Sunday, April 5, 2015

மணற்கேணி தொகுப்பு


பனுவல் புத்தகக் கடையில் கிடைக்கும்

மணற்கேணி ஆய்விதழ் இதுவரை 28 இதழ்கள் வெளிவந்துள்ளன. அதன் ஒட்டுமொத்தத் தொகுப்பு பனுவல் புத்தகக் கடையில் கிடைக்கும். ஆய்வு மாணவர்களுக்கு சிறப்புக் கழிவு உண்டு. 

தொகுப்பு வேண்டுவோர் தொடர்புகொள்க: 

பனுவல் 
112, முதல் தளம் திருவள்ளுவர் சாலை
திருவான்மியூர் சென்னை 600 041
ஃபோன்: +91 8939-967179


தமிழ்நாட்டை குக்கிராமம் ஆக்கியது யார்? - ரவிக்குமார்


மலையாளக் கவிஞர்கள் தங்களது கவிதைகளை வாசிக்கும் விதமே தனி அழகுதான். அதைக் கேட்கும்போது நாமும் மலையாள மொழியின் காதலர்களாகிவிடுவோம். 

ஆசான் மெமோரியல் அசோசியேஷனின் பொன்விழாவின் அங்கமாக தென் இந்திய கவிஞர்கள் பங்கேற்கும் 'கவிசம்மேளனம்' ஒன்றை சென்னையில் இன்று (05.04.2015 ஞாயிறு) ஒருங்கிணைத்திருந்தது. ஐந்து மொழிகளைச் சேர்ந்த கவிஞர்கள் அழைக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள். அதில் கவிஞர் கே.சச்சிதானந்தன் தனது கவிதைகளை வழங்கினார். 

முதலில் பிணக்கு என்ற தலைப்பிலான கவிதையை மலையாளத்தில் வாசித்தார்.  அண்மையில் காலமான அய்யப்பன் என்ற கவிஞரின் நினைவாகத் தான் எழுதிய  நீண்ட கவிதையையும், அரபு வசந்தத்தின் தாக்கத்தில் எழுதிய நிற்கும் மனிதன், முத்தம் ஆகிய கவிதைகளையும் அடுத்து வாசித்தார். ( இவற்றை நான் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறேன்) கடைசியாக மந்திரவாதி என்ற கவிதையை வாசித்தார். பிணக்கு தவிர மற்ற கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வாசித்தது மலையாளம் தெரியாதவர்களுக்கு உதவியாக இருந்தது. 

சச்சிதானந்தனின் கவிதைகள் கேரள மண்ணில் வேரூன்றி உலகமெங்கும் கிளை பரப்பி நிற்கின்றன. அரபு வசந்தத்தின் போராட்ட வடிவங்களைக் கேரள நகரங்களிலும் பார்க்க முடிகிறது என்பதால் சச்சிதானந்தனின் கவிதைகள் வெறும் கற்பனை சார்ந்தவையாக இல்லை. 

கேரளத்தோடு ஒப்பிடும்போது தமிழ்நாடு ஒரு குக்கிராமம் போல் தெரிகிறது. உலக அளவில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வும் தமிழ்நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பாமர அறிவை( common sense) வியப்பதே அறிவுச் செயல்பாடு எனக் கருதுவோர்தான் இங்கே அறிவு ஜீவிகள். அதனால்தான் புராண மறு உற்பத்தி இங்கே இலக்கிய அந்தஸ்தைப் பெற முடிகிறது. இந்த கருத்தியல் சூழலை உருவாக்கியதில் தமிழ்த் தேசியத்துக்கு முக்கிய பங்கிருக்கிறது. வலதுசாரி மனோபாவத்தை அதுதான் இங்கே உறுதிப்படுத்தியது. தமிழ்த் தேசியம் செப்பனிட்டு வைத்த பாதையில்தான் இந்துத்துவம் பவனி வருகிறது. 

தமிழ்நாட்டில் இந்துத்துவத்தை எதிர்ப்பதோடு இடதுசாரிகளின் பணி நின்றுவிடக்கூடாது. தமிழ்த் தேசியத்தின் வலதுசாரி சாய்வை விமர்சிப்பதிலும் அக்கறைகாட்டவேண்டும். சச்சிதானந்தனின் கவிதைகளைக் கேட்டபோது இந்த எண்ணம் மேலும் வலுவடைந்தது. 

Saturday, April 4, 2015

கவிஞர் கே. சச்சிதானந்தனை சந்தித்தேன் - 1 - ரவிக்குமார்


ஆசான் மெமோரியல் அசோசியேஷன் தனது பொன்விழாவின் பகுதியாக தென் இந்திய கவிஞர்கள் பங்கேற்க்கும் கவிசம்மேளனம் ஒன்றை சென்னையில் இன்று (05.04.2015 ஞாயிறு) நடத்துகிறது. அதில் பங்கேற்க வந்திருக்கும் கவிஞர் கே.சச்சிதானந்தன் அவர்களை இன்று காலையில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். 

எந்தப் பொருள் குறித்தும் தடங்கலின்றித் தெளிவாகத் தனது கருத்துகளைத் தெரிவிப்பது சச்சிதானந்தனின் சிறப்பு. தற்போது நிலவும் வலதுசாரி சூழல் குறித்து எங்கள் உரையாடல் அமைந்திருந்தது. தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் 'சரிநிகர்' அமைப்பு குறித்து அவரிடம் சொன்னேன். இந்திய அளவில் Indian Writers Forum என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதைப் பற்றி அவர் கூறினார் . அதில் தமிழ்நாட்டிலிருந்து பிரபலமான எழுத்தாளர் ஒருவரை இணைக்க விரும்பி அசோகமித்திரனிடம் பேசியதாகவும் அவர் தன்னை அதில் சேர்க்கவேண்டாம் எனக் கூறிவிட்டதாகவும் சொன்னார். " பொதுவாக எல்லா மொழிகளிலும் எழுத்தாளர்கள் வலதுசாரி அரசியலை எதிர்ப்பவர்களாகவே இருப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஏன் இப்படி இருக்கிறார்கள்? " என சச்சிதானந்தன் வியப்போடு கேட்டார். இளைய தலைமுறை எழுத்தாளர்களிடம் இந்தப் பண்பு அதிகரித்திருப்பதையும் பிரபல எழுத்தாளர்கள் சிலர் எப்படி வெளிப்படையாகவே பாஜகவை ஆதரித்துப் பேசுகிறார்கள் என்பதையும் நான் கவலையோடு அவரிடம் பகிர்ந்துகொண்டேன். 

பெருமாள் முருகன் பிரச்சனையின்போதும் அசோகமித்திரன் அப்படியான தொனியில்தான் பேசியிருந்தார்.கூச்சமே இல்லாமல் வலது சார்புடன் பேசும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை இங்கே அதிகரித்துவருவது தமிழ்ச்சூழலின் அபத்தத்தை சுட்டுகிறது. அரசியல் தளத்தில் சூழும் ஆபத்தைவிடவும் மிகுந்த சேதத்தை உண்டாக்கக்கூடியது கலாச்சார தளத்தில் செல்வாக்குபெறும் வலதுசாரிப் போக்கு. இதை நாம் புரிந்துகொண்டிருக்கிறோமா?