Thursday, October 9, 2014

வெள்ளை நிழல் படியாத வீடு - கறுப்புக் கவிதைகள்


மொழிபெயர்ப்பாளரின் குறிப்ப

மன அழுத்தத்துக்கு ஆளாகும்போதெல்லாம் கவிதைகளை நாடிச் செல்வது என் வழக்கம். ஒரு சிறிய கவிதை போதும் புற உலகிலிருந்து சட்டென்று துண்டித்துக்கொண்டு வேறு உலகில் பிரவேசிக்க. மூச்சுத் திணறவைக்கும் அரசியல் கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரப் பயணங்கள் போன்றவற்றின்போது நான் பிராணவாயுவாகக் கவிதைகளைத்தான் நாடினேன். கவிதைகள் மட்டும் இல்லாவிட்டால் மனிதத் தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் அந்தக் களங்களிலிருந்து உயிரோடு மீண்டு வந்திருக்கமுடியாது.

அத்தகைய தருணங்களில் கவிதைகளை வாசித்தது மட்டுமல்ல சிறிய கவிதைகளை மொழிபெயர்க்கவும் செய்தேன். அவற்றை முகநூலிலும், வலைப்பூவிலும் பகிர்ந்துகொண்டபோது நண்பர்கள் அளித்த வரவேற்பு என்னை ஊக்குவித்தது. நாளெல்லாம் அலைந்து உடல் செத்துக் கிடந்த இரவுகளிலும் மனம் விழித்துக்கொண்டு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்தது. இந்தக் கவிதைகளில் பெரும்பாலானவை அப்படி மொழிபெயர்க்கப்பட்டவைதான்.

 தற்போதைய தொழில்நுட்பம் நமது மொபைல் ஃபோனில் டிஜிட்டல் நூலகங்களை உருவாக்கித் தந்திருக்கிறது. லட்சக்கணக்கான நூல்களை இப்போது இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஆன்றி மிஷோவின், ரெனே சாரின் ஒரு கவிதைப் புத்தகத்தைப் படிக்க இருபது ஆண்டுகளுக்கு முன்னால் ஏங்கிக் கிடந்த அவலத்தை எண்ணிப் பார்க்கிறேன்.அந்தக் கேவல நிலை இன்றில்லை. புதிய புத்தகங்கள் மட்டுமல்ல ஆவணக் காப்பகங்களும் இன்று விரல் நுனியில் திறந்துகொள்கின்றன. யாருடைய கருணையுமின்றி இன்று எந்தவொரு புத்தகமும் எவர் கையிலும் கிடைத்துவிடும். புதிய புத்தகங்களைப் பதுக்கி வைத்துக்கொண்டு அவற்றிலிருந்து மேற்கோள்களை மட்டும் அவ்வப்போது உதிர்த்து ’சீன்’ போட்டவர்கள், பழைய ஆவணம் ஒன்று கிடைத்துவிட்டால் அதை மறுபதிப்பு செய்தே அறிவாளி ஆனவர்கள் – இனி வழக்கொழிந்துபோவார்கள். அறிவு ஜனநாயகமயமாகிவரும் காலம் இது. 

 இந்தத் தொழில் நுட்பத்தை முதலாளித்துவத்தின் விளைவு என்பதா அல்லது பொதுவுடமையின் சாட்சியமாகக் கொள்வதா என்பது புரியவில்லை. ” அறிவுத்தளத்தில் நிகழ்த்தப்படும் சாதனைகள் பொதுவுடமை குணாம்சம் கொண்டவைதான். அவை சுதந்திரமாக எங்கும் சுற்றிவரக்கூடியவை. மிகவும் முன்னேறிய முதலாளித்துவத்தின் விளைபொருள்களாக இருந்தபோதிலும் இலவசமாக இவை கிடைப்பதன்மூலம் முதலாளித்துவம் சாராத வெளி ஒன்றை இவை திறக்கின்றன.” என்று சிந்தனையாளர் ஸ்லாவோஸ் ஸிஸேக்  ( Slavoj Zizek- Web Chat,The Guardian, 08.10.2014) ) குறிப்பிடுவது கவனத்துக்குரியது.

 இந்தக்கவிதைகளில் சில, சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டவையென்றாலும் இவற்றை நூலாக வெளியிடுவது அவசியம் எனக் கருதினேன். சமூக வலைத் தளங்களில் எல்லாவற்றுக்கும் ஆயுள் குறைவு. ஒரு நிலைத் தகவலை அடுத்த நொடியிலேயே இன்னொரு நிலைத்தகவல் மூடிவிடுகிறது. தமிழ்நாட்டில் இப்போது மட்டுமல்ல இன்னும் ஒரு நூற்றாண்டுக்காவது அச்சு ஊடகம் உயிர்ப்போடு இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. 

 வாசிப்பின் ஜனநாயகம் கருதியே மணற்கேணி சிறுநூல் வரிசை துவக்கப்பட்டது. அதன் மூலம் வெளியாகும் இந்த ஆப்ரிக்க அமெரிக்கக் கவிதைகள், போராட விரும்பும் எவர் ஒருவருக்கும் உத்வேகத்தை அளிக்கும் என நம்புகிறேன். இந்த நூலை வாசிப்போர் இத்துடன் வெளியாகியிருக்கும் அரபுக் கவிதைகள் தொகுப்பையும் வாசிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 

 - ரவிக்குமார் 

09.10.2014

No comments:

Post a Comment