Wednesday, November 26, 2014

ஃபெர்குஸன் கலவர காலத்தில் நீதிபதி கே.சந்துருவின் முக்கியத்துவம்==============

'அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்' புதிய பதிப்புக்கான பதிப்புரை:

 ==============

”எங்கோ ஓரிடத்தில் அநீதி இழைக்கப்பட்டாலும் அது எல்லா இடங்களிலும் நீதியை அச்சுறுத்துகிறது” என்றார் மார்ட்டின் லூதர் கிங். அது இப்போது நிரூபணமாகியிருக்கிறது.  2014 ஆகஸ்டு மாதம் 9 ஆம் தேதி அமெரிக்காவின் ஃபெர்குசன் என்ற நகரத்தில் மைக்கேல் பிரவுன் என்ற கறுப்பின சிறுவன் ஒரு வெள்ளை இன போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டான். நிராயுதபாணியாக இருந்த அப்பாவி சிறுவனை சுட்டுக்கொன்ற போலீஸ்காரரர்மீது கொலைவழக்கு பதிந்து  நடவடிக்கை எடுக்கவேண்டும் என கறுப்பின மக்கள் கடந்த சில மாதங்களாக அமைதியான முறையில் போராடிவந்தனர்.

ஃபெர்குஸன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரரை குற்றமற்றவர் என க்ரேண்ட் ஜூரி எனப்படும் அமெரிக்க நீதிமன்றம் நவம்பர் 24 ஆம் தேதி விடுதலைசெய்தது. அந்த அநீதியைக் கண்டு கிளர்ந்தெழுந்த கறுப்பின மக்களின் போராட்டம் கலவரமாக வெடித்தது. கட்டிடங்களும் கார்களும் தீக்கிரையாக்கப்பட்டன. ஃபெர்குஸன் நகரில் ஆரம்பித்த கலவரம் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவிவிட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமா ஆப்ரிக்க அமெரிக்க மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தும் கலவரம் ஓயவில்லை.  

மைக்கேல் பிரவுன் என்ற அந்தச் சிறுவனும் அவனது நண்பனும் தெருவில் போய்க்கொண்டிருந்தபோது காரில் வழிமறித்த டாரென் வில்ஸன் என்ற போலீஸ்காரர் அவர்களை இழிவாகப் பேசியிருக்கிறார்,அதற்கு அமைதியாகப் பதிலளித்த சிறுவன் பிரவுனை காருக்குள் இருந்தபடி ஜன்னலின்வழியே கழுத்தைப் பிடித்து இழுத்திருக்கிறார். அவன் திமிறவே தனது துப்பாக்கியால் அந்தச் சிறுவனை சுட்டிருக்கிறார். சிறுவன் பிரவுனும் அவனது நண்பனும் போலீஸ்காரரிடமிருந்து விடுவித்துக்கொண்டு ஓடியிருக்கிறார்கள். காரிலிருந்து இறங்கிய போலீஸ்காரர் வில்சன் அவர்களை நோக்கி சுட்டிருக்கிறார்.அதில் குண்டடிபட்ட பிரவுன் தன்னை சுடவேண்டாமென கைகளை தலைக்குமேல் உயர்த்திக் கெஞ்சியபடி மண்டியிட்டிருக்கிறான்.அப்போதும் விடாமல் அவனை வில்சன் சுட்டிருக்கிறார். அருகில் சென்று அவன் தலையில் சுட்டிருக்கிறார். சிறுவன் மைக்கேல் பிரவுன் மீது 12 குண்டுகள் பாய்ந்திருக்கின்றன. அந்த இடத்திலேயே அவன் இறந்துவிட்டான்.

போலீஸ்காரர் வில்சனை நிரபராதி எனத் தீர்ப்பளித்த க்ரேண்ட் ஜூரி எனப்படும் நீதிமன்ற அமர்வு 12 உறுப்பினர்களைக் கொண்டது. அவர்களில் 9 பேர் வெள்ளையினத்தவர், 3 பேர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள். 12 உறுப்பினர் இருந்தாலும் 9 பேர் சொல்லும் தீர்ப்பே இறுதித் தீர்ப்பாகும் என்பது விதி. அந்த அமர்வில் இடம்பெற்ற வெள்ளையினத்தைச் சேர்ந்த ஜூரி ஒருவரது அப்பாவை 1960களில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்துவிட்டாராம். எனவே அந்த ஜூரி கறுப்பின மக்களுக்கு எதிராகவே செயல்பட்டுவந்தாராம். இந்தப் பின்னணியில் வெளிவந்த ஃபெர்குஸன் தீர்ப்பு கலவரமாக வெடித்ததில் வியப்பில்லை.

நீதிபதி சந்துரு அவர்களின் இந்த நூலின் விரிவுபடுத்தப்பட்ட மூன்றாவது பதிப்பு வெளியாகும் இந்த நேரத்தில் அமெரிக்காவில் வெடித்திருக்கும் கலவரம் இந்த நூலின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. அமெரிக்கக் கறுப்பின மக்கள் அனுபவித்துவரும் நிறவெறிக்கும் இந்திய தலித்துகள் எதிர்கொண்டிருக்கும் சாதிவெறிக்கும் இடையே பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. அதை ஐநா சபையும் அங்கீகரித்திருக்கிறது. சாதிவேற்றுமையும் இனவேற்றுமையைப் போன்றதே என டர்பனில் கூடிய ஐநா மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டதை நாம் அறிவோம். ஆப்ரிக்க அமெரிக்கக் கவிஞர் லாங்ஸ்டன் ஹியூஸ் எழுதிய இந்தக் கவிதை தமிழ்நாட்டில்  பஞ்சமி நிலத்துக்காகப் போராடும் தலித்துகளின் நிலையை நினைவுபடுத்துவதைப் பாருங்கள்:
 
”அவர்கள் தருவதாகச் சொன்ன நிலம் 
எப்போதும் 
உனக்கு முன்னால் 
கொஞ்சதூரத்தில்தான் இருக்கிறது
சாகும்வரையிலும்
அதை நீ அடைய முடியாது
 
ஆனால் உன் பிள்ளைகளின் பிள்ளைகள்
அவர்களின் பிள்ளைகள்
இட்டுச் செல்லப்படுவார்கள் ஒரு இடத்துக்கு
அவர்களுக்கு முன்னால்
கொஞ்சதூரத்தில்தான் இருக்கும் 
அந்த நிலம் ”
 
தமிழ்நாட்டின் நிலைமை அமெரிக்காவின் ஃபெர்குஸன் நகரை ஒத்ததாக இல்லாமலிருக்கலாம்.ஆனால் இங்கிருக்கும் தண்டனை அமைப்பின் சூழல் அதிலிருந்து பெரிய அளவில் வேறுபட்டிருக்கவில்லை என்பதை நாம் மறுக்கமுடியாது. நமது சிறைகளில் இருப்போரின் சமூகப் பின்னணியைப் பார்த்தால் இதைத் தெளிவாக நாம் புரிந்துகொள்ளலாம். 2011 ஆம் அண்டு புள்ளிவிவரப்படி தமிழக சிறைகளில் அப்போது மொத்தமிருந்த தண்டனை சிறைவாசிகள் 5200 பேரில் தாழ்த்தப்பட்டோர் 1609 ( 30.95%), பழங்குடியினர் 176 (3.38%), முஸ்லிம்கள் 671 (12.90%), கிறித்தவர்கள் 999 (19.21%) . இந்த நான்கு பிரிவினரையும் சேர்த்தால் மொத்த தண்டனைக் கைதிகளின் என்ணிக்கையில் அது 66.44% ஆகும்.

 அதே 2011 ஆம் ஆண்டில் தமிழக சிறைகளில் இருந்த விசாரணைக் கைதிகளின் மொத்த எண்ணிக்கை 7682. அதில் முஸ்லிம்கள் 943 (12.27%) தாழ்த்தப்பட்டோர் 2783 (36.22%) பழங்குடியினர் 757 (9.85%).கிறித்தவர்களும் இங்கு அதிக எண்ணிக்கையில் விசாரணைக் கைதிகளாக இருந்துள்ளனர். அவர்களது எண்ணிக்கை 1213 பேர் ( 15.79%) இந்த  நான்கு பிரிவினரையும் சேர்த்தால் 2011 ஆம் ஆண்டில் மொத்தமாக இருந்த  7682 விசாரணைக் கைதிகளில் அவர்களது எண்ணிக்கை 74.14% ஆகும். அமெரிக்க தண்டனை அமைப்பின் கதியும் இதுதான்.அங்கிருக்கும் சிறைவாசிகளில் கறுப்பினத்தவரே அதிகம். ஒபாமா இருமுறை அதிபராக வந்தபோதிலும்கூட இந்த யதார்த்தம் மாறிவிடவில்லை.
*******
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் நீதித்துறைமீது அளப்பரிய நம்பிக்கைகொண்டிருந்தார். இந்திய குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளை வகுத்தளித்து அவற்றைக் காப்பதற்கான நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவர் செய்தார். அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதப்படுத்தும் உரிமைகளின் பாதுகாவலாக நீதித்துறையையே அவர் பார்த்தார். அதற்காக உருவாக்கப்பட்டதுதான் ‘நீதிமன்ற சீராய்வு’ என்பதாகும். “ தீர்வுகள் இருக்கும்போதுதான் உரிமைகள் என்பவை மெய்யானவையாக இருக்கமுடியும். தனது உரிமைகள் மீறப்படும்போது பாதிக்கப்படும் ஒருவர் சட்டபூர்வமான தீர்வைப் பெறமுடியாவிட்டால் உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை. அதனால்தான் நமது அரசியலமைப்புச் சட்டத்தின்மூலம் உரிமைகளை உத்தரவாதப்ப்டுத்துகிற அதே நேரத்தில் அந்த உரிமைகளை நமது நாட்டின் நிர்வாக அமைப்போ, சட்டமன்ற பாராளுமன்றங்களோ பறித்துவிடாதபடி தடுக்கவேண்டியது அவசியமானது. அந்தப் பொறுப்பு நீதித்துறையிடம் விடப்பட்டது, அரசியலமைப்புச் சட்டத்தால் உத்தரவாதப்படுத்தப்பட்ட உரிமைகளின் பாதுகாவல் நீதிமன்றங்கள்தான்” என அம்பேத்கர் இதைத் தெளிவுபடுத்தினார்.
அரசியலமைப்புச் சட்ட அவையில் நீதித்துறைமீதான விவாதங்கள் நடந்த நேரத்தில், ’நீதிபதிகள் ஓய்வுபெற்றபிறகு வேறு பதவிகளில் நியமிக்கப்படுவதைத் தடுக்கவேண்டும்’ என்ற திருத்தத்தை ஒரு உறுப்பினர் கொண்டுவந்தார். ஆனால் அதை அம்பேத்கர் நிராகரித்தார். “ நீதித் துறையானது குடிமக்களுக்கிடையே உள்ள வழக்குகளைத்தான் பெரும்பாலும் கையாளப்போகிறது. அரசாங்கத்துக்கும் குடிமக்களுக்கும் இடையே மிகவும் அரிதாகத்தான் வழக்கு உண்டாகும்” எனவே, நமது நீதிபதிகள் நிர்வாகத் துறையாலோ ஆட்சியாளர்களாலோ செல்வாக்குக்கு ஆளாக்கப்படுவார்கள் என்ற அச்சம் தேவையற்றது என அம்பேத்கர் விளக்கமளித்தார். ஆனால் நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அம்பேத்கர் நமது நீதியமைப்பின்மீது வைத்த அந்த நம்பிக்கை பொய்யாகிக்கொண்டிருக்கிறதோ என்ற ஐயம்தான் நமக்கு எழுகிறது. இருளாகச்சூழும் அத்தகைய ஐயத்தின்மீது நீதிபதி சந்துரு போன்ற ஒருசிலரே அவ்வப்போது நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள்.
நிதிபதி சந்துரு அவர்களின் இந்த நூல் தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது. அவரே பங்கெடுத்த சுமார் ஐம்பது கூட்டங்கள் இதற்காக தமிழகமெங்கும் நடத்தப்பட்டிருக்கின்றன. அண்மைக்காலமாக தமிழகத்தில் சில சுயநல சக்திகள் பரப்பிவந்த வெறுப்பு என்னும் விஷத்துக்கு இந்தப் புத்தகம் ஒரு விஷமுறிவு மருந்தாக செயல்பட்டது என்று சொல்வது மிகையல்ல. அதற்கான அடையாளம்தான் இந்த நூலின் பின்னிணைப்பாகத் தரப்பட்டிருக்கும் மதிப்புரைகள்.
இந்த நூலைப் படித்தபோது எனக்குள் எழுந்த கருத்து இதுதான்: ‘ எங்கோ ஒருவரால் வழங்கப்படும் நீதி எல்லா இடங்களிலும் அநீதிக்கு எதிராகப் போராடுவோருக்கு நம்பிக்கை அளிக்கிறது’. இந்த நூலைப் படிப்பது அந்த நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்வது மட்டுமல்ல, அநீதிக்கு எதிரானப் போராட்டங்களில் பங்கேற்பதுமாகும்.

- ரவிக்குமார்
26.11.2014
   
 
 

No comments:

Post a Comment