Sunday, October 26, 2014

ஒரு தொல்லியல் அறிஞரின் தன்வரலாறும் இந்தியத் தொல்லியல் வரலாறும் - ரவிக்குமார்வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள்கூட அதிகம் அறியாத ஒரு துறை- தொல்லியல் துறையாகும். தமது ஆயுட்காலம் முழுவதும் அத் துறையில் பணியாற்றி பல அரிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்திச் சென்ற அறிஞர்கள் பலர் எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் மறக்கப்பட்டுவிட்டனர். வெறும் புராணங்களாலும் கட்டுக் கதைகளாலும் நிரப்பப்பட்டிருந்த இந்திய வரலாற்றை தரவுகளின் அடிப்படையில் ஒழுங்கமைத்தவர்கள் அவர்கள்தான்.ஆனால் அதை நாம் உரியவிதத்தில் அங்கீகரிக்கவில்லை. தொல்லியல் துறை சார்ந்தவர்கள் தமது ஆய்வுகளைப் பற்றியும் அவற்றை மேற்கொண்டபோது தாம் அனுபவித்த இன்னல்களைப் பற்றியும் நூலாக எழுதி வெளியிட்டது மிகவும் குறைவே.  அந்தக் குறையைப் போக்கும்விதமாக உலகப் புகழ்பெற்ற இந்திய தொல்லியல் அறிஞர்களில் ஒருவரான திலிப் சக்கரவர்த்தி தனது அனுபவங்களை நூலாக எழுதியிருக்கிறார். ஒருவகையில் அவரது சுயசரிதையாகவும் இன்னொரு வகையில் ஐம்பதாண்டுகால இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் வரலாறாகவும் அந்த நூல் அமைந்திருக்கிறது.  
1941 ஆம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் சில்ஹெட் மாவட்டத்தில் ஹலிச்சேரா என்ற கிராமத்தில் பிறந்தவர் திலிப் சக்கரவர்த்தி. அவரது அம்மாவின் குடும்பம் செல்வச் செழிப்பு மிக்கது. பல ஏக்கர் பரப்பளவுகொண்ட நிலத்தின் நடுவே அமைந்த வீடு, மூன்று நாட்களுக்கு நடைபெறும் துர்கா பூஜை, ஊருக்கே விருந்து என தனது அம்மாவின் வீட்டைப் பற்றி அவர் நினைவுகூர்கிறார். அவருக்கு பதினோரு வயதிருக்கும்போது திலிப் சக்கரவர்த்தியின் குடும்பம் அந்த கிராமத்தைவிட்டு இடம்பெயர்ந்து திரிபுராவின் தலைநகரான அகர்தலாவுக்குச் சென்றது. (இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ஹலிச்சேரா கிராமம் பாகிஸ்தானில் சேர்ந்துவிட்டது). பள்ளி கல்லூரிப் படிப்புகளை அகர்தலாவில் முடித்த திலிப் சக்கரவர்த்தி கல்கத்தா பலகலைக்கழகத்தில் முதுகலை படிப்பில் சேர்ந்தார். அப்போதுதான் பலகலைக் கழக மானியக் குழு கல்கத்தா, புனே, சென்னை,லக்னோ ஆகிய இடங்களில் தொல்லியல் படிப்பைத் துவக்குவதற்கு நிதி உதவி செய்ய ஆரம்பித்திருந்தது. இந்தியத் தொல்லியல் துறையில் ‘தொல்லியல் பள்ளி’ ஒன்றும் தனியே ஆரம்பிக்கப்பட்டது. அது அந்தத் துறையில் பணியாற்றுவோருக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது  என்றபோதிலும் அதில் மாணவர்கள் சிலரும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அப்போது அந்தப் படிப்பில் சேர்ந்த மாணவர்களில் திலிப் சக்ரவர்த்தியும் ஒருவர்.
இரும்பின் பயன்பாடு குறித்தும் நெல் பயிரிடுவது எப்போது இந்தியாவில் ஆரம்பித்தது என்பது பற்றியும் முக்கியமான ஆய்வுகளை திலிப் சக்ரவர்த்தி செய்திருக்கிறார். கி.மு 8000 – 6000 க்கும் இடைப்பட்ட காலத்திலேயே விந்திய மலைப் பகுதியில் நெல் பயிரிட்டுள்ளனர். மத்திய கங்கைச் சமவெளிப் பகுதியிலும் அப்போது நெல் பயிரிட்டுள்ளனர். பல்வேறு தொல்லியல் மையங்களில் அதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன என்றாலும் கோரக்பூருக்கு அருகிலுள்ள லோஹுரதேவா என்ற இடத்தில் கிடைத்த சான்றுகள் முக்கியமானவை எனக் கூறுகிறார் திலிப் சக்ரவர்த்தி ( பக்கம் 272 ) எவ்வளவுதான் முயற்சித்தாலும் தென்னிந்தியாவில் நெல் சாகுபடி செய்யப்பட்டதற்கான ஆதாரம் கி.மு 3000 க்கு முன்னர் கிடைக்கவில்லை. (பக்கம் 274 ) என அவர் கூறுகிறார்.
திலிப் சகரவர்த்தியின் நூல் இந்தியாவில் தொல்லியல் துறையில் 1960 ஆம் ஆண்டிலிருந்து 2010 வரை ஐம்பது ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களை அவரது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து துல்லியமாகப் படம் பிடித்துக்காட்டுவது மட்டுமின்றி பல்கலைக்கழகங்களில் நிலவிய கல்வியியல் சூழலையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
“ இந்தியப் பலகலைக்கழகங்களின் சூழல் மிகவும் குரூரமானது. பெரிய மனிதர்களின் நிழல்களில் பதுங்கிக்கொள்ளத் தெரியாவிட்டால் ஒருவர் பல்கலைக்கழக அதிகாரப் படிநிலைகளில் முன்னேறிச் செல்ல முடியாது “ என்று வேதனையோடு குறிப்பிடும் திலிப் சக்ரவர்த்தி ( பக்கம் 35 ) “ மேற்கு வங்கத்திலிருக்கும் பல்கலைக்கழக அமைப்பு 1960 களில் சீரழியத் தொடங்கியது. இடதுசாரி மாணவர் அமைப்புகளின் பொறுப்பற்ற போராட்டங்களே அதற்கு முதன்மையான காரணம்” என்கிறார் ( பக்கம் 36 ). 1963 ஆம் ஆண்டு தனது முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்து அதே பல்கலைக்கழகத்தில் அதே துறையில் பணியில் சேர்ந்த அவர் 1977 ஆம் ஆண்டு அப்போதிருந்த துறைத் தலைவர் திருமதி அனிதா ரே யுடன் ஒத்துப்போக முடியாததால் அங்கிருந்து ராஜினாமா செய்தார். அப்போது யுபிஎஸ்சி யில் ஒரு நேர்காணலுக்காக அவர் சென்றிருந்தாராம். நேர்காணல் ஆரம்பிப்பதற்கு முன்பே அங்கு நேர்காணலுக்கு வந்திருந்த ஒருவரை எல்லோரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்களாம். “ பிராந்தியவாதம், சாதிச் சார்பு, அரசியல் கட்சி சார்பு முதலான கல்விக்கு அப்பாற்பட்ட காரணிகளே நமது உயர் கல்விச்சூழலின் பின்னடைந்த நிலைக்குக் காரணம் “ என்கிறார் திலிப் சக்ரவர்த்தி ( பக்கம் 61)
”1970 மற்றும் 1980 களில் இந்தியாவின் உயர் கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட முக்கிய காரணியாக இருந்தவர் நூருல் ஹாஸன். அவரது அரசியல் சார்பு இந்திய வரலாறெழுது முறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.இந்திய- சீன யுத்தத்துக்குப் பிறகு சோவியத் யூனியன்மீது பரிவுகொண்ட பல வரலாற்று ஆசிரியர்கள் ஐசிஹெச்ஆர் அமைப்பில் சேர்ந்தனர். அவர்கள் இந்திய வரலாற்றை ஒருபக்கச் சார்போடு பார்த்தனர். அவர்கள் எழுதிய நூல்கள் இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழியாக்கம் செய்யப்பட்டன. என்சிஇஆர்டி சார்பில் பல பாடநூல்களும் அதேவிதப் பார்வையோடு எழுதப்பட்டன”. “ இப்போது இந்தியாவில் காணப்படும் வரலாற்று ஆய்வின் பல அம்சங்களும் அப்போதுதான் முளைவிட்டன. வரலாறு தொடர்பான ஒவ்வொரு விஷயமும் ஏதாவதொரு குழுவோடு இணைத்துப் பார்க்கப்பட்டது. அக்குழுவின் அரசியலோடு அடையாளம் காணப்பட்டது”. (பக்கம் 116 ) ” 1972 ஆம் ஆண்டு இந்திய வரலாற்றை ஆய்வு செய்வதற்கும் எழுதுவதற்கும் ஒரு தேசிய திசைவழி தேவை என அரசாங்கத்தால் உணரப்பட்டது. அது சோவியத் ஆதரவு நாடுகளில் பொதுவாகக் காணப்பட்ட ஒரு கருத்தாக்கம். ( பக்கம் 112) எனக் குறிப்பிடும் திலிப் சக்ரவர்த்தி அந்த நேரத்தில்தான் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த க்ளின் டேனியலோடு தனக்கு மீண்டும் தொடர்பு உண்டானது என்கிறார். அந்தத் தொடர்புதான் அவருக்கு தொல்லியல் மீது மீண்டும் ஆர்வம் ஏற்படக் காரணமாக அமைந்தது. (பக்கம் 124)
1977 ஆம் ஆண்டு திலிப் சக்ரவர்த்தி டெல்லிப் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். அது மிகப்பெரும் அரசியல் கொந்தளிப்பு நிலவிய  காலம். ” அவசரநிலைக் காலத்துக்குப் பிறகு இந்திரா ஆட்சி முடிவுக்கு வந்ததால் நூருல் ஹாஸனும் பதவியிழந்தார். அதனால் அதுவரை டெல்லிப் பல்கலைக்கழகத்திலிருந்த ‘முற்போக்கு வரலாற்றறிஞர்களின்’ பிடி தளர்ந்தது. அதைப் பயன் படுத்திக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் களத்தில் இறங்கியது. அந்த அமைப்பைச் சேர்ந்த எஸ்.பி.குப்தா என்பவர் கூட்டமொன்றை ஒருங்கிணைத்தார். அந்தக் கூட்டத்தின்போது வரலாற்றுப் பாடப்புத்தகங்களை விமர்சனம் செய்து பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. ஆர்.எஸ்.ஷர்மா இதற்கென்றே எழுதிய நூல்களும் வெளிவந்தன.” என்று அந்தக் காலகட்டத்தை வர்ணிக்கிறார் திலிப் சக்ரவர்த்தி.
திலிப் சக்ரவர்த்திக்கு இடதுசாரி வரலாற்றாசிரியர்களோடு மட்டுமல்ல வலதுசாரிகளோடும் ஒத்துப்போக முடியவில்லை. அதனால், அவர் மியூஸியம் பொறுப்பாளராக பணிமாற்றம் செய்யப்பட்டார். அந்தப் பதவியிலும் அவர் சும்மா இருக்கவில்லை. பக்லிவால் குடும்பம் என்பது இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பணக்காரக் குடும்பங்களில் ஒன்று. அவர்கள் தமக்குச் சொந்தமான 16 – 18 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த ஓவியங்கள், கையெழுத்துப் படிகள், செப்புச் சிலைகள் பலவற்றை டெல்லிப் பல்கலைக்கழக மியூஸியத்துக்குக் கொடுத்திருந்தனர். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் அவற்றைப் பெட்டிகளில் அப்படியே பூட்டிவைத்துவிட்டது. ஜமால் ஹுஸைன் என்பவரோடு இணைந்து பக்லிவால் குடும்ப கலைப்பொருட்கள் குறித்து  திலிப் சக்ரவர்த்தி  நூல் ஒன்றைப் பதிப்பித்து வெளியிட்டார். அவரை ஓரம் கட்ட நினைத்தவர்களுக்கு அது எரிச்சலை உணடாக்கியது. எனவே அவர்மீது வீண்பழி சுமத்தி வேலையிலிருந்து விரட்ட முயற்சித்தார்கள். எனவே 1988 ஆம் ஆண்டு அவர் நீண்ட விடுப்பில் சென்றார். அதன்பின் அவர் மீண்டும் டெல்லிப் பல்கலைக்கழக வேலைக்குச் செல்லவே இல்லை. ( பக்கம் 142-145)
தொல்லியல் துறையின் வரலாற்றை எழுதிச்செல்லும் திலிப் சக்ரவர்த்தி தற்போது தொல்லியல் துறை எதிர்கொண்டுள்ள முக்கியமான சிக்கல்கள் இரண்டை அடையாளப்படுத்துகிறார்:
  1. ”அயோத்திப் பிரச்சனையில் தொல்லியல் என்பது மிகமுக்கியமான பங்கு வகித்ததை நாம் அறிவோம். அதன்பின்னர் தொல்லியல் துறை எதிர்பாராத மதரீதியான சிக்கல்கள் அந்தத் துறையை நெருக்கடியில் ஆழ்த்தின.1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு 1994 இல் ‘உலக தொல்லியல் மாநாடு’ நடைபெற்றது கவனத்துக்குரியது” எனக்குறிப்பிடும் திலிப் சக்ரவர்த்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டதை துரதிர்ஷ்டமானதொரு நிகழ்வு என வருத்தத்தோடு எழுதியுள்ளார். “ அயோத்தி மிகவும் முக்கியமானதொரு வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த தொல்லியல் பகுதியாகும். அங்கு இப்போதும் ஒரு பழங்கால மதில் சுவரின் எச்சங்கள் உள்ளன. அசோகர் காலத்தைச் சேர்ந்த தூண் ஒன்றின் தலைப் பகுதி அங்குள்ள சிறிய கோயிலொன்றில் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. சுங்கர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று இன்னொரு சிறிய கோயிலில் உள்ளது.பாபர் மசூதி பிரச்சனை தொடர்பாக சண்டையிட்டுக்கொண்ட இரு தரப்பு அறிவுஜீவிகளும் அயோத்தியின் தொல்லியல் அம்சங்கள் குறித்து அக்கறை காட்டவில்லை. நீதிமன்றம் முடிவுசெய்வதற்கு முன்பே மசூதியின் இடிபாடுகளுக்கிடையே கிடைத்த 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு அங்கு கோயில் இருந்ததை உறுதிசெய்துவிட்டது. அயோத்தி சம்பவம் தொல்லியலின் எதிர்காலத்தை முடிவுக்குக்கொண்டுவந்துவிடவில்லை” என்கிறார் அவர். .
  2. ”வெளிநாட்டு தொல்லியல் ஆய்வாளர்களால் இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சி மிகவும் பாதிப்படைகிறது. அவர்கள் இந்தியத் தொல்லியல் ஆய்வாளர்களை மதிப்பதில்லை. அவர்களது கருத்துகளையும் கண்டுபிடிப்புகளையும் பொருட்படுத்துவதில்லை. தங்களது கருத்துகளை நம் மீது திணிக்கிறார்கள்.கட்டுப்பாடின்றி அவர்களை அனுமதிப்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்” எனவும் அவர் எச்சரிக்கிறார்.
திலிப் சக்ரவர்த்தி எழுதியுள்ள இந்த நூலைப் படித்தபோது தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் முக்கியமான தொல்லியல் அறிஞர்களான ஐராவதம் மகாதேவன், ஒய்.சுப்பராயலு, புலவர் ராஜு, இரா.நாகசாமி, நடன.காசிநாதன், கா.ராஜன்  ஆகியோர் இப்படி தமது அனுபவங்களையும் தமிழகத் தொல்லியல் வரலாற்றையும் இணைத்து எழுதினால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கம்தான் மனதில் எழுந்தது.
திலிப் சக்ரவர்த்தி அண்மையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வருகை தந்திருந்தார். அவரது நூலைப் படித்தபோது மனதில் எழுந்த அறச்சீற்றம் கொண்ட ஒரு அறிஞரின் சித்திரம் அவரை நேரில் சந்தித்தபோது மேலும் உறுதிப்பட்டது.
இந்த நூல் தமிழில் வெளிவரவேண்டியது மிகவும் அவசியம். யாரேனும் மொழிபெயர்க்க முன்வந்தால் மணற்கேணி அதை வெளியிடத் தயாராக இருக்கிறது.

Fifty Years of Indian Archaeology ( 1960-2010 )- Journey of a Foot Soldier
   Dilip K. Chakraborty,
Aryan Books International, New Delhi ,
2012

Friday, October 17, 2014

தினகரன் தீபாவளி மலர் 2014பண்டிகைகள் இப்போது தமது மதரீதியான பிணைப்புகளைப் பெரும்பாலும் இழந்துவிட்டன. பொருளாதார நலன்களே அவற்றை ஓயாமல் நினைவுபடுத்திக்கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சியும் துணிக்கடைகளும் பண்டிகைகளை நினைவுபடுத்துவதன்மூலம் வர்த்தகத்தைப் பெருக்கிக்கொள்கின்றன. அச்சு ஊடகங்களும் இதில் விதிவிலக்கல்ல. 

தீபாவளியை முன்வைத்து வருவாய் தேடும் வழிகளில் மலர் வெளியிடுவது முதன்மையானது. முன்னணிப் பத்திரிகைகள் எல்லாம் இந்த வாய்ப்பைத் தவறவிடுவதில்லை. 

நான் தீபாவளி மலர்களைத் தேடிப் படிப்பவன் அல்ல. அவற்றின் உள்ளடக்கம் எப்படியிருக்கும் என்பது யூகிக்கக்கூடியது என்பதால் அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. குங்குமம் பத்திரிகை ஆசிரியரும் எனது நண்பர்களில் ஒருவருமான தி.முருகன் தயாரித்தது என்பதால் தினகரன் தீபாவளி மலரைப் படித்தேன். தற்போது எழுதிவரும் எழுத்தாளர்களின் படைப்புகளோடு பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்களின் எழுத்துகளும் அதில் இடம்பெற்றுள்ளன. 

பிரபலமான கவிஞர்களின் கவிதைகள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும் ஒன்றும் ஈர்ப்பதாக இல்லை. கிளாசிக் ஸ்டோரி என வெளியிட்டிருப்பதைப்போல கவிதையிலும் செய்திருந்தால் இந்தக் குறையைத் தவிர்த்திருக்கலாம். 

இந்த மலரில் குறிப்பிட்டு சொல்லப்படவேண்டியது அசோகமித்திரனின் சிறுகதைதான். பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட 'விடிவதற்குள்' என்ற அந்தச் சிறுகதை இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த சென்னையை சித்திரிக்கிறது என நினைக்கிறேன். இப்போது தண்ணீர்ப் பிரச்சனை அன்று இருந்ததைவிட இன்னும் அதிகமாகிவிட்டது.இந்தக் கதையில் வருவதுபோல் இன்னொருவர் வீட்டில்போய் தண்ணீர் பிடிப்பது இப்போது சாத்தியமில்லை. தண்ணீர் லாரிக்காகத் தள்ளுமுள்ளு என்பதுதான் இன்றைய நிலை. ஆனால் இந்தக் கதையில்வரும் பங்கஜமும் முத்துவும் இப்போதும் இருக்கிறார்கள். அந்தக் கன்றுக்குட்டிகூட அப்படியே இருக்கிறது. கதையை வாசிக்கும்போது பங்கஜத்தின் தவிப்பு நம்மையும் தொற்றிக்கொண்டுவிடுகிறது. 

எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்தை மிகவும் அலட்சியமாகக் கருதுகிறார் என்பதற்கு இந்த மலரில் இடம்பெற்றிருக்கும் அவரது கதை இன்னுமொரு சாட்சி. எஸ்.ராமகிருஷ்ணனின் கதை எவ்வளவு போலி என்பதை அசோகமித்திரனின் கதையைப் படிப்பவர்கள் உணரமுடியும்.

கே.என்.சிவராமன் எழுதியிருக்கும் கதையையும் படித்தேன். தமிழ் சினிமா பார்த்ததுபோல் இருந்தது. 

காஷ்மீர் குறித்த ஜெயமோகனின் பயணக்கட்டுரையில் முஸ்லிம்கள்மீதான அவரது வெறுப்பும்,  உரைநடையின் பலவீனமும் போட்டிப்போட்டுக்கொண்டு வெளிப்பட்டிருக்கின்றன. விஜயபாரதத்தில் வெளிவரவேண்டிய கட்டுரையை இதில் ஏன் போட்டிருக்கிறார்கள்? அதில் அரசியல் கட்டுரைக்கான உழைப்பும் இல்லை; பயணக் கட்டுரைக்கான சுவாரஸ்யமும் இல்லை. மணியன் எழுதிய தரத்தில்கூட அந்தக் கட்டுரை இல்லை. ஜெயமோகனுக்கு திருத்தமாக உரைநடை எழுதத் தெரியவில்லை என்று பலரும் சுட்டிக்காட்டிவிட்டனர். இவ்வளவுதூரம்
பிரபலமானதற்குப் பிறகும் இப்படியொரு உரைநடையை எழுதுவது சகிக்கத்தக்கதல்ல. தெளிவாக உரைநடை எழுதுவது எப்படி என்பதை அவர் சாருநிவேதிதாவிடம் கற்றுக்கொள்ளவேண்டும். 

Thursday, October 9, 2014

வெள்ளை நிழல் படியாத வீடு - கறுப்புக் கவிதைகள்


மொழிபெயர்ப்பாளரின் குறிப்ப

மன அழுத்தத்துக்கு ஆளாகும்போதெல்லாம் கவிதைகளை நாடிச் செல்வது என் வழக்கம். ஒரு சிறிய கவிதை போதும் புற உலகிலிருந்து சட்டென்று துண்டித்துக்கொண்டு வேறு உலகில் பிரவேசிக்க. மூச்சுத் திணறவைக்கும் அரசியல் கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரப் பயணங்கள் போன்றவற்றின்போது நான் பிராணவாயுவாகக் கவிதைகளைத்தான் நாடினேன். கவிதைகள் மட்டும் இல்லாவிட்டால் மனிதத் தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் அந்தக் களங்களிலிருந்து உயிரோடு மீண்டு வந்திருக்கமுடியாது.

அத்தகைய தருணங்களில் கவிதைகளை வாசித்தது மட்டுமல்ல சிறிய கவிதைகளை மொழிபெயர்க்கவும் செய்தேன். அவற்றை முகநூலிலும், வலைப்பூவிலும் பகிர்ந்துகொண்டபோது நண்பர்கள் அளித்த வரவேற்பு என்னை ஊக்குவித்தது. நாளெல்லாம் அலைந்து உடல் செத்துக் கிடந்த இரவுகளிலும் மனம் விழித்துக்கொண்டு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்தது. இந்தக் கவிதைகளில் பெரும்பாலானவை அப்படி மொழிபெயர்க்கப்பட்டவைதான்.

 தற்போதைய தொழில்நுட்பம் நமது மொபைல் ஃபோனில் டிஜிட்டல் நூலகங்களை உருவாக்கித் தந்திருக்கிறது. லட்சக்கணக்கான நூல்களை இப்போது இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஆன்றி மிஷோவின், ரெனே சாரின் ஒரு கவிதைப் புத்தகத்தைப் படிக்க இருபது ஆண்டுகளுக்கு முன்னால் ஏங்கிக் கிடந்த அவலத்தை எண்ணிப் பார்க்கிறேன்.அந்தக் கேவல நிலை இன்றில்லை. புதிய புத்தகங்கள் மட்டுமல்ல ஆவணக் காப்பகங்களும் இன்று விரல் நுனியில் திறந்துகொள்கின்றன. யாருடைய கருணையுமின்றி இன்று எந்தவொரு புத்தகமும் எவர் கையிலும் கிடைத்துவிடும். புதிய புத்தகங்களைப் பதுக்கி வைத்துக்கொண்டு அவற்றிலிருந்து மேற்கோள்களை மட்டும் அவ்வப்போது உதிர்த்து ’சீன்’ போட்டவர்கள், பழைய ஆவணம் ஒன்று கிடைத்துவிட்டால் அதை மறுபதிப்பு செய்தே அறிவாளி ஆனவர்கள் – இனி வழக்கொழிந்துபோவார்கள். அறிவு ஜனநாயகமயமாகிவரும் காலம் இது. 

 இந்தத் தொழில் நுட்பத்தை முதலாளித்துவத்தின் விளைவு என்பதா அல்லது பொதுவுடமையின் சாட்சியமாகக் கொள்வதா என்பது புரியவில்லை. ” அறிவுத்தளத்தில் நிகழ்த்தப்படும் சாதனைகள் பொதுவுடமை குணாம்சம் கொண்டவைதான். அவை சுதந்திரமாக எங்கும் சுற்றிவரக்கூடியவை. மிகவும் முன்னேறிய முதலாளித்துவத்தின் விளைபொருள்களாக இருந்தபோதிலும் இலவசமாக இவை கிடைப்பதன்மூலம் முதலாளித்துவம் சாராத வெளி ஒன்றை இவை திறக்கின்றன.” என்று சிந்தனையாளர் ஸ்லாவோஸ் ஸிஸேக்  ( Slavoj Zizek- Web Chat,The Guardian, 08.10.2014) ) குறிப்பிடுவது கவனத்துக்குரியது.

 இந்தக்கவிதைகளில் சில, சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டவையென்றாலும் இவற்றை நூலாக வெளியிடுவது அவசியம் எனக் கருதினேன். சமூக வலைத் தளங்களில் எல்லாவற்றுக்கும் ஆயுள் குறைவு. ஒரு நிலைத் தகவலை அடுத்த நொடியிலேயே இன்னொரு நிலைத்தகவல் மூடிவிடுகிறது. தமிழ்நாட்டில் இப்போது மட்டுமல்ல இன்னும் ஒரு நூற்றாண்டுக்காவது அச்சு ஊடகம் உயிர்ப்போடு இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. 

 வாசிப்பின் ஜனநாயகம் கருதியே மணற்கேணி சிறுநூல் வரிசை துவக்கப்பட்டது. அதன் மூலம் வெளியாகும் இந்த ஆப்ரிக்க அமெரிக்கக் கவிதைகள், போராட விரும்பும் எவர் ஒருவருக்கும் உத்வேகத்தை அளிக்கும் என நம்புகிறேன். இந்த நூலை வாசிப்போர் இத்துடன் வெளியாகியிருக்கும் அரபுக் கவிதைகள் தொகுப்பையும் வாசிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 

 - ரவிக்குமார் 

09.10.2014

Sunday, October 5, 2014

" தாழ்த்தப்பட்ட வகுப்பு என சொல்லக்கூடாது! ஜனநாயக வகுப்பு என அழைக்கவேண்டும்!" - மேக்நாத் சாஹா


கல்கத்தா யுனிவர்சிட்டி கமிஷனுக்கு விஞ்ஞானி மேக்நாத் சாஹா அளித்த பதிலில் பல்கலைக் கழகத்தில் விடுதியில் தங்கிப் பயின்ற தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள் அனுபவித்த கொடுமைகளை எடுத்துரைத்திருக்கிறார்: 

" ஜனநாயக வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ( இவர்களை தாழ்த்தப்பட்ட பிரிவினர் - depressed class- என அழைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. )போதுமான அளவில் சிறப்புக் கவனம் எடுக்கப்படவேண்டும். தற்போது கல்லூரி விடுதிகள் பிராமணர்கள், கயஸ்தா, வைத்யா, நபசாக் ஆகிய ஒருசில பணக்கார வகுப்பினரின் தனியுரிமையாக இருக்கின்றன என்பது பரவலாக சொல்லப்பட்டுவரும் ஒரு குற்றச்சாட்டு. ஜனநாயக வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களை விடுதிகளில் சேர்ப்பதில்லை. அப்படியே சேர்த்தாலும் அங்கு அவர்கள் உரிமையோடு இருக்கமுடிவதில்லை, மற்றவர்களின் தயவில்தான் இருக்கவேண்டிய நிலை. அவர்களோடு ஒரே அறையில் தங்குவதற்கும் ஒரே இடத்தில் சாப்பிடுவதற்கும் யாராவது ஒரு உயர்சாதி மாணவன் மறுப்புத் தெரிவித்தால் அந்த துரதிர்ஷ்டம் கொண்ட ஜனநாயக வகுப்பு மாணவனை அங்கிருந்து வெளியேற்றிவிடுகிறார்கள். அவன் அறையிலேயே உணவருந்தும்படி செய்யப்படுகிறானப்படியான பல சம்பவங்களை நான் நேரில் கண்டிருக்கிறேன்" என சாஹா அதில் எழுதியிருக்கிறார். 

தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு தனி விடுதிகளைக் கட்டும் முயற்சியையும் சாஹா கடுமையாக எதிர்த்தார்:

" பொதுப் பணத்தில் கட்டப்பட்ட கல்லூரி விடுதிகளில் மற்றவர்களைப்போலவே தங்களுக்கும் உரிமை உண்டு எபன ஜனநாயக வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் கருதுகின்றனர். சுயமரியாதையோடும் கண்ணியத்தோடும் வாழ்வதற்குத் தங்களை அனுமதிக்கவேண்டும் என அவர்கள் கேட்கிறார்கள்.அவர்களுக்கென்று தனியே விடுதிகளைக் கட்டினால் அது சாத்தியமாகாது. அப்படி தனி விடுதி கட்டவேண்டுமென்றால் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு விடுதி என்ற அடிப்படையில் ஒவ்வொரு கல்லூரியிலும் குறைந்தது இருபத்தைந்து விடுதிகளாவது கட்டவேண்டியிருக்கும். " என்று அவர் கேலியாக சுட்டிக்காட்டினார். 

விஞ்ஞானி மேக்நாத் சாஹா பிறந்த நாள் : அக்டோபர் 6

அறிவியல் பாடங்களைத் தாய்மொழியில்தான் கற்பிக்கவேண்டும் என வலியுறுத்திய விஞ்ஞானி மேக்நாத் சாஹா
======================
1917 ஆம் ஆண்டு கவர்னர் ஜெனரலால் அமைக்கப்பட்ட கல்கத்தா யுனிவர்சிட்டி கமிஷன் கேட்ட கேள்விகளுக்கு விரிவாகத் தனது கருத்துகளை சாஹா பதிவு செய்தார். அதில் அவர் கூறியிருப்பது:
" தற்போது இருக்கும் முறை மிகவும் இயற்கைக்கு மாறான ஒன்றாகும்.மாணவர் இயற்கையாகக் கற்றுக்கொள்வதை மறக்கும்படி செய்யப்படுகிறார். ஒவ்வொரு வார்த்தையையும் மனப்பாடம் செய்து நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய அந்நிய மொழியில்சிந்திக்கும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறார். ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ள போதுமான அவகாசம் கொடுப்பதற்குப் பதிலாக 13 - 14 வயதுகொண்ட ஒரு ஆங்கிலேய பையன் பேசுவதைப்போல சரளமாக ஆங்கிலத்தில் பேசும்படி மாணவர்களை நாம் நிர்ப்பந்திக்கிறோம். அதன் விளைவு- அவர் எல்லாவற்றையும் மனதுக்குள் மொழிபெயர்த்து மனப்பாடம் செய்யவேண்டியதாகிறது. அந்தப் பழக்கத்திலிருந்து அவர் பிறகு விடுபடவே முடிவதில்லை"

Saturday, October 4, 2014

மேக்நாத் சாஹா ( 1893-1956): சாதியால் மறைக்கப்பட்ட விஞ்ஞானி


அறிவியல் துறையில் நோபெல் பரிசுக்காக இந்தியாவில் பிறந்த ஒருவரின் பெயர் பரிசீலிக்கப்படுவதாக செய்திகளில் பார்த்தேன். மகிழ்ச்சியான செய்திதான். அதே நேரத்தில் இந்திய அறிவியல் துறையை ஆட்டிப்படைக்கும் சாதிய பாகுபாடுகள் நினைவுக்கு வந்தன. இதுகுறித்து அமெரிக்காவின் காம்ப்ரிட்ஜில் பேராசிரியையாக இருக்கும் அபா சூர் ( Abha Sur). எழுதியிருக்கும் Dispersed Radiance  என்ற நூல் முக்கியமானது. 

இந்தியாவில் பிறந்த விஞ்ஞானிகளில் மிக முக்கியமாபன பங்களிப்புகளைச் செய்த மேக்நாத் சாஹா ( Meghnad Saha) வைப் பற்றி அந்த நூலில் மிக விரிவாக அபா சூர் எழுதியிருக்கிறார். சாஹாவின் பெயரும் நோபெல் பரிசுக்குப் பரிசீலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சுன்ரி என்ற தீண்டாத சாதியின் உள்சாதியாக பட்டியல்படுத்தப்பட்ட சாஹா சாதியில் பிறந்தவர் மேக்நாத் சாஹா . அம்பேத்கர் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1893 இல் பிறந்த சாஹாவுக்கும் அம்பேத்கருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.  அம்பேத்கர் இறந்த அதே ஆண்டில் அவரும் இறந்தார். 

Astro Physics இல் தேர்ந்த விஞ்ஞானியாக இருந்த சாஹா நட்சத்திர மண்டலம் குறித்து thermal iinisation of elements என்ற அடிப்படையில் உருவாக்கிய சாஹா சமன்பாடு ( Saha Equation) என்பது அந்தத் துறையில் அதன்பின் செய்யப்பட்ட ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக அமைந்தது. சூரியக் கிரணத்தின் எடையையும் அழுத்தத்தையும் கண்டறிவதற்கான கருவியையும் சாஹா உருவாக்கினார். சுதந்திர இந்தியாவில் இந்திய நதிகளை ஒழுங்கமைக்கும் திட்டங்களை வகுத்தார். அம்பேத்கருடன் இணைந்து அவர் உருவாக்கியதுதான் தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம். 

அபா சூர் தனது நூலில் இரண்டு அத்தியாயங்களை சாஹாவுக்காக ஒதுக்கியிருக்கிறார். நேரு தலைமையில் அமைந்த அரசு சாதியின் காரணமாக மேக்நாத் சாஹாவை எப்படியெல்லாம் புறக்கணித்தது என்பதை விவரித்திருக்கிறார். சூரின் நூல் முழுவதையும் தமிழில் மொழிபெயர்க்கவேண்டும். குறைந்தபட்சம் சாஹா பற்றிய இரண்டு அத்தியாயங்களையாவது தமிழில் யாராவது மொழிபெயர்த்தால் அதை மணற்கேணி வெளியிடும். 

Friday, October 3, 2014

உதவுங்கள்!

மணற்கேணி சிறுநூல் வரிசைக்கு உதவுங்கள்! 

சமூக அரசியல் முக்கியத்துவம் கொண்ட மொழிபெயர்ப்புகளையும் கட்டுரைகளையும் 50-60 பக்கங்களில் 25- 30 ரூபாய் விலையில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் புத்தகக் கடைகளுக்கு அனுப்பி  அவர்களிடமிருந்து பணம் வாங்குவது அத்தனை எளிதல்ல. இந்த நூல்கள் சமூக அக்கறையுள்ள இளைஞர்களைச் சென்றடையவேண்டும். அதற்கு புத்தகக் கடைகள் பயன்படும் எனத் தோன்றவில்லை. எனவே இந்தப் பணியில் இணைந்து உதவுமாறு அக்கறையுள்ள நண்பர்களை அழைக்கிறோம். 

சிறு நூல் ஒன்றை 1000 படிகள் வெளியிட சுமார் இருபதாயிரம் ரூபாய் செலவாகிறது. ஒரு நூலுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து உதவி செய்பவர்களின் பெயர் அந்த நூலில் அச்சிடப்படும். தயாரிப்பு விலையில் அவர்களுக்கு அந்தத் தொகைக்கு ஏற்ற பிரதிகள் அனுப்பப்படும். 

இதைப் பயனுள்ள பணியாகக் கருதுவோர் தொடர்புகொளுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள். 

தொகை அனுப்புவதற்கான வங்கிக் கணக்கு விவரம்: 

Manarkeni publication
Syndicate Bank ,
Pondicherry Branch 
Current account number : 96013070002032
IFSC code : Synb0009601

அ- சுரர்களின் அரசியல்- தலித்துகளும் மதுவிலக்கும்

மணற்கேணியின் சிறுநூல் வரிசையில் அடுத்த வெளியீடு:

அ- சுரர்களின் அரசியல்- தலித்துகளும் மதுவிலக்கும்
- ரவிக்குமார்

பக்கங்கள் 40
விலை 20/- ரூபாய்

அந்த நூலுக்கு எழுதப்பட்டிருக்கும் பதிப்புரையிலிருந்து:

" தமிழ்நாட்டில் மதுவிலக்கு ரத்துசெய்யப்பட்டபோது அதை ராஜாஜி கடுமையாக எதிர்த்தார்.அன்றைய முதலமைச்சரின் வீட்டுக்கே சென்று தனது கோரிக்கையை வலியுறுத்தினார். அவரைப்போலவே அப்போதிருந்த தலித் தலைவர்களும் மதுக் கடைகள் திறக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார்கள். ஆனாலும் வருவாயைக் காரணம் காட்டி அன்றைய அரசு மதுக்கடைகளைத் திறந்தது.’கருவாடு விற்ற காசு நாறாது’ என்பார்கள்.ஆனால், கள், சாரயம் விற்ற காசு சமூகத்தைத் தலைகவிழச் செய்துவிட்டது.

மதுக்கடைகள் திறக்கப்பட்டதால்,” வருஷக் குடியர், மாதக் குடியர்,வாரக் குடியர், தினக் குடியர் பெருகி அவர்கள் மற்றோரால் இகழப்பெற்று சீரழிவதுடன் இல்லாட்களாகிய பெண்களையும் குடிக்கக் கற்பித்தது போதாமல் தங்கள் பிள்ளைகளுக்கு சுரம் கண்டால் கொஞ்சம் பிராந்தி வாங்கிக்கொடு, குழந்தைகளுக்கு சளி பிடித்தால் பத்தாய் வாங்கி கொடுவென்னும் பெருவழக்கத்தால் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரையில் குடியர்களாகை சீரழிந்து சிந்தை நைந்து குலமரபின் பேரழிந்து பாழாகிப் போகின்றார்கள்” என 1913 ஆம் ஆண்டில் அயோத்திதாசப் பண்டிதர் எழுதியதைப் போன்ற காட்சியை இப்போதும் நாம் காணமுடிகிறது (தமிழன் 13,ஆகஸ்டு 1913)

Wednesday, October 1, 2014

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட லதாவின் சிறுகதைகள்
சிங்கப்பூரில் வசிக்கும் ஈழக் கவிஞர் லதாவின் சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு The Goddess in the Living Room' என்ற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளன. ஆறு பேர் மொழிபெயர்த்துள்ள இந்தத் தொகுப்பில் 14 கதைகள் இடம்பெற்றுள்ளன. மேற்கத்திய நாடுகளில் தயாரிக்கப்பட்டதுபோன்ற வடிவமைப்பு. அழகாக இருக்கிறது. 


மணற்கேணி 24 ஆவது இதழில் லதாவின் அரச மரம் கதை வெளியாகியுள்ளது. நான் அறிந்த அளவில் லதாவைப்போல அரசியல் கூருணர்வுகொண்ட பெண் எழுத்தாளர் வேறு எவரும் ஈழத்தில் இல்லை. சேரனுக்குப் பிறகு உருவான ஈழக் கவிஞர்களில் அகிலனுக்கு அடுத்ததாக நான் லதாவைக் குறிப்பிடுவேன். லதா முதலில் ஒரு கவிஞர். அதற்கடுத்தே சிறுகதை ஆசிரியர். நேர்த்தியான கட்டுரைகள் சிலவற்றையும் அவர் எழுதியுள்ளார். 


ஈழத்து எழுத்தாளர்கள் பலரோடும் நான் பழகியிருக்கிறேன். எம்.ஏ. நுஃமான் ஒருவரிடம் தான் ஒளிவுமறைவற்ற தோழமையை நான் கண்டிருக்கிறேன். இப்படிச் சொல்வது எனது பிழையாகவும் இருக்கலாம். ஆனால் இதைச் சொல்லத் தோன்றுகிறது. அந்தப் பின்னணியில் லதா தனித்துத் தெரிகிறார். தன்னை முன்னிறுத்திக்கொள்ளாத அவரது பண்பு இன்றைய சூழலில் அரிது. லதாவுக்கு என் வாழ்த்துகள்!