் பயிற்றுவிப்பதைவிடவும் அவர் கற்றுக்கொள்வதற்கு உதவுவது என்கிற விதத்தில்தான் ஆசிரியரின் பணி வரையறுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அந்த முறையில் பயிலும் மாணவர்களின் கல்வித்திறன் ஒப்பீட்டளவில் நன்றாக இருக்கிறது‘ எனக் கல்வியாளர்கள் கூறுகின்றனர். 

இப்படி,கல்வியை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்று மாநில அரசு   முயற்சி எடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அதற்கு ஒத்துழைக்கவேண்டிய மத்திய அரசு  பழக்கம், மரபு என்ற பெயரில் மூடத்தனங்களை மாணவர்களிடையே விதைப்பது எந்தவிதத்திலும் சரியாக இருக்காது. மத்திய அரசின் இத்தகைய  நடவடிக்கைகள்  கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதன் தேவையைத்தான் வலியுறுத்துகின்றன.

- ரவிக்குமார் 
ஆசிரியர் , மணற்கேணி 

No comments:

Post a Comment