Sunday, October 26, 2014

ஒரு தொல்லியல் அறிஞரின் தன்வரலாறும் இந்தியத் தொல்லியல் வரலாறும் - ரவிக்குமார்வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள்கூட அதிகம் அறியாத ஒரு துறை- தொல்லியல் துறையாகும். தமது ஆயுட்காலம் முழுவதும் அத் துறையில் பணியாற்றி பல அரிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்திச் சென்ற அறிஞர்கள் பலர் எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் மறக்கப்பட்டுவிட்டனர். வெறும் புராணங்களாலும் கட்டுக் கதைகளாலும் நிரப்பப்பட்டிருந்த இந்திய வரலாற்றை தரவுகளின் அடிப்படையில் ஒழுங்கமைத்தவர்கள் அவர்கள்தான்.ஆனால் அதை நாம் உரியவிதத்தில் அங்கீகரிக்கவில்லை. தொல்லியல் துறை சார்ந்தவர்கள் தமது ஆய்வுகளைப் பற்றியும் அவற்றை மேற்கொண்டபோது தாம் அனுபவித்த இன்னல்களைப் பற்றியும் நூலாக எழுதி வெளியிட்டது மிகவும் குறைவே.  அந்தக் குறையைப் போக்கும்விதமாக உலகப் புகழ்பெற்ற இந்திய தொல்லியல் அறிஞர்களில் ஒருவரான திலிப் சக்கரவர்த்தி தனது அனுபவங்களை நூலாக எழுதியிருக்கிறார். ஒருவகையில் அவரது சுயசரிதையாகவும் இன்னொரு வகையில் ஐம்பதாண்டுகால இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் வரலாறாகவும் அந்த நூல் அமைந்திருக்கிறது.  
1941 ஆம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் சில்ஹெட் மாவட்டத்தில் ஹலிச்சேரா என்ற கிராமத்தில் பிறந்தவர் திலிப் சக்கரவர்த்தி. அவரது அம்மாவின் குடும்பம் செல்வச் செழிப்பு மிக்கது. பல ஏக்கர் பரப்பளவுகொண்ட நிலத்தின் நடுவே அமைந்த வீடு, மூன்று நாட்களுக்கு நடைபெறும் துர்கா பூஜை, ஊருக்கே விருந்து என தனது அம்மாவின் வீட்டைப் பற்றி அவர் நினைவுகூர்கிறார். அவருக்கு பதினோரு வயதிருக்கும்போது திலிப் சக்கரவர்த்தியின் குடும்பம் அந்த கிராமத்தைவிட்டு இடம்பெயர்ந்து திரிபுராவின் தலைநகரான அகர்தலாவுக்குச் சென்றது. (இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ஹலிச்சேரா கிராமம் பாகிஸ்தானில் சேர்ந்துவிட்டது). பள்ளி கல்லூரிப் படிப்புகளை அகர்தலாவில் முடித்த திலிப் சக்கரவர்த்தி கல்கத்தா பலகலைக்கழகத்தில் முதுகலை படிப்பில் சேர்ந்தார். அப்போதுதான் பலகலைக் கழக மானியக் குழு கல்கத்தா, புனே, சென்னை,லக்னோ ஆகிய இடங்களில் தொல்லியல் படிப்பைத் துவக்குவதற்கு நிதி உதவி செய்ய ஆரம்பித்திருந்தது. இந்தியத் தொல்லியல் துறையில் ‘தொல்லியல் பள்ளி’ ஒன்றும் தனியே ஆரம்பிக்கப்பட்டது. அது அந்தத் துறையில் பணியாற்றுவோருக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது  என்றபோதிலும் அதில் மாணவர்கள் சிலரும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அப்போது அந்தப் படிப்பில் சேர்ந்த மாணவர்களில் திலிப் சக்ரவர்த்தியும் ஒருவர்.
இரும்பின் பயன்பாடு குறித்தும் நெல் பயிரிடுவது எப்போது இந்தியாவில் ஆரம்பித்தது என்பது பற்றியும் முக்கியமான ஆய்வுகளை திலிப் சக்ரவர்த்தி செய்திருக்கிறார். கி.மு 8000 – 6000 க்கும் இடைப்பட்ட காலத்திலேயே விந்திய மலைப் பகுதியில் நெல் பயிரிட்டுள்ளனர். மத்திய கங்கைச் சமவெளிப் பகுதியிலும் அப்போது நெல் பயிரிட்டுள்ளனர். பல்வேறு தொல்லியல் மையங்களில் அதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன என்றாலும் கோரக்பூருக்கு அருகிலுள்ள லோஹுரதேவா என்ற இடத்தில் கிடைத்த சான்றுகள் முக்கியமானவை எனக் கூறுகிறார் திலிப் சக்ரவர்த்தி ( பக்கம் 272 ) எவ்வளவுதான் முயற்சித்தாலும் தென்னிந்தியாவில் நெல் சாகுபடி செய்யப்பட்டதற்கான ஆதாரம் கி.மு 3000 க்கு முன்னர் கிடைக்கவில்லை. (பக்கம் 274 ) என அவர் கூறுகிறார்.
திலிப் சகரவர்த்தியின் நூல் இந்தியாவில் தொல்லியல் துறையில் 1960 ஆம் ஆண்டிலிருந்து 2010 வரை ஐம்பது ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களை அவரது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து துல்லியமாகப் படம் பிடித்துக்காட்டுவது மட்டுமின்றி பல்கலைக்கழகங்களில் நிலவிய கல்வியியல் சூழலையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
“ இந்தியப் பலகலைக்கழகங்களின் சூழல் மிகவும் குரூரமானது. பெரிய மனிதர்களின் நிழல்களில் பதுங்கிக்கொள்ளத் தெரியாவிட்டால் ஒருவர் பல்கலைக்கழக அதிகாரப் படிநிலைகளில் முன்னேறிச் செல்ல முடியாது “ என்று வேதனையோடு குறிப்பிடும் திலிப் சக்ரவர்த்தி ( பக்கம் 35 ) “ மேற்கு வங்கத்திலிருக்கும் பல்கலைக்கழக அமைப்பு 1960 களில் சீரழியத் தொடங்கியது. இடதுசாரி மாணவர் அமைப்புகளின் பொறுப்பற்ற போராட்டங்களே அதற்கு முதன்மையான காரணம்” என்கிறார் ( பக்கம் 36 ). 1963 ஆம் ஆண்டு தனது முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்து அதே பல்கலைக்கழகத்தில் அதே துறையில் பணியில் சேர்ந்த அவர் 1977 ஆம் ஆண்டு அப்போதிருந்த துறைத் தலைவர் திருமதி அனிதா ரே யுடன் ஒத்துப்போக முடியாததால் அங்கிருந்து ராஜினாமா செய்தார். அப்போது யுபிஎஸ்சி யில் ஒரு நேர்காணலுக்காக அவர் சென்றிருந்தாராம். நேர்காணல் ஆரம்பிப்பதற்கு முன்பே அங்கு நேர்காணலுக்கு வந்திருந்த ஒருவரை எல்லோரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்களாம். “ பிராந்தியவாதம், சாதிச் சார்பு, அரசியல் கட்சி சார்பு முதலான கல்விக்கு அப்பாற்பட்ட காரணிகளே நமது உயர் கல்விச்சூழலின் பின்னடைந்த நிலைக்குக் காரணம் “ என்கிறார் திலிப் சக்ரவர்த்தி ( பக்கம் 61)
”1970 மற்றும் 1980 களில் இந்தியாவின் உயர் கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட முக்கிய காரணியாக இருந்தவர் நூருல் ஹாஸன். அவரது அரசியல் சார்பு இந்திய வரலாறெழுது முறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.இந்திய- சீன யுத்தத்துக்குப் பிறகு சோவியத் யூனியன்மீது பரிவுகொண்ட பல வரலாற்று ஆசிரியர்கள் ஐசிஹெச்ஆர் அமைப்பில் சேர்ந்தனர். அவர்கள் இந்திய வரலாற்றை ஒருபக்கச் சார்போடு பார்த்தனர். அவர்கள் எழுதிய நூல்கள் இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழியாக்கம் செய்யப்பட்டன. என்சிஇஆர்டி சார்பில் பல பாடநூல்களும் அதேவிதப் பார்வையோடு எழுதப்பட்டன”. “ இப்போது இந்தியாவில் காணப்படும் வரலாற்று ஆய்வின் பல அம்சங்களும் அப்போதுதான் முளைவிட்டன. வரலாறு தொடர்பான ஒவ்வொரு விஷயமும் ஏதாவதொரு குழுவோடு இணைத்துப் பார்க்கப்பட்டது. அக்குழுவின் அரசியலோடு அடையாளம் காணப்பட்டது”. (பக்கம் 116 ) ” 1972 ஆம் ஆண்டு இந்திய வரலாற்றை ஆய்வு செய்வதற்கும் எழுதுவதற்கும் ஒரு தேசிய திசைவழி தேவை என அரசாங்கத்தால் உணரப்பட்டது. அது சோவியத் ஆதரவு நாடுகளில் பொதுவாகக் காணப்பட்ட ஒரு கருத்தாக்கம். ( பக்கம் 112) எனக் குறிப்பிடும் திலிப் சக்ரவர்த்தி அந்த நேரத்தில்தான் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த க்ளின் டேனியலோடு தனக்கு மீண்டும் தொடர்பு உண்டானது என்கிறார். அந்தத் தொடர்புதான் அவருக்கு தொல்லியல் மீது மீண்டும் ஆர்வம் ஏற்படக் காரணமாக அமைந்தது. (பக்கம் 124)
1977 ஆம் ஆண்டு திலிப் சக்ரவர்த்தி டெல்லிப் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். அது மிகப்பெரும் அரசியல் கொந்தளிப்பு நிலவிய  காலம். ” அவசரநிலைக் காலத்துக்குப் பிறகு இந்திரா ஆட்சி முடிவுக்கு வந்ததால் நூருல் ஹாஸனும் பதவியிழந்தார். அதனால் அதுவரை டெல்லிப் பல்கலைக்கழகத்திலிருந்த ‘முற்போக்கு வரலாற்றறிஞர்களின்’ பிடி தளர்ந்தது. அதைப் பயன் படுத்திக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் களத்தில் இறங்கியது. அந்த அமைப்பைச் சேர்ந்த எஸ்.பி.குப்தா என்பவர் கூட்டமொன்றை ஒருங்கிணைத்தார். அந்தக் கூட்டத்தின்போது வரலாற்றுப் பாடப்புத்தகங்களை விமர்சனம் செய்து பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. ஆர்.எஸ்.ஷர்மா இதற்கென்றே எழுதிய நூல்களும் வெளிவந்தன.” என்று அந்தக் காலகட்டத்தை வர்ணிக்கிறார் திலிப் சக்ரவர்த்தி.
திலிப் சக்ரவர்த்திக்கு இடதுசாரி வரலாற்றாசிரியர்களோடு மட்டுமல்ல வலதுசாரிகளோடும் ஒத்துப்போக முடியவில்லை. அதனால், அவர் மியூஸியம் பொறுப்பாளராக பணிமாற்றம் செய்யப்பட்டார். அந்தப் பதவியிலும் அவர் சும்மா இருக்கவில்லை. பக்லிவால் குடும்பம் என்பது இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பணக்காரக் குடும்பங்களில் ஒன்று. அவர்கள் தமக்குச் சொந்தமான 16 – 18 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த ஓவியங்கள், கையெழுத்துப் படிகள், செப்புச் சிலைகள் பலவற்றை டெல்லிப் பல்கலைக்கழக மியூஸியத்துக்குக் கொடுத்திருந்தனர். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் அவற்றைப் பெட்டிகளில் அப்படியே பூட்டிவைத்துவிட்டது. ஜமால் ஹுஸைன் என்பவரோடு இணைந்து பக்லிவால் குடும்ப கலைப்பொருட்கள் குறித்து  திலிப் சக்ரவர்த்தி  நூல் ஒன்றைப் பதிப்பித்து வெளியிட்டார். அவரை ஓரம் கட்ட நினைத்தவர்களுக்கு அது எரிச்சலை உணடாக்கியது. எனவே அவர்மீது வீண்பழி சுமத்தி வேலையிலிருந்து விரட்ட முயற்சித்தார்கள். எனவே 1988 ஆம் ஆண்டு அவர் நீண்ட விடுப்பில் சென்றார். அதன்பின் அவர் மீண்டும் டெல்லிப் பல்கலைக்கழக வேலைக்குச் செல்லவே இல்லை. ( பக்கம் 142-145)
தொல்லியல் துறையின் வரலாற்றை எழுதிச்செல்லும் திலிப் சக்ரவர்த்தி தற்போது தொல்லியல் துறை எதிர்கொண்டுள்ள முக்கியமான சிக்கல்கள் இரண்டை அடையாளப்படுத்துகிறார்:
  1. ”அயோத்திப் பிரச்சனையில் தொல்லியல் என்பது மிகமுக்கியமான பங்கு வகித்ததை நாம் அறிவோம். அதன்பின்னர் தொல்லியல் துறை எதிர்பாராத மதரீதியான சிக்கல்கள் அந்தத் துறையை நெருக்கடியில் ஆழ்த்தின.1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு 1994 இல் ‘உலக தொல்லியல் மாநாடு’ நடைபெற்றது கவனத்துக்குரியது” எனக்குறிப்பிடும் திலிப் சக்ரவர்த்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டதை துரதிர்ஷ்டமானதொரு நிகழ்வு என வருத்தத்தோடு எழுதியுள்ளார். “ அயோத்தி மிகவும் முக்கியமானதொரு வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த தொல்லியல் பகுதியாகும். அங்கு இப்போதும் ஒரு பழங்கால மதில் சுவரின் எச்சங்கள் உள்ளன. அசோகர் காலத்தைச் சேர்ந்த தூண் ஒன்றின் தலைப் பகுதி அங்குள்ள சிறிய கோயிலொன்றில் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. சுங்கர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று இன்னொரு சிறிய கோயிலில் உள்ளது.பாபர் மசூதி பிரச்சனை தொடர்பாக சண்டையிட்டுக்கொண்ட இரு தரப்பு அறிவுஜீவிகளும் அயோத்தியின் தொல்லியல் அம்சங்கள் குறித்து அக்கறை காட்டவில்லை. நீதிமன்றம் முடிவுசெய்வதற்கு முன்பே மசூதியின் இடிபாடுகளுக்கிடையே கிடைத்த 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு அங்கு கோயில் இருந்ததை உறுதிசெய்துவிட்டது. அயோத்தி சம்பவம் தொல்லியலின் எதிர்காலத்தை முடிவுக்குக்கொண்டுவந்துவிடவில்லை” என்கிறார் அவர். .
  2. ”வெளிநாட்டு தொல்லியல் ஆய்வாளர்களால் இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சி மிகவும் பாதிப்படைகிறது. அவர்கள் இந்தியத் தொல்லியல் ஆய்வாளர்களை மதிப்பதில்லை. அவர்களது கருத்துகளையும் கண்டுபிடிப்புகளையும் பொருட்படுத்துவதில்லை. தங்களது கருத்துகளை நம் மீது திணிக்கிறார்கள்.கட்டுப்பாடின்றி அவர்களை அனுமதிப்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்” எனவும் அவர் எச்சரிக்கிறார்.
திலிப் சக்ரவர்த்தி எழுதியுள்ள இந்த நூலைப் படித்தபோது தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் முக்கியமான தொல்லியல் அறிஞர்களான ஐராவதம் மகாதேவன், ஒய்.சுப்பராயலு, புலவர் ராஜு, இரா.நாகசாமி, நடன.காசிநாதன், கா.ராஜன்  ஆகியோர் இப்படி தமது அனுபவங்களையும் தமிழகத் தொல்லியல் வரலாற்றையும் இணைத்து எழுதினால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கம்தான் மனதில் எழுந்தது.
திலிப் சக்ரவர்த்தி அண்மையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வருகை தந்திருந்தார். அவரது நூலைப் படித்தபோது மனதில் எழுந்த அறச்சீற்றம் கொண்ட ஒரு அறிஞரின் சித்திரம் அவரை நேரில் சந்தித்தபோது மேலும் உறுதிப்பட்டது.
இந்த நூல் தமிழில் வெளிவரவேண்டியது மிகவும் அவசியம். யாரேனும் மொழிபெயர்க்க முன்வந்தால் மணற்கேணி அதை வெளியிடத் தயாராக இருக்கிறது.

Fifty Years of Indian Archaeology ( 1960-2010 )- Journey of a Foot Soldier
   Dilip K. Chakraborty,
Aryan Books International, New Delhi ,
2012

1 comment: